Wednesday, October 22, 2025

கரூர் துயரும் , எழுத்தாளர் ஜெயமோகனின் 'சாமான்ய மக்களின் கும்பல்' மனநிலை பற்றிய கருத்தும் பற்றி..


அண்மையில் கரூரில் நடந்த ,  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல்  பிரச்சாரக்  கூட்டத்தில்  ஏற்பட்ட நெரிசலில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கிடையில் நிலவும் கும்பல மனநிலை என்று ஒரு புதிய தத்துவத்தை, ஹிட்லரின் பாசிதத்தை உதாரணமாகக் காட்டி, எடுத்துரைக்கின்றார் எழுத்தாளர் ஜெயமோகன்.  அதற்குரிய யு டியூப் காணொளி - https://www.youtube.com/watch?v=VjJ3mJiR4mg

ஜெயமோகன் சொற் சித்தர். சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். அவரது இவ்வுரையும் அத்தகையதுதான். தனக்கேரியுரிய சொற் சிலம்பமாடும் திறமையினை இங்கு அவர் பாவித்துச் சொற் சிலம்பம் ஆடுகின்றார். நடந்த மக்களின் அழிவுக்குக் காரணம் சாமான்ய மக்களின் கும்பல் மனநிலையே காரணமென்று கூறுவதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றார். அவர் இதனைத்  திட்டமிட்டுச் செய்யவில்லை.அவர் தன் சுய தர்க்கச் சிந்தனையின் மூலம் அவ்விதமானதொரு முடிவுக்கு வந்து, அதனடிப்படையில் நடந்த அழிவுக்குக் காரண்மாகப் புதியதொரு தத்துவத்தை அல்லது கோட்பாட்டை முன் வைக்கின்றார். அவ்வளவுதான்.உண்மையில் கரூர் தேர்தல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல்  ஏன் நடந்தது? இது போன்ற சம்பவங்களை அடிக்கடி கேட்கின்றோம். பார்க்கின்றோம்.  அண்மையில் கூட உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் திரண்ட பக்தர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் பலர் இறந்தார்கள்.  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலும் மகா கும்பமேளாவில் அவர் தோழி சசிகலாவுடன் தீர்த்தமாடியபோது நெரிசலில் சிக்கிப் பலர் இறந்தனர்.

இவ்விதமான கூட்ட நெரிசல்களில் சிக்கி மக்கள் மடிவதற்கு முக்கிய காரணம் கும்பல் மனநிலை அல்ல. 

கும்பல் மனநிலையை பாவித்து அரசியல்வாதிகள் தொடர்ச்சியான தம் உணர்ச்சிகரமான  உரைகளால், எழுத்துகளால்  தம் மக்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால் இது போன்ற நிகழ்வுகளில் , கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழப்பதற்குக் காரணம் மக்களின் கும்பல் மனநிலை அல்ல. அப்போது மக்கள் திட்டமிட்டு, நெரிசலை ஏற்படுத்தி ஏனையவர்களைக் கொலை செய்வதில்லை. கூட்ட நெரிசலால்  ஏற்படும் விபத்தொன்று ஏற்படுத்தும் சங்கிலித் தொடரான செயற்பாடுகளால் ஏற்படும் துயரகரமான விளைவே இத்தகைய அழிவுகள். இவ்விளைவுகளுக்குக் காரணம் மக்களின் கும்பல் மனநிலை அல்ல. 

பின் எதுதான் காரணம்?

இவ்விதமான பெருந்திரளில் மக்கள் கூட்டம் ஏற்படும் நிகழ்வுகளில் ,  அக்கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, திறமையாக , பாதுகாப்பாக , வெற்றிகரமாக நடத்துவதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மக்கள்  நுழைவதற்கு, வெளியேறுவதற்குரிய வழிகள் போதுமானவையாக இருகக் வேண்டும். மக்களைக் கட்டுப்படுத்தி, நெரிசலைத் தடுக்கும் வகையில் போதுமான அளவில் தன்னார்வலர்கள், காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புக் கடமைகளில்  சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். கழிப்பிட வசதிகள் போதிய அளவில் அமைக்கப் பட வேண்டும். 

