Showing posts with label சஞ்சிகை. Show all posts
Showing posts with label சஞ்சிகை. Show all posts

Friday, February 19, 2021

புதிய கட்டமைப்பில் பதிவுகள் இணைய இதழ்!

பதிவுகள் தளம் பார்வைக்குப் பழைய தளத்தைப்போலவே இருந்தாலும், உண்மையில் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்ட புதிய கட்டமைப்புடன் கூடிய தளமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்கங்களை மிக இலகுவாகக் காணும்  வகையிலும், அலைபேசியில் வாசிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வாசிப்பினை இலகுவாக்கும் பயன்மிக்க மாற்றங்களைக் கொண்டு வருவோம்.

விளம்பரதாரர்களுக்கு!

பதிவுகள் இணைய இதழை உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் வாசிக்கின்றார்கள். குறிப்பாக இந்தியா, கனடா, வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய நாடுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, பர்மா போன்ற நாடுகளுட்பட மேலும் பல நாடுகளிலிருந்தும் வாசிக்கின்றார்கள்.

பதிவுகள் இணைய இதழில் விளம்பரம் செய்வதன்  மூலம் நீங்கள் மிகுந்த பயனை அடைய முடியும். குறிப்பாக 'ரியல் எஸ்டேட்', 'மோர்ட்கேஜ்', காப்புறுதி, பல்வகைச் சேவைகளை வழங்கும் தனிப்பட்டவர்கள் & நிறுவனங்கள் , பொருட்களை, சேவைகளை விற்பவர்கள் என  அனைவரும் மிகுந்த பயனை அடைய முடியும். அதனால்தான் கூகுள் நிறுவனம்  கூடத் தனது விளம்பரங்களைப் பதிவுகளில் வழங்குகின்றது. 

"பதிவுகள்' இணைய இதழினைப் பின்வரும் இணைய முகவரிகளில் வாசிக்கலாம்:

https://www.geotamil.com  https://www.pathivukal.com

வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".

Thursday, March 8, 2018

'மகுடம்' இதழின் கனடாச்சிறப்பிதழ். பற்றி...... - வ.ந.கிரிதரன் -

'மகுடம் (கனடாச்சிறப்பிதழ்)' எழுத்தாளர் களப்பூரான் தங்கா அவர்கள் மூலம் கிடைத்தது. வி.மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக் கொண்டு , இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றிதழான 'மகுடம்' இதழின் ஏப்ரல் - டிசம்பர் 2016 இதழ் கனடாச்சிறப்பிதழாக  கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. சிறப்பிதழினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்ததும் விரிவாக என் கருத்துகளைப் பதிவிடுவேன். இதுவரையில் வாசித்த ஆக்கங்கள் பற்றிய கருத்துகளை மட்டும் இங்கு குறிப்பிடுவேன்.

கவிதைகளைப் பிரதீபா , தான்யா, இரா.குணசீலன், களப்பூரான் தங்கா, மாவலி மைந்தன் சி.சண்முகராசா, வல்வைக் கமல், முரளிதரன், த.அகிலன், அமரர் நா.ஜெயபாலன், எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மகனது பிறப்பு பற்றிய அனுபவம் தன்னைக் கவிஞனாக்கிய அனுபவத்தை இரா.குணசீலனின் 'வயிற்றறுத்து வரும் வம்சங்களுக்காக..' கவிதை வெளிப்படுத்துகிறது. வல்வைக் கமலின் 'காணாமல் போனவர்' கவிதை யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஏழினைக் கடந்த நிலையிலும் , காணாமல் போனவர் இன்னும் திரும்பாத நிலையினை எடுத்துரைத்து நீதி கேட்கின்றது. சர்வதேச மனிட உரிமை அமைப்புகளிடமெல்லாம் முறையிட்டும், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நீதி இன்னும் காணாமல் போய்த்தானுள்ளது என்பதை எடுத்துரைக்கும் கவிதை.

எஸ். லிங்கேஸ்வரனின் 'எறும்புகள்' கவிதை வானிலை அறிக்கை எதுவுமேயற்ற சூழலில் எறும்புகள் எவ்விதம் மழை வரப்போவதை அறிந்து ஒளிந்து கொண்டன என வியக்கின்றது. இவ்வகையான அனுபவங்கள் அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படுபவைதாம். சுனாமி ஏற்பட்ட சூழலில் மானுடர் அழிந்த அளவில் மிருகங்கள் அழியவில்லையென்றும், அவை சுனாமி வரப்போவதை உள்ளுணர்வால் அறிந்து , மேட்டு நிலங்களை நாடிச்சென்று தப்பி விட்டன என்றும் கூறக்கேட்டிருக்கின்றேன். அதனையே கவிதை நினைவூட்டியது. சாதாரண மானுட அனுபவமொன்று இங்கே கவிதையாகியிருக்கின்றது. இனிக்கின்றது.

மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' இதழ் பற்றி... வ.ந.கிரிதரன் -

- நுட்பம் 1908 /1981 சஞ்சிகை -
 மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 1980/1981 ஆண்டுக்கான செயற்குழுவில் , சங்கம் வருடா வருடம் வெளியிடும் 'நுட்பம்' சஞ்சிகைக்கான இதழாசிரியர் குழுத் தலைவராக நானிருந்தேன்.  இதழாசிரியர் குழுவில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த சு.வித்தியானந்தன், கட்டடக்கலைப் பீடத்தைச் சேர்ந்த அ.மகேந்திரன் ஆகியோரிருந்தனர்.

