Tuesday, December 9, 2025

'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த (Toronto Tamil Book Fair 2025) 'நூலகம்' சாவடி!


'டொராண்டோ'  தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த 'நூலகம்' சாவடியில் நூலகம் நிறுவனத்தின் கனடாக் கிளையில் இயங்கும், சமூகம் அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி நிற்கும் காட்சி.  எண்ணிம நூலகமான 'நூலகம்'  நிறுவனம் மிகப்பெரிய பணியினைச் செய்து வருகின்றது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், நினைவு மலர்கள், பல்வகைச் சிறப்பு மலர்கள், புகைப்படங்கள், காணொளிகள், பல்வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள் எனப் பலவற்றைச் சேகரித்து வருகின்றது. நூலகமாகவும், ஆவணக்காப்பகமாகவும் நூலகம் ஆற்றிவரும் பணி தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. 

ஏன் இவ்விதமான நிறுவனங்கள் தேவை?

ஒரு காலகட்டத்து வரலாற்று, கலை, இலக்கிய  ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலத்  தலைமுறையினருக்குக் கடத்துவதென்பது  ஓர்  இனத்தின் வரலாற்றை முறையாகப்பதிவு செய்யும் முக்கியமானதொரு செயற்பாடு. அரிய பணி.  அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அரிய பணியினையும் இத்தகைய நிறுவனமொன்று செய்கின்றது.  பல்வகை ஆய்வுகளுக்கும் உசாத்துணைகளாக இவ்விதம் பேணப்படும் ஆவணங்கள் விளங்குகின்றன.  இனக்குழுக்களின் சமூக, தனிநபர் அடையாளங்களை இவை தலைமுறை கடந்து கடத்துகின்றன.  இவை முக்கியமான காரணங்கள்.  இதனால் தமிழர்களான எம்மைப் பொறுத்தவரையில் எம் மத்தியில் இவ்விதப் பணிகளைச்  செய்யும் நூலகம் நிறுவனத்தின் சேவை தொடர்வது அவசியமானது.

தனிப்பட்டரீதியில்  நூலகம் தளம் என் வாசிப்புக்கு, ஆய்வுகளுக்கு நூலகம் மிகவும் உதவியாகவிருக்கின்றது. அத்துடன் என் ஆரம்ப காலத்து எழுத்துகளை (சிறுவர் எழுத்துகள் உட்பட) மீண்டும் என்னிடம் சேர்ப்பதற்கு உதவி செய்திருக்கின்றது. இவ்விதம் கலை, இலக்கிய ஆளுமைகள், பல்கலைக்கழகப்பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், பொதுவான வாசகர்கள் அனைவருக்கும் காலத்தின் தேவையறிந்து சேவை வழங்கி வருகின்றது நூலகம் நிறுவனம். இதன் செயற்பாடுகள் எவ்விதத் தடைகளுமற்று தொடர்வதற்கு நாம் எம்மால் முடிந்த உதவிகளை வழங்குவது அவசியம். குறைந்தது மாதம் 10 டொலர்கள் நன்கொடையாகக் கொடுப்பதன் மூலம் இதன் வளர்ச்சிக்கு நாம் உதவலாம். ஆர்வமுள்ளவர்கள் நூலகத்தின் கனடாக் கிளையுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

நூலகம் கனடாக் கிளைக்கான மின்னஞ்சல் முகவரி: canada@noolahamfoundation.org   இம்மின்னஞ்சல் மூலம் நூல்கக் கனடாக் கிளையினருடன் தொடர்பு கொள்ளலாம். இம்மின்னஞ்சல் முகவரிக்கு e- transfer மூலமும் உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்க முடியும். 

நூலகம் கனடா பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான இணையப் பக்கம்  - 

https://noolahamfoundation.org/wiki/index.php?title=Template:Noolaham_:_Canada


No comments:

அழியாத கோலங்கள்: யாழ் இந்துக் கல்லூரியின் மறக்க முடியாத விளையாட்டு வீரன் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா!

  நான் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தபோது விளையாட்டு வீரன் ஒருவனின் பெயர் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவிருந்தது. ...

பிரபலமான பதிவுகள்