Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, February 21, 2025

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'



உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' போன்ற நூல்கள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். கலைஞர் மு.கருணாநிதியின் 'ரோமாபுரிப்பாண்டியன்', 'வெள்ளிக்கிழமை' போன்ற புதினங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவரது சிலப்பதிகாரத்தை மையமாகக்கொண்ட நாடகத்தினை வாசித்திருக்கின்றேன். அவ்வப்போது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கின்றேன். பெரியாரின் நூல்களைப் பெரிதாக வாசித்திருக்காவிட்டாலும் அவரைப் பற்றிய அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் எழுத்துகளூடு அவரை அறிந்திருக்கின்றேன்.


அண்மைக்காலமாகத் தமிழகத்தில் 'நாம் தமிழர்' கட்சியினரின் பெரியார், திராவிடம்,கலைஞர் ஆகியோர் பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரியாரின் எழுத்துகள், கலைஞரின் எழுத்துகள், அறிஞர் அண்ணா போன்ற ஏனையோரின் எழுத்துகள் பக்கம் என் கவனத்தைத் திருப்பின.

இவ்வகையில் கலைஞரின் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' யை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இவ்வளவு 'நாம் தமிழர்' கட்சியினரின் தூற்றுதல்களுக்கு உள்ளாகியிருக்கும் கலைஞரின் கடந்த கால வாழ்க்கை எப்படியிருந்தது? எவ்விதம் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளில் ஒருவராக உருவானார் என்பதை அதன் மூலம் அறியலாம் என்று தோன்றியது. 'நெஞ்சுக்கு நீதி' பல பாகங்களை உள்ளடக்கிய சுயசரிதை.

Tuesday, February 18, 2025

அறிஞர் அண்ணாவின் உரை: இந்தி இணைப்பு மொழியாக இருக்க முடியுமா?


அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல்.
இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார் என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள். 
 
இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார். இன்றுள்ள தலைமுறை யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும். 

Monday, February 17, 2025

ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி.....

 - ஆய்வாளர் மன்னர் மன்னன் -


அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன்.  ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது.  Saattai  யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச்  சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப்  பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68

சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.

Tuesday, February 11, 2025

ஏ தாழ்ந்த தமிழகமே!


அறிஞர் அண்ணா 1945இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வில் கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தைத்திறந்து வைத்து ஆற்றிய உரை. இது 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அறிஞர் அண்ணா திறமையான பேச்சாளர். சிந்தனையாளர். ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடுகளாக, தர்க்கச் சிறப்பு மிக்கவையாக அவரது உரைகள் இருக்கும். 1947 தொடக்கம் 1967 வரை திமுக ஆட்சியை பிடிக்கும் வரையிலான காலகட்டம் தமிழகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் மத்தியில் முக்கியமான காலகட்டம் .

சம்த்துவம், சுயமரியாதை, சம்நீதி, பகுத்தறிவு இவற்றை மையமாகக் கொண்டு திமுக இயங்கியது. கலை, இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் மிகத்திறமையாகக் கையாண்டு ஆட்சியைப் பிடித்த வேறொரு கட்சி திமுக  போன்றேதும் உண்டா? தெரியவில்லை.

சினிமா, நாடகம், நாவல்ம் கட்டுரை என்று கலை, இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் தம் கருத்துகளைப் பரப்பினார்கள்.  சினிமாவைப் பொறுத்த வரையில் திமுகவை மக்களிடத்தில் கொண்டு சென்றதில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள், உரைகளுக்கு பெரும்பங்குண்டு. எம்ஜிஆருக்கு முக்கிய பங்குண்டு. கலைஞரின் நாடகங்கள், பராசக்தி போன்ற திரைப்படங்களுக்கும் முக்கிய பங்குண்டு.

வரலாறு அறிவோம்: விவேகியின் 'ஐக்கிய திராவிடம் ' நூல் வெளிப்படுத்தும் பெரியார் பற்றிய விபரங்கள்.

