Tuesday, November 29, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் 13  -   நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்!

காலவெளிப் பிரபஞ்சம் பற்றிய  கண்ணம்மாவுடனான எனது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இயற்கையை  இரசிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. இருப்பு பற்றிய அறிவியல் பூர்வமான உரையாடல்களிலும் எனக்கு நேரம் தெரிவதில்லை. கண்ணம்மாவுடன் இப்பொழுது நடத்திக்கொண்டிருக்கும் உரையாடலும் இத்தகையதொன்றுதான். இந்த விடயத்தில் அவளும் என் அலைவரிசையில் இருந்தாள். அது எனக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இவை  போன்ற  உரையாடல்கள் இல்லையென்றால் இருப்பில் என்ன அர்த்தமிருக்க முடியுமென்றும் சிந்திப்பதுண்டு. அதனால் இவற்றை எப்பொழுதும் வரவேற்பவன். பங்குகொள்பவன்.

கண்ணம்மாவே மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து இக்கேள்வியினைக் கேட்டாள்:

"கண்ணா, காலவெளிச் சட்டங்களால் ஆன இப்பிரபஞ்சம் பல படத்துண்டுகளால் ஆன திரைச்சித்திரம் போன்ற காலவெளிச் சித்திரம் என்று  கூறினாய் அல்லவா?"

"ஓம். கூறினேன் கண்ணம்மா.  அதற்கென்ன?'

'கண்ணா, திரைப்படச் சுருளை நாம் முன்னோக்கி இயக்கலாம். அல்லது பின்னோக்கி இயக்கலாம். இல்லையா என் செல்லக்கண்ணா?"

"உண்மைதான் கண்ணம்மா. நீ சொல்வது முற்றிலும் சரியானதுதான் கண்ணம்மா."

'அப்படியென்றால் காலவெளிச் சட்டங்களால் ஆன காலவெளிச்சித்திரமான நம் இருப்பை உள்ளடக்கிய சித்திரத்தின் துண்டுகளான காலவெளித் துண்டுகளையும் முன்னோக்கி அல்லது பின்னோக்கி இயக்குவதற்கான சாத்தியங்கள் எவையாயினுமுண்டா கண்ணா?'

மனோரஞ்சிதத்தின் , என் கண்ணம்மாவின் இக்கேள்வி என்னை உண்மையில் மிகுந்த பிரமிப்புக்குள்ளாக்கியது. அப்பிரமிப்புடன் அவளை நோக்கினேன். அவளது இக்கேள்வி மிகவும் சாதாரணமானதொரு கேள்வியாகப் பலருக்கும் தென்படக்கூடும். மாங்காய் கீழே விழுவது ஏன் என்று நியூட்டன் கேட்ட கேள்வியும் பலருக்கும் இப்படித்தான் மிகவும் சாதாரணமானதொன்றாகத் தென்பட்டிருக்கும். ஆனால் அவருக்கு அது நவீன அறிவியல் துறையில் மிகுந்த புவியீர்ப்பு பற்றி  மிகுந்த பாய்ச்சலை  ஏற்படுத்திய சிந்தனைக்கான கேள்வி.

"கண்ணம்மா, உண்மையைச் சொல். இதுவரையில் உபநிடதங்கள் போன்ற சமயத் தத்துவ நூல்களில்தான் நீ நாட்டமுள்ளதாக நினைத்திருந்தேன். ஆனால் இக்கேள்வியைப் பார்க்கையில் நீ யாராவது நவீன வானியற்பியல் அறிஞர்களின் நூல்களையும் படித்திருப்பாயோ என்னுமொரு சந்தேகத்தையும் ஏற்படுத்திகிறதடி. அப்படி எவற்றையாவது படித்திருக்கிறாயா கண்ணம்மா?"

'இல்லை கண்ணா, அவற்றை நான் படித்ததில்லை. அவை பற்றி நீ கூறுவதை  மட்டுமே கேட்டிருகின்றேன். ஆனால் இந்தக் கேள்வியை மிகவும் சாதாரணமாகத்தான் கேட்டேன். திரைப்படச் சுருளுடன் நீ இப்பிரபஞ்சத்தை ஒப்பிட்டதனால் மிகவும் இயல்பாக எனக்குள் எழுந்த கேள்வி அது கண்ணா. அவ்வளவுதான்."

