Wednesday, October 15, 2025

தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'


* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana )உதவி; VNG


அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் நினைவில் நிற்கும் சிறுகதைகளில் ஒன்று தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'.  அவரது 'மாயக்குதிரை' தொகுப்பிலுள்ள  இறுதிச் சிறுகதை. இந்தக் கதை ஏன் என்னை மிகவும் கவர்ந்திருந்தது? அதற்கான காரணங்களைக்  கூறுவதற்கு முன் கதை பற்றிய சுருக்கம்.  

கதை இதுதான். கதை சொல்லி  'டொரோண்டோ', கனடாவில்  வாழும் தமிழ்ப்பெண்.  தாயைப்பார்ப்பதற்காக ஊருக்குச் செல்லும் பெண். ஃபிராங்க்பேட் அல்லது இலண்டன் வழியாகச் செல்வதற்கு டிக்கற் கிடைக்காததால் , சூரிச் வழியாகச் செல்லும் பயணி. சூரிச்சில்  டிரான்சிட்டில் எயார் லங்கா விமானத்துக்காகக் காத்து நிற்கின்றாள். அப்போதுதான் அங்குள்ள விமான நிலைய அதிகாரியொருவர் மொழிதெரியாத ஒரு மூதாட்டியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதைக்  காண்கின்றாள்.  அவ்வதிகாரி பல் மொழிகளில் அம்மூதாட்டியை அவளது கடவுச்சீட்டை, போர்டிங் பாஸைக்  கேட்டுக் கேள்விகள் கேட்டுக  களைத்துப் போயிருந்தார். அம்மூதாட்டியோ அவரது கேள்விகளுக்கெல்லாம்  'ஊருக்குப் போறன்' என்று பதிலிறுத்துக் கொண்டிருந்தார்.

கதை சொல்லியான கனடாப் பெண்ணுக்கு அம்மூதாட்டி தமிழ்ப்பெண் என்பது தெரியும். உதவியிருக்கலாம். ஆனால் உதவவில்லை. பிரயாணக்களைப்பு, உறக்கமின்மை, கவலை, பொறுப்பேற்றலின் மீதான பின்வாங்கல் போன்ற காரணங்களில் ஏதாவதொன்றுடன் அங்கு தமிழ்ச் சாயல் கொண்ட  இன்னுமோர் இளம் பெண் இருந்ததும் காரணமாகவிருக்கலாம்  கதை சொல்லியே தன் நிலைக்கான காரணத்தை இவ்விதம் சுய விமர்சனம் செய்கின்றாள்.ஆனால் அங்கிருந்த இளம் பெண் தமிழ்பெண் அல்லர். குஜராத்திப் பெண். ஆனால் அவளுக்கு இவள் தமிழ்ப்பெண்ணாக இருக்கலாம் என்ற எண்ணமிருந்தது. விளைவு?  நீங்கள் தமிழ் நாட்டவரா என்று கேட்டு இவளது மொழியைக் கண்டு பிடித்து விட்டாள். கதை சொல்லிப் பெண்ணுக்கோ வெட்கமாகப்போய் விட்டது. 'வெட்கம். மோசமான ஆள்தான் நான்' என்று தன்னையே மீண்டும் சுயவிமர்சனம் செய்து கொள்கின்றாள். 

பிறகென்ன? கனடாத் தமிழ்ப்பெண் அம்மூதாட்டியுடன் உரையாடலைத் தொடங்குகின்றாள். அதிலிருந்து அவளை அவளது மொன்ரியாலில் வசிக்கும் மகன் விமானமேற்றியிருக்கின்றான் என்பது தெரிய வருகிறது. 'நீங்கள் தனியாகவா வந்தனீங்கள்' என்று கேட்க , அம்மூதாட்டியோ 'ஓம், ஏத்தி அனுப்பினால் கொண்டு இறக்கிவிடுவான்கள் என்று மகனார் சொன்னவர்'  என்று பதிலிறுகின்றாள். மகனாரின் புத்திசாலித்தனத்தை மெச்சாமலிருக்க முடியவில்லை என்று தனக்குள் கதை சொல்லியான கனடாத் தமிழ்பெண் கூறிக்கொள்கின்றாள். அதே சமயம் அடிக்கடி தன் மகனை மகனார் என்று அம்மூதாட்டி அழைப்பது எரிச்சலையும் தருகின்றது. மகனார் டிக்கற் எடுக்கும்போது சக்கர நாற்காலியும் தேவை என்றிருந்தால் அம்மூதாட்டியைப் 'பொன்னைப்போல் கையேற்று பூவைப்போல் கொண்டுபோய் இறக்குயிருப்பார்கள்' என்று தனக்குள் நினைத்துக்கொள்கின்றாள்.

