Tuesday, October 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (7) ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஏழு:   ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்!


எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள இன்பமே தனி. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல் எல்லாவகைப் புத்தகங்களும் புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன். உங்களால் பழைய  புத்தகக் கடைகளில் வாங்குவதைப்போல் புதுப்புத்தகக் கடைகளில் பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில் தொடராக வெளியான, ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நூல்களை ஒருபோதுமே பெற முடியாது. அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம் இருக்கிறதே அதுவொரு பெரும் சுகமென்பேன். அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால் புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது. அவை மானுட இருப்பின் ஒரு காலத்தின் பதிவுகளை உள்ளடக்கியவை. நான் அவ்வகையாக 'பைண்டு' செய்யப்பட்ட புத்தகங்களைப்பற்றிக் கூறுகின்றேன். நான் இவ்விதம் கூறுவதால் என்னை நீங்கள் நான் புதுப்புத்தகக்கடைகளின் பிரதான எதிரி என்று மட்டும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
ஆயினும் அவ்விதம் நீங்கள் கருதினால் அதை நான் தடுக்கப்போவதில்லை. ஏனெனில் அது உங்களின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதாக அமைந்து விடும். அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.

அண்மையில் கூட வழியில் நானொரு பழைய புத்தகக் கடையினைக் கண்டபோது மனம் கேட்கவில்லை. உள்ளே எட்டிப்பார்த்தாலென்ன என்ற எண்ணமெழுந்தபோது வீடு முழுக்கக் குவிந்துள்ள புத்தகக் குவியல்களை ஒருமுறை எண்ணினேன். அண்மையில்தான் முடிவு செய்திருந்தேன் இனியும் புத்தகங்கள் வாங்குவதில்லையென்று. வாங்கிக்குவித்துள்ளவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டியவர்களுக்கு, புத்தகப்பிரியர்களுக்கு, நூலகங்களுக்குக் கொடுத்துவிடவேண்டுமென்று. இருந்தாலும் மனங் கேட்கவில்லை. இம்முறைமட்டும் கடைசித்தடவையாக இருந்துவிடட்டுமென்று எண்ணினேன். இவ்விதம் முடிவெடுத்தவுடன் அந்தப் பழையப் புத்தகக் கடைக்குள் நுழைவது எளிதாயிற்று.

நானே எதிர்பாராதவாறு, நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த, என் பால்யகாலத்து விருப்புச் சஞ்சிகைத் தொடரொன்று அழகாக பைண்டு செய்யப்பட்ட நிலையில் கிடைத்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவத்தையொட்டிய உள்ளத்தைத் தொட்டுச் செல்லும் புனைகதை. புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன். அழகான கையெழுத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "என் பால்ய காலத்துச் சகிக்கு என் பிரிய அன்பளிப்பு" எழுதியவர் பெயரைப்பார்த்தேன். என் பதின்மப் பருவத்தில் என் பால்ய காலத்துச் சகிக்கு நான் அன்பளிப்பாகக் கொடுத்திருந்த புத்தகம் அது.

இப்பொழுது சொல்லுங்கள். உங்களால் இது போன்றதொரு பழைய புத்தகத்தைப் புதுப்புத்தக்கடைகளிலொன்றிலாவது வாங்க முடியுமா? பழைய புத்தகக்கடைகளில் பழைய புத்தகங்கள் மட்டும்தாம் கிடைக்கவேண்டுமென்பதில்லை. பழசாகிவிட்ட இதயங்களும் அங்கு கிடைப்பதுண்டு.

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (6): ஒட்டகங்கள் - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் ஆறு: ஒட்டகங்கள்!


என் பதின்ம வயதுகளில் என் வயதுக்கு மீறிய வளர்த்தி கண்டு நண்பர்கள் 'வாடா ஒட்டககச் சிவிங்கி' என்பார்கள். ஏனென்றால் எனக்கு நீண்ட கால்கள். ஓட்டகச் சிவிங்கி என்பதை விட அதிலுள்ள ஒட்டகம் எப்போதும் என்னைக் கவர்வதுண்டு. அதற்குக் காரணம் அதன் இயல்பும், உறுதியுமே. பாலை வனச் சூழலில் தாக்குப்பிடிக்கும் வகையில் அதன் உடலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது படைப்பின் அற்புதமென்பேன். அதன் முதுகிலுள்ள திமில்களில் கொழுப்பையும்   , இரப்பையிலுள்ள அறைகளில் நீரையும் சேமித்து வைக்கும் ஒட்டகங்கள் பத்து மாதங்கள் வரையில் நீரருந்தாமல் வாழக் கூடியவை. குளிர் வெப்ப நிலைகளுக்கு ஈடுகொடுத்து உடல் வெப்பநிலையை மாற்றி வாழும் தன்மை மிக்கவை. பாலையில் வீசும் மணற் புயல்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை மிக்க மூக்குகள். கண்கள், காதுகளைக் கொண்டவை. கண் இமைகள் மூடியிருக்கும்போதும் பார்வையைத் தடுக்காத வகையில் அமைந்துள்ளதாகவும் அறிந்திருக்கின்றேன்.  அது மட்டுமல்ல அதிக சுமை தாங்கி, விரைவாக ஓடும் வல்லமையும் மிக்கவை.

