Monday, December 29, 2025

அஞ்சலி: ஓவியர் ரமணி ஆற்றல் மிக்க ஓவியக் கலைஞர்! சிற்பியும் கூட! - வ.ந.கிரிதரன் -


ஓவியர் ரமணி (வி.சிவசுப்பிரமணியம்)

ஓவியர் ரமணி மறைந்த செய்தியினைத் தாங்கி முகநூல் வெளியானது. ஆழ்ந்த இரங்கல்.

பல தசாப்தங்களாக இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அதிகமாக ஓவியம் வரைந்தவர் இவராக இருக்கக்கூடும். அவ்வப்போது இவரது ஓவியங்கள் தென்பட்டுக்கொண்டேயிருக்கும், எழுத்தாளர் டானியலின் 'பஞ்சமர்' நாவலின் முதற் பதிப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர் இவரே.  செங்கை ஆழியானின் 'போரே நீ  போய்விடு' நாவலுக்கு அட்டைப்படமும், ஓவியங்களும் வரைந்தவர். பூபாலசிங்கம் வெளியீடாக வெளிவந்த அந்நாவலில் இவர் வரைந்த ஓவியங்கள் பலவற்றைக் காணலாம்.


'தற்காலத்து யாழ்ப்பாணத்து ஓவியர்கள்' என்னும் தனது நூலில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா ஓவியர் ரமணி பற்றி எழுதிய குறிப்பு ஓவியர் ரமணி பற்றிப் பல முக்கிய விபரங்களைத் தருகின்றது. அதில் குறிப்பிடப்படும் ஓவியர் ரமணி பற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:

ஓவியர் ரமணி 1942இல் பிறந்தவர். ஓவியர்கள்  எஸ்.பொன்னம்பலம், மாற்கு ஆகியோரிடம் ஓவியப் பயிற்சியைப் பெற்றவர். அரசினர் நுண்கலைக்கல்லூரியில் ஐந்து வருடப் பயிற்சி பெற்றவர். இலங்கையின் புகழ்பெற்ற ஓவியர்களான ஸ்ரான்லி அபயசிங்க, கொஸ்தா கருணரட்னா ஆகியோர்டம் 1962-1967 ஆண்டுக்காலப் பகுதியில் பயிற்சி  பெற்றவர். 

இவருக்குப் பிடித்த மேனாட்டு ஓவியர்கள்:  மெடிசியானி, வன்கோ, எல்கிரகோ,சல்வடோர் டாலி. ரமணியின் ஓவியங்களில் இவர்களின் செல்வாக்குப் படிந்துள்ளது. இந்திய ஓவியர்களில் இவருக்குப் பிடித்த ஓவியர்கள்: ஆதிமூலம், மருது, அம்ரித்தா சேர்கல்.


ரமணியின் ஓவியங்களில் ரேகைகளே முதன்மைக்கூறுகள்.  வேகமும், இசையும் இவரது ரேகைகளின் சிறப்பியல்பு. வேறெந்த ஓவிய மரபையும் தன் பாணியாகக்கொள்ளாதவர். தனக்கென்று , தன் வழியில் முன்னோடிகளின் சிறப்புக்கூறுகளைத் தன்வயப்படுத்தி வரைபவர். ஓவியத்தின் சிறப்பியல்பு அதன் எளிமையில் தங்கியுள்ளது என்று கருதுபவர். இந்திய ஓவிய  மரபில் இராசபுதனத்து ஓவியங்கள் இவரை மிகவும்  கவர்ந்தவை. ஓவியம் ஒரு கலை என்னும் வகையில் தனித்துவத்தை முதன்மைக் கூறாகக் கொண்டுள்ளது. வர்ணச் சேர்க்கையில் கட்டுப்பாடுகள் தனக்கில்லை என்று கூறுபவர்.வரணங்களை Dull, Fast  என்று வேறுபடுத்தும் மரபினை இவர் ஏற்றுக்கொள்ளாதவர். பொருத்தமான வர்ணங்களின் சேர்க்கையே ஓவியத்துக்கு இன்றியமையாதது என்பது இவரது நிலைப்பாடு.