அம்மூதாட்டியுடனான உரையாடலிலிருந்து கனடாத் தமிழ்ப்பெண் மேலும் பல விபரங்களை அறிந்து கொள்கின்றாள். அம்மூதாட்டியின் பெயர் ராசலட்சுமி. மூன்று புத்திரர்கள். இளையவன் மட்டும் மொன்ரியாலில் மனைவியுடன் வசிக்கின்றான். மற்ற இருவரும் ஊரில் வசிக்கின்றார்கள். மூதாட்டி மொன்ரியாலில் 700 டொலர்கள் மாதாமாதம் சமூக உதவிப் பணம் பெறுபவர். அதை  அவளுடைய் கொடுமைக்கார  மருமகள் அவள் கண்ணில் காட்டியதேயில்லை.   மகனார்தான் பாவம் பார்த்து, இரகசியமாக தாயாருக்கு 200 டொலர்களைக் கொடுத்து விட்டிருகின்றார். 

அவளது பேரனுக்கு இப்போது ஒன்பது வயசாகிறது. அவனுக்கு 'ஒண்டரை'  வயதாகவிருக்கையில் கனடாவுக்கு வந்த மூதாட்டி இது வரை காலமும் 'பேபி சிட்டிங்' செய்திருக்கின்றாள். முதுமையால் அவளால் தொடர்ந்தும் செய்ய முடியவில்லை. ஊருக்குப் போகவேண்டுமென்று வற்புறுத்தி ,ஊருக்குச் செல்கின்றாள்.  ஆனால் பேரன் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றாள். மருமகள் ஒரு தடவை அடித்துமிருக்கின்றாள். ஆனால் அம்மூதாட்டியோ இன்னும் தன் மகன்மீதும், மருமகள் மீதும் பரிவுடனேதானிருக்கின்றாள். 'மருமேளும் நல்லவள்தான். ஆனால் அவைக்கு வருமானம் பத்தாது. கஷ்டம் '  என்று அநுதாபம் கொள்கின்றாள். 

இவ்விதமாக அம்மூதாட்டியின் ஓயாத  உரையாடல்  அவளுக்குச் சிறிது சலிப்பு தருகின்றது. அவளை விமானத்தில் அவளது இருக்கையில் அமர்த்திவிட்டு வருகையில், அம்மூதாட்டியோ அவளும் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றாள். ஆனால்  கனடாத் தமிழ்ப்பெண்ணோ அருகில் உள்ளது வேறொருவரின் இருக்கை என்பதைக் காரணம் காட்டித் தன்னிருக்கைக்குத் திரும்புகின்றாள். ஆனால் அடிக்கடி அவளிருக்கைக்கு வந்து கதைக்கும் அம்மூதாட்டியின் நிலை கண்டு , கனடாத் தமிழ்ப்பெண்ணுக்கு அருகில் இருந்த ஐரோப்பிய சாயல் கொண்ட கனவான் ஒருவன்  மிகுந்த பெருந்தன்மையாகத் தன்னிருக்கையை அம்மூதாட்டிக்கு விட்டுக்கொடுத்து , மூதாட்டியின் இருக்கையில் என்று சென்றமர்கின்றான். நீண்ட பயணத்தை  மூதாட்டியின் தொணதொணப்பில்லாமல் கழிக்கலாம் என்றிருந்த கனடாப் பெண்ணின் எண்ணத்திலும் மண் விழுந்தது.

இவ்விதமாக அம்மூதாட்டியுடன் பயணிக்கும் கனடாத் தமிழ்ப்பெண் அம்மூதாட்டியை இலங்கையில்  அங்கிருக்கும் அவளது ஏனைய  புத்திரர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கின்றாள். இதுதான் கதைச்சுருக்கம். ஆனால் இக்கதையின் ஏனைய முக்கிய அம்சங்கள் மூதாட்டியின் யாழ்ப்பாணத்து உளவியலின் வெளிப்பாடுகள். ஊரில் எவ்வடம் ? அதறகான பதிலைக்கூறியதும், எந்தப் பகுதி? எனத் தொடரும் விசாரிப்புகள்,  அவளுக்கு உதவி செய்யக் கனடாத்தமிழ்ப் பெண் முனைகையில்  மூதாட்டி வெளிப்படுத்தும் அவநம்பிக்கை,  எனச் சமூகத்தின் மீதான விமர்சனங்களை அங்கதச் சுவையுடன் கதையில் பாவித்திருக்கின்றார் தமிழ்நதி.

இக்கதையில் மானுட உளவியல், சமூகத்தின் மீதான விமர்சனம், புகலிடப் பொருளியல்ரீதியிலான தாக்கங்கள் உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள், இவற்றினூடு அடிநாதமாக இழையோடும் தாய்ப்பாசம், மானுடச் சுய விமர்சனம்  எனப் பல விடயங்களை ஒரு வித அங்கதச் சுவை மிகுந்த மொழியில் விபரித்திருக்கின்றார் தமிழ்நதி.