'

ஐக்கிய திராவிடம் - விவேகி - யூலை 1947இல் வெளியான நூல். இதிலுள்ள கடைசி மூன்று அத்தியாயங்கள்  பெரியார் ஈ.வெ.ரா, திராவிடக் கழகம், பிரிவினையும் ஐக்கியமும் முக்கியமானவை. வாசித்துப் பாருங்கள். ஜூல 1, 1947 நாளைத் திராவிடப் பிரிவினை நாளாகப் பெரியாரின் கட்டளைப்படி கொண்டாடியதை நூலின் மூலம் அறிய முடிகின்றது.

பெரியார் சிறு வயதிலிருந்தே தீண்டாமையை வெறுத்தார்.  கேரளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக்கெதிராக நடந்த சத்தியாக்கிரகத்தில் மனைவி நாகம்மையுடன் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்கின்றார்.

அப்பொழுது காங்கிரசில் இருந்த பெரியார், காங்கிரசில் நிலவிய ஆரிய ஆதிக்கத்தின் காரணமாக விலகி சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்துக் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்கின்றார். அப்பொழுது குடியரசு பத்திரிகையை ஆரம்பித்து மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டுகின்றார்.

எகிப்தும், கிரீஸ், துருக்கி,  ரஷ்யா, ஜேர்மனி , இங்கிலாந்து , ஸ்பெயின் , பிரெஞ்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றார்.  அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றார்.

Monday, February 10, 2025

பெரியாரும் , தமிழ்த் தேசியமும், தமிழும் & திராவிடமும்


தமிழ்த் தேசியம் பற்றி 1938இலேயே பேசி விட்டார். அதற்காகப் போராடினார். இது  வரலாறு. பெரியார் தமிழர் தலைவர் என்பதில் சந்தேகம் இருப்பவர்கள் 1938, 1939 காலகட்டத்தில் பெரியார் எழுதியவற்றை உள்ளடக்கியுள்ள இங்குள்ள பக்கங்களைப் பாருங்கள்.  இவற்றைப் படிக்காமல் திராவிடம் பற்றியும், தமிழ் பற்றியும் கூக்குரல் இடாதீர்கள்.  

https://www.facebook.com/VNGiritharan/posts/pfbid02iu78rotyGHuAtBxzk5sEXfY1t74r2GP1CN9sHHMJk8MvsdaYuSPDuozDCMxqyYSWl


 

 

 

 

Sunday, February 9, 2025

தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழியா?


மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்

பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.

குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?

குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.

நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?

Wednesday, February 5, 2025

ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -


பதிவுகள் இணைய இதழில் வெளியான நந்திவர்மப் பல்லவனின் கட்டுரை.

ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்!  - நந்திவர்மப் பல்லவன் -

தென்னிந்தியத் தமிழர்களின் அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக் கூடாது.அப்படித் தலையிட்டு ஒரு கட்சி சார்பாக இருப்பது அனைத்துத்  தமிழர்களின் ஆதரவையும் சீர்குலைப்பதாக அமையும். அண்ணா தலைமையிலான, கலைஞர் தலைமையிலான , எம்ஜிஆர் தலைமையிலான திராவிடக் கட்சிகளின்  ஆட்சிக் காலங்களில்  தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.

இன்று என்ன நடக்கிறதென்றால்... நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத்  தன்னைக்  காட்டிக்கொண்டு செய்யும் தன் நலன் சார்ந்த அரசியலால், விடுதலைப்புலிகள் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது திராவிடக் கட்சிகளின் கோட்டையாகத்தான் இருக்கிறது. இன்னும் இருந்து வரும். ஏன் என்றால் அந்த அளவுக்குத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சுயாட்சி, சமத்துவம், சமநீதி, பகுத்தறிவுக்காக விழிப்புணர்வினை ஏற்றியிருக்கின்றன.

ஊழல், குடும்ப ஆட்சி என்பவற்றுக்கெதிராகக் குரல் எழுப்புவதும் அவற்றின் அடிப்படையில் தேர்தலில் நிற்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவ்விதமே செயற்பட வேண்டும். அதற்கு மாறாகத் தம் சுய அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களின் துயரையும், வலியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் அவர்கள்   தமிழகத்தின் பெருமான்மையான மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் மீதான ஆதரவைச் சீர்குலைக்கின்றார்கள்.

