Friday, December 16, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (16) -   நவீன விக்கிரமாதித்தனின்  குறிப்பேட்டுப் பக்கங்கள் சில.

மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில் தன்னை முழுமையாக  மூழ்கடிக்க வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அப்படியெதைத்தான் அவள் இவ்விதம் வாசித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியும் ஆவல் மேலிட்டது. மேலிட்ட ஆவலுடன் அவளை நெருங்கி அவள் வாசித்துக்கொண்டிருந்த நூலைப் பார்த்தேன். உண்மையில் அது நூலல்ல. ஒரு குறிப்பேடு. அது என் குறிப்பேடுகளிலொன்று.  அவ்வப்போது என் எண்ணங்களை எழுத்துகளாக  அக்குறிப்பேட்டில் பதிவு செய்வது என் பொழுது போக்குகளிலொன்று. கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல் வடிவங்களில் அவை இருக்கும். அக்குறிப்பேடுகளிலொன்றினைத்தான் அவளெடுத்டு வாசித்துக்கொண்டிருந்தாள்.

"கண்ணம்மா, ஒருத்தரின் குறிப்பேட்டை அவரது அனுமதியின்றி இன்னொருவர் வாசிப்பது தவறில்லையா?"

"கண்ணா, என் கண்ணனின்  குறிப்பேட்டை நான் வாசிக்காமல் வேறு யார் வாசிப்பது? உன் கண்ணம்மா வாசிப்பதில் தவறேதுமில்லை. பேசாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே கண்ணா."

சிறிது நேரம் வாசித்துவிட்டுக் கூறினாள்:

"கண்ணா இவையெல்லாம் உன் 'டீன் ஏஜ்' பருவத்தில் எழுதியவை. ஒவ்வொரு கவிதைக்கும், கட்டுரைக்கும் மேல் எழுதின திகதி, மாதம், ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறாய்.""உண்மைதான் கண்ணம்மா. அவ்வப்போது என் சிந்தையிலேற்பட்ட உணர்வுகளை வடிப்பதற்காக எழுதியவை இவை. உண்மையில் என் எண்ணங்களின் வடிகால்கள் இவை. இவ்வடிவால்கள் இல்லாவிட்டால் அவை என் நெஞ்சைப் போட்டு வாட்டு வதக்கியெடுத்திருக்கும்."

"கண்ணா, உன் குறிப்புகளை வாசிக்கையில் உண்மையில் எனக்கு ஆச்சரியமாகத்தானிருக்கறது."

"கண்ணம்மா, அப்படி ஆச்சரியத்தைத் தருவதற்கு அப்படியென்ன இருக்கு அவற்றில். ஒரு சாதாரண 'டீன் ஏஜ்' இளைஞனின் எண்ணங்கள் அவை."

"கண்ணா, நீ அந்த வயதிலேயே இருப்பு பற்றிச் சிந்தித்திருக்கிறாய். சமூக, அரசியல் நிகழ்வுகள் பற்றி ஆழமாகச் சிந்தித்திருக்கிறாய். மனித உணர்வுகள்  பற்றியெல்லாம் சிந்தித்திருக்கிறாய். அக உலகத்து, புற உலகத்துத் தளைகள் பற்றிச் சிந்தித்திருக்கிறாய்."

நான் மெளனமாக அவள கூறுவதைக்கேட்டுக்கொண்டிருந்தேன். அவளே தொடர்ந்தாள்:

"கண்ணா, உன் சிந்தனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் உன்னைப்போல் தான் நானும் வாசிப்பில், சிந்திப்பதில், இயற்கையைச் சுகிப்பதில், இருப்பின் மூலம் பற்றிய தேடலில் மூழ்கிக்கிடப்பதில் என்னை மறப்பவள்.  ஈடுபத்துபவள்."

"அதனால்தான் கண்ணம்மா, எனக்கும் உன்னைப் பிடித்திருக்கின்றது. நம்மை இணைத்த இயற்கை அன்னைக்குத்தான் நன்றி கூற வேண்டும்."

