Showing posts with label எழுத்தாளர் வ.ந.கிரிதரன். Show all posts
Showing posts with label எழுத்தாளர் வ.ந.கிரிதரன். Show all posts

Wednesday, April 24, 2024

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!


மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள்.

என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.

Tuesday, April 23, 2024

மறக்க முடியாத ஆளுமையாளர் சத்தியமூர்த்தி மாஸ்டர்!


அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர்.  ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.

ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.

எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன்  'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத  வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.

உலகப் புத்தக நாள்


இன்று, ஏப்ரில் 23,  உலகப்புத்தக நாள்.  என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது.  எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து  ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு  நாள் கூடக் கழிந்ததில்லை.

ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.

மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும்.  வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. வாசிப்பு இன்பத்தைத்தருகின்றது. வாசிப்பு இருப்புக்கோர் அர்த்தத்தைத் தருகின்றது.

எழுத்து ஒரு கலையாகவிருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாகவிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

புத்தகத்தின் வடிவம் எத்தகையதாகவுமிருக்கலாம். அது அச்சு வடிவிலிருக்கலாம். டிஜிட்டல் வடிவிலுமிருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி அதன் வடிவத்தை மாற்றினாலும், புத்தகம் புத்தகம்தான்.
புத்தகங்களை எந்நாளும் வாசிப்போம்.  புத்துணர்வினை, இன்பத்தினை   அடைவோம். படைப்பாற்றலைப் பெருக்குவோம். சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குவோம். சிந்தனைத் தெளிவை அடைவோம்.
புத்தகங்கள் எம் வழிகாட்டிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல, எம் தோழர்களும் கூடத்தான்.

இந்நாளில் நான் இதுவரை வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களை எண்ணிப்பார்க்கின்றேன். அவற்றுக்கு நான் தலை வணங்குகின்றேன். இதுவரை கால என் இருப்பில் என்னுடன் கூடப் பயணித்ததற்காக, என் வாழ்வில் ஓர் அர்த்தம் தந்ததற்காக.

இத்தருணத்தில் இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.  அவர்கள்  சமூக, பொருளாதார,அரசியல் சவால்களுக்கு மத்தியில் இயங்கியவர்கள். தம் சிந்தனைகளை மானுடர்களின் வளர்ச்சிக்காக, இன்பத்துக்காக எழுத்தில் வடித்து வைத்தவர்கள்.

Wednesday, April 3, 2024

காங்கிரஸ் நூலகமும், 'வேர்ல்கட்' (Worldcat) இணையத்தளமும், அவற்றின் பயனுள்ள சேவைகளும்! - வ.ந.கிரிதரன்

'அமெரிக்க காங்கிரஸ்' (The Library of Congress) , https://www.loc.gov/, நூலகத்தில் பயனுள்ள தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. சுமார் 10,000ற்கும் அதிகமான தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. எனது மண்ணின் குரல் (1998) , அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடுகளாக வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு), வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஆகிய நூல்களை அங்கு கண்டு வியந்து போனேன்.
Worldcat.org பயன்மிக்கதொரு தளம். இதில் அங்கத்தவர்களாகவுள்ள , உலகின் பல பாகங்களிலுள்ள நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விபரங்களைத் தருமொரு தளம். ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தளம். எனது நூல்கள் பல யாழ் பொதுசன நூலகம், யாழ் பல்கலைககழக நூலகம், பேராதனைப் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றிலுள்ளன. ஆனால் அவை பற்றிய விபரங்களை வேர்ல்கட் இணையத்தளத்தில் தேடியபோது காணவில்லை. அந்நூலகங்கள் 'வேர்ல்கட்'டில் அங்கத்தவர்களாக இன்னும் இணையவில்லையென்று நினைக்கின்றேன். அந்நூலகங்கள் இணைவது பலருக்கும் பயனுள்ளதாக அமையும். இணைவது பற்றி இந்நூலகங்கள் சிந்திக்க வேண்டும்.

