எழுபதுகள், எண்பதுகளில் இலங்கையிலேயே வடிவமைப்பில் மிகச்சிறந்த திரையரங்கென்றால் அது யாழ்ப்பாணம் வின்சர் திரையரங்காகத்தானிருக்கும். குளிரூட்டப்பட்ட வசதி இல்லாவிட்டாலும் , அதற்கான தேவையே இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்ட திரையரங்கு அது. அதை ஆரம்பத்தில் புது வின்சர் என்றழைத்தனர். காரணம், முன்பு இருந்த சிறிய வின்சர் திரையரங்கு புதுத்திரையரங்கு கட்டப்பட்டதும் ,லிடோ திரையரங்காக மாறியது. மாறும் வரையில் இதனை மக்கள் புது வின்சர் என்றே அழைத்தனர். லிடோ இயங்கத்தொடங்கியதும் வின்சர் என்றழைக்கததொடங்கினர்.
இத்திரையரங்கின் சிறப்பம்சங்களில் சில... உயர்ந்த , கூரையினை உள்ளடக்கிய திரையரங்கு,. இரு புறமும் சுவரில் பெரிய ஜன்னல்கள் இருந்தன. படம் ஆரம்பமாவதற்கு முன்னர் பணியாள் ஒருவர் ஒவ்வொன்றாகப் பூட்டிச் செல்வார். மாலைக்காட்சியென்றால் இவ்விதம் பூட்டப்படும் ஜன்னல்கள் , இருள் கவியத்தொடங்கியதும் திறந்து விடப்படும். சிலுசிலுவென்று வீசும் காற்றை அனுபவித்தபடி , ஜன்னலினூடு தெரியும் இரவு வானை இரசித்தப்படி , அங்கு படம் பார்ப்பதே சுகானுபவமானதோர் அனுபவம்,. ஜன்னல்களுக்கு வெளிப்புபுறமாக நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இம் முகநூற் பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர் கெளரிசங்கர் இத்திரையரங்கை வடிவமைத்தவர் உலகப்புகழ்பெற்ற கடடக்கலைஞர் Geoffrey Bawa என்று குறிப்பிட்ருந்தார். இவர்தான் இலங்கையின் தற்போதுள்ள பாராளுமன்றத்தை வடிவமைத்தவர். உலகக் கட்டடக்கலையில் Tropical Modernism அதாவது வெப்பமண்டல் நவீனத்துவம் என்றொரு பாணியினை அறிமுகப்படுத்தியவராக அறியப்படுபவர். ஒரு நாட்டின் இயற்கைச் சூழல், கலாச்சாரம் போன்றவற்றை உள்வாங்கி, அந்நாட்டுக்குரிய தனித்துவத்துடன் கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். இப்பொழுது விளங்குகின்றது வின்சர் ஏன் இவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கான காரணம். நன்றி கெளரிசங்கர்.
இத்திரையரங்கின் இன்னுமொரு முக்கியமான அம்சம் - முதல் வகுப்பிலிருந்து கலரி வரை தரை சாய்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் வகுப்பின் ஆரம்பத்தில் சிறிது உயரத்தில் பல்கணி அமைநதிருந்தது. பொதுவாகத் திரையரங்குகளில் பல்கணிக்கு மேல்தான் புரஜக்டர் அறை அமைந்திருக்கும். ஆனால் புது வின்சரில் பல்கணிக்கும், முதல் வகுப்புக்குமிடையில் புரஜக்டர் அறை அமைந்திருந்தது. யாழ் திரையரங்குகளில் உயர்ந்த, பரந்த, விசாலமான திரையரங்கு வின்சர்தான். அதுவே அதற்கொரு தனித்துவத்தைக் கொடுத்தது.
ராஜா, ராணி இரண்டும்தான் எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் மணியத்தின் உயர்ந்த கட் அவுட்டுகளை வைப்பார்கள். ஏனைய திரையரங்குகளிலும் மணியத்தின் கட் அவுட்டுகள் இருந்தாலும் அவை ராஜா, ராணி கட் அவுட்டுகளைப் போன்றவை அல்ல.
இங்குதான் நான் ரகசிய போலிஸ் 115, குடியிருந்த கோயில், வா ராஜா வா, அரங்கேற்றம், தேடி வந்த மாப்பிள்ளை, ராஜ்ராஜ சோழன், விளையாட்டுப் பிள்ளை,. நல்ல நேரம் , பைலட் பிரேம்நாத் , தனிப்பிறவி, அவளுக்கென்று ஒரு மனம், , இருளும் ஒளியும் , அன்னமிட்ட கை, குலமகள் ராதை, அவள், உத்தரவின்றி உள்ளே வா, திரைப்படங்களைப் பார்த்தேன். இங்குள்ள 'கட் அவுட்'டுகள் நல்ல நேரம் 'கட் அவுட்'டுகள்.

No comments:
Post a Comment