அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.
அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல். அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை நான் வெறெங்கும் கண்டதில்லை. அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அந்தக்கப்பலிலேறி ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது. ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக பாதுகாக்கவும் செய்கின்றது. என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது. கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது. இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும், அமைதியின் காவலர்களும், மகான்களும் அருகருகாக வாழும் அற்புத உலகம் அது. அவ்வுலகுக்கு அடிக்கடி பயணிக்கின்றேன். விரும்பினால் நீங்களும் என்னுடன் இணைந்துகொள்ளலாம். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். என்ன நீங்கள் பயணத்துக்குத் தயாரா நண்பர்களே! போர்களாலும், பேரழிவுகளாலும், வர்க்க, வர்ண வேறுபாடுகளாலும்
பற்றியெரியும் இவ்வுலகின் கனலிலிருந்து உங்களை என்னால் காப்பாற்ற முடியும் நீங்களும் என்னுடன் அவ்வுலகுக்குப் பயணிக்க முடிந்தால் நண்பர்களே! நண்பர்களே! ஒவ்வொரு நூலும் காலக்கப்பல்தான். நூல்களை உள்ளடக்கிய நூலகம் ஒவ்வொன்றும் காலக்கப்பல்களை உள்ளடக்கிய நிலையம்தான்.
"என்ன கண்ணா ஆழ்ந்த சிந்தனை?"
எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் நின்றிருந்தவள் என் கண்ணம்மா; மனோரஞ்சிதம்தான்.
"கண்ணம்மா, நான் அடிக்கடி காலக்கப்பலில் பயணிப்பதை நீ அறிவாய் அல்லவா? அந்தக் காலக்கப்பல் நிலையத்தில் நான் இருப்பதாக எண்ணுகின்றேன்."
"கண்ணா, எனக்கும் அந்தக் காலக்கப்பலில் பயணிப்பதென்றால் உன்னைப் போல்தான் மிகவும் பிடிக்கும்."
"கண்ணம்மா, காலக்கப்பல் என்றதும்தான் எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு வருகின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் எழுதப்பட்ட முதலாவது அறிவியற் கவிதையாக அதனை நான் இனங்காண்பேன்."
'எந்தக் கவிதையைப் பற்றிக் கூறுகிறாய் கண்ணா?"
'எழுத்தாளர் சுஜாதா நவீனத்தமிழிலக்கியத்தின் முதலாவது அறிவியற் கவிதையாக மீராவின் கவிதையொன்றினைக் குறிப்பிடுவார் கண்ணம்மா. ஆனால் அது சரியான கூற்றல்ல கண்ணம்மா"
"பின் எதுதான் சரியான கூற்று கண்ணா?'
"ஈழத்துக் கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'எதிர்காலச் சித்தன் பாடல்' நவீனத் தமிழ்க் கவிதையுலகில் வெளியான முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுவேன் கண்ணம்மா. அக்கவிதையை ஒரு தடவை நீ படித்துப் பார்த்தாயென்றால் நீயும் அப்படியே கூறுவாயடி."
'நீ சொல்வதைப் பார்த்தால் எனக்கும் அக்கவிதையை வாசிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படுகின்றது கண்ணா."
"கண்ணம்மா, என் குறிப்புப் புத்தகத்தில் நான் இக்கவிதையைச் சிறுகதையாக்கி எழுதி வைத்துள்ளேன். அதனை உனக்கு வாசிக்கத் தருவேன். நேரம் கிடைக்கும்போது வாசித்துப்பார். இலங்கையிலிருந்து கவிதைக்காக வெளியான 'தேன்மொழி' சஞ்சிகையின் முதலாவது இதழில் (புரட்டாதி, 1955) வெளியான கவிதை. எனக்கு மிகவும் இக்கவிதை பிடித்துப் போனதற்குக் காரணம் இக்கவிதை காலத்தினூடு பயணிப்பதைக் கூறுகின்றது. கவிஞர் காலத்தினூடு பயணித்து அங்கொரு எதிர்கால மனிதனைக் காண்கின்றார். அவனுடன் உரையாடுகின்றார். அங்குள்ள இன, மத, மொழி, வர்க்கப் பேதங்களற்ற சமுதாய அமைப்பு பற்றி அந்தச் சந்தித்த எதிர்கால மனிதன் நிகழ்கால மனிதனுக்கு எடுத்துரைக்கின்றான்."
'கண்ணா, கேட்பதற்கே எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது. அப்படியானதோர் உலகு இப்போதிருந்தால் எப்படியிருக்கும்? போர்களற்ற சமுதாயத்தில் இன்பமாக வாழலாம் அல்லவா."
"கண்ணம்மா, நீ எண்ணுவது சரிதான். அதனைத்தான் நானும் நினைத்தேன். இக்கவிதையின் நிகழ்கால மனிதனும் அவ்வாறே நினைத்தான். அதனால் அவன் அந்த எதிர்கால மனிதனிடன் கேட்டான்.."
" என்ன கேட்டான் கண்ணா" மனோரஞ்சித்திதத்தின் குரல் அந்த எதிர்கால மனிதனின் பதிலை அறியும் ஆவல் மிகுந்திருந்தது.
'கண்ணம்மா, அவன் அந்த எதிர்கால மனிதனிடம் பின்வருமாறு இறைஞ்சி நின்றான் : 'எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன். எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய வாழ்வேற்றிச்செல்வாயோ'"
"அதற்கு அந்த எதிர்கால மனிதன் என்ன கூறினான். நிகழ்கால மனிதனின் கோரிக்கைக்குச் செவிசாய்த்தானா கண்ணா?"
"கண்ணம்மா அதற்கவன் என்ன கூறினான் தெரியுமா? இதைத்தான் கூறினான்.இவ்வாறுதான் கூறினான் :
'காலத்தின் கடல் தாவி நீயிங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ'
இதற்கு மனோரஞ்சிதம் கூறினாள்: "கண்ணா, அவன் கூறுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நம்மவர் இன்னும் அம்மனிதன் வாழும் சமுதாய அமைப்பில் வாழும் நிலைக்கு உயர்ந்து விடவில்லை. இந்நிலையில் அவன் இங்கு வந்து போதித்தால் அவன் கூறுவதுபோல் அவனைக் கொன்றிருப்பார்கள் நம்மவர்கள். நல்ல காலம் இக்காலத்துக்கு வராமல் இருந்தது."
"கண்ணம்மா, அவன் கூற்றிலுள்ள நியாயத்தை நம்மவனும் உணர்ந்திருந்தான். அதனால்தான் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான். ஆனால் அவ்விதம் வந்தவன் தன் அனுபவத்தைக் கவிதையாக்கி வைக்கவும் தவறவில்லை. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க கவிதையிது. "
"கண்ணா, ஒரு கேள்வி."
" என்ன கண்ணம்மா? என்ன கேள்வி. கேள் கண்ணம்மா. என்னைப் பொறுத்தவரையில் அறிவியலில் ஞானம் பெற்ற கவிஞர் இ.முருகையன் மட்டுமே இக்கவிதையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒருவராக இனங்காண்பேன் கண்ணம்மா"
'கண்ணா, ஏன் நம் விமர்சகப் பெருந்தகைகள் எவரும் இக்கவிதை பற்றிப் பெரிதாக எழுதுவதில்லை?'
"கண்ணம்மா, இவர்களில் பலரும் தமது திறமையினை, புலமையினைப் பறை சாற்றுவதற்காக எழுதுபவர்கள். பலருக்குப் போதிய தேடல் இருப்பதில்லை. அதனால் பல படைப்புகளின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிவதில்லை. ஏற்கனவே வெளியான படைப்புகளிலிருந்து தகவல்களைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் தம் எண்ணம் , கோட்பாடு சார்ந்து எழுதுபவர்கள். இன்னும் சிலரோ இவ்விதம் கிடைக்கப்பெறும் தகவல்களைத் தாங்களே தேடிக்க கண்டுபிடித்ததுபோல் எவ்வித உசாத்துணைப் பட்டியலுமில்லாமல் எழுதுவார்கள்."
'இவர்கள் ஓசியில் பலகாரம் சுடுபவர்கள் கண்ணா"
'சரியாகச் சொன்னாய் கண்ணம்மா. இவர்கள் நிச்சயம் ஓசியில் பலகாரம் சுடுபவர்கள்தாம்."
'கண்ணா, கவிஞர் முருகையன் இக்கவிதையைப் பற்றி ஏதோ கூறியுள்ளதாகக் கூறினாயே. என்ன கூறினார்? நினைவிலுள்ளதா?"
"எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும் இவ்விதம் அவர் கற்பகம் சஞ்சிகையில் வெளியான கட்டுரையொன்றில் கேட்டிருந்ததாக நினைவு. அவர் 'கருத்தும் சிந்தனையும் பொதிந்த அறிவியற் கவிதைகள்' என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாகவிருந்திருக்கும் என்பது என் நிலைப்பாடு."
'எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது கண்ணா."
நவீன விக்கிரமாதித்தன் குறிப்பேட்டிலிருந்து....
சிறுகதை: எதிர்காலச் சித்தன்
எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!"
அறிவினில் அடங்காத தாகம் மிக்கவனாக எதிர்காலம் ஏகிட்ட என்னைப் பார்த்து இந்த எதிர்கால மனிதன் கூறுகின்றான் 'நிகழ்காலம் நீ செல்க" என்று. அவனுரையால் என் அறிவுத் தாகம் அடங்குமோ? அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: " திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே!"
இவ்விதம் கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின் பெயரென்ன என்று வினவினேன்.
அதற்கவன் பின்வருமாறு கூறினான்: "எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா! நானுமொரு சித்தன். எதிர்காலச் சித்தன்..... நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன் காலச் சித்தரையும் ஏற்காரப்பா. இதனை நான் எந்தவித மனக்குறையின் காரணமாகவும் கூறவில்லை. உன் நிகழ்காலத்துக் காசினியின் பண்பிதுதானே. அதுதான் அவ்விதம் கூறினேன்."
இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் மேலும் எனக்குப் பல கருத்துகளைப் பகன்றான். சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும் அறிதற்காய் இங்கு நான் விளக்கிக் கூறுகிறேன்:
" பெரும்போர்கள் விளையும் உன் நிகழ்காலத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் பல்வகைப் பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும் மானுடரை ஒன்றாக இணையவிடாது செய்யும் அநியாய பேதங்களைக் கூறுவேன் கேள். துண்டுபட்டிருக்கும்தேசங்கள், தூய்மையான இனம், மதம், மொழி, மதமென்ற குறுகிய ம்னப்பாங்குள்ள கோட்பாடுகள் .. இவை போன்ற பேதங்களெல்லாம் உனது நிகழ்கால உலகில் உள்ளன. அவை எல்லாம் அர்த்தமில்லாப் பிரிவினைகள். அவை யாவும் சாகும் எனது எதிர்கால உலகில். ஒன்றுபட்டு இவ்வுலகம் ஒற்றையாகும். ஒரு மொழி கொண்ட ஓரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம் ஒழிந்து இவ்வுலகில் ஓரரசு உண்டாகும். அறத்தினை வலியுறுத்தும் ஒரு மதமே உலகெல்லாம் நிலவும். விரசங்களையும், விகற்பங்களையும் வ்ளர்க்குமொழிகள் எல்லாம் வீழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில் இருக்கும் செந்தமிழ் மட்டுமல்ல, சிங்கள மொழியும் சாகும். இச்செகமெல்லாம் ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும். எந்த மொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பீரானால் என் பதில் எண்ணிக்கை அதிகம் கொண்ட மொழியே அதிககாலம் நின்று நிலைக்கப் போகின்றது. அந்த மொழியே அரசாளும். எதிர்காலத்தில். உலகத்து மக்களெல்லாரும் தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம் என்றே கருதுவர். தம்மை மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்க்கும் வழக்கம் எனது எதிர்கால உலகில் இல்லை. அரசர்கள் , ஏழைகள் , பணக்காரர்கள் போன்ற அத்தனை பேதங்களும் எதிர்கால உலகில் ஒழிந்து விடும். எம் தமிழர் இனம மட்டுமல்ல, பிற இனங்களும் சாகும். நாடெல்லாம் மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும். எல்லோரும் மானுடர்கள். பிரிவினைகள் ஒழிதல் நன்றுதானே."
இவ்விதம் வருங்காலச் சித்தன் கூறினான். பின்னர் அவன் மேலும் கூறுவான்: "உன்னவரான நிகழ்காலச் செந்தமிழர் இவற்றைக் கேட்டால் , நீசனே! இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின் புகழ்மொழியாய், உலகத்தின் பொதுமொழியுமாகும் புதுமைதனைக் காண்பீர்கள் என்று கூறிடுவார்கள். எதிர்காலச் சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள். இம்மியளவேணும் மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத்தில் மட்டுமிருந்திருந்தால் என்ன செய்வதென்றறிந்திருப்போம். அவன் நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம் என்றுமிகழ்ந்திடுவார்கள்"
இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் மேலும் கூறுவான்:" பிறப்பாலே நான் தாழ்வுரைக்க மாட்டேன். பிறப்பாலே என் மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமோ? அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா? இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும்? பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன? அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ! இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்?"
