| எழுத்தாளர் மாலன் |
மாலன் நாராயணன்:
நீங்கள் கூறியுள்ளவற்றிற்கான பதில்கள் என்னுடைய பதிவிலேயே இருக்கிறது உதாரணமாக, இந்தி ஆட்சி மொழி என்பது திடீரென எடுக்கப்ப்ட்ட முடிவு அல்ல, அது சுதந்திர இந்தியாவின் அரசு அமைந்த போதே அரசமைப்பு அவையால் எடுக்கப்பட்டது, அந்த 15 ஆண்டு கெடு அப்போதே எடுக்கப்பட்ட முடிவு, 1958லிருந்து தமிழ் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது அது தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக நீடிப்பதில் 1965 ல் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை, 1965 போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்தது திமுக மாணவர் அணி . இவை பற்றி விரிவாகவே என் பதிவில் ஆதாரங்களோடு தகவல் கொடுத்திருக்கிறேன் அதையேதான் நீங்கள் உங்கள் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் அவற்றில் ஏதும் பிழை இருக்கிறதா? 2. நீங்கள் கீழ்க்கண்டவற்றை மறுக்கிறீர்களா? 1. 1965 போராட்டத்தின் கோரிக்கை தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்கு என்பதல்ல, ஆங்கிலத்தை அகற்றாதே என்பது 2. இந்தி ஆட்சி மொழி என்ற நிலையை 1965 போராட்டம் மாற்றியிருக்கிறதா? 3. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றிருந்தால் தமிழுக்கு பதில் மாணவர்கள் இந்தி படித்திருப்பார்கள் என்கிறீர்கள் சரி ஆங்கிலமும் ஆட்சிமொழி என்பதால் ஆங்கிலம் படிக்கவில்லையா? ஆங்கிலம் நம் தாய்மொழியா? அதுவும் அயல்மொழிதானே? இந்தி திணிப்பு கூடாது ஆனால் ஆங்கிலத் திணிப்பு சரியா? 3.திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது கூட தமிழை ஆட்சிமொழி ஆக்க முடியவில்லை ஏன்? கீழ்கண்ட இதனை விளக்குங்கள்: 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்? மற்ற மாநிலங்களில் நடந்த போராட்ட்ம் நடந்ததா என்பது பற்றி தனியாக எழுதுகிறேன் நீங்கள் ஒரு தரப்பான அரசியல் பிரசுரங்களை மட்டும் படிக்காமல் அரசமைப்புச் சட்ட விவாதங்களையும் படிப்பது நல்லது அங்கு எல்லா தரப்பினரும் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழை ஆட்சிமொழியாக்க கோரவில்லை உணர்ச்சி களை மட்டுப்படுத்திக் கொண்டு யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
வ.ந.கிரிதரன்
வணக்கம் மாலன், ' 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்?' என்று கேட்டிருக்கின்றீர்கள். இதற்கான பதிலாகப் பின்வரும் விக்கிபீடியாக் கட்டுரையின் பகுதிகளைத் தருகின்றேன்:
"1963ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர்.ஜவஹர்லால் நேரு ஆங்கிலச் சொல்லான may மற்றும் shall இச்சட்டத்தின் சூழலில் ஒன்றே என வாதிட்டார். விவாதத்தை முன்னெடுத்து நடத்திய மாநில அவை உறுப்பினரும் கட்சித்தலைவருமான அண்ணாதுரை, ஜவஹர்லால் நேரு சொல்வது போல் இருசொற்களின் பொருளும் ஒன்றே என ஒப்புக்கொண்டால் அரசிற்கு shall என்று மாற்றுவதில் என்ன தயக்கம் என வினவினார். அவர் ஆங்கிலம் காலவரையற்று தொடரவேண்டுமெனக் கோரினார். அப்போதுதான் அனைவருக்கும் கடினமோ எளிமையோ சமநிலைப்படுத்தப்படும் என்றும் வாதாடினார். ஆனால் திருத்தங்கள் எதுவும் இன்றி ஏப்ரல் 27, 1963 அன்று சட்டம் நிறைவேறியது. அண்ணாதுரை தாம் முன்னரே எச்சரித்தபடி, மாநிலம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் துவங்கினார். நவம்பர் 1963இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் அரசியலமைப்பின் XVII பகுதியை எரித்ததற்காக அண்ணாதுரை தமது 500 தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
...... மார்ச் 7, 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார்.[63] மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது..
