Tuesday, October 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (6): ஒட்டகங்கள் - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் ஆறு: ஒட்டகங்கள்!


என் பதின்ம வயதுகளில் என் வயதுக்கு மீறிய வளர்த்தி கண்டு நண்பர்கள் 'வாடா ஒட்டககச் சிவிங்கி' என்பார்கள். ஏனென்றால் எனக்கு நீண்ட கால்கள். ஓட்டகச் சிவிங்கி என்பதை விட அதிலுள்ள ஒட்டகம் எப்போதும் என்னைக் கவர்வதுண்டு. அதற்குக் காரணம் அதன் இயல்பும், உறுதியுமே. பாலை வனச் சூழலில் தாக்குப்பிடிக்கும் வகையில் அதன் உடலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது படைப்பின் அற்புதமென்பேன். அதன் முதுகிலுள்ள திமில்களில் கொழுப்பையும்   , இரப்பையிலுள்ள அறைகளில் நீரையும் சேமித்து வைக்கும் ஒட்டகங்கள் பத்து மாதங்கள் வரையில் நீரருந்தாமல் வாழக் கூடியவை. குளிர் வெப்ப நிலைகளுக்கு ஈடுகொடுத்து உடல் வெப்பநிலையை மாற்றி வாழும் தன்மை மிக்கவை. பாலையில் வீசும் மணற் புயல்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை மிக்க மூக்குகள். கண்கள், காதுகளைக் கொண்டவை. கண் இமைகள் மூடியிருக்கும்போதும் பார்வையைத் தடுக்காத வகையில் அமைந்துள்ளதாகவும் அறிந்திருக்கின்றேன்.  அது மட்டுமல்ல அதிக சுமை தாங்கி, விரைவாக ஓடும் வல்லமையும் மிக்கவை.

ஓட்டகங்கள் என் கவனத்தை ஈர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இனக்கலவரங்களால் சொந்த  மண்ணில் , சர்வதேசப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் அகதிகளாக அலைந்து திரிந்து , எதிர்ப்படும் சவால்களையெல்லாம் எல்லாம் , புயல்களையெல்லாம் எதிர்கொண்டு செல்லும் ஒட்டகங்களாக எம்மவரை, என்னை நான் இனங்காணபதுண்டு. இவ்வகையில் அகதிகளுக்கொரு குறியீடாக நான் ஓட்டகங்களை எண்ணுவதுண்டு. ஒட்டகம் என்னும் சொல் ஒரு படிமமாக எனக்குத் தோன்றுவதுண்டு.

"என்ன கண்ணா சிந்தனை. அப்படியென்ன தலை போகிற சிந்தனை. கப்பலேதும் கவிழ்ந்து விட்டதா?"

எதிரில் கேலி கொஞ்சும் குரலில் கேட்டபடி வந்தவள் மனோரஞ்சிதம்.

"சரி கண்ணம்மா, நீதானே மிகவும் திறமைசாலியென்று உன்னை அதிகம் மெச்சிக்கொள்வாயே. நீயே சொல்லு பார்க்கலாம் நான் என்ன யோசிக்கிறேனென்று?"

"உன் மனத்திலை இருக்கிறதைக் கண்டு பிடிக்கும் சக்தியெல்லாம் எனக்க்கில்லை கண்ணா. பேசாமல் நீயே சொல்லிவிடு."

"இல்லை. உனக்கு ஒரு துப்பு தருகின்றேன். அதிலிருந்து கண்டு பிடித்துக்கொள். இது ஒரு மிருகம்."

"மிருகமா? " என்று கூறிவிட்டு ஒருமுறை கலகலவென்று சிரித்தாள் மனோரஞ்சிதம்.

"மிருகமென்றால் மிகவும் இலகுவானதாச்சே. உனக்கு மிகவும் பிடித்த மிருகம், பறவையக் கண்டு பிடிப்பது அவ்வளவின்றும் கஷ்ட்டமானதல்ல கண்ணா."