தமிழ்மொழியின் மொழியைப் பலரும் சிலாகித்துக் கூறுவர். அதன் உண்மையினை எடுத்துக்காட்டுமொரு சிறுகதைதான் 'மெத்தப் பெரிய உபகாரம்'.

இக்கதையினோரிடத்தில்  சூரிச் விமானநிலையத்தில் அம்மூதாட்டி 'இஞ்சை கள்ளர் கூடவாம்' என்பார். கனடாத் தமிழ்ப்பெண்ணுக்கோ அம்மூதாட்டி தன்னைத்தான் ஆழம் பார்க்கின்றாரோ என்றோர் எண்ணம் எழும்.  'ஆர் சொன்னது' என்று பதிலுக்குக் கேட்பார்.அதற்கு அம்மூதாட்டி 'என் மகனார் ' என்பார்.

அப்பொது கனடாத் தமிழ்ப்பெண்ணின் மனத்தில் அம்மூதாட்டியின் மகனார் பற்றியதொரு சித்திரம் விரியும். அதைத்தமிழ்நதி இவ்விதம் வர்ணிப்பார்: "முகந்தெரியாத அந்த மகனுக்கு  இப்போது முகங் கிடைத்துவிட்டது. உருண்டையான முகத்தில் , தந்திரமும்  சந்தேகமும் கலந்த  கண்களைக்கொண்ட மனிதன். தனது முட்டாள்தனத்தை  புத்திசாலித்தனமென்று நம்புகிற சுயபெருமிதம் மிக்கவன்'

இன்னுமோரிடத்தில் அம்மூதாட்டி கூறுவார் :" மூத்த மகனாருக்கு பதினாலு வயசு நடக்கேக்குள்ள என்ரை  மனுசன் குடியில குடல் வெந்து செத்துப் போச்சு. பதினைஞ்சு வயசு பச்சைப்பாலனை கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினன். அவன் போய் உழைச்சு, தான் வெளிநாடு போன கடனைக் கட்டினான். இடிஞ்சு கிடந்த வீட்டை நிமித்திக் கட்டினான். தம்பிமாரைப் படிப்பிச்சான்."

மூதாட்டியின் இக்கூற்று கனடாத்தமிழ்ப்பெண்ணின் மனத்திலும் மூதாட்டியின் மொன்ரியால் மகனாரை நிமிர வைக்கின்றது. அது பற்றிய தமிழ்நதியின் விபரிப்பு இப்படியிருக்கும்: "தந்திரமும் சந்தேகமும் கலந்த முகச்சித்திரம் கலைந்து, பொறுப்பும் அன்பும் கரிசனமும்  நிறைந்த முகம் உருப்பெற்றது.  உருண்டை முகம் ஒடுங்கி, முகவாயோரம்  கவலையின் கோடு விழுந்த நீள் முகமாயிற்று.   .. இந்த மனுசி தன் பேச்சின் மூலம் முகங்களை வரைந்து வரைந்து  அழிக்க வைக்கிறது  என நினைத்தேன்."

நான் மிகவும் இரசித்த கதையின் பகுதி இது.

எனக்கு ஏனோ இம்மூதாட்டியுடனான கனடா  இளம் பெண்ணின் பயணம் இன்னுமோர் மறக்க முடியாத பாத்திரத்தையும், பயணத்தையும்  நினைவு படுத்தியது. செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்' நாவலின் பிரதான பாத்திரமான  ஆச்சியே அப்பாத்திரம். ஆச்சியின் இரயில் பயணமே அப்பயணம். ஆச்சியின் இரயில் பயணம் பற்றிய  நினைவுகள் அழியாது நிலைத்து நிற்பவை.  ஓவியம் செள இருந்திருந்தால் மூதாட்டியின்  கனடாத் தமிழ்ப்பெண்னுடனான ஆகாய விமானப்பயணத்தை ஓவியங்களாக்கியிருப்பார். கூடவே சிரித்திரன் ஆசிரியரும் இருந்திருந்தால்  'ஆச்சியின் ஆகாய விமானப் பயணம்'  என்னுமொரு அங்கதச் சுவை மிக்க நாவலைத் தமிழ்நதியைக்கொண்டு எழுதவைத்துச் சிரித்திரனில் தொடராக வெளியிட்டிருப்பார்.

நல்லதொரு ,நினைவில் நிற்கும் கதையைத்தந்ததற்காக  கதாசிரியைக்கு 'மெத்தப் பெரிய உபகாரம்'.

ngiri2704@rogers.com

No comments:

தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'

* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana )உதவி; VNG அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் நினைவில் நிற்கும் சிறுகதைகளில் ஒன்று தமிழ...

பிரபலமான பதிவுகள்