ஓட்டகங்கள் என் கவனத்தை ஈர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இனக்கலவரங்களால் சொந்த  மண்ணில் , சர்வதேசப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் அகதிகளாக அலைந்து திரிந்து , எதிர்ப்படும் சவால்களையெல்லாம் எல்லாம் , புயல்களையெல்லாம் எதிர்கொண்டு செல்லும் ஒட்டகங்களாக எம்மவரை, என்னை நான் இனங்காணபதுண்டு. இவ்வகையில் அகதிகளுக்கொரு குறியீடாக நான் ஓட்டகங்களை எண்ணுவதுண்டு. ஒட்டகம் என்னும் சொல் ஒரு படிமமாக எனக்குத் தோன்றுவதுண்டு.

"என்ன கண்ணா சிந்தனை. அப்படியென்ன தலை போகிற சிந்தனை. கப்பலேதும் கவிழ்ந்து விட்டதா?"

எதிரில் கேலி கொஞ்சும் குரலில் கேட்டபடி வந்தவள் மனோரஞ்சிதம்.

"சரி கண்ணம்மா, நீதானே மிகவும் திறமைசாலியென்று உன்னை அதிகம் மெச்சிக்கொள்வாயே. நீயே சொல்லு பார்க்கலாம் நான் என்ன யோசிக்கிறேனென்று?"

"உன் மனத்திலை இருக்கிறதைக் கண்டு பிடிக்கும் சக்தியெல்லாம் எனக்க்கில்லை கண்ணா. பேசாமல் நீயே சொல்லிவிடு."

"இல்லை. உனக்கு ஒரு துப்பு தருகின்றேன். அதிலிருந்து கண்டு பிடித்துக்கொள். இது ஒரு மிருகம்."

"மிருகமா? " என்று கூறிவிட்டு ஒருமுறை கலகலவென்று சிரித்தாள் மனோரஞ்சிதம்.

"மிருகமென்றால் மிகவும் இலகுவானதாச்சே. உனக்கு மிகவும் பிடித்த மிருகம், பறவையக் கண்டு பிடிப்பது அவ்வளவின்றும் கஷ்ட்டமானதல்ல கண்ணா."

இவ்விதம் கூறியவள் தொடர்ந்தாள் :" நீ குறிப்பிடும் மிருகம் இந்தியாவில் ராஜஸ்தானில் காணப்படும் ஒன்றா?" கூறியவள் கண்களையும் சிமிட்டினாள்.

"ஏன் கண்ணம்மா சுற்றி வளைப்பு. நீதானே கண்டுபிடித்து விட்டாயே. பேசாமல் மிருகத்தின் பெயரையே கூறுவதுதானே."

அதற்கு மனோரஞ்சிதம் அருகில் ஓட்டும்  வகையில் வந்து "ஓட்டட்டுமா. இந்த ஒட்டகத்துடன் ஒட்டட்டுமா" என்று என் மீது தன் உடலால் பலமாக இடித்தாள்.

அவளது மென்னுடல் பட்டு என்னுடல் ஒரு கணம் சிலிர்த்தது.

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (5): ஆனை பார்த்த அந்தகர்கள்! - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் ஐந்து - ஆனை பார்த்த அந்தகர்கள்!


மனோரஞ்சிதம் அவ்வப்போது தமிழ்க் கலை, இலக்கியம் பற்றியும் கருத்துகளை உதிர்ப்பதுண்டு. அவளது கருத்துகள் எப்பொழுதுமே சிந்தனையைத் தூண்டுபவையாக, ஆழமான தர்க்கத்தை வேண்டுபவையாக இருப்பது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுவதுண்டு. இவ்விதமாக அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் அவள் ஆழ்ந்த சிந்தனை நிலையினைக் கண்டு "என்ன பலமான சிந்தனை?" என்று கேட்டாள். கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்த்து என்னையே பார்த்து நின்றாள்.