Tuesday, April 2, 2024

ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -

                                                     -எழுத்தாளர்  ஜெகசிற்பியன் -

எழுத்தாளர் ஜெகசிற்பியனின் நாவலான 'மண்ணின் குரல்' பற்றி நான் அறிந்தது தற்செயலானது. என் பால்யப் பருவத்தில் கல்கியில் தொடராக வெளியான் சமூக நாவல்களான  கிளிஞ்சல் கோபுரம், ஜீவ கீதம், காணக்கிடைக்காத தங்கம்,  சரித்திர நாவல்களான 'பத்தினிக்கோட்டம்' , மற்றும் 'நந்திவர்மன் காதலி' (ராணி முத்து) மூலம் எனக்கு அறிமுகமானவர். ஆனால் இந்த நாவலான 'மண்ணின் குரல்' கல்கியில் வெளிவராத நாவல்.  மலேசியாவிலிருந்து வெளியான 'தமிழ் நேசன்' பத்திரிகையில் வெளியான  தொடர் நாவல்.

Sunday, March 31, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (3) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் மூன்று: புதிய உலக ஒழுங்கும், கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' சிந்தனையும்!


அன்று முழுவதும் கட்டடக்காட்டில் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அலைதலுடன் அன்று காலை அவன் மார்க்குடன் நடத்திய உரையாடலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்பின் ஆதிக்கமே உயிரினங்களுக்கு மத்தியில் காணப்படும் படைப்பின் இயல்பென்றால் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. ஏன்?  ஏன் இவ்விதம் இந்த உலகு படைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதம் உருவாகக் காரணமென்ன? இதுவரை காலமும் இன்பமளித்துக்கொண்டிருந்த இயற்கையெழிலும், பல்வகை உயிரினங்களும் இப்போது அவனுக்கு முன்புபோல் இன்பத்தைத்தரவில்லை. இயற்கையின் எழிலுக்குப் பின் மறைந்து கிடக்கும் துயரமும், பாசச் சுமையினால் வாடும் உயிரினங்களும் அவனது மனத்தை வாட்டியெடுத்தன. ஏன்? ஏன்? ஏன்? படைப்பின் மாபெரும் கறையாக இந்த துயரைச் சுமந்திருக்கும் அன்பின் ஆதிக்கம் அவனுக்கு இப்போது தென்பட்டது.

Wednesday, March 27, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!


மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.

Tuesday, March 26, 2024

அன்னை நினைவுகள்!


அன்னையே!
இருப்பில் நீ இருந்த இறுதி நாள்
இன்று உனை நாம்
இழந்த நாளும் கூடத்தான்.
இருப்பின் வடிவம் நீ நீங்கிடினும்
இருக்கின்றாய் எம்மில்
உணர்வாய், உயிரணுவாய் நிறைந்து.
இருக்கின்றவரையில்
இருப்பாய் எம் சிந்தையில்
இன் நினைவுகளாய்.
 
'நவரத்தினம் டீச்சர்' என்று ஊருனை அறியும்.
நமக்கோ பாசமிகு 'அம்மா'.
அம்புலி காட்டி , அதிலிருக்கும் ஆச்சி பற்றி
அன்று நீ அன்னமூட்டிய தருணங்கள்
இன்றும் பசுமையாய் இருக்கின்றன.
 
அவ்வப்போது நீ பாடி
அகம் மகிழ்வித்த பாரதி பாடல்கள்
இன்னும் ஒலித்துக்கொண்டுள்ளன.
 
இரவு நீங்கும் முன எழுந்து
உணவு சமைத்து, பொதிகளாக்கி
உன்னுடன் பாடசாலை கூட்டிச் செல்வாய்.
உன் அரவணைப்பில் நாம் நடந்த
உவகை மிகு நாட்களவை.
 
கண்டிப்பிலும் உன்னால் கோப உணர்வுகளைக்]
காட்ட முடிந்ததில்லை.
கனிவு தவிர எதை நீ காட்டினாய்?
 
பின்னர் வளர்ந்து பெரியவனாகி
பிற தேசம் படிக்கச் சென்று
அவ்வப்போது ஊர் திரும்பி மீள்கையில்
அதிகாலையெழுந்து , உணவு சமைத்து,
அகமகிழ்வுடன் பின்னர் உண்ண
அதனைப் பொதியாக்கித் தருவாய்.
தொடருந்து நிலையம் நோக்கிச் செல்கையில்
தொலைவு நோக்கிச் செல்லும் மகன் நோக்கித்
தொடர்ந்து வரும் உன் பார்வை.
வாசலில் நீ நிற்கும் கோலமும், உன்
வதனத்தில் படர்ந்திருக்கும் மெல்லிய சோகமும்,
அதிகாலை மெல்லிருளில் தலைவிரிக்கும் பனைப்பெண்களின்
சரசரப்பைக் கேட்டுச் செல்லும் என்னை இன்றும்
தொடர்ந்து வரும் விந்தையென்ன!
 