"கண்ணா, உன் குறிப்பேட்டில் 'சமர்ப்பணமொன்று 'என்றொரு கவிதை எழுதியிருக்கிறாய். அந்தக் கவிதையை வாசித்தபோது நீ என்னைப்பற்றியே எழுதியிருப்பது போல் தெரிகிறது. உண்மையா கண்ணா?"

"கண்ணம்மா, அது நூற்றுக்கு நூறு உண்மையேதான். என் பதின்ம வயதுகளில் நான் உன்னைப்பார்த்து உருகத்தொடங்கியிருந்த காலத்தில் எழுதியது. வீதிகளில் ஒரப்பார்வைகளால் என்னைப்பார்த்து செல்லும் உன்னை என் இதயச் சிறைக்குள் பிடித்து அடைத்து வைத்திருந்த சமயம்  எழுதியது."

"கண்ணா,     அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால், சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை, நான் உனக்குச் சொல்வதெல்லாம், சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான். அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே விட்டிடாதே. உந்தன் இதயத்தில் ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச் சிறை வைத்திடு." என்னும் வரிகளை நானும் என் குறிப்பேட்டில் உன் ஞாபகமாக எழுதி வைத்திருந்தேன்."

"கண்ணம்மா, இந்தக் காதல் உணர்வு  மானுட உணர்வுகளில் முதன்மையானது என்பேன். அதற்காக எப்பொழுதும் உனக்கு என் நன்றி இருக்கும். முதன் முதலில் என் நெஞ்சில் காதல் உணர்வுகளை விதைத்தவள் நீ. இன்றுவரை என்னுடன்  தொடர்ந்து  வருகிறாய். அது என் பாக்கியம்."

"கண்ணா, நீ சொல்வது மிகவும் சரியானதுதான். காதல்  மனிதருக்கு முதலில் தன்னை மறந்து, இன்னொருவர் மீது , உறவினர் அல்லாத இன்னுமொருவர் மீது அன்பு வைக்கும் அனுபவத்தைத் தருகின்றது. அது அற்புதமானதோர் உணர்வு. காதல் வெற்றியடையலாம். தோல்வியடையலாம். அது முக்கியமில்லை. ஆனால் அந்த உணர்வு முக்கியம். அந்த உணர்வு மனிதரின் வாழ்க்கையின் வளர்ச்சிப் படிக்கட்டுகளில் முக்கியமான ஒன்று. தவிர்க்கப்படக் கூடாத ஒன்று."

"கண்ணம்மா, நீ காதலைப்பற்றிக் கூறுவது சரியானதுதான். காதல் எழுத்தாளர் பலருக்கு எழுதும் உத்வேகத்தைத் தந்திருக்கின்றது. இன்பத்தைத் தந்திருக்கின்றது."

"இன்றுள்ள தலைமுறையைச் சேர்ந்த பலர் காதல் என்று கருதுவது உண்மையில் காதலே அல்ல கண்ணா"

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய் கண்ணம்மா?"

"உண்மைக்காதலென்றால், காதலனோ காதலியோ அக்காதல் ஏதோ ஒரு காரணத்தால் தோற்றவுடன் ஆத்திரப்பட்டுச் செயற்பட மாட்டார்கள்.  தன் காதலி தனக்குக் கிடைக்கவில்லையென்றவுடம் அவள் முகத்தில் அசிட் ஊத்துவது போன்ற செய்திகளைப் பத்திரிகைகளில் அன்றாடம் படிக்கிறோம். இல்லையா கண்ணா?"

"ஓம் கண்ணம்மா"

"கண்ணா, அந்தக் காதல் மட்டும் உண்மையானதாகவிருந்திருந்தால் அவன் அவள் மேல் இவ்விதம் ஆத்திரப்பட்டு செயற்பட்டிருக்க மாட்டான். அவள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமென்றுதான் நினைத்திருப்பான். அதனால்தான் சொல்லுகிறேன் பெரும்பாலானவர்கள் பருவக்கிளர்ச்சிகளை, காமக் கிளர்ச்சிகளை உண்மைக்காதலாக எண்ணி விடுகின்றார்கள். இது என் கருத்து கண்ணா."

