Friday, November 25, 2022

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (12) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் 12 - காலவெளிக் கூம்புக்குள்  ஒரு கும்மாளம்!

"கண்ணம்மா நீ ஓர் அலையடி"

"கண்ணா நான் அலையா?"

"கண்ணம்மா நீ ஒரு துகளடி"

"நான் துகளா கண்ணா?"

'கண்ணம்மா நீ ஓர் அலை. நீ ஒரு துகள். அலை-துகள் நீ கண்ணம்மா."

"கண்ணா, ஓரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். நான், நீ, நாம் காணும் இந்த வான், இந்த கடல், இப்பிரபஞ்சம் எல்லாமே அலை-துகள்தான். சக்தி-பொருள்தான். இல்லையா கண்ணா?"

"கண்ணம்மா, சரியாச் சொன்னாய். நீ சரியாகவே இருப்பைப் புரிந்து வைத்திருக்கிறாயடி."

"உண்மைதான் கண்ணா. உன்னுடன் சேர்ந்து என் கவனமும் அறிவியலின் பக்கம் திரும்பி விட்டது. "

"பெரிய இப்பெருவெளிப்பிரபஞ்சமும் சரி, நுண்ணிய குவாண்ட உலகும் சரி கண்ணா பொருள்-சக்தியின் பிரதிபலிப்புத்தான். சக்தியின் நடனம்தான்  நாம் காணும் இந்தபொருட் பிரபஞ்சம் கண்ணா."

"சக்தியின் நடனம். அற்புதமான சிந்தனை கண்ணம்மா. அடிப்படைத்துகளின் நடனமே இந்தப்பொருட்  பிரபஞ்சம் கண்ணம்மா.""கண்ணா, உண்மையில் காட்சிகளை உள்ளடக்கியதொரு திரைச்சித்திரமே இப்பிரபஞ்சம். இல்லையா கண்ணா?"

இவ்விதம் கூறிய மனோரஞ்சிதத்தைக் காதல் பொங்க நோக்கினேன்.

"நாம் வாழும் இப்பிரபஞ்சம் உண்மையில் திரைப்படமொன்றின் ஃபிலில் சுருள்போன்றதுதான் கண்ணம்மா."

"ஃபிலிம் சுருள் பல சட்டங்களை உள்ளடக்கியதுதான். அதைப்போல்தானே இப்பிரபஞ்சமும் காட்சிகளைக் கொண்டது கண்ணா?"

"கண்ணம்மா, மிக எளிமையாக, இலகுவாகக் காட்சிகளால் ஆனது இப்பிரபஞ்சம் என்று கூறிவிட்டாய். ஆனால் அதன் பின்னால் நவீன அறிவியலின் அற்புதமானதொரு கோட்பாடுள்ளது கண்ணம்மா."

"காட்சிகளுக்குப் பின் கோட்பாடா? அது என்ன கண்ணா?"

"கண்ணம்மா, ஐன்ஸ்டைனின் பொருள்- சக்திக்கோட்பாட்டுக்கான சூத்திரத்தை இவ்வுலகே அறியும். நீயும் அறிவாயடி. இல்லையா? அவரது இன்னுமொரு கருதுகோளும் முக்கியத்துவம் மிக்கது. அவரது சார்பியல் தத்துவங்கள் இப்பிரபஞ்சத்தை நாற்பரிமாண உலகாகக் காண்கின்றது முப்பரிமாணத்து வெளியும், நேரமும் சேர்ந்து காலவெளிப்பிரபஞ்சமாகக் காண்கின்றது. "

"காலவெளி ஒரு சொல்லா ? இரு சொற்களா? கண்ணா!"

"கண்ணம்மா, நல்லதொரு கேள்வி கண்ணம்மா. உண்மையில் காலம், வெளி என்னுமிரு சொற்கள் இணைந்து உருவான புதியதொரு சொல்லே காலவெளி. காலவெளிப்பிரபஞ்சத்தைக் காலம் , வெளி எனத்தனித்தனியாகப் பிரித்தும் பார்க்கவே முடியாதடி. எங்கெல்லாம் வெளி உண்டோ. அங்கெல்லாம் காலமும் அக்குறிப்பிட்ட வெளியுடன் இணைந்தேயிருக்கும். காலத்தின் ஓட்டத்துடன் இணைந்து வெளியும் ஓடிக்கொண்டேயிருக்கிறது. காலத்தை எத்தனை சிறிய துண்டுகளாக வெட்டினாலும் அத்துண்டுகள் முப்பரிமாண வெளியுடன் இணைந்தவைதாம்."

