* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG
'டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழா' (20250) - கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில், சுமதி பலராமின் நடிப்பில் வெளியான குறுந்திரைப்படம் 'கறுப்பி'!
கறுப்பி - 'டொரோண்டோ' சர்வதேசத் திரைப்பட விழாவில் (TIFF - 2025 ) திரையிடப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்த குறுந்தமிழ்த்திரைப்படம் 'கறுப்பி' (Karupy) .இதன் திரைக்கதையை எழுதி,இயக்கியிருப்பவர் கலைநிதன் கலைச்செல்வன் ( Kalainithan Kalaichelvan) . நோர்மன் ஜூவிசன் திட்டத்தின் கீழ் (Norman Jewison Program ) கனடியத் திரைப்பட மையத்தில் , தெற்காசிய நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் கறுப்பி. கலைநிதன் கலைச்செல்வன் எழுத்து , திரைப்பட இயக்கம் ஆகியவற்றில் இயங்கி வருபவர். இவரது குறுந்திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் தனது 65ஆவது பிறந்தநாளில் தான் தற்கொலை செய்யப்போவதை அறிவிக்கும் ஒரு தமிழ் மூதாட்டியின் கதை. அவளூடு தெற்காசியக் குடும்பங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் காணப்படும் மெளனம், முதுமை, தலைமுறைச் சிக்கல், துயரம் போன்றவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரி ய வருகின்றது. இவ்விதம்தான் இது பற்றி இணையத்தில் கிடைக்கும் ஆங்கிலக் குறிப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. நான் இதுவரையில் இத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை. இத்திரைப்படம் பற்றிய அறிமுகத்துக்கானது இப்பதிவு.
இதில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருப்பவர் கனடியத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட கறுப்பி சுமதி, சுமதி ரூபன் என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதிவரும் , குறுந்திரைப்படங்கள் பலவற்றைத் தயாரித்துள்ள , நியோகா என்னும் தமிழ்த் திரைப்படத்தை இயக்கியுள்ள சுமதி பலராம் ஆவார். நியோகா சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளதுடன் , ஜாகர்த்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் விருதும் பெற்றுள்ளது.
'நியோக, கறுப்பி மூலமும் , பல குறுந்திரைப்படங்கள் மூலமும் கனடாத் தமிழ்த்திரைப்படம், குறுந்திரைப்ப உலகில் காலடியெடுத்து வைத்துள்ள சுமதி பலராமுக்கு இத்துறையில் சிறந்ததோர் எதிர்காலமுண்டு என்பதற்கு ஆதாரங்கள் நியோகாவும், கறுப்பியும். கறுப்பியின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், மற்றும் அனைத்துத் தொழில் நுட்ப வல்லுநர்கள், இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment