Wednesday, March 4, 2020

காலத்தால் அழியாத கானங்கள்: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"

"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்....
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே" -
கவிஞர் மேத்தா




அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.
கவிஞர் மேத்தா என்றதும் 'வானம்பாடிக் கவிதைக்குழு' ஞாபகம் எழும். அவரது புதுக் கவிதைகளின் ஞாபகம் எழும். எனக்கு இவர் முதன் முதலில் அறிமுகமானது ஒரு சிறுகதையின் மூலம்தான். என் பால்ய பருவத்தில் நான் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணிக்கதிர், ராணி, ராணிமுத்து, அம்புலிமாமா, கண்ணன், கலைமகள் என்று விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவரே எழுத்தாளர் மேத்தா. அப்பொழுதெல்லாம் ஆனந்தவிகடன் நிறுவனத்தினர் மாதந்தோறும் மாவட்டமலர்ச்சிறப்பிதழ்களை வெளியிட்டு வந்தார்கள். மதுரை மாவட்டம், தஞ்சை மாவட்டம், சேலம் மாவட்டம் என்று மாதாமாதம் மாவட்டமொன்றைப்பற்றிய தகவல்கள், கட்டுரைகள்,கவிதைகளுடன் அம்மாவட்ட மலர் வெளிவரும். அம்மாவட்ட மலர்களில் அம்மாவட்ட மண்மணம் கமழும் மாவட்டமலர்ச் சிறுகதையொன்றும் வெளியாகும், அதற்கு பரிசும் வழங்கப்படும். அவ்விதமாக விகடனின் தஞ்சை மாவட்ட மலரில், பரிசு பெற்ற சிறுகதையாக வெளியானதுதான் மேத்தாவின் சிறுகதையும். அதுவே மேத்தாவின் முதற் சிறுகதையாகக்கூட இருக்கலாம். பின்னர் அதே விகடன் தனது பொன்விழாவையொட்டி நடாத்திய சரித்திர நாவல் போட்டியில் முதற் பரிசினைப்பெற்றதும் மேத்தாவின் 'சோழ நிலா'வே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடலின் சிறப்புக்கு மேத்தாவின் வரிகள், பாடகர்களின் குரலினிமை, இசைஞானியின் இசை, நடிகர்களின் நடிப்பு எல்லாமே நன்கு பொருந்திப்போகின்றன.

படம்: உதயகீதம்
பாடலாசிரியர்: கவிஞர் மேத்தா
பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
நடிப்பு: மோகன் & ரேவதி
https://www.youtube.com/watch?v=Tzg0L-DTqB4

பாடல் முழுமையாக:

பெ: பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்....
பெ: நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான போதும் கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே....
ஆ: பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்....
ஆ: ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே....
ஆ: பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
பெ: உன் பாடலை நான் கேட்கிறேன்
ஆ: பாமாலையை நான் கோர்க்கிறேன்,
பெ: பாடும் நிலாவே
ஆ: தேன் கவிதை
பெ: பூ மலரே....

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்