"காலவெளி அற்புதமான, சிந்தனையைச் சிலிர்க்க வைக்கின்றதொரு சொல் கண்ணா."

"காலவெளி அற்புதமான சொல்தான் கண்ணம்மா."

இவ்விதம் கூறிவிட்டு மனோரஞ்சத்தை, என் கண்ணம்மாவை வாரி இழுத்தணைத்துக்கொள்கின்றேன். அவளது நாடியைப் பிடித்து நிமிர்த்திக் கண்களை நோக்குகின்றேன்.

"கண்ணம்மா, காலவெளிச் சித்திரமே என் கண்ணம்மா"

"என்ன கவிஞரே, கவிஞருக்குக் கற்பனை பிறந்து விட்டதா? ஊற்றெடுத்துப் பாயத்தொடங்கி விட்டதா?"

"கண்ணம்மா, நீ குறிப்பிட்ட காட்சிப்  பிரபஞ்சம் சிந்தனையை மட்டுமல்ல  கற்பனையையும் சிறகடிக்க வைத்து விட்டதடி."

"கண்ணா, அப்படியென்றால் கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளால் ஆன இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொரு காட்சியும் காலவெளிதானே?'

"சரியாகச்சொன்னாய் கண்ணம்மா. அதுமட்டுமல்ல..."

"ஆது மட்டுமல்லவென்றால் .. வேறென்னவாம் கண்ணா?"

"ஓரு திரைப்படத்தில் காட்சிகள் எப்படி ஃபிலிம் சட்டங்களால் ஆனதோ அப்படித்தான் நாம் பார்க்கும் இந்தப்பிரபஞ்சமும் காலவெளிச் சட்டங்களால் ஆனது கண்ணம்மா."

"கண்ணா,  இந்தப் பிரபஞ்சம் என்றால்....நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சமா?"

"ஆம் கண்ணம்மா என் செல்லமே."

"கண்ணா, நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு காட்சியைத்தானே. இதிலெங்கு வேறு காலவெளிச் சட்டங்களுள்ளன?"

"கண்ணம்மா, நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு காலவெளிச் சட்டமல்ல. பல சட்டங்களால் ஓடிக்கொண்டிருக்கும் காலவெளிச் சித்திரத்தை."

"கண்ணா, சில சமயங்களில் சில விடயங்கள் விரைவாக புரிபடுவதேயில்லை. இதுவும்  அதுபோன்றதொரு விடயம்தான்."

"கண்ணம்மா, இதனை இலகுவாக உனக்குப் புரிய வைக்கின்றேன். பதிலுக்கு நீ என்ன தருவாய்?"

"புரிய வை முதலில் கண்ணா, பதிலுக்கு நீ என்ன கேட்டாலும், அது என்னால் சாத்தியமென்றால் , தருவேன்."

"இது போதுமடி செல்லம்மா. கடந்த அரை மணி நேரமாக நாம் உரையாடிக்கொண்டிருக்கின்றோம் இல்லையா கண்ணம்மா?"

"ஓம் கண்ணா."

"இந்த கடந்து போன அரை மணி நேரத்தில் முப்பது நிமிடங்கள் அதாவது 30 * 60 கணங்கள், 1800 கணங்கள் இருக்கின்றனவா இல்லையா?"

"ஓம் கண்ணா, இருக்கின்றன."

"அப்படியென்றால் , கடந்த அரை மணி நேரத்தில் 1800 காலவெளிச் சட்டங்கள் இருக்கின்றன. காலத்துடன் காலவெளிச் சட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது கண்ணம்மா."

"ஓ மை கோட். அப்படியென்றால் இந்தப்பிரபஞ்சம் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை எத்தனை கணங்கள் இருக்கின்றனவோ அத்தனை காலவெளிச் சட்டங்கள் இருக்கின்றன. அப்படித்தானே என் கண்ணா?"

"அப்படியேதான் கண்ணம்மா என் செல்லம்மா."

"கண்ணா , அப்படியென்றால் இந்தப் பிரபஞ்சத்துக்கு வயசுண்டா? எத்தனை வயசு?'

"கண்ணம்மா, இந்தப்பிரபஞ்சத்து வயசு சுமார் 15 பில்லியன் வருடங்கள்.."

