Monday, December 8, 2025

'டொரோண்டோ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி'யில் இளம் எழுத்தாளர் ஒருவருடனான சந்திப்பு!


நேற்று ஸ்கார்பரோவில் நடந்த 'டொரோண்டோ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி'யில் (Toronto Tamil Book Fair), அங்குள்ள புத்தகக் கடைகளில் நூல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது , இளம் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தன் அவர்கள் தன்னை அறிமுகம் செய்து தனது இரு நூல்களை என்னிடம் தந்தார். என் முகநூல் எழுத்துகளைக் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.


'விடியலைத் தேடி' (சிறுகதைத்தொகுதி) 'கூழ்முட்டைக்குள்ளிருந்து குஞ்சொன்று' (கவிதைத்தொகுதி) ஆகிய நூல்களே அவை. மிகவும் நேர்த்தியாக, சிறப்பாக, ஓவியங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட நூல்கள். பதிப்பகம் எதுவென்று பார்த்தேன். 'கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்' என்றிருந்தது.ஆச்சரியமாகவிருந்தது. இதுவரை அதனையொரு நூலகமாகவே அறிந்திருந்தேன். இப்பொழுதுதான் பதிப்பகமாகவும் செயற்படுவதை அறிந்தேன். வல்லிபுரம் சுகந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்துக் கணினித்துறைப் பொறியியற் பட்டதாரி. எழுத்து, தமிழ்மொழி மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழியியல் ஆகிய துறைகளில் முதுமானிப் பட்டங்களையும் பெற்றிருக்கின்றார்.

மேலோட்டமாக நூல்களைப் புரட்டிப் பார்த்தேன். சிறுகதைகள் இவரது மொழியாற்றலையும், சங்க இலக்கியப் புலமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. படைப்புகளை ஓவியங்கள் மேலும் மெருகூட்டுகின்றன.

கவிதைகள் இருப்பு பற்றிய தேடலையும், விசாரத்தையும், ஊர் பற்றிய , எம் வேர் பற்றிய ஏக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதையும் புலப்படுத்தும் வகையில் இருப்பதை உணர்ந்தேன். இவை நூல்களை முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

நிச்சயம் இவை பற்றிய என் கருத்துகளை நூல்களை முழுமையாக வாசித்ததும் பகிர்ந்து கொள்வேன்.

இருப்பு பற்றிய தேடலுடன் கூடிய , சிந்தனை, எழுத்தாற்றல், மொழியாற்றல் மிக்க எழுத்தாளராக வல்லிபுரம் சுகந்தன் தெரிகின்றார். வாழ்த்துகள்.

இங்கு புகைப்படத்தில் என்னுடன் காணப்படுபவர்தான் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தன்.

No comments:

அழியாத கோலங்கள்: யாழ் இந்துக் கல்லூரியின் மறக்க முடியாத விளையாட்டு வீரன் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா!

  நான் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தபோது விளையாட்டு வீரன் ஒருவனின் பெயர் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவிருந்தது. ...

பிரபலமான பதிவுகள்