![]() |
ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! |
இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால் இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது. பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம். ]
இதன் விளைவே முக்கியமான சிங்கள ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.
முதன் முறையாகத் தென்னிலங்கையின் மக்களுக்கு யாழ் நூலகத்தைத் தீயிடுதல், கறுப்பு ஜூலை 1983 ஆகிய அழிவுகளின் பின்னணி, அவற்றுக்குக்காரணமான சூத்திரதாரிகள் பற்றியெல்லாம் , ஆதாரபூர்வமாக, சான்றுகளுடன் எழுதப்பட்ட நூல்கள் கிடைத்துள்ளன. முதலில் வெளியான 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம்' வெளியானதிலிருந்து சுமார் 10,000ற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்பது சிங்கள இளந்தலைமுறையினரின் இனப்பிரச்சனை பற்றிய உண்மையான புரிதல் மீதான ஆர்வத்தைக் காட்டுகின்றது.
இங்குள்ள காணொளியில் அவரது புதிய நூலான 'கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள்' பற்றிய அறிமுக உரையாடலைக் காணலாம். முழுமையாக இக்காணொளியைக் கேட்டுப் பாருங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் , முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் இத்தகைய நாட்டு நிலை பற்றிய, நாட்டு அரசியல் பற்றிய சரியான புரிதல் மீதான ஆர்வம் அவசியம். ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் இப்பங்களிப்பானது விதந்தோதபபட் வேண்டிய வரலாற்றுப் பங்களிப்பு. இவரைப்போல் ஆதாரபூர்வமாகத் தம் ஊடகப்பங்களிப்பை ஊடகவியலாளர்கள் செய்வது அவசியம். காலத்தின் கட்டாயம்.
https://www.youtube.com/watch?v=J8rUkeIN_N4
No comments:
Post a Comment