2009இல் கலைஞரின் ஆட்சியில் யுத்தம் முடிவுக்கு வந்ததை வைத்து, கலைஞர் நினைத்திருந்தால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்  என்றொரு கதையையும் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அது மிகவும் தவறான கூற்று. நிச்சயம் கலைஞர் தலைமையிலான திமுக அரசு அல்ல இந்திய அரசின் வெளி விவாகரக் கொள்கையினைத் தீர்மானிப்பது.  ஆளுநர்  மூலம் எந்தக் கணத்திலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கில்லை என்பதைக் காரணம் காட்டிக் கலைப்பதற்கு இந்திய மத்திய அரசால் முடியும். அந்நிலையில் இவ்விதமான கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஈழத்தமிழர்களுக்காக திமுக, அதிமுக ஒன்றிணைந்து ஆதரவு வெளிப்படுத்தினார்கள். தன் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார் கலைஞர். அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கின்றது அவரது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டினால்.

2009இல் யுத்தத்தை முடித்ததில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு முக்கிய பங்குண்டு. மகிந்த ராஹ்பக்சவே கூறியிருக்கின்றார்  தான் இந்தியாவின் யுத்தத்தை நடத்தியதாக. உண்மையில் யுத்தம் அவ்விதம் முடிந்ததற்கு முக்கிய காரணம் ராஜிவ் காந்தி படுகொலை. அதன் எதிரொலிதான் யுத்தத்தின் அம்முடிவுக்குக் காரணம். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாகக்  கலைஞரின் மீது சேற்றை வாரி இறைத்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் அதற்குப் பாவிப்பது இலங்கைத்தமிழரை. இதற்கு இலங்கைத் தமிழ் அமைப்புகள் சிலவும், குறிப்பாகப் புகலிடத்தில் செயற்படும் அமைப்புகளும் பலியாகியுள்ளன என்பது துரதிருஷ்டமானது. இலங்கைத்தமிழர்கள் தம் நிலையைத் தமிழக அரசியல் கட்சிகள் தம் நலன்களுக்காகப் பாவிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசியல் கட்சிகளின், தமிழக மக்களின் ஒன்றிணைந்த ஆதரவைச் சீர்குலைக்கும் எவற்றுக்கும் ஆதரவளிக்கக் கூடாது.

எழுபதுகளில் வெளியான சுதந்திரன் பத்திரிகையின் பிரதிகள் நூலகம் இணையத்தளத்திலுள்ளன.  அவற்றை எடுத்துப் பாருங்கள். இலங்கைத்தமிழர்களின் உரிமைகளுக்கான திமுகவினரின் பங்களிப்பைத் தெளிவாகக் காணலாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் து பெரியார் பூமி. அறிஞர் அண்ணா பூமி. கலைஞர் பூமி,. எம்ஜிஆர் பூமி.  இவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களுக்கு ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.  அதுதான் ஈழந்த்தமிழர்களுக்குத்தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்.  

இந்நிலையில்  நாடு கடந்த தமீழீழ அரசின் சார்பில் வி,ருத்திரகுமாரன் பிரபாகரனையும், பெரியாரையும் இரு துருவங்களாக்கிக்கட்டமைத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்யும் அரசியலை வன்மையாகக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் பார்த்தேன். அது வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர் அமைப்புகள் சீமான் தன் அரசியல் நல்னகளுகாக இலங்கைத் தமிழர்களைப் பாவிப்பதைக் கண்டிக்க வேண்டும்.  அனுமதிக்கக் கூடாது. இலங்கைத் தமிழர்களுக்குத்தேவை தமிழகத்தமிழர்கள் அனைவரின் ஆதரவு மட்டுமே. அதற்கு ஊறு விளைவிக்கும் எதனையும் ஆதரிக்கக்கூடாது.