 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மற்றும் , செயற்கை நுண்ணறிவு AI  போன்ற தொழில் நுட்பத்தின் மூலம் , கூட்டத்தின் நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, தேவையான சமயங்களில் அவசர சேவையினை உடனே அனுப்பி , பிரச்சனையைத்  தீர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இவ்விதமாக அதிகளவு கூட்டங்கள் கூடும் நிகழ்வுகளில் போதிய பாதுகாப்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட  வேண்டும். அவற்றைச் செய்ய வேண்டியவர்கள் - அந்நிகழ்வுகளை நடத்துபவர்கள்.  அவர்களால் தனித்து அவற்றைச்  செய்ய முடியாவிட்டால் , இவற்றுக்குப் பொறுப்பான அரசாங்கத்தின் அமைப்புகளின் உதவிகளைக் கோரிப் பெற வேண்டும். 

இவ்வகையில் கரூரில் நடந்தது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் கூட்டம். அக்கூடத்திற்கான  தார்மீகப்பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்துக்குரியது.  இப்பொறுப்பைத் தட்டிக் கழித்தால் அக்கழகம்  தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றது என்பது பொருள். இதற்கான பொறுப்பினை ஏற்று , ஏற்பட்ட துயர நிகழ்வுகளுக்காக வருந்தி, எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுப்பதற்குரிய் நடவடிக்கைகளை அக்கழகத்தினர் எடுப்பது  அவசியம். 

கரூர் மனித அழிவு நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்வில்  ஒரு களங்கமாகவே இருக்கும். ஏனென்றால் மக்கள் உயிரிழந்த நிலையில் அங்கு சென்று ஆதரவு காட்ட வேண்டிய நேரத்தில், தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் அங்கு செல்லாமல் சென்னைக்கு ஓடி விட்டார். இன்று வரை அவர் கரூர் செல்லவில்லை. இது அவரது அரசியல் தலைமைத்துவதற்கு ஏற்பட்ட களங்கமாகவே அவரது எதிர்கால அரசியல் பாதையில் இருக்கும். 

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இரசிகர்கள் முக்கியம். அதே நேரத்தில் ஏனைய கட்சி சாராத மக்கள், அக்கட்சிகள் பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் , படித்த இளைஞர்கள் இவர்களெல்லாம் முக்கியமானவர்கள். கரூர் நிகழ்வு விஜய்யின் இரசிகர்களின் மத்தியில் பெரிதாகத்தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இதுவரை விஜய்யின் பக்கம் சாய்ந்திருந்த, அல்லது சாயவிருக்கின்ற மேற்படி மக்கள் திரளினர் மத்தியில் நடிகர்  விஜய்யின் தலைமைத்துவம் பற்றிய கேள்வியினை, சந்தேகத்தினை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். ஏற்படுத்தும்.

இவ்வகையான சூழலில் வரும் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் சாத்தியம் அரிது. ஆனால் ஏனைய கட்சிகளுடனான தமிழக வெற்றிக்கழகக் கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் சாத்தியமுண்டு. நடிகர் விஜயகாந்துக்கு ஏற்பட்டது போன்ற நிலைக்கு, நடிகர் விஜய்யையும் தள்ளி விட்டுள்ளது கரூர்த் துயர நிகழ்வு. 

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]

No comments:

கரூர் துயரும் , எழுத்தாளர் ஜெயமோகனின் 'சாமான்ய மக்களின் கும்பல்' மனநிலை பற்றிய கருத்தும் பற்றி..

அண்மையில் கரூரில் நடந்த ,  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல்  பிரச்சாரக்  கூட்டத்தில்  ஏற்பட்ட நெரிசலில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்தார்கள். இத...

பிரபலமான பதிவுகள்