"உன் குறிப்பேட்டுக்  கவிதைகளில் எனக்குப் பிடித்த இன்னு,மொரு கவிதை.. நீ வேற்றுலக உயிரினமொன்றுக்கு எழுதிய கவிதை கண்ணா."

அவள் இவ்விதம் கூறியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

"கண்ணம்மா, அக்கவிதை பற்றி நீ என்ன நினைக்கிறாய். வேற்றுலக உயிர்கள் இருப்பதற்குச் சாத்தியங்கள் உள்ளனவா? அவற்றை நீ நம்புகின்றாயா?"

"நான் நம்புவது இருக்கட்டும். நீ நம்புகின்றாயா கண்ணா?"

"நிச்சயமாகக் கண்ணம்மா, நிச்சயமாக நான் நம்புகின்றேண்."

'நிச்சயமாக.."

'நிச்சயமாகவே நம்புகின்றேன். ."

'அதெப்படி அவ்வளவு உறுதியாகக் கூறுகிறாய் கண்ணா?"

'ஏனென்றால்... முக்கிய காரணமாக நான் இதனைக் கூறுவேன். நீண்ட காலமாக மனிதர் பூமியே இப்பிரபஞ்சத்தின் நடுவில் இருப்பதாகக் கருதினார்கள். பின்னெரே பூமி சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் ஒன்று என்பதைக் கண்டு பிடித்தார்கள். பின்னரே சூரியன் இப்பிரபஞ்சத்திலுள்ள பில்லியன் கணகான சுடர்களில் ஒரு சுடர். அதுவும் அற்பத்தனமான, மிகச்சாதாரணமான சுடர்களில் ஒனறு என்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்நிலையில் இப்பிரபஞ்சத்திலிருக்கும் மிகச்சாதாரணமான சுடர்களில் ஒன்றான  சூரியனைச் சுற்றி மிகச்சாதாரணமான கிரங்களில் ஒன்றான பூமி சுற்றுகிறது,'

இதற்குச் சிறிது நேரம் மெளனமாகவிருந்தாள் மனோரஞ்சிதம். நானே மீண்டும் தொடர்ந்தேன்:

"இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப்போல் மேலும் பல பிரபஞ்சங்கள் இருப்பதாகக் கூட  ஆறிவியல் அறிஞர்கள் சந்தேகிக்கின்றார்கள். அவை கூட பில்லியன்  கணக்கில் இருக்கலாமென்று கூட அவர்கள் கருதுகின்றார்கள்."

இதைக் கேட்டதும் மனோரஞ்சிதம் "நினைக்கவே  பிரமிப்பாகவிருக்கிறது கண்ணா. இப்பிரபஞ்சதம் தான் எவ்வளவு பெரியது. நினைத்துணர்வதற்கே முடியாமலிருக்கிறது கண்ணா."

"மிகச்சாதாரணச் சுடரொன்றின் மிகச்சாதாரணக் கிரகமொன்றில் நாம் வாழ்வுதற்கான சாத்தியங்கள் இருக்குமென்றால், என்னைப்பொறுத்தவரையில் வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் கண்ணா."

"கண்ணம்மா, நீ கூறுவது மிகவும் சரியானதுதான். மிகச்சாதாரணக் கிரகமொன்றில் நாம் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறதென்றால் விரிந்து , பரந்து கிடக்கும் இப்பிரமாண்டமான புதிர்கள் நிறைந்த இப்பிரபஞ்சத்தில்  நம்மைப் போல், நம்மிலும் மேலான அல்லது கீழான நிலையில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை  நூற்றுக்கு நூறு வீதம் நம்புகின்றேன் கண்ணம்மாவ்"

இவ்விதமாக மனோரஞ்சிதத்துடனான, என் கண்ணம்மாவுடனான உரையாடல் தொடர்ந்தது. அவள் என் குறிப்பேட்டுக் கவிதைகளை, எழுத்துகளைப்  பற்றிய கருத்துகளைத்  தெரிவித்தாள். அவை பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டாள்.

