Sunday, October 26, 2025

கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


கவிஞர் பாத்திமா நளீராவின்  'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே.  இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை. 

இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.இக்கவிதைத்தொகுப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது. நூறு கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. இவரை ஊக்குவித்த ஊடகவியலாளர்கள், ஆளுமைகள் பலரின் அணிந்துரைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ள தொகுப்பு. 

கவிதைகள்  சரளமான, தெளிந்த நீரோடை போன்ற மொழி நடையில் எழுதப்பட்டுள்ளன.  இம்மொழி நடை கவிதை வாசிப்பை இனிமையாக்குகின்றன. மொழிநடையின் சிறப்பை வெளிப்படுத்தும் உதாரணமொன்று:

மொழிமனிதன்!

"நட்சத்திரங்களை 
சூடிக் கொண்டிருக்கும் - அந்த 
வானத்திற்குக் கர்வமில்லை.
ஆனால், 
மின்மினிப் பூச்சிகளைச் 
சுமந்து கொண்டிருக்க்கும் - இந்தப்
பூமிக்கோ 
கர்வம் தாங்கவில்லை.
.....
'இரவின்  ஒளிர்கள்' என
மொழிமனிதன்
பெயர்வைத்து நகர்ந்தான்."

கவிஞர் பாத்திமா நளீரா
நிலையாக சுடரும் நட்சத்திரங்களைத் தாங்கி நிற்கும் விரிவானம் அமைதியாக, அடக்கமாக இருக்கையில், நிலையற்ற, சில கணங்களே மின்னி மின்னிச் சுடரும் மின்மினிகளைத் தாங்கி நிற்கும்  பூமிக்கோ கர்வம் தாங்கவில்லை. இவ்விதமான மின்மினி மனிதர்களை நாம் அன்றாடம் காண்கின்றோம் . ஆனால் இம்மின்மினிகளையெல்லாம் மொழிச்சித்தரான மனிதரோ தம் மொழிச் சித்து விளையாட்டின் மூலம் தகுதிக்கு மீறியவைகளாகச் சித்திரித்து விடுகின்றார்கள்.  இங்கு கவிஞர் குறிப்பிடும் நட்சத்திரங்கள், மினிமினிகள் குறியீடுகளே. இக்குறியீடுகளை மானுடருடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் வரிகளின் உண்மையான அர்த்தம் புலப்படும். 

மொழிமனிதன் சிறப்பான படிமம்.    இவ்விதம் மனிதன் என்னும் சொற்பதத்தைப் பல இடங்களில் கவிஞர் கையாண்டிருக்கின்றார். பெண்ணியவாதிகள் மொழிமனிதன் ஆணாதிக்கச் சொல்லென்று எதிர்ப்புக் காட்டக்கூடும். இருந்தாலும் மனிதன் என்பது மனிதரின் குறியீடாகவே இதுவரை காலமும் வழக்கில் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. அவ்விதமே கவிஞரும் அப்பதத்தினைப் பாவித்துள்ளார் என்றே கருதுகின்றேன். எடுத்துக்கொள்கின்றேன். மகாகவி பாரதியும் 'தனி மனிதனுக்கு உணவில்லையென்று' பாவித்திருப்பது நினைவுக்கு வருகின்றது.

'மொழிமனிதன்' என்னும் படிமம்  மானுட வாழ்வில் மொழியின் தாக்கம் பற்றி எடுத்துரைக்கும் அமைப்பியல், பின் அமைப்பியல் பற்றிய சிந்தனைகளையும் நினைவு படுத்தியது. அக்கோட்பாடுகளின் அடிப்படையிலும் இக்கவிதையை விரிவாக ஆராயும் சாத்தியத்தையும் இப்படிமம் தருகின்றது.

கவிதைகளில் கவிஞர் பாத்திமா நளீராவின் சமுதாயப் பிரக்ஞை வெளிப்படுகின்றது. கவிதைகள் தற்போது கனன்றெரிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனத்து மக்களின் துயரங்களைப் பேசுகின்றன. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விடுதலையைப் பேசுகின்றன. பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றன. இயற்கையைப்பற்றிப் பேசுகின்றன.  இயற்கையூடு மானுடரின் எதிர்மறையான போக்குகளைக் கிண்டலடிக்கின்றன. இருப்பைப்பற்றிய கவிஞரின் தேடல்களை வெளிப்படுத்துகின்றன.

