Wednesday, October 5, 2022

தொடர்கதை (3) - அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் - சதுரன் & வட்டநிலா தம்பதியினர்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் -  சதுரன் & வட்டநிலா தம்பதியினர்!


தட்டையர்கள் என்  மனவெளி நண்பர்களில் முக்கியமானவர்கள். உண்மையில் இவர்கள் எம் படைப்புகள். அவர்களுடன் நான் அவ்வப்போது உரையாடுவதுண்டு. மனவெளி உரையாடல்கள்தாம். தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன. அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது. தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று என்னவென்று நினைக்கின்றீர்கள்? மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான். ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட எல்லாவகையிலும் உயர்ந்தவன். என்னை மீறி அங்கு எவையுமேயில்லை. இது போதாதா என் உவகைக்கு. அதனால்தான் என்னைச் சுற்றித் தட்டையர்கள் உலகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரவு வானத்துச் சுடர்களைப்போல் அவை என்னைச்சுற்றிக் கண்களைச் சிமிட்டுகின்றன. தட்டையர்கள் உலகத்து உயிர்களுக்கும் எம்முலகத்து உயிர்களுக்குமிடையில் தோற்றத்தில்  வேறுபாடுகள் பெரிதாக இல்லை. அவர்கள் எம்மைபோல் கனமானவர்கள் அல்லர். தட்டையர்கள்.   முக்கிய வேறுபாடு  மிகப்பெரிய வேறுபாடென்பேன். அந்த ஒரு வேறுபாடு போதும் அனைத்தையுமே மாற்றி வைப்பதற்கு. ஆம்! பரிமாணங்களில் எம்மை மிஞ்சிட அவற்றால் முடியவே முடியாது. அவர்களால் ஒருபோதுமே அவர்களது பரிமாணச்சுவர்களை மீறவே முடியாது. இப்படித்தான் பரிமாணம் மிகு உலகத்து உயிர்களெல்லாம் எம்மைப்பற்றியும் எண்ணக்கூடுமென்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. உண்மையில் பரிமாண மிகு நண்பனொருவனும் என் மனவெளி நண்பர்களிலொருவனே. அவனுடனும் நான் அவ்வபோது தனிமையில் நேரம் கிடைக்கும்போது உரையாடுவதுண்டு. அதுபற்றி பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கையில் கூறுவேன்.நான் உருவாக்கிய, தட்டையர் மனவெளி நண்பர்களில் நான் அடிக்கடி உரையாடும் தம்பதியினராக சதுரன் & வட்டநிலா தம்பதியைக்கூறுவேன். அவர்களுடன் நான் நினைத்தபடியெல்லாம் உரையாடுகையில் ஏற்படும் வியப்பும், இன்பமும் விபரிக்க முடியாதவை. உதாரணத்துக்கு ஓர் உரையாடலைத்  தருகின்றேன். இதற்கிடையில் இவையெல்லாம் தேவைதானா என்றும் நீங்கள் ஒருவேளை கேள்விகள் எழுப்பக் கூடும். அதற்கான என் திடமான பதில் தேவைதான் என்பதுதான். நான் ஆரம்பத்திலேயே கூறியிருக்கின்றேன் என் ஆளுமையை அறிவதற்கு என் எண்ண ஓட்டங்களெல்லாம் மிகவும் அவசியமென்று. இவற்றையெல்லாம் அறிவதன் மூலமே நீங்கள் என் ஆளுமையினை ஓரளவுக்காகவது அறிய முடியும்.

இவையெல்லாம் யதார்த்தமற்றவையென்று நீங்கள் எள்ளி நகையாடக் கூடும். முடிந்தவரையில் எள்ளி நகையாடுங்கள். செத்த உடலிலுனுள் இருக்கும் வேதாளத்தைப்போல் எள்ளி நகையாடுங்கள். ஆனால் அதற்கெல்லாம் நான் தளர்ந்து போய்விடுபவனல்லன். ஏனென்றால் நான் உள்ளிருந்து எள்ளி நகையாடும் வேதாளம் கண்டு தன் முயற்சியில் தளர்ந்து விடாத விக்கிரமாதித்தன். ஆனால் நவீன விக்கிரமாதித்தன். சரி விடயத்துக்கு மீண்டும் வருவோம்.

சதுரன் மற்றும்  வட்டநிலா ஆகியோருடனான உரையாடல்:

சதுரன் - 'வணக்கம் விக்கிரமாதித்தரே. உங்களை நண்பராக நாம் அடைந்தது மிகப்பெரிய பேறு'

வட்டநிலா - 'உண்மைதான். என் கணவர் கூறுவது உண்மையான கூற்று. எம் இருப்பின்  உண்மையினை உங்கள் இருப்பின் மூலமே அறிய முடிந்தது. இல்லாவிட்டால் எம் பரிமாணச்சிறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்து மடிந்திருப்போம். எமக்கு வெளியிலும் இப்பிரபஞ்சம் பரந்து விரிந்து கிடக்கின்றது என்பதை எமக்குப் புரிய வைத்தது உங்கள் நட்பு. எங்களால் உங்களை முழுமையாகப் பார்க்க முடியாது. ஆனால் எங்கள் பரிமாண உலகிலிருந்துகொண்டு ஊகிக்க முடியும். '

