Friday, November 25, 2022

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (11) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினொன்று -  இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று.

"கண்ணம்மா, இயற்கை எவ்வளவு அழகானது. படைப்புத்திறன் மிக்கது."  என்றேன்.  

அதற்கு அவள் இவ்விதம் பதிலிறுத்தாள்:

"கண்ணா, நீ கூறுவது மிகவும் சரியான கூற்று. உண்மையில் நானும் இவ்விதம் அடிக்கடி எண்ணுவதுண்டு. உண்மையில் இயற்கையின் அழகு, நேர்த்தி, படைப்புத்திறன் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பவை. இவை பற்றி அறிய, புரிய என் இருப்பு முழுவதையும் அர்ப்பணித்தாலும் நான் மகிழ்வேன் கண்ணா."

"கண்ணம்மா, உண்மையில் இயற்கையின் படைப்புத்திறனே என்னைப் பெரிதும் வியக்க வைக்கின்றது."

"கண்ணா, வெளியில் விரிந்திருக்கும் இப்பிரமாண்டமான பிரபஞ்சம் மட்டுமல்ல, கண்ணுக்கே புலப்படாத குவாண்டம் உலகிலும்தான் எவ்வளவு நேர்த்தியாக எல்லாமே படைக்கப்பட்டுள்ளன.  உள்ளும் , வெளியும் காணும் அனைத்திலுமே படைப்புத்திறன் வெளிப்பட்டு என்னை வியக்க வைக்கின்றது."


அருகிலமர்ந்து என் தோளுடன் சாய்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் மனோரஞ்சிதத்தை, என் கண்ணம்மாவை, ஒரு கணம் நோக்குகின்றேன். பொட்டும் , இரட்டைப்பின்னலுமாக பதின்ம வயதுப்பிராயத்தில் காட்சி தந்ததுபோலவே இன்றுமிருக்கின்றாள். நான் அவளையே வைத்த கண் வாங்காது உற்றுப்பார்க்கவே அப்பார்வையின் வீச்சு தாங்காமல் ஒரு கணம் வெட்கம் கவிழ முகம் தாழ்த்தினாள். மறுகணமே தன்னைச் சுதாரித்துகொண்டாள்.  அத்துடன் கேட்டாள்:

"என்ன பார்க்கிறாய் கண்ணா?"

"இல்லை, இந்த அழகு, இந்தச் சிரிப்பு, இந்தக் குறும்பு இவையெல்லாம் உண்மையா? இங்கு நான் படைப்புத்திறனை , இயற்கையின் படைப்புத்திறனை வியக்கின்றேன் கண்ணம்மா.  கண்ணம்மா, நான் இயற்கையை, இந்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றேனடி, அனைத்தையும் படைத்ததாகக் காண்கின்றேன். நாம் எம் புலன்களைக் கொண்டு இயற்கையை நூறு வீதம் அறிய முடியாது. இல்லையா? அதுவரை , அவ்விதமானதொரு அறியும் நிலை வரும்வரை , இயற்கையே  என் கடவுள்.  நாம் அனைவரும் இயற்கை அன்னையின் குழந்தைகள். இதுதான் என் நிலைப்பாடு."

"கண்ணா , ஒருபோதுமே அந்த நிலை வரப்போவதில்லை. ஒருபோதுமே எம்மால் எம் பரிமாணங்களை மீறி அவற்றுக்கு வெளியில் செல்லும் நிலை வரப்போவதில்லை. இவ்விதமானதொரு சூழலில் இருப்பதை ஏற்று, இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டியதுதான். இருப்பை, இப்படியே வாழ்ந்து கடக்க வேண்டியதுதான்."

"கண்ணம்மா, நான் அவ்விதம் நினைக்கவில்லையா. ஒரு தடவை எம்மை ஆதி மானுடருடன் ஒப்பிட்டுப் பார். அவர்கள் எம்மை இன்று பார்த்தால் நாம் அவர்களுக்குக் கடவுள். அவ்விதமான பல செயல்களை நாம் சாதாரணமாகவே செய்து கொண்டிருக்கின்றோம். இல்லையா?"

"கண்ணா, நீ சொல்லுவதிலும் ஒரு வித நியாயம் இருக்கத்தான் செய்கிறது."

"கண்ணம்மா, எதிர்காலத்தில் நம் அறிவியலின் வளர்ச்சி நம்மை இதுவரை நாம் நினைத்துப்பார்க்காத பல தளங்களுக்குக் காவிச் செல்லப்போகின்றது  என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கையுண்டு. தொலைகாவுதல் அன்றாடம் நாம் பாவிக்குமொரு தொழில் நுட்பமாக வளர்ச்சியடையுமொரு காலம் நிச்சயம் வருமென்று நம்புகின்றேன். தற்போது அறிவியல் புதினங்களில் மட்டுமே இடம்பெறும் தொலைக்காவுதல் மனிதர் அன்றாடம் பயணிக்கப் பாவிக்குமொரு போக்குவரத்துச் சாதனமாக இருக்குமொரு சூழல் நிச்சயம் வரத்தான் போகின்றது."

"அது மட்டும் சாத்தியமென்றால், காதலர்கள் 'ஹனிமூனு'க்கு நிச்சயமாக 'மூனு'க்கே பறந்து சென்று திரும்பலாம் இல்லையா கண்ணா. எவ்வளவு இனிமையான வாழ்க்கையாக அவ்வாழ்க்கை இருக்கும். "

'கண்ணம்மா, நிச்சயமாக அற்புதமாக, சிறப்பாகவிருக்கும். உலகின் எந்தப் பகுதிக்கும் விநாடிக்குள் சென்றுவர  முடியும் நிலை அப்போது உருவாகும். ரேடியொ அலைகள் ஓளி வேகத்தில் செல்வதால் அறிவியல் புனைவுகள், திரைப்படங்களில் வருவதுபோல் தோன்றுவதும், மறைவதுமாகப் பயணங்கள்  தொலைகாவுதல் மூலம் நடப்பதை இப்பொழுதே மனக்கண்ணில் காணகின்றேன்."