உதாரணத்துக்குச் சில கவிதைகள்:

ஆத்மாவின் ஞானம் (பக்கம் 45)

கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இருப்புப் பற்றிய ஞானிகளின், அறிவியல் அறிஞர்களின், சாதாரண மானுடர்களின் புரிதல்கள் வித்தியாசமான்வை. கவிஞரோ இருப்பு  பற்றிய தேடல் மிக்கவர். அவரிடம் ஒரு கேள்வி.  இவ்வகையான பல வகைப்புரிதல்களுக்குள் எதைத்தான் அவர் ஏற்றுக்கொள்வது?  மானுடராக அவர் சுமக்கும் சுமைகள்தாம் எத்தனை? எத்தனை வகைப்போர்வைகளால் மனிதர்கள் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வகையான மானுட  நிர்ப்பந்தங்களூக்குள், போர்வைகளுக்குள் குடங்கிகிடந்த நிலையில் இருந்து மேற்படி புரிதலை அணுகுவது அப்படியொன்றும் இலகுவானதல்ல.  இவ்வகையான நியதிகள் நிறைந்த போர்வைகளைச் சிறிது நீக்கி, ஞான வெளிச்சத்தைக்கொண்டு, அறியாமைக் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்து வெளிச்சத்தைக் காண முயற்சி செய்கின்றார். அதுவும் அப்படியொன்றும்  இலகுவானதல்ல.  அதன் விளைவு?

'இருளின் குரல் அமானுஷ்யமாக
என வந்தடைவது எனக்குப் புரிகிறது.
அதனால்தான் என்னவோ
எனது ஆத்மாவின் ஞானம்
பூமியின்
மேல் தட்டில் 
போய் ஒட்டிக்கொண்டது.'

பூமியின் மேல் தட்டில்தான் மனிதர்கள் வாழ்கின்றார்கள். பல்வகை உயிரினங்கள் வாழ்கின்றன.  பூமியின் மேல்தட்டு ஒரு குறியீடு. மானுட இருப்புக்கான, பல் வகை உயிரின இருப்புக்கான ஒரு குறியீடு. இருப்புப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு முயற்சி செய்த கவிஞரை மீண்டும் மீண்டும் மானுட இருப்புக்கான நிர்ப்பந்தங்கள் தம் பக்கம் இழுத்துக்கொள்கின்றன.  இவ்விதமே  இக்கவிதையை நான் புரிந்து கொள்கின்றேன்.  இக்கவிதையின் சிறப்பு க்விஞரின் தேடல் மிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதுதான்.

'நானும் என்  கவிதையும்' (பக்கம் 41) இக்கவிதையின் பின்வரும் வரிகளைப் படித்தபோது என் நினைவில் காசாவில் படுகொலை செய்யப்பட்ட கவிஞரும், படிப்பில் சிறந்தவரும், அரசியற் செயற்பாட்டாளருமான , பதினாறு வயதுச் சிறுமி Fatima Hjeiji நினைவுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது:

"ஓரு நாள் நீங்கள்
என்னைக் கொண்டாடுவீர்கள். 
அப்போது
நானும் என் கவிதையும்
கல்லறைக்குள்
உரையாடிக் கொண்டிருப்போம்.

எனக்கு நீங்கள் 
பொன்னாடை போர்த்த
வருவீர்கள். அப்போது
எனது கல்லறைக்கு
சிறகுகள் முளைத்திருக்கும்"

இவ்விதம் ஆரம்பமாகும் கவிதை பின்வருமாறு முடிகின்றது:

"ஏன்றாலும் 
ஒரு நாள் தேசபக்தன் 
ஒருவன் வருவான்.
எனக்காக வந்து 
தேசியக் கொடியைப் 
போர்த்திச் செல்வான்"

இக்கவிதை உலகில் எங்கெங்கு தேசிய விடுதலைக்காகப் போராடும் போராளிகளை நினைவுக்குக் கொண்டு வந்தாலும், முதலில் நினைவுக்கு வருபவர்கள் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும், உயிரழிவுகள் மத்தியிலும் , உறுதியுடன் தம் மண்ணுக்காக மரணத்துள் வாழும் பாலஸ்தீனத்து மக்களே. 

நான் யசோதரை அலல (பக்கம் 52) என்னுமொரு கவிதை சித்தார்த்தன் நள்ளிரவில் கைவிட்டுச் சென்ற யசோதரையைப் பற்றி விபரிக்கையில்

'வரலாறு வழி நெடுகிலும்
பெண் துயரம்
அல்லது
சரித்திரம் மறைக்கப்படுகிறது'

என்று வரலாற்றில் பெண்களின் நிலை எவ்வாறிருக்கின்றது எனப்தைச் சுட்டிக்காட்டும்.  அதே சமயம் கவிதையில் வெளிப்படும் பெண்ணோ நவீனப்பெண். தன் அன்புக்குரியவன் அவளை ஒதுக்கிச் சென்றாலும்  அது பற்றிக் கேள்விகள்  அவள் கேட்கப்போவதில்லை. தன் வழியில் சுயமாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்ளளும் பக்குவம் மிக்கவள். அதற்கான துணிவு மிக்கவள்.

