Wednesday, November 30, 2022

இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் -


இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள்.  நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம்,  சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.

இன்று தற்செயலாக நண்பர் வரதீஸ்ரவன் 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் வரும் 'தந்தையைப் போல் உலகில் தெய்வம் உண்டோ' என்னும் பாடலுக்கான யு டியூப் இணைப்பினை அனுப்பியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகளைக் கேட்டபோது,

தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ

சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
உண்ணாமல் உறங்காமல்"
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே
என் தந்தை எங்கே

கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா

காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா"

குறிப்பாகக் 'காரிருள் போலே பாழான சிதையில்வ் கனலானார் விதி தானா' என்னும் வரிகளைக் கேட்டபோது அவர் சிதையில் தனித்து எரிந்த காட்சி படமாக விரிகின்றது. 

கவிஞர் தஞ்சை ராமையா தாஸின் தந்தையின் பேரன்பைப் புலப்படுத்தும் வரிகள், பாடகர் டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சி மிக்க குரல், திரையிசைத் திலகம் கே.வி.எம்மின் இசை, எம்ஜிஆரின் நடிப்பு  எல்லாமே அந்தத் துயர நாளை நினைவுக்குக் கொண்டு வந்தன. 

என் எழுத்து , வாசிப்பு மீதான பேரார்வத்துக்கு அடித்தளமிட்டு, வீடு நிறைய சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் நூல்களால்  நிரப்பி, வாசிக்க, எழுத ஊக்கம் தந்தவர் என் தந்தையார். வானியலின் மீதெனக்குத் தீராத ஆர்வம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என் தந்தையார் , இரவுகளில் சாய்வு நாற்காலியில் அவர் படுத்திருக்கையில், அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானுமிருக்கையில் அவர் சுட்டிக்காட்டும் செயற்கைக் கிரகங்களும், வால்வெள்ளி பற்றிய கதைகளும்தாம் முக்கிய காரணங்கள். நான் எழுதுகையில், வாசிக்கையில் அவரை நினைக்கின்றேன். ஒரு நாளைக்குப் பல தடவைகள் நினைக்கின்றேன். உண்மையில் அவரை நினைக்காத நாட்களில்லை.

கவிஞர் தஞ்சை ராமையா தாஸின் பாடலின் முழு வரிகளும் கீழே:


தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ

சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா

ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே
என் தந்தை எங்கே

கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா

காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஔவையின் பொன் மொழி வீணா

பாடலைக் கேட்க -https://www.youtube.com/watch?v=jAjYd7ogXVE&t=4s



No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்