Wednesday, March 18, 2020

அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் 'இன்ஸான்' பத்திரிகைக் கட்டுரை பற்றி..

அறிஞர்  அ.ந.கந்தசாமி அவர்கள் இன்ஸான் பத்திரிகையில் 'யூத -அரபு  பற்றி பேட்ரண்ட் ரஸல்'என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையானது இன்ஸான் பத்திரிகையில் 21.7,1967 , 28.7.1967 ஆகிய திகதிகளில் 'யூத - அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.  பேட்ரண்ட் ரஸலின் நூல்களிலிருந்து யூத அராபிய உறவு பற்றிய பேட்ரண்ட் ரஸலின் கருத்துகளை ஆராய்ந்து அ.ந.க எழுதிய கட்டுரை.

இக்கட்டுரை இன்ஸான் பத்திரிகையில் இரண்டு பகுதிகளாக இரு வாரங்கள் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை பற்றி அந்தனி ஜீவா அவர்கள் தினகரன் பத்திரிகையில் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் (தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடர்) "அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். " என்று கூறுவார்.  உண்மையில் பெட்ரண்ட் ரஸலின் யூத அராபிய உறவுகள் என்பதற்குப் பதிலாக 'யூத அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல் ' என்றிருக்க வேண்டும். 'பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' பேட்ரண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்னுமொரு கட்டுரை பற்றிய அ.ந.கந்தசாமியின்  கட்டுரையாக அதனை விளங்கிக்கொள்ளும் அபாயமுண்டு.

Saturday, March 14, 2020

உள்ளங் கவர்ந்த கானங்கள்: "வாழ்க்கை ஒரு ஒட்டகம்; நொண்டி ஒட்டகம்"


"வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்" - கவிஞர் விவேக் வேல்முருகன் -

வாழ்க்கையை நொண்டி ஒட்டகத்துக்கு உருவகிக்கும் கவிஞரின் கவித்துவம் இப்பாடலின் முதல் வரியிலேயே என்னைக் கவர்து விட்டது.

பாடகர் பென்னி தயாலின் குரலை ஏற்கனவே விஜயின் 'அழகிய தமிழ் மக'னில் கேட்டு இரசித்தவன். இப்பொழுதெல்லாம் புற்றீசல்கள்போல் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அன்று வருடத்துக்கு வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் எல்லாமே நினைவில் நிற்கும். அவற்றின் நடிகர்களும் , பாடகர்களும் நினைவில் நிற்பார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யார் பாடினார்? எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது? யார் நடித்தது? ஒன்றுமே தெரிவதில்லை. இதற்குத் தலைமுறை இடைவெளி முக்கிய காரணமென்று நினைக்கின்றேன் :-) 

Friday, March 13, 2020

காற்றினிலே வரும் கீதம்: "எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று"

"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று   
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு   
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு  "
- கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல்.  ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிப்பதிவு & நடிப்பு எல்லாமேதாம்.

இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக் கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.

முனைவர் ஆர்.தாரணியின் கட்டுரையொன்று பற்றி... வ.ந.கிரிதரன் -


எனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான  'குடிவரவாளன்' நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் 'An Immigrant' என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத் தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') -  முனைவர் ஆர்.தாரணி; தமிழில்: வ.ந.கிரிதரன்  - 

'குடிவரவாளன்' கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப் படுகொலையினைத் தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது.  நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில்  , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ  அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

Wednesday, March 4, 2020

காலத்தால் அழியாத கானங்கள்: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"

"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்....
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே" -
கவிஞர் மேத்தா




அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே"



இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

கணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' - வ.ந.கிரிதரன் -

2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்