Friday, March 13, 2020

முனைவர் ஆர்.தாரணியின் கட்டுரையொன்று பற்றி... வ.ந.கிரிதரன் -


எனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான  'குடிவரவாளன்' நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் 'An Immigrant' என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத் தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') -  முனைவர் ஆர்.தாரணி; தமிழில்: வ.ந.கிரிதரன்  - 

'குடிவரவாளன்' கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப் படுகொலையினைத் தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது.  நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில்  , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ  அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

சாதாரண வாசகரொருவரை இந்நூலின் நேரடியான கூறுபொருளும், நடையும் எழுச்சியூட்டும். ஆயினும், இந்ந நூலானது பலபடிகளில் அர்த்தங்களைத்தருவதிலும், தகவல்களின் விபரிப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அறிவுமிக்க கருத்துகளிலும், விமர்சனத்துக்குரிய சிக்கலான எண்ணங்களைக்கொண்டிருப்பதிலும் மிகவும் வியப்பூட்டுவதாகும். இது வெறுமனே 83 கலவரத்திலிருந்து தப்பிக் கனடாவுக்குச் சென்ற இளங்கோ என்பவனின் கதை மட்டுமில்லை. கதாசிரியர் பல சவால்மிக்க விடயங்களை, சட்டவிரோதக்குடிவரவாளன் என்ற நிலை அப்பாவி மனிதனொருவன் மேல் திணிக்கப்பட்டமை, அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடொன்றில் மறுதலிக்கப்பட்ட மனித உரிமைகள், தடுப்புமுகாமின் கடுமையான  வாழ்க்கை, சமூகக் காப்புறுதி அட்டை இல்லாததால் வேலை தேடுவதில் ஏற்படும் இன்னல்கள், ஹரிபாபு, ஹென்றி போன்ற நடைபாதை வியாபாரிகளின் தந்திரங்கள், பீட்டர், பப்லோ போன்ற முகவர்களின் சுரண்டல் நடவடிக்கைகள், சட்டத்தரணி அனிஸ்மன்னின் கோழைத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக நியூயார்க் நகரில் வசிக்கும் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் அங்கீகரிக்காமை போன்ற பல விடயங்களைப்பற்றி இந்நூலில் உரையாடுகின்றார். அனைவரையும் கவரும் தன்மை மிக்க நகரின் மறுபக்கம் நாவலின் நாயகனை மட்டுமல்ல வாசகர்களையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது.

நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் எளிமையான, அப்பாவியான இளைஞனாகக்காணப்படும் இளங்கோ, பின்னர் இன்னல்களுக்கு மத்தியில் கூட மெச்சத்தக்க பண்புகளையுடைய அசாதாரணமானதொரு மனிதனாக வளர்ச்சியடைகின்றான். அவன் ஒரு கவிஞன். எழுத்தாளன். கோட்பாட்டுவாதி. நடைமுறைச்சாத்தியப்படி செயற்படுமொருவன். மானுடவாதி. அத்துடன் இருப்பில் நம்பிக்கைகொண்டவனும் கூட. வாழ்வில் மனவாட்டம் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் அவன் பாரதியாரின் , , கவீந்திரனின் (அ.ந.கந்தசாமியின்) கவிதைகளை நினைத்துக்கொள்கின்றான். இவை அவனுக்கு அளவற்ற மனவுறுதியை வழங்குகின்றன. வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வுகள் நிச்சயமற்றிருக்கும் சமயங்களில் இளங்கோ தன்னை ஒரு தத்துவவாதியாக உருமாற்றிக்கொள்கின்றான். அவன் நினைக்கின்றான் தன் வாழ்க்கை நீரோட்டதுடன் செல்லும் மரக்குற்றியைப்போன்றதென. இளங்கோவின் வாழ்க்கை மீதான நேர்மறையான அணுகல் மிக்க ஆளுமைக்கூறு  இன்னுமொரு விதந்தோடப்படவேண்டிய விடயம். மானுடர்களில் அரிதாகக் காணப்படும் விடயமிது.