"!5 பில்லியன் வருடங்களா? அதெப்படி அவ்வளவு உறுதியுடன் கூறுகின்றாய்?"

"நவீன வானியற்பியலில் இதற்கான விடை உண்டு கண்ணம்மா. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் விரிந்துகொண்டிருக்கும் ஒரு பிரபஞ்சம். கணத்துக்குக் கணம் விரிந்துகொண்டே செல்லுமொரு பிரபஞ்சம். இந்த விரியும் பிரபஞ்சத்தின் வேகத்தின் அடிப்படையில் இது சுமார் 15  பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் என்கின்றார்கள் கண்ணம்மா."

"ஓரு புள்ளியிலிருந்தா? இந்தப் பிரமாண்டமான பொருள் நிறைந்த பிரபஞ்சம் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கியதா கண்ணா? என்ன ஃபிலிம் காட்டுகிறாயா? 'றீல்' விடுகிறாயா?"

"கண்ணம்மா, நாம் காணும் இன்றுள்ள இப்பிரபஞ்சம் அனைத்தும் அப்புள்ளியிலிருந்துதான் தொடங்கியது என்கிறது நவீன அறிவியல்.  இந்த நவீன விக்கிரமாதித்தன் நவீன அறிவியலை நம்புபவன் கண்ணம்மா. இப்போதைக்கு அந்தப்புள்ளியின் தன்மை பற்றிய ஆராய்தலைத் தவிர்ப்போம். அப்புள்ளி நவீன இயற்பியலுக்கு அப்பாற்பட்டதொரு புள்ளி. அது பற்றிய புரிதல்களை எதிர்கால அறிவியல் மேலும் எமக்குத் தரும் கண்ணம்மா. அதை உறுதியாக நம்புபவன் இந்த நவீன விக்கிரமாதித்தன் கண்ணம்மா. மேலும் ..."

"மேலும்.. என்ன கண்ணா? மேலே சொல் கண்ணா!"

"கண்ணம்மா, அப்புள்ளியிலிருந்து 186,000 மைல்கள் ஒரு செக்கனுக்கு என்னும் வேகத்தில் புறப்பட்ட ஒளிக்கூம்பு வடிவமே நாம் காணும் இந்தப் பிரபஞ்சம். "

"ஓளிக்கூம்புக்குள் ஓடும் காலவெளிச் சித்திரமே இந்தப் பிரபஞ்சம். வாவ். அற்புதம் கண்ணா. அற்புதம். அப்படியென்றால் இந்தக் காலவெளிக் கூம்புக்குள் நாம் அடிக்கும் கும்மாளமே காலவெளிச்சட்டங்களால் உருவான இந்தப் பிரபஞ்சம் கண்ணா."

"சரியாகச்சொன்னாய் கண்ணம்மா. அற்புதமாகச் சொன்னாய் கண்ணம்மா. சரி விடயத்துக்கு வருவோம். உன் கேள்விக்கெல்லாம் பதில்கள் தந்தேன். பதிலுக்கு நான் எதைக் கேட்டாலும் தருவதாக வேறு கூறியிருந்தாய். ஆனால் நான் கேட்கப்போவதில்லை கண்ணம்மா. எடுக்கப்போகின்றேன்" இவ்விதம் கூறியவனாக அவளை, என் கண்ணம்மாவை , வாரியிழுத்தணைக்கின்றேன்.

கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
காலவெளியடி கண்ணம்மா! நீ என்
காலவெளியடி கண்ணம்மா!
 எல்லைகடந்து சிறகடிக்க எப்போதும்
விரும்புதடியென் மனம் கண்ணம்மா!
உன் மனமும் அப்படியாயடி!
காலவெளி கடந்து சிறகடிக்க முடியுமெனின்
கண்ணம்மா அக்கனவுலகம் காணத்துடிக்குதென்
மனமே. கண்ணம்மா என் மனமே!
ஒரு வினா! விடைபகிர் கண்ணம்மா!
நீ அலையா கண்ணம்மா!
நீ துகளா கண்ணம்மா!
நீ அலையென்றால் காலவெளியும் அலையன்றோ!
நீ துகளென்றால் காலவெளியும் துகளன்றோ!
அலையா? துகளா ? கண்ணம்மா!
அறிந்தால் அறிவியடி அருவியே!

[தொடரும்]

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்