இவர் சிறந்த ஓவியர் மட்டுமல்லர் சிற்பியும் கூட.  பழைய உரும்பிராய் சிவகுமாரனின் சிலையை வடித்த சிற்பி இவர்தான்.  பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் அதன் கலைச்சிறப்பைப் ப்லர் உணரத்தவறி விட்டனர் என்று மேற்படி கட்டுரையில் பேராசிரியர் கிருஷ்ணராசா குறிப்பிடுகின்றார். இவ்வளவு முக்கியமான் ஓவியர் ரமணி பற்றிய தகவல்களைக் குறிப்பிடும் பேராசிரியர் ஓவியர் ரமணியின் இயற்பெயரை மேற்படி கட்டுரையில் குறிப்பிடத்தவறி விட்டார்.


பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா தனது ஓவியர் ரமணி பற்றித்  தவற விட்ட  அந்தத் தகவலை எழுத்தாளர் திக்குவல்லை கமால் , மார்ச் 1974 மல்லிசை சஞ்சிகையின் அட்டைப்படக் கட்டுரையாக , ஓவியர் ரமணி பற்றி எழுதிய 'தனித்துவம் மிக்க ஓவியக் கலைஞர்' ' ( எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுத்த 'அட்டைப்படங்கள்' நூலில் இத்தலைப்பில் வெளியான இக்கட்டுரை மல்லிகை சஞ்சிகையில்  'முதல் முதலில் சந்தித்தேன்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது)  என்னும் கட்டுரையில்  அறிய முடிந்தது.  ஓவியர் ரமணியின் இயற்பெயர் வி.சிவசுப்பிரமணியம், 

ஓவியர் ரமணி  திக்குவல்லைகமாலுடன்  பலாலி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் கல்வி கற்று, ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். நுண்கலைக்கல்லூரியில் 'Diploma in Art' இல் முதற் தரத்தில் சித்தியடைந்திருக்கின்றார். தேசிய நூதனசாலையில் தயாரிப்பு உதவியாளராக மூன்று ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.  'மல்லாகத்தில் வசிக்கும் இவர் தற்போது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாயலத்தில் விசேட ஆசிரியராகப் பணிபுரிகின்றார்' என்று  திக்குவல்லை கமால் குறிப்பிட்டிருக்கின்றார். 

'ஈழத்தின் முதல்தரமான ஓவியர் ரமணி ' என ஓவியக் கலைஞர் 'சிரித்திரன் - சுந்தர்' பல  தடவைகள் மனந்திறந்து கூறியுள்ளார் என்றும் கமால் அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.  அதனால்தான் ஓவியர் ரமணிக்குச் சிரித்திரனில் அவர் இடங்கொடுத்தார். ஓவியர் ரமணியின் ஓவியங்களை முதன் முதலில் நான் பார்த்தே சிரித்திரன் சஞ்சிகையில்தான்.

மேற்படி திக்குவல்லை கமாலின் கட்டுரையிலிருந்து , எழுத்தாளர் டொமினிக் ஜீவா , ஓவியர் ரமணியின் ஓவியங்களால் கவரப்பட்டவர் என்றும், அதனால் மல்லிகையில் அட்டைப்படங்களென்றால் அது ரமணியின் அட்டைப்படங்களாகத்தானிருக்க வேண்டுமென்று விரும்பியவர் என்றும் அறிய முடிகின்றது. மேற்படி திக்குவல்லை கமாலின் கட்டுரை 'மல்லிகை அட்டைப்பட ஓவியங்கள்' நூலிலும் இடம் பெற்றுள்ளது.

உண்மையில் ரமணி அவர்களின் இழப்பு இலங்கை ஓவியத்துறைக்குப் பேரிழப்பே. 

* [டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி] 



No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே! இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன்  'காங்ரீட்''காங்...

பிரபலமான பதிவுகள்