"கண்ணம்மா இதற்கான எனது பதிலை அல்லது சிந்தனையைக்  கூறுவதற்கு முன் இன்னுமொரு விடயத்தைப்பற்றியும் கூற வேண்டுமென்று நினைக்கின்றேன்."

'என்ன நினைக்கின்றாய் கண்ணா? என்ன நினைக்கின்றாயோ அதைக் கூறு கண்ணா?"

"ஒரு தடவை இலத்திரனொன்றை இரு துளைகளிட்ட தடுப்பினூடு செலுத்தித் திரையொன்றில் குவித்தார்கள். அவ்விதம் செலுத்தியபோது திரையில் விழுந்த உருவம் எப்படியிருந்திருக்குமென்று நீ நினைக்கிறாயடி கண்ணம்மா?"

இவ்விதம் நான் கேட்கவே சிறிது நேரம் சிந்தனையிலாழ்ந்தாள் மனோரஞ்சிதம். அச்சிந்தனையின் இரேகைகள் முகத்தில் படிந்துள்ள நிலையில் பின்வரும் பதிலைத்தந்தாள்:

"கண்ணா, வலது பக்கத் துளையின் வழியாகச் செல்லும் இலத்திரன் திரையிலொரு புள்ளியையும், இடது பக்கத்துளை வழியாகச் செல்லும் இலத்திரன் இன்னுமொரு புள்ளியையும் இட்டிருக்கும். ஆக இரு புள்ளிகள் திரையில் இருந்திருக்கும். இல்லையா கண்ணா?"

"கண்ணம்மா நீ நினைத்ததுபோல் செவ்வியல் இயற்பியல் கோட்பாடுகளின்படி அனைவரும் எண்ணினார்கள்."

"அப்படியென்றால் அப்படி இருக்கவில்லையா கண்ணா."

"பரிசோதனை விளைவு அப்படியிருக்கவில்லை கண்ணம்மா"

"அப்போ எப்படியிருந்ததாம் கண்ணா?"

'ஓர் அலைபோன்ற் வடிவில், இரண்டு துளைகளூடும் செல்லும் இரண்டு இலத்திரன்கள் ஓரே நேரத்தில் அத்திரையில் பட்டிருந்தால் எப்படியொரு  ஒன்றுடனொன்ரு கலந்த நிலை உருவாகியிருந்திருக்குமோ அப்படியிருந்தது கண்ணம்மா."

'நம்பவே  முடியவில்லையே கண்ணா? அதெப்படி அப்படியிருக்க  முடியும்?"

"ஆனால் நம்பத்தான் வேண்டும் கண்ணம்மா. அப்படித்தான் விளைவு இருந்தது. இதன் மூலம் அறிஞர்கள் சிலர்  ஒரு முடிவுக்கு வந்தார்கள் கண்ணம்மா."

'என்ன முடிவு கண்ணா?"

'அந்த இலத்திரன் இரு துளைகளூடும் ஒரே சமயத்தில் சென்றிருக்கின்றது. ஒரே நேரத்தில் ஈர் இடங்களிலும் அதன் இருப்பு இருந்திருக்கிறது. ஆக அதற்கு இரண்டு வரலாறுகள் ஓரே சமயத்தில் இருந்திருக்கின்றன. ஆச்சரியமாக இல்லையா செல்லம்மா."

'ஓம் கண்ணா, ஆச்சரியமாகத்தானுள்ளது. அதெப்படிச் சாத்தியமாகும். விளங்கவில்லையே."

'உண்மையில் இது சாத்தியாமானதுதான். குவாண்டம் உலகில் நடைபெறும் நிகழ்வுகள்  விசித்திரமானவை. நமது சாதாரண அனுபவங்களைக்கொண்டு புரிந்து கொள்வதில் சிரமமுண்டு கண்ணம்மா.'

"கண்ணா, என் கேள்விக்கென்ன பதில்?"

"எந்தக் கேள்விக்கு எந்தப் பதில் கண்ணம்மா?"

"கண்ணா, காலவெளிச் சித்திரத்தை, திரைப்படத்தை  முன்னோக்கி அல்லது பின்னோக்கி அதாவது 'ரிவைண்ட்' பண்ண முடியுமா?"