அன்னையே! எம் தெய்வம் நீ!
அன்னையே! எம் உயிர் நீ!
அன்னையே!
இருக்கும் வரை எம்
இருப்பின் வழிகாட்டி நீ.

Thursday, March 21, 2024

உமாசந்திரனின் 'முழுநிலா'


என் பால்யப் பருவத்தில் விகடனில் தொடராக வெளியான நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று உமாசந்திரனின் 'முழு நிலா'. அதில் வரும் உப்பிலி, நளினா பாத்திரங்களை நான் இன்னும் மறக்கவில்லை. அப்பாவுக்கும் மிகவும் பிடித்த நாவல் அது . கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியான நாவலை அக்காலகட்டத்தில் மிகவும் விரும்பி வாசித்தோம். 

Tuesday, March 19, 2024

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் பெயரில் குளிர்காயும் ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம். - வ.ந.கிரிதரன் -


அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன.  இவரது நாவலான 'பொன்மாலைப்பொழுது ' தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார். இவரை பெண் எழுத்தாளராகவே  அப்போது எண்ணியிருந்தேன். காலப்போக்கில் அவரை மறந்து விட்டேன். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவரை ஆணாகச் சென்னை நூலகத் தளக்குறிப்பு கூறுகிறது:

புதுமைப்பித்தனின் 'பொன்னகர'மும் , ஜெகசிற்பியனின் 'இது பொன்னகரம் அல்ல'வும்!


புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' அளவில் சிறிய , ஆனால் மிகவும் கடுமையாகச் சமூகத்தைச் சாடும் விவரணச் சித்திரம். அதில் அம்மாளு என்னும் வறிய பெண், நோயால் வாடியிருக்கும் தன் கணவனுக்காகத் தன்னை விற்கின்றாள்.

Wednesday, February 28, 2024

எனது நூல்கள் வாசிப்புக்கு ....


    அண்மையில் வெளியான எனது மூன்று நூல்கள் தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கி வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Monday, February 26, 2024

நாவல்: வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்'


ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  
 
 

 

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்


ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

கவிதைத் தொகுப்பு: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் -


பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கல். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

Wednesday, February 14, 2024

ஆவணக்காணொளி: கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை


எழுத்தாளர் கு,அழகிரிசாமி பற்றிய சிறப்பானதோர் ஆவணக்காணொளி. அவரை எழுத்தாளராக  மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'கு.அழகிரிசாமி  கொலக்கால் திரிகை' என்னும் இக்காணொளி அவரது பன்முக ஆளுமையை அறிய வைத்தது.  இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தைச் சிறப்பாகச் செய்திருப்பவர் அ.சாரங்கராஜன். வாழ்த்துகள்.

Tuesday, February 13, 2024

எழுத்தாளர் டானியல் அன்ரனியின் 'முல்லை' சஞ்சிகை!


இலங்கையில் வெளியான கலை, இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய பூரணமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது  அவசியம். நூற்றுக்கணக்கில் சஞ்சிகைகள் பல  வெளிவந்து , பொருளாதாரச் சூழல் காரணமாகத் தாக்குப்பிடிக்க முடியாது காணாமல் போயிருக்கின்றன.இவை பற்றியெல்லாம், இவற்றில் எழுதிய எழுத்தாளர்கள்,  பங்களித்த ஓவியர்கள் , வெளியான பல்வகை ஆக்கங்கள் பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்பட  வேண்டும்.

Thursday, February 1, 2024

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் எனது நூல் பற்றிய விமர்சனக் குறிப்புகளை பெப்ருவரி தாய்வீடு  பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். இது அண்மையில் 'டொராண்டோ'வில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கட்டுரை நூல் பற்றி அவர் வாசித்த கட்டுரையின் எழுத்து வடிவம்.  அருண்மொழிவர்மனுக்கு எனது நன்றி.  

மேற்படி விமர்சனக் குறிப்பில் அவர் பல விடயங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவை பற்றி விரிவாக விரைவில் என் பார்வையில் கருத்துகளை முன் வைப்பேன். இங்கு இக்கட்டுரைத்தொகுப்பை என் அபிமானக் கவி பாரதிக்குச் சமர்ப்பித்தது பற்றிய அவரது விமர்சனக் குறிப்புக்கான என் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

Monday, January 22, 2024

ஸ்கார்பரோவிலுள்ள சாப்டர்ஸ் புத்தகக் கடைக்கு மூடுவிழா!