எதிர்காலச் சித்தனின் கூற்றிலுள்ள தர்க்கம் என்னைப் பிரமிக்க வைத்தது. புது யுகத்தின் குரலாக அவ்னது குரல் ஒலிப்பதாக எனக்குப் பட்டது. இவ்விதம் அவன் கூறியதன் பின்னர் நான் அவனைப் பார்த்து இவ்விதம் கேட்டேன்: " எதிர்காலச் சித்தா! உனது இனிய மொழி கேட்டேன். மதி கெட்டு எம்மவர்கள் வாழும் நிகழ்கால உலகிற்கு என்னுடன் நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால் அவரது எண்ணங்கள் விரிவடையும். அதற்காகவாவது நீ நிகழ்காலம் வரவேண்டும். அதுவே எனது விருப்பம். அதுவே பிளவுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நம்மவர் ஒன்றுபட்டுச் சிந்திக்க உதவும்."
இவ்விதமாக நான் அவனை இறைஞ்சி நின்றேன். அதனைக் கண்ட எதிர்காலச் சித்தனின் செவ்விதழ்கள் மெதுவாகத் திறந்தன. அங்கே மென்முறுவலொன்று பிறந்ததைக் கண்டேன். அத்துடன் மீண்டும் அந்த வருங்காலச் சித்தன் என்னைப் பார்த்து கீழுள்ளவாறு கூறலானான்: "காலக் கடல் தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய். அதன் காரணமாக எது உண்மையான அறிவென்பதைக் கண்டாய். ஆனால் நிகழ்கால மயக்கத்தில் வாழும் உன் நிகழ்கால மானுடர் உண்மையான ஞானத்தினை, அறிவினைக் காண்பாரோ? காணார்களப்பா! காலத்தைத் தாண்டி காசினிக்கு நான் வந்தால் கட்டாயம் என்னை அவர்கள் ஏற்றி மிதித்திடுவார்கள். பகுத்தறிவுக்காகக் குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத் தந்து கொன்றவர்கள் உனது மானுடச் சோதரர்களன்றோ? ஆதலினால் நிகழ்கால மானுடனே! அங்கு நான் வரேன். நீ மீண்டும் அங்கு செல்வாயாக"
இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தனின்பால் என்னிடத்தில் அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம் போன்ற பாதங்களைத் தொட்டுக் கண்களிலொற்றி விடைபெற்றேன். அவன் மட்டும் என் நிகழ்காலத்திற்கு வருவானென்றால் எவ்விதம் நன்றாகவிருக்கும். அறிவுக் கடலான அவனால் , ஞானசூன்யங்களாக விளங்கும் நம்மவர்கள் எவ்வளவு பயன்களைப் பெறமுடியும். அறியாமையிலிருக்கும் நம்மவர் அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர் விடத்தைக் கொடுத்து சோக்கிரதரைக் கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள். எதற்கு. இன்றும் அதுதானே நடக்கிறது. இந்நிலையில் அவன் வர மறுத்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது."
அச்சமயம் .... என்ன ஆச்சரியம்! காலத்திரை நீங்கிற்று.
பாதகர்களின் முழு மடைமைப் போர்களால் சூழந்துள்ள இந்தப் பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான் மீண்டும் வந்தேன். வந்தவன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலை கண்டேன்; திடுக்கிட்டேன். பிளவுகளற்ற , மானுடர்களென்றரீதியில் இணைந்து, வாழும் எதிர்காலச் சித்தனுலகம் பற்றி ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். மடைமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த நிகழ்கால உலகமெங்கே! அவனது உலகமெங்கே!
என்றிவர்கள் உணமை காண்பாரோ?
கவிதை - எதிர்காலச் சித்தன் பாடல்! - அ.ந.கந்தசாமி
* நன்றி - தேன்மொழி, புரட்டாது , இதழ் 1, 1955 -
எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.
அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.
"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ.
வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நொருங்கிவிழும் உலகெல்லாம் ஒன்றேயாகும்
நோக்கிடுவாய் தூரஎதிர் காலமீதே"
அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.
அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.
செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாளும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.
நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும் மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த்திடுவார்.
பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன்.
புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.
காலத்தின் கடல் தாவி நீயிங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?
ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?
* நன்றி - தேன்மொழி, புரட்டாது , இதழ் 1, 1955
[தொடரும்]
girinav@gmail.com
No comments:
Post a Comment