நன்றி : https://geotamil.com/index.php/78-2011-02-25-12-30-57/8959-2025-02-05-17-38-00

Saturday, February 1, 2025

நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -


[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.]

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி எழுகிறது. யார் தமிழர்?  தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள் தமிழர்களா?  அல்லது  அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவர்களைத் தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா?  அப்படி யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க முடியாது. மரபணுவை வைத்து ஒருவர் எத்தனை இனங்களின்  கலப்பு என்பதை இன்று இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.

நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை, தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக் காலம்  தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள். பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள். இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக, வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.  இவ்விதம் வந்தவர்களின் சந்ததியினர்தான்  இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.

Thursday, January 30, 2025

பெரியார் சிந்தனைகள் - தொகுப்புகள்! பதிப்பாசிரியர் - வே.ஆனைமுத்து! பதிப்பகம் - சிந்தனையாளர் கழகம்!


ஈ.வெ.ரா பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள் 

ஈ.வெ.ரா பெரியார் பெரும் சிந்தனையாளர். வர்க்கம், வர்ணம், மூட நம்பிக்கைகளால் சிதைந்து கிடக்கும் உலகில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமநீதி, பெண் உரிமைகளுக்காக இருந்தவரை தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் குடியரசு, விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் பிரமிப்பைத்தருகின்றன. அவரது சிந்தனையின் ஆழத்தைக் காட்டுகின்றன.

பெரியாரின் சிந்தனைகளை அப்படியே யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரை விமர்சிப்பவர்கள் அவர் எழுத்துகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.அதற்குப்பின் அவற்றின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். அவற்றைப் படிக்காமல், அறியாமல் அவர் மீது சேற்றை வாரியிறைக்காதீர்கள்.

Wednesday, January 1, 2025

ஜிம்மி கார்ட்டரும் மானுட நேயமும்


எனக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதிகள் மூவர். ஆபிரகாம் லிங்கன், ஜோன் எஃப் கென்னடி, அடுத்தவர் ஜிம்மி கார்ட்டர்.  ஜிம்மி கார்ட்டரின் ஜனாதிபதிப் பதவிக்காலம் ஒரு தடவைதான் என்றாலும் அவர் வரலாற்றில் நினைவு  கூரப்படுவது அவரது ஜனாதிபதிக்காலத்துக்கு அப்பால் அவர் செயற்பட்ட வாழ்க்கை முறை மூலம்தான். Habitat for Humanity அமைப்பு மூலம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் பணியில் அவர் தளராது தொடர்ந்து ஈடுபட்டார். தானே நேரடியாகக் களத்தில் இறங்கி வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். போர்ச்சூழல்கள் நிறைந்திருந்த உலகில் அமைதியை வேண்டி நடந்த நிகழ்வுகளில் சமாதானத்தூதுவராகப் பங்கு பற்றினார். இவை அவரது முக்கிய பங்களிப்புகளாக நான் கருதுவேன்.

Tuesday, September 24, 2024

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலும், வடகிழக்கு வாக்காளார்களின் தெரிவுகளும் பற்றி...


நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல ஆரோக்கியமான  முக்கியமான விடயங்களை நான் காண்கின்றேன். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க இத்தேர்தலை ஆரோக்கியமாகக் கையாண்டுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டால் முக்கியமானவையாக நான் கருதுவது இவற்றைத்தான்.

1. முதன் முறையாகப் பிரதான தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்களத் தேசியம், இனவாதம் போன்ற மக்களை உணர்ச்சியிலாழ்த்தும் விடயங்களை முக்கிய பிரச்சாரமாகக் கைக்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை.

2. அனுரா குமார திசாநாயக்கவின் சில உரைகளை நான் கேட்டேன். ஓர் உரையில் அவர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை , அவர்கள்தம் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.

Monday, August 12, 2024

ஓர் உலகக் குடிமகனின் தன் நாட்டு அரசியல் பற்றிய சிந்தனைகள்... வ.ந.கிரிதரன் -


சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.

தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப்  பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

Monday, July 8, 2024

நானே நானா? இது யாரோ தானா?