"வேறொன்றுமில்லை கண்ணம்மா, எல்லாம் நம் காலத்து இலக்கியவாதிகளைப்பற்றித்தான். ஆளுக்காள் குழுக்களாகப் பிரிந்து நின்று தாமே சரியென்று வாதிட்டுக்குகொண்டிருக்கும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு வராமல் வேறென்ன வரும். நீயே சொல் கண்ணம்மா."

"இலக்கியமோர் யானை" என்றாள் பதிலுக்கு மனோரஞ்சிதம்.

"யானையா?"

'ஓம். யானைதான்" என்று தீர்மானமாகச் சொன்னாள் மனோரஞ்சிதம் மீண்டும். அவளது அந்த உறுதி அவள் தன் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகவிருக்கின்றாள் என்பதை நன்கு புலப்படுத்தியது.

"ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் கண்ணம்மா.  இலக்கியத்தில்தான் எத்தனை எத்தனை போக்குகள்."

"கண்ணா, போக்குகள் பல இருப்பது தவறானதொன்றல்ல.அவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகளே.  பிரச்சினை என்னவென்றால்...."

"என்ன பிரச்சினை கண்ணம்மா?"

"இலக்கியத்தின் போக்குகள் அனைத்துமே மனித இருப்பைப் பல்வழிகளில் வெளிப்படுத்துபவை. மனிதரின் அறிவு, புரிதலுக்கேற்ப இவையும் வேறுபடும். மனிதர்கள் எல்லாரும் ஒரே நிலையில்  அறிவைப்பொறுத்தவரையில் இருப்பவர்கள் அல்லர். பல்வேறு படிக்கட்டுகளில் இருப்பவர்கள்.  எல்லாராலும் எல்லாப் போக்குகளையும் இரசிக்க முடியாது. புரிந்துகொள்ள முடியாது. இல்லையா கண்ணா?"

"அம்மாடியோவ்.. என் கண்ணம்மாவுக்குள்  இவ்வளவு விசயங்களா? உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறாயடி கண்ணம்மா."

"ஏன் ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருப்பதை நம்ப முடியவில்லையா கண்ணா" இவ்விதம் கேலியாகக் கண்களைச் சிமிட்டிய மனோரஞ்சிதம் தொடர்ந்தாள்:

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (4) :மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?


'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

Wednesday, October 5, 2022

தொடர்கதை (3) - அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் - சதுரன் & வட்டநிலா தம்பதியினர்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் -  சதுரன் & வட்டநிலா தம்பதியினர்!


தட்டையர்கள் என்  மனவெளி நண்பர்களில் முக்கியமானவர்கள். உண்மையில் இவர்கள் எம் படைப்புகள். அவர்களுடன் நான் அவ்வப்போது உரையாடுவதுண்டு. மனவெளி உரையாடல்கள்தாம். தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன. அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது. தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று என்னவென்று நினைக்கின்றீர்கள்? மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான். ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட எல்லாவகையிலும் உயர்ந்தவன். என்னை மீறி அங்கு எவையுமேயில்லை. இது போதாதா என் உவகைக்கு. அதனால்தான் என்னைச் சுற்றித் தட்டையர்கள் உலகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரவு வானத்துச் சுடர்களைப்போல் அவை என்னைச்சுற்றிக் கண்களைச் சிமிட்டுகின்றன. தட்டையர்கள் உலகத்து உயிர்களுக்கும் எம்முலகத்து உயிர்களுக்குமிடையில் தோற்றத்தில்  வேறுபாடுகள் பெரிதாக இல்லை. அவர்கள் எம்மைபோல் கனமானவர்கள் அல்லர். தட்டையர்கள்.   முக்கிய வேறுபாடு  மிகப்பெரிய வேறுபாடென்பேன். அந்த ஒரு வேறுபாடு போதும் அனைத்தையுமே மாற்றி வைப்பதற்கு. ஆம்! பரிமாணங்களில் எம்மை மிஞ்சிட அவற்றால் முடியவே முடியாது. அவர்களால் ஒருபோதுமே அவர்களது பரிமாணச்சுவர்களை மீறவே முடியாது. இப்படித்தான் பரிமாணம் மிகு உலகத்து உயிர்களெல்லாம் எம்மைப்பற்றியும் எண்ணக்கூடுமென்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. உண்மையில் பரிமாண மிகு நண்பனொருவனும் என் மனவெளி நண்பர்களிலொருவனே. அவனுடனும் நான் அவ்வபோது தனிமையில் நேரம் கிடைக்கும்போது உரையாடுவதுண்டு. அதுபற்றி பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கையில் கூறுவேன்.