தனிப்பட்டவருக்குரிய தத்துவமென்பதிலிருந்து அனைவருக்குமுரியதொன்றாக அது எல்லைகடந்து செல்வதால் அவனது தத்துவங்கள் சிறப்பானவை. அவன் தனது நாட்குறிப்பில் எழுதுகின்றான்: "ஏன் இந்தச் சிறிய நீலவண்ணக்கோளில் வாழும் மக்கள் எல்லாவகையான பிரிவுகளுக்குள்ளும் சிக்கிக்கிடக்கின்றார்கள்? அதன்மூலம் வாழ்க்கையை ஏன்  வெறுப்பு மிக்க உணர்வுகளாலும், பெருந்துயர்களாலும் கொண்டு நடாத்துகின்றார்கள்? அவர்களை முதிர்ச்சியடைவதிலிருந்து, உலக ஞானத்தைப்பெறுவதிலிருந்து தடுப்பவை எது? யாதும் ஊரே! யாவரும் கேளிர்! எல்லாம் எமது இருப்பிடமே. எல்லாரும் எமது உறவுகளே.  ஏன் இந்த உலகு பாரபட்சங்களாலும், வேற்றுமைகளாலும் நிறைந்து கிடக்கின்றது? இந்தக் கோளானது பிரபஞ்சத்தினூடு ஒளி வேகத்தில் பயணிக்கின்றது.  இதன் வேகம் புரிதலுக்கு அப்பாற்பட்டிருக்கின்றது. இந்தப்பிருமாண்டமான பிரபஞ்சத்தில் இச்சாதாரணமான, குறுகிய மனப்போக்குடைய தொடர்பாடல்கள் புரிய முடியாமலுள்ளன.  அறிவின் பல்வகைப்படிநிலைகளிலுள்ள மானுடர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்கின்றார்கள். யுத்தங்களாலும், வேற்றுமைகளாலும் இந்த அழகான கோளானது ஒவ்வொரு கணமும் மேலும் மேலும் சீர்குலைந்து செல்கின்றது. பயங்கர இரத்தக்களரிகளூக்குச் சாட்சிகளாகவிருந்தோம். இருக்கின்றோம்.  ஓ! எவ்வளவு அற்புதமானது இச்சிறிய கோள். எவ்வளவு அற்புதங்களை இக்கோளானது எமக்காகத் தன்னுள் வைத்திருக்கின்றது.  இதன் அற்புத நிலையினை உணராமல் இதனை அழிப்பதற்கு என்ன தேவை? ஏன் இங்கு உனது பணி அன்பு செய்தல் என்பதற்கேற்ப வாழ ஏன் எம்மால் முடியவில்லை?

கதையானது நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்கு, கடந்தவற்றை நினைவுபடுத்தல் மூலமும், நினைவுக்குறிப்புகள் மூலமும் நகர்ந்துசெல்கிறது.  இந்த நூலானது நாசிகளின் காலத்தில் எழுதப்பட்ட 'ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பு' என்னும் நூலுடன் ஒப்பிடக்கூடியது.  இளங்கோ அவனது நிகழ்காலநிலையிலும் பார்க்க தனது நினவுகளிலேயே அதிகமாக வாழ்கின்றான். அவனது தாய்நாடும், குடும்பத்தவரும் மட்டுமே அவனது நினைவுகளில் இன்னும் இருப்பவர்கள். அவனது அறிமுகமற்ற மண்ணின் மீதான வாழ்க்கைப்போராட்டமானது அவனைச்சுற்றியுள்ள வாழ்வின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஈடுபட அவனை அனுமதிக்கவில்லை. காற்றில் அலைக்கழிக்கப்பட்டுச்செல்லும் , தனக்கென்று ஒரு திசையை அல்லது பயண முடிவைத்  தேர்வுசெய்யும் தன்மையற்ற காய்ந்த இலையொன்றைப்போல் அவனுணர்ந்தான். நம்பிக்கையிழந்த சந்தர்ப்பங்களில் அவன் சுதந்திரதேவியின் சிலையைப்பார்த்துக்கேட்பான்: 'ஏன் இருக்க ஓரிடம் தேடி இங்கு வரும் மக்கள் வருந்தத்தக்க நிலைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்?'. இதற்குரிய விடை கிடைக்கக்கூடிய நிலையில் இல்லாததால் , பொதுவான நோக்குக்காக அவ்விதம் காலங்காலமாக விளங்கும் இளங்கோ சுதந்திரதேவியை வணங்குவதை மட்டுமே செய்வான்.

இப்புத்தகமானது சிறப்பான கவிதைக்கூறுகளும், எழுத்து நடையும் அரிதாகக் கலந்த கலவை. கதாசிரியரின் உருவகங்கள், உவமைகளைனாவை கதைகூறலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்