யசோதரையோ தன்னை நள்ளிரவில் கைவிட்டுச் சென்ற சித்தார்த்தனிடம் கேள்விகள் பல கேட்டிருப்பாள். இறுதியில் அவனைப்போல் அவனது வழியில் செல்லும் ஒரு பிக்குணியாகத் தன்னை மாற்றிக்கொள்கின்றாள். ஆனால் இந்நவீனப் பெண்ணோ யசோதரை அல்லள். தன் வாழ்க்கையை, தன் இருப்பைத்  தான் நினைத்தபடி அமைத்துக்கொள்ளும் வல்லமை பெற்றவள். 

ஒரு நாள் அலாரம்.. (பக்கம் 64) வேலை பார்க்கும் நவீனப் பெண்ணொருத்தியின் அன்றாட வாழ்வை எடுத்துக்காட்டுகின்றது. குடும்பத்தைக் கணவனுடன் சேர்ந்து உழைத்துத் தாங்கும் தூண்களில் ஒருத்தியான , வேலைக்குச் செல்லும் பெண்ணொருத்தி , வீட்டில் சமையல்காரியாக , பணிப்பெண்ணாகவும் செயற்பட வேண்டியிருக்கின்றது. இதனால் அவளுக்கு ஏற்படும் உடல் உழைப்பையும் , மன அழுத்தங்களையும் யார் அறிவார்?

"வீடு இரண்டுபட
விடிந்தது பொழுது!
விடிவுதாம் இல்லை
எனக்கு....
சமையலுக்குச் 
சான்றிதழ்  தந்தவர்கள்
சாப்பிட்டாயா
என்று ஒரு 
வார்த்தையும் கேட்கவில்லை....
மாலை 
மனை திரும்பினேன்.
வேதாளம் மீண்டும் 
முருங்கைமரம் ஏறியது.
சமையலறையிலிருந்து
சவமாய்ப் படுக்கையில்
விழுந்தேன்....
ஓடாய்
தேய்வதற்கும் - மாடாய்
உழைப்பதற்கும் - என்
கண்ணீரில் எத்தனை
காவியம் பிறந்திருக்கும்.."

இவ்விதம் வேலைக்குச் செல்லும் பெண்ணொருத்தி வேலைக்குச் செல்பவளாக, மனைவியாக, தாயாகச் செயற்படுகையில் ஏற்படும் நிலையினை, அதனால் எழும் மன அழுத்தங்களை இக்கவிதை எடுத்துக்காட்டுகின்றது.  

இன்னுமொரு பெண்ணோ வேலைக்குச் செல்பவள் அல்லள். படித்தவள் . திறமை மிக்கவள்.  ஆனால் அவையெல்லாம் பாவிக்கப்படாத நிலையில்  மனைவியாக, தாயாகக் குடும்பத்துக்காக மாடாக உழைப்பவள். இறுதியில் அவளுக்குக் கிடைக்கும் பெயரோ 'வீட்டிலே சும்மா இருப்பவள்'.  அதனை எடுத்துக் கூறும் கவிதைதான் 'வீட்டிலே சும்மா இருப்பவள்'. இவ்விதம் பல் வகை நவீனப்பெண்களின் நிலையை விபரிக்கும் கவிதைள் பல இத்தொகுப்பில் காணப்படுகின்றன. 

கவிதையில் ஆங்காங்கே படிமங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றார் கவிஞர்.  குறிப்பாக மொழிமனிதன், மழைத்தோழி, தத்துவப் பிணங்கள், மலட்டுக்காற்று, ஒளிக்கடல், விதியென்ற ஓவியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கனன்று எரியும் போர்கள், அவை ஏற்படுத்தும் அவலங்கள், சமுதாயத்தில் பல்வகைப் பெண்கள் எதிர்கொள்ளும் பாரபட்ச நிலை, அதனால் ஏற்படும் உடல் ரீதியிலான, மனரீதியிலான அழுத்தங்கள், பொருளாதாரச் சூழல் மானுடர் மேல் ஏற்படுத்தும் பாதிப்புகள், குறிப்பாக சீதனம், உடல் நிறம் பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் (திருமணம் என்னும் கவிதை இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு) , மானுட இருப்பு பற்றிய கேள்விகள், அவை ஏற்படுத்தும் சிந்தனைகள்  இவற்றைக் கருப்பொருட்களாகக் கொண்டு  உருவான கவிதைகள் இவை.  இவை கவிஞரின் அவர் வாழும் மானுடச் சமுதாய, பொருளியல் மற்றும் அரசியற் சுழல் பற்றிய அவதானிப்புகளையும்,  அவரது சமுதாயப் பிரக்ஞையையும், அவரது ஞானத்தின் விளைவாக எழுந்த இருப்புத் தேடல் மிக்க ஆளுமையினையும் வெளிப்படுத்தும் கவிதைகள். வாழ்த்துகள்.

No comments:

கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!

இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால...

பிரபலமான பதிவுகள்