"ஒரு நாள் வரும்.
எழுதுகோல் நிற்கும்.
பின் கைகள் ஆயுதங்களைத் தாங்கும்.
இலக்கியம் இயல்பாகவே யுத்தத்திற்கு
இட்டுச் செல்லும்" - Jean Paul Satre

என்னும் சார்த்தரின் கூற்று முதல் பக்கத்தில் தமிழ்ச்சங்க இலச்சினையுடனிருக்கும். மேற்படி சஞ்சிகை நல்ல முறையில் வெளிவரப் பெரிதும் உதவியவர்கள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், மற்றும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோரே. மேற்படி சஞ்சிகையின் அட்டைப்படத்தினை வரைந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் குணசிங்கம். ஓவியத்திலிருக்கும் ஆண்டினை உற்றுக் கவனித்தீர்களென்றால் அது ஒருவிதத்தில் 1980 ஆகவும், இன்னொரு விதத்தில் 1981 ஆகவுமிருக்கும். 1980 / 1981 நடப்பாண்டுச் செயற்குழுவின் வெளியீடு என்பதால் 'நுட்பம்' இதழின் அட்டைப்பட ஓவியத்தில் ஓவியர் காட்டிய நுட்பம் அது. சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்கள் வருமாறு:

ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழ் - வ..ந.கிரிதரன் -

கலாமணி பரணீதரனை ஆசிரியராக, 'அறிஞர் தம் இதய ஓடை, ஆழ நீர் தன்னை மொண்டு, செறி தரும் மக்கள் எண்ணம் , செழித்திட ஊற்றி ஊற்றி, புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாரதிதாசனின் பாடல் வரிகளைத் தாரகமந்திரமாக் கொண்டு அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழான புரட்டாதி 2012 இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. இது பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் 'ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழும் முழுமையாகக் கனடா வாழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மாத்திரமே தாங்கி வருகின்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய, கனேடியச் சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்ததன்மூலம் ஜீவநதி மேற்படி நாடுகளிலுள்ள படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், ஈழ மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு மேற்படி நாடுகளின் கலை, இலக்கிய முயற்சிகளையும் அறிமுகம் செய்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேற்படி ஆசிரியத் தலையங்கத்தில்2011 வருட சிறந்த சஞ்சிகைக்கான கு.சின்னப்பபாரதி விருது கிடைத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

மேற்படி கனடாச்சிறப்பிதழ் கட்டுரை, கவிதை, சிறுகதை, நேர்காணல் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்துள்ளது. அ.முத்துலிங்கம், வீரகேசரி மூர்த்தி, மணி வேலுப்பிள்ளையுட்பட எழுவரின் கட்டுரைகளையும், தேவகாந்தன், ஸ்ரீரஞ்சனி, மெலிஞ்சி முத்தன், த.மைதிலி, வ.ந.கிரிதரன் ஆகியோரின் சிறுகதைகளையும், திருமாவளவ்ன், தமிழ்நதி, மயூ மனோ, சேரன், டிசெதமிழன் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்), ஆனந்த பிரசாத், கறுப்பி, நிவேதா ஆகியோரின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது 'ஜீவநதி' கனடாச்சிறப்பிதழ். முதலாவது கட்டுரையான 'கனேடியத் தமிழர்களின் கலை இலக்கிய வாழ்வியல்' என்னும் சுல்பிகாவின் கட்டுரை ஆழமானது. ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூறும் பொருள்பற்றி ஆராய்கிறது. மணி வேலுப்பிள்ளையின் 'நொறுங்குண்ட இதயம் ஓர் அரிய நாவல்' என்னும் கட்டுரை மங்களநாயகம் தம்பையாவினால் எழுதப்பட்டு 1914இல் வெளிவந்த 'நொறுங்குண்ட இருதயம் ஓர் அரிய நாவல்' என்னும் தேடி எடுத்த நாவல் பற்றி பதிவு செய்கின்றது. பொருளாசையினால் துட்டர்கள் கையில் தம் பெண் பிள்ளைகளைக் கொடுக்கும் பொருளாசையெனும் கொடிய நோய்க்காளாகியுள்ள தந்தையர்மேல் பரிதாபப்பட்டு அதற்குத் தீர்வாக அரிய சற்போதமென்னும் (நற்போதனையென்னும்) மருந்தினை வழங்குவதே நாவலின் கரு என்பதைக் கட்டுரையாளர் நாவலின் பாத்திரமொன்றின் உரையாடலினூடு எடுத்துக் காட்டுகின்றார். நாவலின் பிரதான பாத்திரங்களெல்லாம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றார்கள். சந்தோசமாக வாழ்கின்றார்கள். 'நாவலாசிரியர் கூறும் பரிகாரம் வேறானதாகவிருந்தபோதும்  மனச்சாட்சியே இந்நாவலின் பிரதானமான மையக்கரு. அதுவே நாவலின் மாந்தர் அனைவரையும் கொண்டு நடத்துன்றது. பரிகாரம் எதுவாயினும் இது அரியதொரு நாவலெ'ன்ற தனது கருத்தினையும் முன் வைக்கின்றார் கட்டுரையாசிரியர். அத்துடன் நாவலாசிரியரின் ஆங்கிலப் புலமை காரணமாக அவர் பல ஆங்கில மொழியில் கையாளப்படும் கூற்றுகளைத் தமிழ் மயப்படுத்தி ஆங்காங்கே பாவித்துள்ளதையும், பாத்திரங்கள் நல்ல தமிழில் உரையாடும் பண்பினையும் அவதானித்துக் கட்டுரையாளர் பதிவு செய்துள்ளார். இக்கட்டுரையின் முக்கியமான பயன்களிலொன்று இந்த நாவல் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிவித்ததுதான். இக்கட்டுரைவாயிலாகத்தான் நானே இந்த நாவல் பற்றி அறிந்துகொண்டேன்.

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்