என் முகநூற் பதிவொன்றிலிருந்து சில வசனங்களை என் பதின்ம வயதில் கூறியிருந்தால், குரல் தவிர, எப்படியிருந்திருக்கும்?

Monday, June 24, 2024

எனக்குப் பிடித்த கவிஞர் நீலாவணனின் 'விளக்கு'


ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமான ஒருவர் கிழக்கிலங்கை தந்த கவிஞர் நீலாவணன். அவரைப்பற்றி நல்லதொரு சுருக்கமான கட்டுரை 'கிழக்கின் கவித்துவ ஆளுமை நீலாவணன்'. எழுதியவர் மோகனதாஸ். அதற்கான இணைய இணைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது கவிதைத்தொகுப்புகள் பலவற்றை 'நூலகம்' இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவரது 'விளக்கு' கவிதை எனக்கு பிடித்த கவிதைகளிலொன்று.  தினகரன் பத்திரிகையில்  31.5.69  அன்று வெளியான இக்கவிதை அவரது 'ஒத்திகை' கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளது.  தொகுப்பு நூலகம் இணையத்தளத்திலுள்ளது. இணைப்பை இப்பதிவில் இறுதியில் தந்துள்ளேன். வாசிக்கவும்.

இருண்டு கிடக்கிறது வீடு. காடுகளூடு அலைந்து திரியும் கவிஞன் இருண்டிருக்கும் வீடு பற்றியும்  அதற்கு விளக்கேற்ற் வேண்டுமென்றும்  எண்ணித்திரும்புகின்றான்.  திரும்பியவன்  சாவி கொண்டு வீடு திறந்து உட்செல்கின்றான். உள்ளறையில் இருக்கும் தீப்பெட்டி எடுத்து விளகேற்றுகின்றான்.  'வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்' என்று தொடங்கும் கவிதை 'வீடிருண்டு கிடக்கவில்லை - விளக்கேற்றிவிட்டேன் வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!' என்று முடிகின்றது.

Friday, May 17, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி!


இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை.  யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை.  இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.

அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மைதான். இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.

Tuesday, February 27, 2024

தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -


- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக,  சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில  உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. -


ஜெயலலிதாவின் கட்டுரை கீழே;

1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.

Sunday, February 25, 2024

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவாக..


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்ததினம் பெப்ருவரி 24. என்னைப்பொறுத்தவரையில் எம்ஜிஆரும் அவரும் என் அபிமான நடிகர்கள். என் பால்ய பருவத்தில் நான் அதிகமாகத் தமிழ்ப்படங்கள் பார்க்கத் தொடங்கிய காலத்தில் திரையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

அரசியலைப்பொறுத்தவரையில் ஆணாதிக்கத்திலுள்ள தமிழக அரசியலில் தனித்து, துணிச்சலாக செயற்பட்டவர். அந்தத்துணிச்சல் எனக்குப் பிடிக்கும். பெண் சிசுக்களைக் காப்பாற்றத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குப் பல்வேறு வகைகளில் பொருளியல்ரீதியிலான உதவித்திட்டங்களை ஆரம்பித்தார். அம்மா உணவகத்தின் மூலம் அடித்தட்டு மக்களும் பயன்படையச் செய்தார். 

எம்ஜிஆர் முதல்வராகவிருந்த காலத்தில் சத்துணவுத்திட்ட நிர்வாகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்திட உதவினார். தமிழக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தன் அரசியலை நடத்தினார். இவையெல்லாம் அவரது ஆரோக்கியமான பக்கங்கள். அவரது திட்டங்களினால் பலர் பயனடைந்தார்கள்.

Monday, February 5, 2024

எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு! அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?


எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு'  என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.

Friday, February 2, 2024

'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -


நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;

"விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."


தற்போதுள்ள அரசியல் சூழல் என்னைப்பொறுத்தவரையில் நடிகர் விஜய்யுக்குச் சாதகமான பல விடயங்களைக் கொண்டுள்ளது.

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்