இவ்விதம் கூறியவள் தொடர்ந்தாள் :" நீ குறிப்பிடும் மிருகம் இந்தியாவில் ராஜஸ்தானில் காணப்படும் ஒன்றா?" கூறியவள் கண்களையும் சிமிட்டினாள்.

"ஏன் கண்ணம்மா சுற்றி வளைப்பு. நீதானே கண்டுபிடித்து விட்டாயே. பேசாமல் மிருகத்தின் பெயரையே கூறுவதுதானே."

அதற்கு மனோரஞ்சிதம் அருகில் ஓட்டும்  வகையில் வந்து "ஓட்டட்டுமா. இந்த ஒட்டகத்துடன் ஒட்டட்டுமா" என்று என் மீது தன் உடலால் பலமாக இடித்தாள்.

அவளது மென்னுடல் பட்டு என்னுடல் ஒரு கணம் சிலிர்த்தது.

"நான் தானே சொன்னேன் நீ திறமைசாலியென்று. அது சரி எனக்குப் பிடித்த பறவையென்றாய். அது எந்தப் பறவை?"

அதற்கவள் "அது  புல்லை அதிகம் சாப்பிடும். அதி உயரத்திலும் பறக்கும். நீண்ட நேரமும் களைக்காமல் பறக்கும். கூட்டங் கூட்டமாகப் பறக்கும். பெயரை நீயே கண்டு  பிடி கண்ணா."

அவள் கூறுவது சரிதான். அவள் கூறுவது கனடா வாத்துகளைத்தான்.

"கனடா வாத்து, இந்த ஒட்டகம் இரண்டுக்குமிடையில் ஒரு ஒற்றமை இருப்பதைக் கவனித்தாயா?"

"என்ன அப்படியொரு முக்கியமான ஒற்றுமை கண்ணா?"

'இரண்டுமே தாவரபட்சணிகள். மச்சம் சாப்பிவிடுவதில்லை. கண்ணம்மா. ஆனால் அசாத்தியமான உடல் வலி மிக்கவை. இல்லையா"

இதற்குப் பதிலளித்த மனோரஞ்சிதம் "ஓட்டகங்கள் புல்லை  மட்டுமே சாப்பிடுவதில்லை. சந்தர்ப்பம் ஏற்பட்டால் மச்சமும் சாப்பிடும்,. சங்கப்புலவர் ஒருவர் கூட இவ்விதம் ஒட்டகங்கள் மச்சம் சாப்பிடுவதைப் பதிவு செய்திருக்கின்றார் தெரியுமா?"

மனோரஞ்சிதம் சங்கத்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக்  குடித்தவள். நிச்சயம் அவள் கூறுவது பொய்யாயிருக்க முடியாது. அவளே தொடர்ந்தாள்:

"அகநானூறில் மதுரை மருதன் இளநாகனார் எழுதிய கவிதையில்
'
'... குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நடுங் கவலைய கானம் நீந்தி'

என்று வருகிறது. அதில் ஒட்டகம் எழும்பு தின்னும் என்றிருக்கின்றதே"

"கண்ணம்மா, என்னால் கொஞ்சமும் நம்பவே முடியவில்லை ஒட்டகங்கள் எழும்பைத் தின்னுமென்பதை. ஒட்டகங்கள் தாவரபட்சணிகள் என்றே இதுவரையில் எண்ணி வந்தேன்."

"நானும் தான் கண்ணா, ஆனால் ஒட்டகங்கள் தம் உடலில் பொஸ்பரஸ் குறைபாடு ஏற்படுகையில் இவ்விதம் எழும்பைத் தின்னுமென்று பத்திரிகையொன்றில் வாசித்திருக்கின்றேன். "

"அடேயப்பா, நம் சங்கப்புலவர் மருதன் இளநாகனாரின் மிருக அவதானிப்பு வியப்பைத் தருகிறது. இல்லையா கண்ணம்மா?"