இந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான சனவரி 26 நெருங்க நெருங்க தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.[34][64] அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்கத் தலைவர்கள் 18 பேர் இருந்தனர். அவர்களில் சிலர் கவிஞர் நா. காமராசன்,விருதுநகர் பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை முருகன் (சென்னை பச்சையப்பன் கல்லூரி சார்பில்), கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன், எல்.கணேசன், உலோ. செந்தமிழ்க்கோதை, சி. ப. வேந்தன் (கிண்டிப் பொறியியல் கல்லூரி சார்பில்) ஆகியோர் ஆவார்."
வ.ந.கிரிதரன்
1965 இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட தாக்கம் என்பதை விக்கிபீடியா பின்வருமாறு பட்டியலிடுகின்றது:
"1965 போராட்டத்தின் தாக்கம்உடனடி தாக்கம் தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்: ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பாட முழுமையான, கட்டற்ற சுதந்திரம் கொண்டிருக்கும்.
இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும்; அல்லது நம்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும். இந்தியல்லா மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தியல்லா மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது. மைய அரசின் அலுவல்கள் தொடர்பாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்."
மாலன் நாராயணன்
கிரி, நேற்று சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை சர்வதேச புத்தகச் சந்தை வளாகத்தில் நடந்து கொண்டிருக்கும் கருத்தரங்க உரைகளைக் கேட்கச் சென்றிருந்ததால் உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை. மன்னிக்க. முதலில் உங்களுக்கு நன்றி. 196ல் நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தமிழுக்காக அல்ல, ஆங்கிலத்தைக் காப்பாற்ற என்பதற்கான என் வாதத்திற்கு உங்கள் தரவுகள், பதிவுகள் மூலம் நீங்கள் அறிந்தோ அறியாமலோ வலுச் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு. 2. 1965 போராட்டமோ, அதன் பிந்தைய நாடாளுமன்ற விவாதங்களோ, நீங்களே குறிப்பிட்டிருப்பது போல may என்பதை shall என்று மாற்றிவிடவில்லை. மத்தியில் திமுக ஆட்சி புரிந்த போதும் கூட அது மாற்றப்படவில்லை. இப்போதும் சட்டத்தில் may தான் இருக்கிறது. இணையத்தில் போய் பார்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் சொல்லுங்கள் சட்டத்தின் screen shot அனுப்புகிறேன். 3. 1965 இந்திக் கிளர்ச்சியின் பின் விளைவு ஒன்று ஏற்பட்டது. அது இந்தியின் பரவலாக்கத்திற்கு வழி வகுத்தது. இந்தியை மட்டுப்படுத்தவில்லை. 1968ஆம் ஆண்டு, அதாவது திமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு The Official Languages Resolution of 1968, என்று பெயர், அந்தத் தீர்மானம் இப்படித் தொடங்குகிறது : //“WHEREAS under article 343 of the Constitution, Hindi shall be the official language of the Union, and under article 351 thereof it is the duty of the Union to promote the spread of the Hindi Language and to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India;
This House resolves that a more intensive and comprehensive programme shall be prepared and implemented by the Government of India for accelerating the spread and development of Hindi and its progressive use for the various official purposes of the Union and an annual assessment report giving details of the measures taken and the progress achieved shall be laid on the Table of both Houses of Parliament and sent to all State Governments;// இதன் தமிழாக்கம்:
இந்திய அரசியலமைப்பின் 343-ஆவது பிரிவின்படி, இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் எனவும், அதே அரசியலமைப்பின் 351-ஆவது பிரிவின்படி, இந்தியாவின் கூட்டுக் கலாச்சாரத்தின் அனைத்து அம்சங்களுக்கும் வெளிப்பாட்டு ஊடகமாக இந்தி மொழி பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாக அதன் பரவலையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பது ஒன்றிய அரசின் கடமையாகும் எனவும் இருப்பதால்;**
இந்தி மொழியின் பரவலையும் வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கும், ஒன்றியத்தின் பல்வேறு அலுவல் நோக்கங்களுக்காக அதை படிப்படியாகப் பயன்படுத்துவதற்கும் இந்திய அரசால் மிகத் தீவிரமானதும் விரிவானதுமான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்; மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விவரங்களைக் கொண்ட ஆண்டாண்டு மதிப்பீட்டு அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மேசையில் வைக்கப்பட வேண்டும்; அத்துடன் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். என இந்தச் சபை தீர்மானிக்கிறது // "மிகத் தீவிரமானதும், விரிவானதுமான" என்ற வார்த்தைகளை கவனியுங்கள்.
