'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Monday, December 8, 2025
சிலம்பொலி சு.செல்லப்பனின் மூலமும் தெளிவுரையுடன் கூடிய 'சிலப்பதிகாரம்'!
எனக்கு மிகவும் பிடித்த தமிழ்க் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய 'சிலப்பதிகாரம்'. தமிழ்க்காப்பிய வரிசையில் வெளியான முதலாவது காப்பியமும் 'சிலப்பதிகாரம்'தான். நான் முதன் முதலில் அறிந்த தமிழ்க்காப்பியமும் 'சிலப்பதிகாரம்'தான். அதற்குக் காரணம் என் தந்தையார்தான். என் வாசிப்பின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சில நூல்களை வாங்கித் தந்தார். ஆனால் அவற்றை வாங்கியபோது அவற்றை வாசிக்கும்படி ஒரு தடவை கூட அவர் கூறியதில்லை. அவர் வாங்கிய நூல்கள் வீட்டில் எம் கண்களின் முன்னால் காட்சியளித்தன. அதன் விளைவாக நாம் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம். வாசிக்கத்தொடங்கினோம்.
அவ்விதம் அவர் வாங்கித்தந்த நூல்களிலொன்றுதான் புலியூக்கேசிகனின் தெளிவுரையுடன் கூடிய 'சிலப்பதிகாரம்' நூல். . 'திங்கள் மாலை வெண்குடையான்', 'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!", 'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப' போன்ற காப்பிய வரிகள் அப்பொழுதே என்னைக் கவர்ந்தன. காப்பியத்தின் எளிமையும், ஆழமும் அப்போதே என்னை மிகவும் கவர்ந்தன. அன்றிலிருந்து சிலப்பதிகாரம் என் வாழ்வில் என்னிடமுள்ள புத்தகங்களில் நிச்சயம் இருக்குமொரு நூலாக மாறிவிட்டது. சிலப்பதிகாரம் என்னை மட்டுமல்ல பலரையும் கவர்ந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று - அது அரசரை முக்கியப்படுத்தும் காப்பியம் அல்ல. சங்கத் தமிழ் மக்கள் வாழ்வை எடுத்துரைக்கும் மக்கள் காப்பியம். அதனூடு அக்கால மக்களின் வாழ்க்கையை, நகர அமைப்பை, ஆட்சி அமைப்பை என்று பல்வேறு விபரங்களை அறிய முடிகின்றது. சிலப்பதிகாரம் காப்பியத்தின் தாக்கத்தால் வெளியான நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்கள், அபுனைவுகள் எத்தனை! எத்தனை! எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் சிறந்த வரலாற்று நாவலான 'மணிபல்லவம்' அதன் பாதிப்பில் உருவான தற்கால மக்கள் காப்பியம். இன்று காப்பியத்தின் இடத்தை நாவல் எடுத்திருப்பதால் அவ்விதம் கூறினேன்.
எங்காவது பழைய, புத்தகக்கடைகளில் அல்லது கண்காட்சிகளில் இலக்கியச் சிறப்பு மிக்க, மூலம் , தெளிவுரையுடன் கூடிய சிலப்பதிகாரம் நூல் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பேன். அவ்விதமொரு மூலமும், தெளிவுரையுடன் கூடிய சிலப்பதிகாரம் உவேசாமிநாதய்யர் பதிப்பித்தது , ,தொண்ணூறுகளில் 'டொரோண்டா'வில் நடந்த 'காலம்' செல்வத்தின் 'வாழும் தமிழ்'ப் புத்தகக்கண்காட்சியில் அகப்பட்டது. தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியான , தடித்த அட்டையுடன் கூடிய நூலாக வெளியான பதிப்பு. உடனேயே வாங்கிக்கொண்டேன். உவேசாவின் 'சிலப்பதிகாரம்' நல்லதோர் உசாத்துணை நூல். அன்றாடம் எடுத்து வாசித்து , உருசிப்பதற்கு, இரசிப்பதற்கு உரியதல்ல. அதனால் எப்பொழுதும் எடுத்துப் படித்துச் சுவைப்பதற்குரிய மூலம், தெளிவுரையுடன் கூடிய சிலப்பதிகாரமொன்றைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்கும் ஒரு முடிவு வந்தது.
நேற்று 'டொரோண்டோ தமிழ்ப்புத்தக் கண்காட்சி' நிகழ்விலும் இன்னுமோர் இலக்கியச்சிற்ப்பு மிக்க மூலம், தெளிவுரையுடன் கூடிய சிலப்பதிகாரம் கண்ணில் தென்பட்டது. ஒரேயொரு பிரதியையே கண்டேன். 'காலம்' செல்வத்தின் புத்தகக் கடையின் காட்சிப் பிரிவில் அதனைக் கண்டேன். உடனேயே வாங்க முடிவு செய்து செல்வத்திடம் என்ன விலை, பார்த்துச் சொல்லுங்கோ என்றேன். அதைத்திருப்பி ஒருதடவை பார்த்து விட்டு , நூலில் குறிப்பிட்டிருந்த விலையிலிருந்து ஐந்து டொலர்களைக் குறைத்துக் கூறினார். வாங்கிக்கொண்டேன். அந்த நூல் சிலம்பொலி சு.செல்லப்பனின் ,மூலம், தெளிவுரையுடன் கூடிய 'சிலப்பதிகாரம்'. செம்மொழி நூல் வரிசையில் , சாரதா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல். நன்றி செல்வம்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]
Subscribe to:
Post Comments (Atom)
அழியாத கோலங்கள்: யாழ் இந்துக் கல்லூரியின் மறக்க முடியாத விளையாட்டு வீரன் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா!
நான் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தபோது விளையாட்டு வீரன் ஒருவனின் பெயர் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவிருந்தது. ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment