Friday, December 2, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் 14   - யாதும் ஊரே! யாவரும் கேளிர்!


"கண்ணா என்ன மீண்டும் பலமான சிந்தனை?"

திரும்பிப்பார்க்கின்றேன். கேட்டவள் என் கண்ணம்மா, மனோரஞ்சிதம்.

"சங்ககாலப் புலவன் ஒருவனின் சிந்தனையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன் கண்ணம்மா. அவனது அனுபவத்தெளிவு மிகுந்த சிந்தனையின் வீச்சு என்னை எப்போதும் கவருமொன்று. அன்று அவன் சிந்தித்ததை இன்றுள்ள மனிதர்கள் உணர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், உலகம் எவ்விதம் ஒரு குடும்பம் போல் இன்பத்தில் மூழ்கி இனித்திருக்குமென்று எண்ணிகொண்டிருந்தேனடி. என் சிந்தனையை வழக்கம்போல் இடையில் வந்து குலைத்து விட்டாயடி என் செல்லமே."

"உன் சிந்தையில் எப்போதும் நானிருக்க வேண்டும் கண்ணா. எனக்குத் தெரியாமல் வேறு யாரும் இருக்கக் கூடாது கண்ணா."

"கண்ணம்மா, நீ எப்போதும் என் ஆழ்மனத்தில் குடியிருக்கின்றாய். அதிலிருந்து உன்னை நான் விடுவிக்கப் போவதேயில்லை. ஆனால் நான் சிந்திப்பது என் ஆழ்மனத்தாலல்லவே கண்ணம்மா."

"ஆழ்மனத்தில் நானிருக்கிறேன் என்கின்றாய். சிந்திப்பதோ அம்மனத்திலால் அல்ல என்கின்றாய். குழப்புகிறாயே கண்ணா."

"கண்ணம்மா, ஆழ்மனம் வேறு. சிந்திக்கும் புறமனம் , நனவு மனம் வேறு. புறமனத்தால் சிந்திக்கின்றேன்.ஆனால் ஆழ்மனத்தில் எப்போதும் போல் நீ நிறைந்திருக்கின்றாயடி"

'கண்ணா , உன் ஆழ்மனத்தில் மட்டுமல்ல, புறமனத்திலும் நான் தான் எப்போழுதும் நிறைந்திருக்க வேண்டும்." என்று செல்லமாகக் கட்டளையிட்டாள் என் கண்ணம்மா."கண்ணம்மா, அப்படி இருக்க எனக்கும் ஆசைதான். ஆனால் அப்படியிருந்தால் மனித வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறதே. அதையும் இழுத்துக்கொண்டோட வேண்டியிருக்கிறதே. பொருளுலகின் தேவை என்று ஒன்றிருக்கிறதே. என் கண்ணம்மாவைக் கண்ணை இமை காப்பதுபோல் காக்க வேண்டியிருக்கிறதே. அதற்காகவாவது புற மனத்தை நூறு வீதம் உனக்கு ஒதுக்குவது சாத்தியமில்லை. ஆனால் ஆழ்மனத்தில் இருக்கும் உன்னை அடிக்கடி நனவு மனத்துக்கு இழுத்து அசை போடுவதை மட்டும் , நனவு மனத்துக்குச் சிறிது ஓய்வு கிடைக்கும் சமயங்களில் செய்துகொள்வேன்."

இவ்விதம் நான் கூறவும் மனோரஞ்சிதம் சிறிது பொய்க்கோபத்துடன் "கண்ணா, எதையாவது செய்து தொலை." என்று  கூறிச் செல்லமாக கன்னத்தைக்கிள்ளினாள்.  அத்துடன் "அது சரி கண்ணா, சங்கப்புலவன் ஒருவனைப் பற்றிக்கூறினாயே. என்ன கூற வருகிறாய்?"

'கண்ணம்மா, இனம், மதம், மொழி, தேசம், வர்ணம், வர்க்கமென்று பிரிந்து கிடக்கும் நவகால மனிதர்கள் மோதாத நாளுண்டோ. விரிந்து செல்லும் இப்பிரபஞ்சத்தின் வாயுக் குமிழியாக விரையும் இக்கோளத்தினுள் வளைய வரும் நமக்கிடையில்தான் எத்தனை வகையான மோதல்கள்? இருப்பை நன்கு உணர்ந்திருந்தால், விளங்கியிருந்தால் இப்படியெல்லாம் ஆட்டம் போடுவோமா? இரத்தக்களரிகள், வறுமையின் கோரம் இவையெல்லாம் மானுடரின் நல் உணர்வுகளைச் சிதைத்து விட்டன. இல்லையா கண்ணம்மா. இந்த நிலையில்தான் அந்தச் சங்கத் தமிழ்க் கவிஞனின் அறைகூவல் முக்கியத்துவம் மிக்கதாகின்றதடி."

"அறை கூவலா? எந்தச் சங்கத் தமிழ்க் கவிஞனைப்பற்றிக் கூறுகிறாய் கண்ணா?"

"எல்லா ஊரும் எம் ஊர். மானுடர் எல்லாரும் எம் உறவினர். எத்துணை அருமையான, சிறப்பான வார்த்தைகள். உண்மையில் இப்பூமியில் வாழும் நாம் அனைவரும், சகல உயிர்களையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றேனடி கண்ணம்ம, நாமனைவரும் ஒரு தாய்க்குழந்தைகள். உறவினர்கள்.  இந்த உணர்வு மட்டும் நம்க்கு இருந்தால் இப்பூவுலகம் ஒரு சொர்க்கலோகம் கண்ணம்மா."

இவ்விதம் நான் கூறுவதை மிகுந்த ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தாள்  மனோரஞ்சிதம். நான் தொடர்ந்தேன்:

"கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே. யாவரும் கேளிர்' சாதாரணமான வார்த்தைகளல்ல. மானுட இருப்பை நன்கு விளங்கிய தெளிவில் உருவான வார்த்தைகளடி கண்ணம்மா."

'ஓம் கண்ணா, இந்தக் கவிதையை நானும் கேட்டிருக்கிறேன். எனக்கு இதில் வரும் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா என்னும் வரி மிகவும் பிடிக்கும்.  நன்மை , தீமை எல்லாமே அடுத்தவரால் வருவதில்லை. அற்புதமான வார்த்தை. இந்தத்தெளிவு மட்டும் நவநாகரிக மனிதர்களுக்கு இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும். போர்களால் உலகை நாசமாக்கிக்கொண்டிருப்பதற்குப் பதில் அன்பு மழையில் குளிக்க வைத்திருப்பாரே."

"கண்ணம்மா, இந்த வாழ்க்கையை இனிதென்று எண்ணி மகிழவும் தேவையில்லை. தீயதென்று எண்ணி வெறுக்கவும்  தேவையில்லை என்கின்றான் புலவன்.  அதனால் தான் 'வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே' என்று பாடவும் முடிகின்றது. இப்படிப்பாடுவதற்கு அவனுக்கு மானுட இருப்பு பற்றிய தெளிந்த பார்வையுமிருக்கிறது. இல்லையா கண்ணம்மா. இதனால்தான் அவனால் மேலும் 'மாட்சியின்  பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.' என்றும் பாடவும் முடிகிறது. அவனது மானுட இருப்பு பற்றிய தெளிவு, அதனாலேற்பட்ட ஞானத்தின் விளைவாக அனைவரையும் உறவினர்களாக ஏற்கும் மனப்பக்குவம் என்னை எப்போதும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றன கண்ணம்மா."

"கண்ணா, இந்தச் சமயத்தில் உன் அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வருகின்றன."

'கண்ணம்மா, எந்த வரிகளைப்பற்றி நீ கூறுகிறாய்?'

"கண்ணா , அவரது விடுதலை என்னும் கவிதை பற்றித்தான் கூறுகிறேன். அதிலவர் கூறுவார் 'மனிதர்களே! நீங்கள் ஒன்றுமே செய்யத்தேவையில்லை. இயற்கை எவ்விதம் மரங்கள், கொடிகள் உயிர் வாழ்கின்றனவோ அவ்விதமே மனிதரை இயற்கை வாழ வைக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் , செய்ய வேண்டிய தொழில் அன்பு செய்வது ஒன்றே.'

"கண்ணம்மா, நீ சொல்லியதும் எனக்கும் அந்தக் கவிதை நினைவுக்கு வருகின்றது. 'இந்தப் புவிதனில்  வாழு மரங்களும், இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும், அந்த மரங்களைச் சூழந்த கொடிகளும், ஓளடத மூலிகை பூண்டுபுல் யாவையும், எந்தத் தொழில்செய்து வாழ்வனவோ?' என்று ஆரம்பத்தில் கேள்வி கேட்கும் அவர் இறுதியில் 'ஊனுடலை வருத்தாதீர். உணவியற்கை கொடுக்கும். உங்களுக்குத்  தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்' என்று  முடிப்பார்."

"கண்ணா, பாரதியாரின் கனவுகள் என்னை எப்போதும்  பிரமிக்க வைப்பவை. இக்கவிதையும் அவரது இன்னுமொரு கனவு. ஆதியில் அறியாமையில் மனிதர்கள் இயற்கையின் குழந்தைகளாக இவ்விதம்தானிருந்தார்கள்.  எதிர்கால அதி மானுடர் அறிவின் தெளிவுடன் இயற்கையின் குழந்தைகளாக இருப்பார்கள் என்பதில் எனக்கு எப்போதும் நம்புக்கையுண்டு."

"இந்தச் சமயத்தில் எனக்கு மேனாட்டுக் கவிஞன் ஒருவனின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன. அவனது பெயர் தோமஸ் பெயின். இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்கர். சமூக, அரசியற் செயற்பாட்டாளர். தத்துவவியலாளர். கவிஞர். அவரது பின்வரும் கவிதை வரிகள் எனக்குப் பிடித்தவை. இக்கவிதை வரிகளைப் பார்த்தபோது எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இவர் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே. யாவரும் கேளிர்' படித்திருப்பாரோ என்பதுதான். இக்கவிதை வரிகளை அப்பா தனது குறிப்பேடொன்றில் எழுதி வைத்திருந்தார். அதன் மூலம்தான் முதலில் இவ்வரிகளை அறிந்தேன். அவரது புகழ்பெற்ற வரிகள் இவைதாம் -  The world is my country, all mankind are my brethren, and to do good is my religion."

இவ்விதம் நான் கூறவும் மனோரஞ்சிதம் துள்ளிக் குதித்தாள். அத்துடன் பின்வருமாறு கூறவும் செய்தாள்: "நல்ல வரிகள். உலகம் எனது நாடு. நல்லது செய்வதே எனது மதம். எனக்குப் பிடித்தவை இவைதாம். mankind, brethren ஆகிய சொற்களைப் பாவித்திருப்பது அவரையறியாமலேயே அவர் ஒரு ஆணாதிக்கவாதியாக இருந்ததைக் காட்டுகிறது. "

"கண்ணம்மா , தோமஸ் பெயின் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் காலத்தில் இவ்விதமான பெண்ணியக் கருத்துகள் நிலவாத காலகட்டம். இக்கருத்துகளுக்கான புரிதலுள்ள இக்காலகட்டத்தில் அவர் வாழ்ந்து இச்சொற்களைப் பாவித்திருந்தால் அவரை இவ்விதம் குற்றஞ் சாட்டலாம். பாரதியார் கூட 'தனி மனிதனுக்கு உணவில்லையெனில்' என்று மனிதன் என்னும் சொல்லைப் பாவித்திருக்கின்றார்.  ஆனால் அவரை பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முக்கிய ஆளுமையாளர் இல்லையா?"

"கண்ணா, நீ சொல்வதும் சரியாகத்தானிருக்கிறது. "

"கண்ணம்மா"

''என்ன கண்ணா?"

"உனக்கு என் கோடானு கோடி நன்றி."

''எதற்கு இந்த கோடானு கோடி நன்றி. அப்படி நான் என்ன செய்து விட்டேன் கண்ணா"

"இவ்விதம் என்னுடன் ஈடு கொடுத்து உரையாடுகின்றாயே. அதற்கு. அதற்காகக் கோடானு கோடி நன்றி கூறினாலும்  போதாதடி. இவ்விருப்பில் இதை விட இன்பம் வேறென்ன இருக்க முடியும் கண்ணம்மா."

