Monday, January 19, 2026

பாதுகாக்கப்பட வேண்டிய மந்திரிமனை! இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை! பாதுகாப்போம்! வரலாற்றைப் பேணுவோம்!


ஏற்கனவே  போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திர்மனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்குள்ளாகியுள்ளதாகியுள்ளது. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

கட்டடங்கள் பல காரணங்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஒரு குறிப்பிட்ட காலக் கட்டடம் என்னும் வகையில், கட்டடக்கலைப் பாணிகளை வெளிப்படுத்துகின்றன என்னும் வகையில், வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்னும் வகையில்,  இனமொன்றி ன் வரலாற்று அடையாளம் என்னும் வகையில் கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவ்வகையில் இக்காரணங்கள் அனைத்தும் மந்திரிமனைக்குப் பொருந்தும். 
இக்கட்டடத்தின் கட்டடக்கலை அம்சங்கள் திராவிட , ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கியது. பாவிக்கப்பட்ட  கட்டட மூலப்பொருட்கள். கட்டடக்கலை அம்சங்கள், கட்டப்பெற்ற காலகட்டம் எல்லாம் இக்கட்டடம் வரலாற்றுச் சின்னங்களிலொன்றாகக் கருதப்பட்டு பேணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.   இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரம் தெரியவரும். 

இக்கட்டடத்துக்குரிய சுருங்கை வழியொன்று இருந்ததாகவும், அது தற்போது அடைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அது பற்றிய மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.


இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் 'சங்கிலித்தோப்பு', இதனை நான் இப்பகுதிக்குரிய நிலஅளவைத்திணக்கள வரைபடங்களை அவதானித்தபொழுது அவதானித்துள்ளேன். தற்போது  இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் சங்கிலித்தோப்பு என்றிருப்பதும், இங்குள்ள கட்டடம் மந்திரிமனை என்றிருப்பதும் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.  இப்பகுதிக்கண்மையில் பண்டாரக்குளம், சங்கிலியன் வீதி, அரசகேசரி வளவு போன்ற பல அரச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதால் இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியானது தமிழரசர் காலத்தில் பின்வரும் வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகின்றது.

முத்திரைச் சந்தையின்  வடகிழக்குப் பகுதியில் தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதால், வடமேற்குப்பகுதியான மந்திரிமனை அமைந்துள்ள பகுதியை உள்ளடக்கிய பிரதேசத்திலேயே அரச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதிக அளவில் இருந்திருக்க வேண்டும். இக்கட்டடம் அமைந்துள்ள பகுதிக் காணியின் பெயர் சங்கிலித்தோப்பு என்று அழைக்கப்படுவதால் அங்கு தமிழரசர் காலத்தில் அரசருக்குரிய தோப்பு (நந்தவனம்)  இருந்திருக்கக் கூடும். தமிழரசர் காலத்தின் பின்னர் விதேசிகளின் ஆட்சிக்காலத்தில் , அந்நியர் கீழ் அரசர்கள் அடங்கி ஆட்சி புரிந்த காலகட்டத்தில் மந்திரியொருவரின் மனையிருந்திருக்கக் கூடும். பின்னர் அப்பகுதியை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தனிப்பட்ட ஒருவரால் வாங்கப்பட்டிருக்கக்கூடும். இவையெல்லாம் நியாயமான, தர்க்கபூர்வமான ஊகங்கள். எனவே இக்கட்டடமானது மேலும் பல ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கிறது. அதே சமயம் பேணப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்களிலொன்று.

ஒரு காலத்தில் வரலாற்றை அது அழைக்கப்படும் பெயரால், அதன் கட்டடக்கலைப் பாணியால், அது இருக்கும் இடத்தால் நினைவுறுத்தும் நல்லூர் மந்திரிமனை தமிழர் வரலாற்றின் ஓர் அடையாளம். அது பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.  தொல்லியல் திணைக்களம், யாழ் மாநகரசபை இவ்விடயத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் , இக்கட்டடத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்., காணிக்குரிய தனியார் உரிமைப்பிரச்னைகள் சட்டரீதியாகத்  தீர்க்கப்படுவதும், அவர்கள்தம் உரிமை நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய நட்டஈடு வழங்கப்பட்டு, இக்காணியைத்   தொல்லியல் திணைக்களம் அல்லது யாழ் மாநகரசபை பொறுப்பேற்க வேண்டும். 

பாதுகாக்கபப்ட வேண்டிய பல கட்டடங்களை, காணிகளை நாம் இழந்திருக்கின்றோம். யாழ் பழைய சந்தையின் கங்கா சத்திரம் அவற்றிலொன்று. கோப்பாய்க் கோட்டை இருந்ததாகக் கருதப்படும் பழைய கோட்டைப் பகுதி. இவ்வரிசையில் மந்திரிமனையும் இடம் பெறாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

**************************************************************************************
*************************************************************************************** 

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட  பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.] 

No comments:

வ.ந.கிரிதரனின் முகநூல் உரைகள்! (1)

கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்...