Tuesday, October 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (7) ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஏழு:   ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்!


எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள இன்பமே தனி. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல் எல்லாவகைப் புத்தகங்களும் புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன். உங்களால் பழைய  புத்தகக் கடைகளில் வாங்குவதைப்போல் புதுப்புத்தகக் கடைகளில் பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில் தொடராக வெளியான, ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நூல்களை ஒருபோதுமே பெற முடியாது. அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம் இருக்கிறதே அதுவொரு பெரும் சுகமென்பேன். அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால் புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது. அவை மானுட இருப்பின் ஒரு காலத்தின் பதிவுகளை உள்ளடக்கியவை. நான் அவ்வகையாக 'பைண்டு' செய்யப்பட்ட புத்தகங்களைப்பற்றிக் கூறுகின்றேன். நான் இவ்விதம் கூறுவதால் என்னை நீங்கள் நான் புதுப்புத்தகக்கடைகளின் பிரதான எதிரி என்று மட்டும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
ஆயினும் அவ்விதம் நீங்கள் கருதினால் அதை நான் தடுக்கப்போவதில்லை. ஏனெனில் அது உங்களின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதாக அமைந்து விடும். அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.

அண்மையில் கூட வழியில் நானொரு பழைய புத்தகக் கடையினைக் கண்டபோது மனம் கேட்கவில்லை. உள்ளே எட்டிப்பார்த்தாலென்ன என்ற எண்ணமெழுந்தபோது வீடு முழுக்கக் குவிந்துள்ள புத்தகக் குவியல்களை ஒருமுறை எண்ணினேன். அண்மையில்தான் முடிவு செய்திருந்தேன் இனியும் புத்தகங்கள் வாங்குவதில்லையென்று. வாங்கிக்குவித்துள்ளவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டியவர்களுக்கு, புத்தகப்பிரியர்களுக்கு, நூலகங்களுக்குக் கொடுத்துவிடவேண்டுமென்று. இருந்தாலும் மனங் கேட்கவில்லை. இம்முறைமட்டும் கடைசித்தடவையாக இருந்துவிடட்டுமென்று எண்ணினேன். இவ்விதம் முடிவெடுத்தவுடன் அந்தப் பழையப் புத்தகக் கடைக்குள் நுழைவது எளிதாயிற்று.

நானே எதிர்பாராதவாறு, நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த, என் பால்யகாலத்து விருப்புச் சஞ்சிகைத் தொடரொன்று அழகாக பைண்டு செய்யப்பட்ட நிலையில் கிடைத்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவத்தையொட்டிய உள்ளத்தைத் தொட்டுச் செல்லும் புனைகதை. புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன். அழகான கையெழுத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "என் பால்ய காலத்துச் சகிக்கு என் பிரிய அன்பளிப்பு" எழுதியவர் பெயரைப்பார்த்தேன். என் பதின்மப் பருவத்தில் என் பால்ய காலத்துச் சகிக்கு நான் அன்பளிப்பாகக் கொடுத்திருந்த புத்தகம் அது.

இப்பொழுது சொல்லுங்கள். உங்களால் இது போன்றதொரு பழைய புத்தகத்தைப் புதுப்புத்தக்கடைகளிலொன்றிலாவது வாங்க முடியுமா? பழைய புத்தகக்கடைகளில் பழைய புத்தகங்கள் மட்டும்தாம் கிடைக்கவேண்டுமென்பதில்லை. பழசாகிவிட்ட இதயங்களும் அங்கு கிடைப்பதுண்டு.


இவ்விதம் பழைய புத்தகக் கடைகளுக்கு நான் செல்கையில் அடையும் இன்பத்தை விபரிக்க வார்த்தைகளில்லை. இன்று அவ்விதம் செல்கையில் மனோரஞ்சிதமும் என்னுடன் கூட வரப்போவதாக அடம் பிடித்தாள்.  வழக்கமாகச் செல்லும் அந்த, எனக்குப் பிடித்த பழைய புத்தகசாலைக்கு அவளை அழைத்துச் சென்றேன். குழந்தையைப் போல் குதூகலத்துடனிருந்தாள் மனோரஞ்சிதம். அவளுக்கும் பழைய புத்தக்க கடையொன்றில் பக்கங்களை அலைவதென்றால் மிகவும் பிடிக்கும். என்னைப்போல்தான் அவள் இந்த விடயத்திலும்.