"கண்ணா, இதற்காக நானுமுனக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால் உன்னைப்போன்ற ஒருவனுடன் இவ்விதம் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக. உன் ஆழ்மனத்தில் என்னை நிலையாகச் சிறைப்பிடித்து வைத்திருப்பதற்காக." இவ்விதம் கூறியபோது, குறிப்பாகச் 'சிறைப்பிடித்து' என்னும் சொல்லைக் கூறியபோது கண்களை அவளுக்கேயுரிய குறும்புத்தனத்துடன் சிமிட்டினாள்.

பதிலுக்கு அதே குறும்பு குரலில் தொனிக்க "கண்ணம்மா, இவ்விதம் சிறையில் இருப்பது துயரத்தைத் தரவில்லையா?" என்றேன்.

பதிலுக்கு அதே குறும்புத்தனம் மாறாமல் அவளும் 'சில சிறைகள் துன்பச் சிறைகளல்ல. இன்பச்சிறைகள். இது இன்பச் சிறை. துன்பச் சிறையல்ல கண்ணா."

"கண்ணம்மா, நீ ஆழ்மனத்தை மீண்டும் நினைவூட்டினாய். உண்மையில் நான் உன்னுடன் உரையாடிக்கொண்டிருக்கவில்லை. என்னுடன் தான் உரையாடிக்கொண்டிருக்கின்றேன்."

"என்ன கண்ணா,  புதிர் விடுகிறாய்?"

'கண்ணம்மா, உன் உருவத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் என்  மூளைக்குக் கண்களூடு சென்று ஏற்படுத்தும் மின் சமிக்ஞைகளுடன் தான் நான் உரையாடிக்கொண்டிருக்கின்றேன். இதுபோல் உன் குரலில் இருந்து வரும் ஒலி அலைகள் என் காதுகள் வழியே சென்று என் மூளையில் ஏற்படுத்தும் மின்சமிக்ஞைகளைக் கேட்டுத்தான் உரையாடிக்கொண்டிருக்கின்றேன். நான் எனக்குள் இருக்கும் பிரபஞ்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். எனக்குள் இருக்கும் என் கண்ணம்மாவுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றேன்."

இவ்விதம் நான் கூறவும் "போதும் கண்ணா போதும். உனக்குள் நான் இருக்கின்றேன். உனக்கு வெளியிலும் நான் இருக்கிறேன். எனக்குள் நீ இருக்கிறாய். எனக்கு வெளியிலும் நீ  இருக்கிறாய். இதில் நான் உன்னைப்போல் கலங்காமல் தெளிவாகவிருக்கிறேன் கண்ணா. " என்று கூறியவாறே நெருங்கி என் வாயைப் பொத்தினாள் மனோரஞ்சிதம். வாயைப் பொத்தியவளை வாரியணைத்துக்கொள்கின்றேன்.

இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்!

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமெமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!
இந்த மண்ணினை, இந்தக் காற்றினை,
இந்த வெளியினை, அடிவானினை,
இந்த எழில் மலர்களை, மரங்களை,
இந்தச் சூரியனை, இதன் ஒளியினை,
இவற்றையெல்லாம் நான்
மனப்பூர்வமாக நேசிக்கின்றேன்.

இதோ இங்கே வாழும் இந்த மானுடர்களை,
ஆபிரிக்கக் கறுப்பினத்தவர்களென்றாலென்ன
அமெரிக்க வெள்ளையரென்றாலென்ன,
அரபு முஸ்லிமகளாலென்ன,
ஆசிய தேசத்தவரென்றாலென்ன,
இவர்களையெல்லாம்,
இந்த மானுடர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
விரிந்த, பரந்த இப்பிரபஞ்சத்துக்
கோள்களை, கதிர்களை, பால் வீதிகளை,
ஆங்கு வாழும் தகைமைபெற்ற
உயிர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
இந்த உயிர்களிற்காகவே
இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை
விடுவிப்பதற்காகவே
என் நெஞ்சில் பொங்குமுணர்வுகளை
எழுத்தாக வடிக்கின்றேன்.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
ஆமாம்! ஆமாம்! ஆமாம்


[தொடரும்]

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்