இந்தப் பிரபஞ்சம், இதில் எம் இருப்பு  இவை பற்றிய சிந்தனைகள், நூல்கள் எப்பொழுதுமே எனக்குப் பெரு நாட்டமுள்ள விடயங்கள். இவை பற்றிச் சிந்திப்பதென்றால், வாசிப்பதென்றால், தர்க்கிப்பதென்றால், எழுதுவதென்றால் எனக்கு அவற்றில் பெரு நாட்டமுண்டு.  இப்புதிர்கள் நிறைந்த உலகில் நம்மைச் சுற்றி விரிந்து , எழில் கொட்டிக்கிடக்கும் இயற்கையன்னை பெரு வனப்பு என்னை எப்பொழுதும் மெய்ம்மறக்கச் செய்யுமொரு விடயம். இவற்றில் என்னை மூழ்க வைத்து மெய்ம்மறந்து கிடப்பதில் என்னை எப்போதுமே மறந்து விடுவேன்.

நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுக் கவிதைகள் சில..

சமர்ப்பணமொன்று!


அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால்
சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை.
நான் உனக்குச் சொல்வதெல்லாம்,
சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே. உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
ஏனெனில் சோகமுகிலகள் படர்கையில்,
பாதையில் இருட்டு செறிகையில்,
வாழ்வே ஒரு கேள்விக் குறியாகி,
இதயம் இரணமாகிச் செல்கையில்
அன்பே!
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் அந்த உனது ஏங்குமிதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.


தனி நட்சத்திரம்


நீண்டு, பரந்து , விரிந்து கிடக்கும்
மூண்டிருக்கும் பேரமைதியில் மூழ்கி,
ஒளி ஆண்டுகள் பல கடந்து
நிற்குமொரு
தனி நட்சத்திரம்
அது நான்.
வானத்தினின்று வழிதப்பி
வந்து வீழ்ந்தேனோ?
மனித கானகத்தில் வந்து
கட்டுண்டு கிடந்தேனோ?
பிரபஞ்சத்து  அமைதிகளின் ஆழத்தில்
போயடங்கி விடும் மாயைக்குள்
ஏன் வந்து பிறந்தேனோ?
என் நிம்மதியைத் துறந்தேனோ?
ஒரு நாள்
அடங்கிவிடும் இருப்புக்குள்
கால்
முடங்கிக் கிடக்கின்றேன்.
தொடங்கி விட்ட பயணத்தின்
முடிவை நாடி நடக்கின்றேன்.

எங்கோ இருக்கும் கிரகவாசிக்கு...


முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது
கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்

விடிவெள்ளி


அதிகாலை மெல்லிருட்போதுகளில்
அடிவானில் நீ மெளனித்துக்கிடப்பாய்.
படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு
ஊடுருவுமுந்தன் நலிந்த ஒளிக்கீற்றில்
ஆதரவற்றதொரு சுடராய் நீ
ஆழ்ந்திருப்பாய்.
விடிவு நாடிப்போர் தொடுக்கும்
என் நாட்டைப்போல்.
விடிவின் சின்னமென்று கவி
வடிப்போர் மயங்கிக்கிடப்பர்.
ஆயின்
சிறுபொழுதில் மங்கலிற்காய்
வாடிநிற்கும் உந்தன் சோகம்
புரிகின்றது.
அதிகாலைப்பொழுதுகளில்
சோகித்த உந்தன் பார்வை
படுகையிலே,
என் நெஞ்சினிலே
கொடுமிருட்காட்டில் தத்தளிக்கும்
என் நாட்டின் , என் மக்களின்
பனித்த பார்வைகளில் படர்ந்திருக்கும்
வேதனைதான் புரிகின்றது.
என்றிவர்கள் சோகங்கள் தீர்ந்திடுமோ?
என்றிவர்கள் வாழ்வினில் விடிவு
பூத்திடுமோ?
விடிவினை வழிமொழியும்
சுடர்ப்பெண்ணே! வழிமொழிந்திடுவாய்.


[தொடரும்]

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்