"கண்ணம்மா, இந்த ஒட்டகம் பற்றிய தகவல் மூலம் ஓட்டகம் மீதான என்மதிப்பு இன்னும் அதிகமாக உயர்ந்து விட்டது. ஒட்டகத்தின் இன்னுமொரு திறமையாக இதனைக் கூறலாம். அதன் மருத்துவ அறிவு உண்மையிலேயே ஆச்சரியத்தைத்தான் தருகின்றது."

"கண்ணா ,  ஒட்டகத்தைப்பற்றிய இந்த உரையாடல் எனக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ஒட்டகம் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுக் கட்டுரையை நினைவூட்டுகின்றது.  'ஓங்கு நிலை ஒட்டகம்வ் என்பது அக்கட்டுரையின் தலைப்பு. அதில் அவர் ஒட்டகம் என்பது சென்னைப் பல்கலைகழகப் பேரகராதி உஸ்ட்ராகா என்னும் சொல்லே ஒட்டகம் என்னும் சொல் உருவானதற்கு மூலம் என்று குறிப்பிட்டதுடன் நல்லதொரு கேள்வியையும் கேட்டிருக்கின்றார்.'

'என்ன கேள்வி கண்ணம்மா?'

"இவ்விதம் ஒட்டகம் என்னும் சொல்லைத் தமிழ் ஏற்றுள்ளது. சங்கத்தமிழனும் பாவித்துள்ளான. இந்நிலையில் தமிழ் உள்வாங்கும் பிற சொற்களால் தமிழ் அழிந்துவிடத் தமிழ் அவ்வளவு நொய்மையானதா? ..ஒட்டகத்தால்  மொழி அழியாது எனில் ஆப்பிளால் அழிந்து விடுமா? என்கின்றார். இவ்விடயத்தில் நான் நாஞ்சில் நாடனின் கட்சி கண்ணா"

"கண்ணம்மா நான் உன் கட்சி" என்று கண் சிமிட்டினேன்.

'இங்கு நாஞ்சில்நாடன் பாவித்துள்ள ஓங்கு நிலை ஒட்டகம் என்னும் சொற்றொடர் ஆற்றுப்படை நூல்களிலொன்றான சிறுபாணாற்றுப்படையில் வருகிறது.  இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதனை நாஞ்சில் நாடன் மேற்படி கட்டுரையிலும் குறித்திருப்பார்.

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
    வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்

இதுதான் அவ்வரிகள்."

மனோரஞ்சிதமே மேலும் தொடர்ந்தாள்:

"கண்ணா, மேற்படி கட்டுரையில் நாஞ்சிலார் அகநானூறில் வரும் மருதன் இளநாகனாரின் ஒட்டகம் பற்றிய வரிகளில் வரும் ' தகர் வெள்ளென்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்' என்னும் சொற்றொடரில் வரும் என்பு என்பது பற்றியும் சிறப்பானதோர் ஆய்வினைச் செய்திருக்கின்றார். என்பு என்பதைத் திருவாசகம் எலும்பைக் குறிக்கப்பாவிக்கும், திருக்குறள் உடம்பைப் குறிக்கப்பாவிக்கும். சிதம்பர ரேவண சித்தர் தொகுத்த அகராதி நிகண்டு (1921) என்பு புல்லைக் குறிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் நாஞ்சில் நாடன் மேற்படி அகநானூறு பாடலில் வரும் என்பு என்பது புல்லாகவும் இருக்கலாமல்லவா என்று கேட்கின்றார். புல்லை ஒட்டகம் தின்னும்தானே. இதனைத் தீர்மானிக்கும் பொறுப்பினை அவர் தமிழறிஞர்களிடம் விட்டு விடுகின்றார்."

'கண்ணம்மா, சிதம்பர ரேவண சித்தரின் அகராதி நிகண்டு எனக்கு நம்நாட்டு மேலைப்புலோலி வித்துவான் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியை நினைவூட்டுகின்றது. 1911இல் வெளியான அகராதி. அதில் என்பு என்பதற்கு எலும்பு, புல் என்று ஈர அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் என்னைப்பொறுத்தவரையில் அகநானூறில் வரும்  தகர் வெள்ளென்பு என்பது சுள்ளி போன்ற வெண்மையான எலும்பு என்னும் பொருள் தருவதால் தமிழ் உரையாசிரியர்கள் பலர் கூறுவதுபோல் எலும்பு என்பதையே குறிக்கும் என்பதுதான் என் நிலைப்பாடும். அண்மைய ஆய்வுகளின்படி ஒட்டகங்கள் பொஸ்பரஸ் குறைபாடு ஏற்படுகையில் எலும்பைச் சாப்பிடுமென்பதை எடுத்துக் காட்டுவதாலும்,  சுள்ளி போல் புல் இருப்பது அவ்வளவு பொருத்தமாகவில்லையென்பதாலும் என் நிலைப்பாடும் இதுதான்."

பதிலுக்கு மனோரஞ்சிதம் "கண்ணா, இவ்விடயத்தில் நான் உன் கட்சி" எனறாள். அவ்விதம் கூறுகையில் அவள் முகத்தில் , குரலில் காதல் உணர்வுகள் பொங்கி வழிந்ததை உணர்ந்தேன். நான் முன்பே கூறினேன் அல்லவா என் மனோரஞ்சிதத்துடன் உரையாடுவதில் எனக்கு மிகுந்த இன்பமென்று. இவ்வுரையாடலைக் கேட்கும் நீங்களும் நிச்சயம் இவ்விதமே உணர்ந்திருப்பீர்கள்  என்று நம்புகின்றேன்.

இவ்விதமாக என் சிந்தனையோடிக்  கொண்டிருக்கையில் மனோரஞ்சிதம் மேலும் கூறினாள்:

'கண்ணா, நீயும் ஒருமுறை நாஞ்சிலாரின் கட்டுரையை வாசித்துப் பார். அதிலவர் தொல்காப்பியம் ஒட்டகம் பற்றிக் குறிப்படுவதையும் சுட்டிக்காட்டியிருப்பார். அத்துடன்  ஒட்டகை என்று ஒட்டகத்தை அழைப்பது பற்றியும் கூறியிருப்பார்."

"கண்ணம்மா, போதும் போதும் இன்றைக்கு இந்த ஓட்டகம்  பற்றிய புராணம். இன்னுமொரு நாள் மீண்டும் பார்க்கலாம்."

"அப்போ இன்று?" இவ்விதம் கூறிவிட்டு மனோரஞ்சிதம் கேட்கவும் நான் பாடினேன்:

"இந்த ஒட்டகத்தைக் கட்டிக்கோ. கெட்டியாக ஒட்டிக்கோ. வட்டவட்டப் பொட்டுக்காரி."

 
ஒட்டகங்கள்!

ஒட்டகங்கள் பாலைகளைக் கண்டு
துவண்டு விடுவதில்லை;
தளர்வதில்லை.
வீசும் மணற்காற்றுகளைக் கண்டு
அஞ்சுவதில்லை.
நீர் தேக்கி, நீண்ட தொலைவுகளை நாடிப்
பயணிப்பதில் அதிக பிரியம் கொண்டவை
அவை.
உளப்புயல்கள் வீசியடிக்கையிலெல்லாம்,
நினைவுச் சுழல்களுக்குள் சிக்கும்போதெல்லாம்,
அகக்கடலில் படகுகளையிழந்து
நீச்சலடிக்கையிலெல்லாம்
நான் ஒட்டகங்களை நினைப்பதுண்டு.
ஒட்டகங்களைப்போல் நானிருக்க வேண்டுமென்று
நினைப்பதுண்டு.
எவை கண்டும் தளராத
அவை பற்றி அவ்வேளைகளில் சிந்திப்பதுண்டு.

ஒ! ஒட்டகங்கள்தாம் எத்துணை உடலுறுதி மிக்கவை.
ஓ! ஒட்டகங்கள்தாம் எத்துணை உளவுறுதி மிக்கவை.
ஓ! ஒட்டகங்களைப்போல் நானுமிருக்க வேண்டும்!
ஓ! ஒட்டகங்களைப்போல் வலிமையுடனியங்க வேண்டும்.

[தொடரும்]

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்