'கண்ணம்மா, இது பற்றியும் அறிவியல் அறிஞர்கள் சிந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் கால இயந்திரம் பற்றிச் சிந்தித்திருக்கின்றார்கள்.  கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கும் கால இயந்திரத்தைப்பற்றிச் சிந்தித்திருக்கின்றார்கள். நடைமுறைச் சாத்தியம் உள்ளதோ இல்லையோ இவ்விதமான சிந்தனைகள் பிரமிப்பினைத் தருகின்றன. இன்பத்தைத்தருகின்றன. இருப்பு பற்றிய தேடலை மேலும் அதிகரிக்க வைக்கின்றன."

'கண்ணா ஒரு கேள்வி"

'என்ன  கண்ணம்மா ? கேளடி உன் சந்தேகத்தைக் கண்ணம்மா.'

"காலவெளி இயந்திரத்தில் பயணிக்கும் சாத்தியம் உண்டென்று ஒரு கதைக்கு வைத்துக்கொண்டால் கண்ணா"

"அப்படியே வைத்துக்கொள்வோம் கண்ணே என் கண்ணம்மா"

"கடந்த காலத்துக்குப் பயணிக்கும்போது  ஏற்கனவே நடந்த ஒரு துன்பியல் சம்பவமொன்றினை , உதாரணத்துக்கு எமக்குப் பிடித்த ஆளுமையொருவரின் மரணத்தை அல்லது படுகொலையை மாற்றி அவரை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்து , வரலாற்றை மாற்றி வைக்கும் சாத்தியமுண்டா கண்ணா?"

'கண்ணம்மா உன் கேள்விகள்  என்னைப் பிரமிக்க வைக்கின்றன. இப்படியெல்லாம் உன்னால் சிந்திக்க முடிவது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகின்றதடீ. பொருள் நாட்டமுள்ள உலகில் எத்தனைபேருக்கு எனக்குக் கிடைத்த உன்னைப்போன்ற  துணை கிடைத்திருக்கும். நீ ஓர் அரிய பெண் கண்ணம்மா."

"கண்ணா போதும் உன் புகழ்ச்சி. என் கேள்விக்கென்ன பதில். அதைக்கூறடா."

'கண்ணம்மா, எனக்குப்பிடித்த வானியற்பியல் அறிஞர்களில் ஒருவரான் பிறயன் கிறீன் தனது நூலொன்றில் இது பற்றித் தர்க்கித்திருந்தது நினைவுக்கு வருகின்றது. "

'அவரென்ன சொன்னார் கண்ணா. அதை முதலில் சொல்லு இழுத்தடிக்காமல்"

'இலத்திரன்  ஒன்றுக்கு எப்படி ஒரே சமயத்தில் பல்வேறு இருப்புகள் காலவெளியில் சாத்தியமோ , பல்வேறு வரலாறுகள் சாத்தியமோ அவ்விதமே நமக்கும் பல்வேறு காலவெளி இருப்புகளும், வரலாறுகளும் சாத்தியமாகவிருக்கலாம் அல்லவா. அவ்விதமிருப்பின் கண்ணம்மா, கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கையில் நீ குறிப்பிட்ட ஆளுமைக்கு ஒரு காலவெளிச் சட்டத்தில் அந்தத்துன்பியல் நிகழ்வு நடந்திருக்கலாம். ஆனாலதே சமயம் இன்னுமொரு காலவெளிச் சட்டத்தில் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் காணப்படாத நிலை காணப்படலாம். கடந்தகாலத்தை நோக்கிப் பயணிக்கையில் அந்தப் பாதிப்பில்லாத காலவெளிச் சட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த ஆளுமைக்கு நிகழ்ந்த துன்பியல் நிகழ்வினை இல்லாமல் செய்து விட முடியுமல்லவா."

'கண்ணா, இவ்விதமான காலவெளிப்பயணங்கள் சாத்தியமாகும் பட்சத்தில் மானுட  இருப்புத்தான் எவ்விதம் நன்றாகவிருக்கும். கற்பனையில் சிந்திக்க நன்றாகத்தானுள்ளது கண்ணா."