'நினைக்கவே எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது கண்ணா. ஆனால...'

"ஆனால் .. என்ன கண்ணம்மா?'

"கண்ணா, எப்படித்தான் அறிவியலில் நாம் முன்னேற்றம் கண்டாலும் நாம் எப்பொழுதுமே முப்பரிமாணச்சிறைக்கைதிகள்.  அப்பரிமாணங்களை மீறி நம்மால் ஒருபோதுமே இருப்பின் , பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் இரகசியங்களை, புதிர்களைக் கண்டுகொள்ளவே முடியாது. உணர்ந்துகொள்ளவே முடியாது.  இல்லையா கண்ணா?'

"கண்ணம்மா பரிமாணங்கள் பற்றி நீ கூறுவது முற்றிலும் சரியான கூற்று. இப்பிரபஞ்சத்தில் எம்மை விடவும் அதிகமான பரிமாணங்களைக்கொண்ட உயிரினங்கள் இருந்தால் அவை பற்றி எம்மால் அறிய முடியாது மட்டுமல்ல, நாம் அவற்றின் முன் வெறும் அற்பங்களாகவுமிருப்போம்.  ஆனால் அப்படி இருப்பதற்கான சாத்தியங்களைப்பற்றி எம் அறிவின் மூலம் உணர்ந்துகொள்ள முடியும். எதிர்வு கூற முடியும். "


"கண்ணா, இவ்விதமான சிந்தனைகளுக்கு ஒருபோதுமே முடிவுகள் இருக்கப்போவதில்லை. சில வேளைகளில் நான் நினைப்பதுண்டு....."

"என்ன கண்ணம்மா நினைக்கின்றாய் அப்படி?'

"இவ்விதமான எம்மிலும் அதிக பரிமாணங்கள் மிக்க உயிரினமொன்று உருவாக்கிய உயிரியல் ரீதியிலான விளையாட்டோ நாமும், நாம் வாழும் இப்பிரபஞ்சமும் என்று கூட நினைப்பதுண்டு."

'கண்ணம்மா, தர்க்கரீதியாகச் சிந்தித்தால் நீ நினைப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. நாம் வாழும் இந்த உலகில் அனைத்துமே உணவுச்சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன.  கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் முதல் தெரிந்த பூச்சிகள் வரை கோடிக்கணக்கில் பிற்ந்து , அழிந்து , பிறக்கின்றன. அவற்றை உண்டு வாழும் பறவைகள் அவற்றுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. இவ்விதமாகப் பலம் கூடியவை குறைந்த அளவிலும், பலம் குறைந்தவை அதிக அளவிலும் படைக்கப்பட்டுள்ளதெல்லாம் தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லையே. இவற்றையெல்லாம் பார்க்கும்போது நீ கூறுவதும் ஒருவகையில் ஏற்கத்தக்க தர்க்கமே கண்ணம்மா."

"அப்படியென்றால் நீ உயிர்கள் பற்றிய டார்வினின் கூர்ப்புக் கொள்கையை நம்பவில்லையா கண்ணா?'

'கண்ணம்மா, அது ஒரு கோட்பாடு. அதனை நான் நம்புகின்றேன். அதை அறிவியல்ரீதியில் மறுத்து இன்னுமொரு கோட்பாடு நாளைக்கு வருமென்றால் அதனை ஏற்கவும் நான் சித்தமாயுள்ளேன். அதுபோல் நீ இப்போது தெரிவித்த எம்மிலும் உயர்ந்த உயிரினங்கள் உருவாக்கிய ஒருவகை விளையாட்டே நாம் வாழும் இப்பிரபஞ்சம் என்னும் கூற்றுக்கும் தர்க்க நியாயமிருப்பதால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கமே."

இவ்விதமாக எனக்கும் மனோரஞ்சிதத்துக்குமிடையிலான உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. நான் இவ்விதமான தர்க்கங்களை வரவேற்பவன். குறிப்பாக மனோரஞ்சிதத்துடன் இவ்விதம் உரையாடுவதை வரவேற்பவன்.  விரும்புபவன்.  இவளுக்கு ஈடு கொடுத்து என்னால் உரையாட  முடியும். அதுபோல் எனக்கு ஈடுகொடுத்து அலுக்காமல், சளைக்காமல் இவளாலும் ஈடுகொடுத்து உரையாட முடியும். இவ்விதமாக இவளுடன் நடத்தும் உரையாடல்களைக் காணொளிகளாகப் பதிவு செய்தால் பலருக்கும் அவை பயனுள்ளவையாகவிருக்குமென்று நான் நினைப்பதுண்டு.

இயற்கைத்தாயே!
போதுமென்றே திருப்தியுறும்
பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே! இயற்கைத்தாயே! உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.

விதியென்று வீணாக்கும் போக்குதனை
விலக்கி விடு.
மதி கொண்டு விதியறியும் மனத்திடத்தை
மலர்த்திவிடு.

கோள்கள், சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு.

தாயே! இயற்கத்தாயே! உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்...


அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல்அடியேனின் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே
கண் சிமிட்டும் சுடர்ப்பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும்
நள்ளிரவில் சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும்
பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி
பைத்தியமாய்ப்படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

[தொடரும்]

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்