Sunday, October 2, 2022

தொடர் கதை - நவீன விக்கிரமாதித்தன் (2) மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்! - வ.ந.கிரிதரன்

அத்தியாயம் இரண்டு: மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்!

இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு  பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.

கட்டடக்காட்டு விருட்சமொன்றின் பொந்துக்குள்ளிருந்து பெய்யும் மாநகரத்து மழையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சலனப்படமொன்றின் நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்ப் போல் வானம் பொத்துக்கொண்டு பெய்துகொண்டிருக்கின்றது. இயற்கை நிகழ்வுகளில் எனக்குப் பிடித்த நிகழ்வு பொழியும் மழை. பெய்யும் மழையை இரசிப்பதிலுள்ள சுகமே தனி. பால்ய பருவத்தில் 'மழையே வா' என்று வரவேற்று பாடியது தொடக்கம், காகிதக் கப்பலை பீலியால் வீழ்ந்து ஓடும் நீரில் விடுவது தொடக்கம் ஆரம்பித்த தொடர்பு. பின்னர் பதின்ம வயதுகளிலும் தொடர்ந்தது. இரவு மழை, வயற்புறத்து மண்டூகங்களின் இசைக்கச்சேரி, சடசடக்கும் ஓட்டுக்கூரைகளில் பட்டுத்தெறிக்கும் நீரொலி, இடையிடையே மின்னும் மின்னல் நங்கையரின் ஒளியழகு, தொடரும் உருண்டோடும் பேரிடியோசை. இவற்றைப் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பதிலுள்ள சுகம் தனித்துவம் மிக்கது. சில சமயங்களில் பகல் மழைகளில் .நாற்சாரப் பீலிகளிலிருந்து நீர் வீழ்ச்சியெனப் பாயும் நீரில் குளித்து மகிழ்வதிலென்னை மறந்திருக்கின்றேன்.

தொடர் நாவல் : நவீன விக்கிரமாதித்தன் (1) - நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று -  நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்!

என் பெயர் விக்கிரமாதித்தன்.  என்னை நன்கு அறிந்த சிலர் என்னை நவீன விக்கிரமாதித்தனென்றும் கூறுவார்கள். முற்றும் தளராத விக்கிரமன் - விக்கிரமாதித்தன் - எவ்விதம் மீண்டும் மீண்டும்  முருங்கை மரத்திலேறி வேதாளம் குடியிருக்கும் தொங்குமுடலைத்  தூக்கி வருவானோ அவனைப்போன்றவனே நானும். முயற்சி செய்வதில் எனக்குச் சலிப்பில்லை.மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் எனக்குப் பெருங்களிப்பு என்று வேண்டுமானால் நீங்கள் கருதலாம். அதிலெனக்கு எவ்விதம் ஆட்சேபணையுமில்லை.

அடடா, வித்தியாசமானவனாக இருக்கின்றானே இவன் என்று நீங்கள் எண்ணுவதை என்னால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்கு நான் கூறப்போவது என்னைப்பற்றி. எனது எண்ணங்கள், என் வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைப்பற்றி. என் குறிப்பேடுகள் பலவற்றையும் இங்கு நான் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். அவை என்னைப்பற்றிய சரியானதொரு சித்திரத்தை உங்களுக்கு அறியத்தரலாம். கோடியிலொருவனான ஒரு சாதாரண மானுடன் இவனைப்பற்றி அறிவதிலென்ன சுவாரசியமிருக்க முடியுமென்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. இதற்கு நான் கூறப்போகும் பதிலிதுதான்: 'மகா காலக்சிகளை உள்ளடக்கியுள்ள மிகச்சாதாரணமான சுடரொன்றின் கோள்களிலொன்றில்தான் நாம் , மானுடர்கள் வாழ்கின்றோம். அவ்வகையில் ஒவ்வோருயிரும் இங்கு முக்கியத்துவம் மிக்கதுதான்.அவ்வகையில் நானும் முக்கியத்துவம் மிக்கவனே என்பது என் தீர்க்கமான நம்பிக்கை.

ஜெயகாந்தன் நினைவாக.......

- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24. எழுத்தாளர் ஜெயகாந்தன்  என் வாசிப்பனுவத்தில் மறக்...

பிரபலமான பதிவுகள்