'கண்ணம்மா நீ சொல்வது சரிதான்.ஆனால் கணிதக் கோட்பாடுகளின்படி காலம் எதிர்காலத்தை நோக்கி அல்லது கடந்த காலத்தை நோக்கிச் செல்வதற்கான சாத்தியங்கள் இருந்தாலும், நடைமுறையில் காலம் அல்லது நேரமானது அம்பொன்றைப்போல் ஒரு திக்கில் செல்வதைத்தான் அவதானிக்கின்றோம். ஒளிக்கு மிஞ்சிய வேகத்தில் பயணம் செய்வது சாத்தியமென்றால் மட்டுமே இத்தகைய கடந்த காலப்பயணங்களுக்கும் சாத்தியம் கண்ணம்மா. "

இவ்விதம் கூறவே மனோரஞ்சிதம் சில விநாடிகள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டாள். அவளது இவ்வித ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு கேட்டேன்:

'என்ன கண்ணம்மா பெரிதாகச் சிந்தனையில் மூழ்கி விட்டாய்."

"இல்லை கண்ணா, கடந்த காலப்பயணம் சாத்தியமென்றால் உன்னை முதன் முதலில் சந்தித்த என் பதின்ம வயதுச் சந்திப்பை மாற்றி அமைத்திருக்கலாமே என்றொரு சிந்தனை ஓடியது.  அப்படிச் செய்திருந்தால் இப்படி நாளும் பொழுதும் இப்பிரபஞ்சம் பற்றியும் ,காலவெளிப் பயணங்கள் பற்றியும் உன்னுடன் அலட்டிக்கொள்வதைத்தவிர்த்திருக்கலாமே கண்ணா"

இவ்விதம் மனோரஞ்சிதம் கூறியபோது அவளது குரலில் தொனித்த குறும்புத்தனத்தை அவதானித்தேன். அது கூட ஒருவித மகிழ்ச்சியை நமக்கிடையே நிகழ்ந்துகொண்டிருந்த உரையாடலுக்குத் தந்ததாக உணர்ந்தேன். கூடவே என்ன பெண்ணிவள் என்றும் வழக்கம்போல் வியந்தும் கொண்டேன்.

காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வினைப் பிரதிபலிக்கும் காட்சியுமுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ'
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை.
ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.
ஆசைபற்றிக் கூறியபின் அலம்பலெதற்கு?
என்று நீ கேட்கின்றாய் என்பதும்
புரிகின்றதடி கண்ணம்மா!
திரையிலோடிவிட்ட காட்சிகளை மீண்டும்
'ஓடவிட்டு, ஓடிவிட்ட காட்சிகளிலொன்றிக்
கிடப்பதில்லையா கண்ணம்மா! அதுபோல்
காலவெளிக் காட்சிகளை ஓடவிட்டாலென்ன?
ஆம்! மீண்டும் ஓடவிட்டாலென்ன?
என்று நான் சிந்துப்பதுண்டு கண்ணம்மா!
இவன் சித்தம் சிதைந்ததுவோ என்று நீ
சிரித்தல் கூடும். நன்றாகச் சிரி.
சித்தம் சிதைந்த சிந்தனையின் விளைவல்ல
கண்ணம்மா இது.
சித்தச் செழிப்பின் விளைச்சலடி இது.
குவாண்டத்திரையில் இருப்புக்குப்
பல நிலைகள் ஒரு கணத்திலுள்ளதை
அறிவாயாயடி  கண்ணம்மா!
அறியின் என் சித்தச் சிறப்பினை உணர்வாய்.
காலவெளித்திரையில்
காலவெளிச்சட்டங்களை
இருந்த காலம் நோக்கி ஓட்டிடும்
ஆற்றல் மிக்கவனிவன் என்பதை
நீ உணரின் அதிசயித்துப்போவாயடி.
காலவெளித்திரையில்
காலவெளிக்காட்டி இயந்திரத்தை
இயக்குபவன் நானடி கண்ணம்மா.
முன்னோக்கி, பின்னோக்கி எனப்
பல்நோக்கில்
இயக்குவதில் வல்லவன் நானடி.
ஆம்!
காலவெளித்திரையில்  இருப்புக்காட்சிகளை
முன், பின் நோக்கி ஓட்டுவதில்
நிபுணத்துவம் பெற்ற வல்லுனனடி கண்ணம்மா
நான்.

[தொடரும்]

girinav@gmail.com


No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்