![]() |
| [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] |
வரலாற்று நதி எப்போதுமே அமைதியாக, இனிமையாக,
ஆடி , அசைந்து நடை பயில்வதில்லை.
சில வேளைகளில் நதி ஆக்ரோசம் மிக்கதாக,
பொங்கிப் பெருகி, கோரத்தாண்டவம் ஆடுவதுமுண்டு.
கோரத்தாண்டவம் ஆடிச் செல்லும் நதியின் சீற்றம்
எம்மை ஒரு போதும் அடி பணிய வைப்பதில்லை.
அபாயங்கள், துயரங்கள் எமக்கும் பாடங்களைப் போதிக்கும்
குருமார்கள். ஆசிரியர்கள். வழிகாட்டிகள்.
வீழும் ஒவ்வொரு தடவையும்
எம்மை எழ வைக்கும் உறுதியை,
எதிர்கால நம்பிக்கையை,
எமக்குத் தருபவர்கள் அவர்களே! அவைகளே!
அனுபவங்களைப் பாடங்களாக்கித் தொடர்வோம்.
அய்யோ! அய்யோ! என்று ஒப்பாரி வைப்பதைத் தவிர்ப்போம்.
பேரழிவுக்குப் பின்னரும் இன்னும் ஆண்டுகள்
பல கடந்தும்
ஒப்பாரி வைத்துக்கொண்டுதானிருக்கின்றோம்.
சுயநலம், சுய ஆதாயத்துக்காக நாம்
ஒப்பாரி வைக்கின்றோம்.
மந்தைகளாகப் பின் தொடர்கின்றோம்.
என்றுதான் விழித்தெழுவது?
என்றுதான் எதிர்கால நம்பிக்கையில்
எழுவது?
எப்பொழுது பார்த்தாலும் கடந்த காலத்தை
என்ணி வைக்கும் ஒப்பாரிகளுக்கு
என்றுதான் முடிவு?
ஒப்பாரிகள் உடனடி ஆறுதலேதவிர
நெடுந் தொடர்கதைகள் அல்ல.
அழிவுகள், எழுச்சிகளைம், துயரங்களை,
மாற்றங்களை,ஏற்றங்களை, நம்பிக்கைகளைக்
காவிச்செல்லும்
வரலாற்று நதியில் நாம் மூழ்கி விடுவதில்லை.
எப்பொழுதும் எதிர் நீச்சல்
அடித்துக்கொண்டுதான் செல்வோம்.
இப்பொழுது எதிர்நீச்சலுக்கான தருணம்.
பொங்கிப் பெருகும் நீரில் மூழ்குவதற்கான
தருணமல்ல.
எதிர்நீச்சல் அடிப்போம்.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்போம்.
நம்பிக்கைதாங்கி நடப்போம்
நாளை நன்கு விடியும்.
எப்பொழுதும் விடிவுகள் இருளுக்குப் பின்னர்தான்
மலர்வதுண்டு. நினைவில் வைப்போம்.

No comments:
Post a Comment