இம்முறை பழைய புத்தகக் கடையில் எமக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. பழைய புத்தகக் கடைக்குப் பழைய புத்தகங்களை நாடிச் சென்ற எம் முன் சற்றும் எதிர்பாராத வகையில் அந்தப் பழைய எழுத்தாளர் எதிர்பட்டார். ஒரு வகையில் பழைய எழுத்தாளரான அவர், பல வருடங்களை உள்ளடக்கிய தனது அஞ்ஞாதவாசத்தினை முடித்துவிட்டுத் தனது வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாக வெளிப்படுத்தும் வகையில் புது எழுத்தாளராகவும் மாறியிருந்தார். இன்றுள்ள சமுதாயத்துக்கு அவர் புது எழுத்தாளராகப் புலப்பட்டாலும், எனக்கு அவர் இன்னும் பழைய எழுத்தாளராகவே திகழ்ந்தார். பழைய எழுத்தாளராக அவர் எவ்விதம் எனக்கு அறிமுகமானாரோ அவ்விதமே இன்னும் தென்பட்டார். ஒரேயொரு மாற்றம் உரையாடலில் ஆரம்பத்தில் வட்டார வழக்கினைப் பெரிதும்  பாவித்திருந்தார். 

புதிய எழுத்தாளரான பின்பு  அதனை அனைவரையும் சென்றடையும் வகையில் பொதுவானதாக, சுவை மிகுந்ததாக ஆக்கியிருந்தார். இதுதவிர அவரது எழுத்தில் தத்யயேவ்ஸ்கியின், டால்ஸ்டாயின் ஆழம் கிடையாது. இருப்பு பற்றிய தேடல் கிடையாது. மானுட உண்ர்வுகளைத் தட்டையாக வெளிப்படுத்தியிருப்பார். இருந்தும் இன்றுள்ள மொழிச்சித்தர்கள் எல்லாரும் அவரது தட்டையான , ஆழமற்ற எழுத்தைத் தூக்கிப்பிடித்து மெய்ம்மறப்பதைப் பார்க்கையில் நான் அடிக்கடி பிரமித்துப் போவதுண்டு. 

இவ்வளவு தூரம் விபரிக்கப்படும் எழுத்தாளரின் பெயரை அறிய ஆவலாகவிருக்கின்றீர்களா? அப்படித்தான் நான் உணர்கின்றேன். மனோரஞ்சிதமும் அவரைப்பற்றி நான் அறிமுகப்படுத்துகையில் மிகவும் ஆவலுடனிருந்தாள்.

"வணக்கம் முத்துசிவம். கண்ணம்மா இவர்தான் எழுத்தாளர் முத்துசிவம். நவகாலத் தமிழில் தமிழகத்தில் நன்கறியப்பட்ட நம்மூர் எழுத்தாளர். சுவையாகச் சம்பவங்களை விபரிப்பதில் , அவற்றை அடுக்குவதில் வல்லவர். "

'வணக்கம் விக்கிரமாதித்தன். என்ன உங்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அழைக்கும்படி கூறியிருந்தேனே மறந்து விட்டீர்களே" என்று சிறிது உரிமையுடன் கூறிக் கடிந்து கொண்டார்.

மனோரஞ்சிதத்துக்கு வியப்பாகவிருந்தது.

"அது என்ன ஆறுமாதத்துக்கொரு தடவையான அழைப்பு, சந்திப்பு"

'கண்ணம்மா அது வேறு ஒன்றுமில்லை. முத்துசிவம் அவர்கள் இலக்கிய உலகில் மிகவும் பிரபலமானவர். நேர்காணல், எழுத்து என்று ஓய்வு ஒழிச்சலற்று இயங்கிக் கொண்டிருப்பவர். அவரை எல்லா நேரத்திலும் பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இவ்விதமான சூழலில் அவர் சக எழுத்தாளர்களுடன் குறைந்தது ஆறு மாதத்துக்கொரு தடவையாவது தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புகின்றார். அதுதான் விடயமே தவிர பெரிதாக வேறொன்றுமில்லை."

"ஓ! கிரேட். பழைய எழுத்தாளர் புதிய எழுத்தாளர்களுடன் தனது நட்பை இப்படிப்புதுப்பிப்பது எவ்வளவு நல்ல விடயம்."

மனோரஞ்சிதம் பழைய எழுத்தாளர் என்று கூறியபோது ஒரு கணம் எழுத்தாளர் முத்துசிவத்தின் முகத்திலோடி மறைந்த ரேகையின் தன்மையினை அறிவதில் சிறிது நேரம் கவனத்தைத் திருப்பி மீண்டேன். அக்கவனத்திருப்பல் தந்த புரிதலின் அடிப்படையில் கூறினேன்:

"கண்ணம்மா, இவர் பழைய எழுத்தாளரல்லர் இப்போது. காலத்துக்குத் தகுந்தபடி உருமாறிய இலக்கிய டைனசோர். புதிய எழுத்தாளர்"

தற்போது குறுகிய கணத்தில் எழுத்தாளர் முத்துசிவத்தின் முகத்திலோடிய ரேகைகளை அவதானித்து புரித்லொன்றினை ஏற்படுத்துக்கொண்டேன். அப்புரிதலில் புதிய எழுத்தாளர் என்னும் சொற்பதம் தந்த குறுகிய நேரத்துத் திருப்தியும், மகிழ்ச்சியும் கலந்த அவரது முகரேகைகளை அவதானித்தேன்.