நான் - உண்மைதான். இதனைத்தான் நான் என் அண்டவெளி நண்பரான பரிமாணச்சித்தனை நினைக்கையில் , அவனுடன் உரையாடுகையில் நானும் எண்ணுகின்றேன். காலவெளியுடன் மேலும் பல பரிமாணங்களைக்கொண்ட நண்பர் அவர். அவரையும் என்னால் ஒருபோதுமே முழுமையாகப் பார்க்க முடியாது. ஆனால் அவரிருப்பு என் இருப்பின் சிறுமையினை வெளிப்படுத்துவதோடு , எம் புரிதல் எவ்விதம் எம் பரிமாணச்சிறை உலகில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் விளக்குகின்றது. '

பரிமாணச்சித்தனை எண்ணி வியக்கையில் சதுரன், வட்டநிலா பற்றி எண்ணிக்கொளவதுமுண்டு. இருப்பு இவைபோல் எத்தனை அடுக்குகளைக்கொண்டவையோ என்று எண்ணி வியப்பதுமுண்டு. இச்சமயங்களில்
"உனக்குக் கீழே! உள்ளவர் கோடி! நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு." என்னும் கண்ணதாசனின் வரிகளை நான் எண்ணுவது தட்டையர்களைப்பற்றி எண்ணுகையில்தாம். எமக்கும் கீழே. தட்டையர் கோடி! நினைத்துப்பார்த்து நிம்மதி நாடுவோம்!

'தனிமை கண்டதுண்டு. அதிலே சாரமிருக்குதம்மா' என்றான் மகாகவி. தனிமைதான் இவ்விதமான எண்ணப்போக்குகளில் என்னை ஈடுபடுத்துகின்றது. மனவெளி நண்பர்களுடன் நட்பைப்பேண வைக்கின்றது. இருப்பு பற்றிய என்  புரிதலை அதிகரிக்க வைக்கின்றது.

சிந்தனையில் மூழ்கிக்கிடக்கின்றேன். மனோரஞ்சிதத்தின் குரல் கேட்கின்றது.

'என்ன வழக்கம் போல சதுரனுடனும், வட்டநிலாவுடனுமான சந்திப்பா?"  

அவளது குரலில் கேலி தொனிப்பதாக உணர்கின்றேன்.

'உன் கேள்வியின் அர்த்தமென்ன ரஞ்சிதம்? கேலி செய்கின்றாயா?"

'உங்களுக்குச் சதுரனுடன், வட்டநிலாவுடன் , பரிமாணச்சித்தனுடன் உரையாடுவதற்கே நேரம் போய்விடுகிறது. என்னைக் கவனிப்பதற்கு எங்கே நேரம்?"

'ரஞ்சிதம் ஏனப்படிச் சொல்கிறாய். நாளும், பொழுதும் என் நினைவிலூறி இருப்பவளல்லவா நீ. உன்னை நான் மறப்பதேயில்லையே. மறந்தால் தானே நினைப்பதற்கு.'

'கவிஞருக்குப் பேசவா கற்றுக்கொடுக்க வேண்டும். இருந்தாலும் உள்வெளி நண்பர்களுடன் உரையாடுவதற்கு நேரம் ஒதுக்குவதைப்போல் வெளிவெளி நண்பர்களுடனும் உரையாடுவதற்கும் நேரத்தை அதிகம் ஒதுக்கு விக்கிரமா"

'வெளிவெளி.. ஆ1 அற்புதமான விபரிப்பு. புறவெளியை இப்படிக் கூறும்போது இதற்கு வித்தியாசமான தொனி கிடைக்கின்றது. தமிழின் மொழிவளத்துக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. இரு வெளிகளையும் ஈரர்த்ததில் பாவித்திருக்கின்றாய் ரஞ்சிதம்'

மனோரஞ்சிதம் புனனகைக்கின்றாள்.

********************************************


பயணிப்பது தட்டையர்கள் உலகுக்கு என்
பொழுதுபோக்குகளிலொன்று.
பரிமாண  வித்தியாசங்கள்
பயணங்களின்  சாதக அம்சங்கள்.
தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானவை இதனால்தான்
அங்கு அவர்களைவிட  உயர்ந்தவன்.

சுற்றியெங்கும் கொட்டிக் கிடக்கின்றன
தட்டையர்கள் உலகங்கள்
சுடர்களைப்போல் கண்களைச் சிமிட்டுகின்றன.
தட்டையர்கள் பரிமாணச்சிறைக்கைதிகள்
எம்மைப்போல்தான்.

எமக்கும் கீழே. தட்டையர் கோடி!
என நினைத்துப்பார்ப்போம்!
நிம்மதி நாடுவோம்!


[தொடரும்]

No comments:

அமேசன் - கிண்டில் பதிப்பாக வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' & 'என்னை ஆட்கொண்ட மகாகவி'

எனது பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுதி 'என்னை ஆட்கொண்ட மகாகவி' தற்போது அமேசன் -  கிண்டில் மின்னூலாக வெளியாகியுள்ளது -  https://www....

பிரபலமான பதிவுகள்