மாலன் நாராயணன்
இதன் அடிப்படையில்தான் மும்மொழிக் கல்வித் திட்டம் உருவானது. தமிழ்நாடு அதை ஏற்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் மத்திய அரசுப் பணிக்குப் போக எண்ணுகிறவர்கள் இந்தி பயின்றாக வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்மானம் சொல்வதும், யதார்த்தமும் கூட. 3. பக்தவத்சலம் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மும்மொழித் திட்டத்தில் இந்தி கட்டாயமில்லை. இது குறித்து தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற் விவாதக் குறிப்புகளை என் பதிவில் சில நாள்கள் முன் பதிந்திருக்கிறேன். அதை நீங்கள் பார்க்கலாம். சுருக்கமாக இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் பலன்கள்: 1. திமுகவிற்குக் கிடைத்த அரசியல் ஆதாயம். 2. ஆங்கிலம் முதன்மை பெற்று தமிழ் பின்னுக்குப் போனது. 3.இந்திப் பரவலாக்கம் தீவிரமடைந்தது.
வ.ந.கிரிதரன்
வணக்கம் மாலன், உங்கள் எதிர்வினைக்கு நன்றி. நான் நினைக்கின்றேன் நீங்கள் திராவிடக் கட்சிகளை எதிர்க்கும் மனநிலையிலிருந்து உங்கள் தர்க்கத்தை வைக்கின்றீர்களோ என்று. நீங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் விளைந்த நன்மைகள் என்ன என்பதைப் பின்வருமாறு கூறுகின்றீர்கள்:
1. திமுகவிற்குக் கிடைத்த அரசியல் ஆதாயம். 2. ஆங்கிலம் முதன்மை பெற்று தமிழ் பின்னுக்குப் போனது. 3.இந்திப் பரவலாக்கம் தீவிரமடைந்தது.
1. திமுகவிற்குக் கிடைத்த அரசியல் ஆதாயம்...
திமுகவுக்குக் கிடைத்த அரசியல் ஆதாயம் அதன் போராட்டத்தின் விளைவால் கிடைத்தது. உண்மைதான். ஆனால் அது அக்காலட்டத்தின் தேவையை உணர்ந்து இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாகத் திணிக்கப்படவிருந்த இந்திக்கெதிராக மக்கள் மத்தியில் எழுந்த நியாயமான உணர்வுகளை, எதிர்ப்புகளை வழி நடத்தி, ஆதரவாகப் போராடியதற்காக. அப்போராட்டத்தில் இளைஞர்கள் தம் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். முதியவர் ஒருவரும் அவ்விதம் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இராணுவம் அழைக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவற்றின் விளைவாகத்தான் இந்தியுடன் ஆங்கிலமும் இணைமொழியாக இருக்குமென்று அதுவும் முதலில் 15 ஆண்டுகளே இருக்குமென்று மத்திய அரசு இறங்கி வந்தது. அதன் பின்னரும் வெடித்த போராட்டங்களால்தான் மேலும் இறங்கி வந்து மாநிலங்கள் இந்தியை ஏற்கும்வரையில் ஆங்கிலம் இணைய மொழியாக இருக்கக்கூடும் (May) என்று சட்டத்தைக் கொண்டு வந்தது. நீங்கள் கூறியமாதிரி இன்னும் சட்டத்தில் இருக்கக்கூடும் என்றுதானுள்ளது. இருக்கும் (Shall) என்றில்லை.
மேலும் அறிஞர் அண்ணா, பெரியார் போன்றவர்கள் 1938ஆம் ஆண்டிலேயே , ஆங்கிலேயர் காலத்திலேயே, இந்தி எதிர்ப்புக்காகப் போராட்டிச் சிறை சென்றவர்கள். அன்றிலிருந்து அவர் இருந்தவரை இந்திகெதிராகப் போராடினார். அதனால்தான் தமிழகத்தில் மட்டுமல்ல, ஏனைய இந்தி பேசாத மாநிலங்களிலும் கூட இந்தி ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் தொடர்ந்து வருகின்றது. அண்ணா போன்ற தலைவர்களின் மொழிப்போராட்டம் , பகுத்தறிவு,ம் சுயமரியாதை, சமத்துவம் , பெண் விடுதலை , சமூக நீதி போன்றவற்றுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகத்தான் மக்கள் மத்தியில் , குறிப்பாகத் திமுகவுக்கு ஆதரவு பெருகியது. இவற்றையெல்லாம் நீங்கள் இலகுவாகக் கடந்து சென்று விட்டீர்கள்.