"இலக்கிய டைனசோர். வாவ்! சரியான விளக்கம். அறிமுகம் கண்ணா" என்ற மனோரஞ்சிதம் எழுத்தாளர் முத்துசிவத்தைப் பார்த்து "வணக்கம், இலக்கிய டைனசோரான உங்களை இந்தப் பழைய புத்தகக் கடையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி." என்றாள்.

இதற்கு எழுத்தாளர் முத்துசிவம் "நன்றி உங்கள் கனிவான கருத்துகளுக்கு. நல்லது நீங்கள் பழைய புத்தகம் நாடி வந்திருப்பீர்கள். உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. உங்களிருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம். இன்னுமோர் ஆறு மாதத்தின் பின் சந்திப்போம் விக்கிரமாதித்தா."

அவர் போனபின் மனோரஞ்சிதம் கூறினாள் : "உங்கள் பழைய எழுத்தாளர் விநோதமான பேர்வழி கண்ணா"

பதிலுக்கு நான் கூறினேன் : "கண்ணம்மா பெரிய பெரிய எழுத்தாளர்களில் பலர் இவ்விதமான  விநோதப்பேர்வழிகள்தாம். வியப்பதற்கு ஏதுமில்லை."

"கண்ணா, அப்படியா சொல்லுகிறாய். ஆனால் நீ சொன்னாயே இலக்கிய டைனசோர் என்று. அற்புதமான, சிறப்பான படிமம். எப்படி இப்படியெல்லாம் உடனடியாக சிந்தித்து முடிவெடுக்க உன்னால் முடிகிறது. அதுதான் என்னைப் பிரமிக்க வைக்கின்றது."

"உன் சிந்தனை வீச்சும்தான் கண்ணம்மா"

"இருந்தாலும் நீ பலே பேர்வழி கண்ணா!"

'ஏன் அப்படிச் சொல்லுகிறாய் கண்ணம்மா"

'நீ டைனசோர் என்று குறிப்பிட்டது எந்தக் காலத்து டைனசோரைப் பற்றி கண்ணா"

" கண்ணம்மா, டைனசோர் குறைந்தது அறுபது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இப்பூமியை ஆட்டிப்படைத்த விலங்கினம். பேருருவ விலங்கினம். மில்லியன் கணக்கான வருடங்கள் கோலோச்சிய  விலங்கினம்."

" நீ சொல்லுவது சரிதான் கண்ணா, ஆனால்.."

'ஆனால்.. என்ன சொல்ல வருகிறாய் கண்ணம்மா"

"எரிகல் அழிவுக்குப் பின்னரும் டைனசோர் தப்பிப் பிழைத்துள்ளது. இல்லையா கண்ணா?'

"டைனசோர் தப்பிப் பிழைத்துள்ளதா.. நான் அறியவில்லையே கண்ணம்மா"

"கண்ணா, டைனசோர்கள் தப்பிப்பிழைத்துள்ளன. ஆனால் அவை இராட்சச உருவம் கொண்டவையல்ல. பல்லி, அறணை எல்லாம் என்னவென்று நினைத்தாய். அவை உருவத்தில் சிறுத்த தப்பிப்பிழைத்த டைனசோர்கள்தாமே கண்ணா"

"ஓ. நீ அப்படி வருகிறாயா கண்ணம்மா. நீ சரியான குறும்புக்காரிதான் கண்ணம்மா"


எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில்
பழைய புத்தகங்களை வாங்குவது.
பழைய புத்தகங்கள் எப்பொழுதுமே என்னைப்
பிரமிப்பிலாழ்த்துபவை.
புதுப்புத்தகக் கடைகளில் கிடைக்காத
புத்தகங்கள்
பழைய புத்தகக் கடைகளில்
கிடைக்கின்றன.

பால்ய பருவத்தில் பிடித்த
பைண்டு' செய்யப்பட்ட தொடர்கதைகளைப்
பழைய புத்தகக் கடைகளில் மட்டுமே
பார்க்க முடியும்.
பார்த்துப் பெரும் சுகமடைய முடியும்.
பக்கங்களை, ஓவியங்களைப்
பார்த்துக் கைகளால் அளைகையிலுள்ள
சுக மே தனி.
புதுப்புத்தகக் கடைகளில் அதனைப்
பெற முடியாது.
ஒரு காலத்து மானுட இருப்பின
பதிவுகள் அவை.
நான் இவ்விதம் கூறுவதால்
புதுப்புத்தகக்கடைகளின் பிரதான எதிரி
என்று மட்டும்  எண்ணி விடாதீர்கள். அவ்விதம்
எண்ணினால் அதை
நான் தடுக்கப்போவதில்லை.  
அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.
அது உங்களின் சுதந்திரத்தில்
நான் தலையிடுவதாக
அமைந்து விடும்.

[தொடரும்]

No comments:

ஜெயகாந்தன் நினைவாக.......

- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24. எழுத்தாளர் ஜெயகாந்தன்  என் வாசிப்பனுவத்தில் மறக்...

பிரபலமான பதிவுகள்