Tuesday, October 28, 2025

கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!


இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை இப்பெண் பேசுவது போல் காணொளியாகவும் ஆக்க முடியும். நான் தற்போது பாவிப்பது இலவச சேவையென்பதால் அதற்கான வசதிகள் இல்லை.

குரல் உருவாக்கப்பட்ட பாவிக்கப்பட்ட பதிவு:
 
என் பால்யப் பருவத்து அனுபவங்களைப் பற்றி நிறையவே பதிவுகள் எழுதியிருக்கின்றேன். அவற்றில் வவுனியா பட்டாணிச்சுப் புளியங்குளத்தின் , வான் பாயும் அணைப் பகுதியை என்னால் மறக்கவே முடியாது.குருமண்காடு என்னும் பகுதியை அண்மித்திருக்கும் குளம் பட்டாணிச்சுப் புளியங்குளம். மன்னார் வீதியிலுள்ளது.
மாரிகளில் குளம் நிறைந்து வான் பாயும். இரவு முழுவதும் பெய்யும் மழையின் ஒலியினை இரசித்தபடியே தூங்கிக் கிடக்கும் நாம் விடிந்ததும் வான் பாயும் குளக்கட்டை நோக்கி ஓடுவோம்.
 
அக்கிராமத்து மக்கள் பலரையும் அங்கு அச்சந்தர்ப்பத்தில் காணலாம்.
வான் பாயும் நீருடன் வழுகிச் செல்லும் விரால் மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். வெங்கணாந்திப் பாம்புகளும் அவ்விதம் விரால் பிடிப்பதுண்டு. அவ்விதமான ஒரு பாம்பையும் ஒரு தடவை பார்த்திருக்கின்றேன். இரவு முழுவதும் விரால் பிடித்து உண்ட மயக்கத்தில் அசைவற்றுக் கிடந்தது. 'தொண்டனுக்கு உண்ட களை' என்றொரு சொலவடை உண்டல்லவா. அதுதான் அப்போது நினைவுக்கு வந்தது.
 
என் பால்ய பருவத்து அழியாத கோலங்களில் இந்தப் பட்டாணிச்சுப்புளியங்குளத்தின் 'மாரி வான்பாய்தலு'க்கும் அழியாத ஓரிடமுண்டு.
 
இந்தக் குளத்தின் வான் பாயும் நீரொலியைக் கேட்கும்பொழுதெல்லாம் நினைவில் வரும் வரிகள் இவை:
 
"உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!'
 
அப்பொழுதே அப்பா வாங்கி தந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்று 'புலியூர்க் கேசிக'னின் உரையுடன் வெளிவந்திருந்த சிலப்பதிகாரம் (மூலமும், உரையும் தொகுதி). அதன் பக்கங்களைப் புரட்டுகையில் அப்பொழுதே என் மனத்தில் பதிந்து விட்ட கானல் வரி வரிகள் இவை. முழு நூலையும் படிக்கும் ஆற்றல் இல்லாதிருந்த சமயத்திலும் கவிஞர் இளங்கோவின் எளிமையான இது போன்ற வரிகள் சில கண்ணில் பட்டன. அவை மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டன. மதகு ஓதை, உடைநீர் ஓதை என்னும் சொற்கள் என் மனத்துக்குப் பிரியமான சொற்கள். அச்சொற்களை நினைத்த மாத்திரத்தில் பெருமழை பெய்து , கட்டுடைத்துப் பாயும் வெள்ளமும், அதன் ஒலியும் நினைவுக்கு வந்து விடும்.

No comments:

கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!

இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால...

பிரபலமான பதிவுகள்