எனது ஆலயங்கள் புத்தக் கடைகள், நூல் நிலையங்கள். ஸ்கார்பரோவிலுள்ள சாப்டர்ஸ் புத்தகக் கடை எம் வாழ்க்கையில் பல்லாண்டுகளாக ஓரங்கமாக இணைந்து பயணித்து வந்ததொன்று. 
 
தற்போதுள்ள சூழல் காரணமாகப் பல பதிப்பகங்கள் , சஞ்சிகைகள், பத்திரிகைகள்  ஆட்குறைப்பு செய்கின்றன, அல்லது சஞ்சிகை, பத்திரிகைகளின்பக்கங்களைக் குறைக்கின்றன, அல்லது இணையத்தில் மட்டும் இயங்கத்தொடங்குகின்றன. இன்னும் சில மூடு விழா நடத்துகின்றன.

Saturday, January 20, 2024

மறக்க முடியாத கனடிய அனுபவம்!



ஒரு தடவை தொண்ணூறுகளில் ஒரு வீடற்ற வீதி மனிதனை டொரோண்டோ நகரில் ஹில்டன் ஹொட்டல் முன் சந்தித்தேன். அவனுடான அனுபவத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதையும் 'வீடற்றவன்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். வைகறை பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் அக்கதை பிரசுரமானது. பின்னர் அம்மனிதனைப் பற்றி மறந்து விட்டேன். பின்னர் ஒரு சமயம் டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையிலொரு செய்தி வந்திருந்தது. அதில் Bay வீதியும், Adelaideஎ வீதியும் சந்திக்குமிடத்தில் இரு வீடற்றவர்கள் சண்டை பிடித்தது பற்றிய செய்தி அது. அதில் ஒருவர் டொரொண்டோ மேயர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்றிருந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான் சந்தித்த மனிதன் கிளார்க்கும், கெவின் கிளார்க்கும் ஒருவரே என்னும் விடயம்.
அண்மையில் விக்கிபீடியாவில் அவரைப்பற்றியொரு பக்கமிருந்ததை அறிந்தேன்.அதில் அவரைப்பற்றிய பல முக்கிய தகவல்கள் இருந்தன. அவர் எண்பதுகளில் டொரோண்டோ பாடசாலையொன்றில் தரம் ஐந்துக்கான ஆசிரியராகவிருந்தவர். அதன் பின்பு வாகனம் சம்பந்தமான வர்த்தம் செய்தவர். நடிகராகவும் இருந்திருக்கின்றார். இவர் The People's Political Party அதாவது மக்களின் அரசியல் கட்சி என்னுமொரு அரசியல் கட்சியின் ஸ்தாபகர். தலைவர். மேயர் தேர்தலுடன் மாகாண தேர்தல்களிலும் போட்டியிட்டவர்.
 
எனது 'வீடற்றவன்' சிறுகதையின் முடிவில் இவ்வாறு கூறியிருப்பேன்: " இந்த புதிரான மாநகரைப் போலவே புதிரான மனிதனிவனெனப் பட்டது. ' உண்மைதான் கெவின் கிளார்க் ஒரு புதிரான மனிதர்தான்.
எனது இந்த அனுபவத்தைப்பற்றியொரு குறிப்பினை எனது ஆங்கிலப் பக்கத்தில் எழுதினேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.
 
Unforgettable Canadian Experience! 
 
One night in the mid-nineties, I was walking along Richmond Street West towards University Avenue. As I passed the Hilton Hotel, I encountered a panhandler. He stood out from the regular panhandlers, wearing a worn-out coat and pants – a rich-to-rag figure. Politely, he asked for money, and I gave him a toonie, a Canadian two-dollar coin. Grateful, he handed me two quarters and suggested I give them to my daughter, assuring me she could use them to call me when needed.


In that instant, he became a unique and mysterious figure. Intrigued, I decided to engage in a short conversation with him. I noticed he carried a plastic container with 'Clarke for Mayor' written on its surface. Surprisingly, he shared that he was running for Toronto Mayor. He also  told me that he was running to champion people's rights. His revelation astonished me, given the media's portrayal of homeless individuals often dealing with mental illness.To read the full article

Twitter

ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்'

ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் ' கிழவனும் கடலும் ' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவல...

பிரபலமான பதிவுகள்