தனிப்பட்ட என் அனுபவத்தின்படி .. இலங்கைத் தமிழர் அரசியலில் திமுகவினரின் பங்களிப்பு முக்கியமானது,. சுதந்திரன் பத்திரிகையின் பிரதிகள் நூலகம் தளத்தில் உள்ளன. ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகளில் வெளியான பத்திரிகைப்பிரதிகளை எடுத்துப் பாருங்கள். திமுக தலைவர்கள் பலரின் எழுத்துகள் தொடர்ச்சியாக வெளிவந்திருப்பதைக் காணலாம். என்னைப்பொறுத்தவரையில் தனிப்பட்டரீதியில் திமுகவினரின் நூல்கள் குறிப்பாகப் பகுத்தறிவு, மூட நம்பிக்கைகள், புராணங்களில் காணப்பட்ட பாகுபாடுகள் இவற்றைப் பற்றியவை அவ்வயதில் விழிப்புணர்வைத் தந்தன. பல நூலகங்கள் அண்ணா அறிவகம் போன்ற பெயர்களில் இளைஞர்களால் திறக்கப்பட்டன. அக்காலகட்டத்து இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வுக்குத் திமுகவினரின் எழுத்துகள், திரைப்படங்கள் , மேடைப் பேச்சுகள் முக்கியமானவை. என்னைப்பொறுத்தவரையில் மார்க்சியத்துக்கான புரிதலுக்கு முன்னர் திமுகவின் கருத்துகள், நூல்கள் இடைப்பட்ட காலகட்டத்தில் சமூகப்புரிதலுக்கான சிந்தனைகளுக்கு வலுவான அடித்தளமிட்டன. அவ்வகையில் மிகவும் முக்கியத்தும் மிக்கவை.
2. 'ஆங்கிலம் முதன்மை பெற்று தமிழ் பின்னுக்குப் போனது' என்று கூறுகின்றீர்கள். இதுவும் தவறானபார்வையாக எனக்குத் தென்படுகின்றது. இந்தியாவில் இந்தி ஆட்சி மொழி என்று வந்த நிலையில், இணைப்பு மொழியாக இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகள் எவையும் இருக்கும் சாத்தியமில்லை. இந்நிலையில் பிரித்தானியக் காலனியாதிக்கம் காரணமாக , இந்தியா முழுவதும் அனைவராலும் பேசும் மொழியாக இருந்த ஆங்கிலமே சரியான இணைப்பு மொழியாக இருக்கும் நிலையில் இருந்தது. அறிஞர் அண்ணா இது பற்றி உரையாடிய காணொளியொன்று இணையத்தில் உலாவி வருகின்றது. சந்தர்ப்பமிருந்தால் பாருங்கள். உண்மையில் மும்மொழித்திட்டத்தை ஏற்காமல் அறிஞர் அண்ணாவின் அரசு இரு மொழித்திட்டத்தைக் கொண்டு வந்ததால், தமிழகத்தில் இந்தி பின்னுக்குப் போனது. தவிர்க்க முடியாமல் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிக்க முடியாத சூழல் இருந்தது, தமிழ் இன்னுமோர் ஆட்சி மொழியாகத் தமிழகத்தில் இருக்கின்ற்து. தமிழ் தாழ்ந்து போகவில்லை. இன்னுமோர் இணைப்பு மொழியாக இருப்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஏனைய இந்தி பேசாத மாநிலங்களுக்கும் பொதுவானதொன்று.
மேலும் நீங்கள் ஆங்கிலத்தில் படித்திருப்பீர்கள். ஆனால் தமிழை மறந்து விட்டீர்களா? இல்லையே ,. ஆங்கிலத்தால் தமிழ் தாழ்ந்து போய் விடவில்லை. இணைப்பு மொழியாக இருக்கும் சந்தர்ப்பம் அதற்கே இந்தியாவிலுண்டு. உண்மையில் அதனால் விளைந்த் முக்கிய பயன்களிலொன்று பிறநாடுகளுடன் இணைந்து இந்தியா முன்னேற ஆங்கிலம் இணைமொழியாக இருப்பது முக்கிய காரணங்களில் ஒன்று.
3. மேலும் '.இந்திப் பரவலாக்கம் தீவிரமடைந்தது.' என்று கூறியிருக்கின்றீர்கள். நான் பார்க்கிறேன் திமுகவினரின் தொடர்ச்சியான இந்தி எதிர்ப்புப் போராடங்களால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என்றிருக்கும் நிலை தடுக்கப்பட்டுள்ளது. பல போராட்டங்களின் பின்பே ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்கலாம் (இருக்கும் அல்ல) என்னும் நிலை ஏற்பட்டது. இன்று வரை இந்திய மத்திய அரசின் நிலை இந்தியை மாநில அரசுகள் ஏற்கும் வரையில் மட்டுமே ஆங்கில மொழி இணைப்பு மொழியாக இருக்கக் கூடும் என்பதுதான். இது இந்தி மொழிக்குத் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பின்னடைவுதான். மேலும் தமிழக அரசின் இருமொழிக்கொள்கையிலும் இந்தி மொழி தவிர்க்கப்பட்டது இந்திக்குப் பின்னடைவுதான். இவையெல்லாம் திமுகவினரின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவால்தான்.
No comments:
Post a Comment