Monday, November 24, 2025

'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி...


எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. 
 
இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா? ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம் ஏற்படவில்லை. அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு:
 
"படுபட்சி நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஓர் அசலான கதை, ஆனால் அந்த அசலான கதைக்குச் சொந்தமான டிலுக்‌ஸனுக்கு இருக்கக்கூடிய ஒரு மொழியில் சொல்லப்படாததே என் முக்கிய விமர்சனமாக இருந்தது. .. இத்தகைய குழப்பங்களிடயேயும், அவர் ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னரேதான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும், டிலுக்‌ஷனின் இந்த அனுபவத்தை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழனாக இருந்ததால் விமானிக்குப் படிக்க இலங்கையில் மறுக்கப்பட்டதும், பின்னர் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியங் படிக்கும்போது தனியொரு தமிழனாக இருந்ததால் இனவாதத்தால் அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களே....தமிழர் என்ற அடையாளத்தால் வந்த இந்த இன ஒதுக்கல், யுத்தத்தின் பின் ஒரு தமிழருக்கு நடந்திருக்கின்றது என்பதுதான் நாம் கவனப்படுத்த வேண்டியது. ஆக தமிழர்க்கு இலங்கையில் யுத்தம் முடிந்தபின் கூட அவர்களுக்குப் பிடித்த ஒரு துறையில் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கவில்லை, அதன் நிமித்தம் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர் என்பது நமக்கு டிலுக்ஸனின் வாழ்க்கை சொல்லும் ஒரு முக்கிய சாட்சியமாகும்...யுத்தம் முடிந்த பின்னர் இவையெல்லாம் டிலுக்ஸனுக்கு நிகழ்ந்தாலும், அதன் நிமித்தம் அவர் கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்தக் காரணங்களால் டிலுக்‌ஸனின் கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்ற பக்கத்திலே நான் உறுதியாக நிற்கின்றேன் என்பதையும் இன்னொருமுறை (என் படுபட்சி குறித்த முதல் வாசிப்பை சரியாக விளங்காதுஅலட்டும் அரைகுறை 'அறிவுஜீவி'களுக்கு) சொல்லிவிடுகின்றேன். .. ஆகவே டிலுக்ஸன் என்கின்ற தனிமனிதன் தாண்டி வந்த, அவரது சொந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு முக்கியமானது. அந்தக் கதை சொல்லப்படவேண்டியது என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை அவர் எந்த வடிவத்தில் சொன்னாலும் என் தார்மீக ஆதரவு அவருக்கு எப்போதுமுண்டு."
 
கதாசிரியரின் நாவலின் நம்பகத்தன்மையை எல்லாம் சுட்டிக்காட்டும் இளங்கோவுக்கு ஏன் நாவலே கட்டமைக்கப்பட்ட கற்பனை என்ற எண்ணம் தோன்றவில்லை? மிகவும் நியாயமாக உருவாகியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் இக்கேள்வி அவரிடத்தில் எழவில்லை. நூலைச் சரியாக விமர்சனரீதியில் அணுகியிருக்கும் இளங்கோவுக்கு ஏன் இச்சந்தேகம் எழவில்லையென்பது ஆச்சரியமானதுதான். 
 
கதாசிரியர் தனக்கு இழைக்கப்பட்டதாகக்குறிப்பிட்ட எந்தவொரு சம்பவம் பற்றியும் நான் ஊடகச் செய்திகள் எவற்றிம் வாசித்ததாக நினைவில்லை. அப்படி வந்திருந்தால் அறியத்தாருங்கள். என் கருத்தை மாற்றிக்கொள்கின்றேன். 
 
உண்மையில் இக்கதையே தமிழ் மக்களின் துயரைப் பாவித்து , தமிழகத்து இலக்கிய வியாபாரிகளின் நலன்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட விற்பனைப் பண்டமென்றால் அது மிகவும் பாரதூரமானது. கண்டிக்கப்பட வேண்டியது. தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றில் பொய்யைப் புகுத்துமொரு செயலாகவே அது கருதப்படும். அது உண்மையான துயர்மிகு வரலாற்றின் நேர்மையைக் களங்கப்படுத்துமொரு செயலாகவே அமையும். 
 
இளங்கோவின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்கள் எழுப்பியிருக்கும் முக்கிய கேள்விகள் -உண்மையில் இந்நூலில் குறிப்பிட்ட , நூலாசிரியருக்கு இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவையா? அவர் அவற்றுக்காக ஒருபோதும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லையா? அப்படி எடுத்திருந்தால் அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டா? இவற்றுக்கான பதில்கள் தெரியாமல் இந்நூலைச் சரியாக அணுக முடியாது.
 

இனிமேல் இளங்கோவின் நூல் பற்றிய முக்கிய் விமர்சனக் குறிப்புகளை வாசியுங்கள். அவை வருமாறு:
 
1. இந்நூலில் கதைசொல்லி யுத்தம் நடக்கும் காலத்தில் இந்த விமானத்தைச் செய்து பிடிபட்டு இலங்கை இராணுவத்தின் முகாமில் இருந்து, புலிகள் அதைத் தாக்கும்போது அவர்களோடு தப்பி வருவதாக முடிக்கப்படுகின்றது.
 
"காயப்பட்ட போராளிகளுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு படகு படுவான்கரையை நோக்கி இருளில் நகர்ந்தது. எழுவான்கரையைப் பார்த்தேன். மயிலாம்பாவெளி இராணுவ முகாம் தீப்பற்றி எரியும் வெளிச்சத்தில் அது ஒளிர்கிறது" ( 'படுபட்சி', ப 143).
 
நிஜவாழ்வில் டிலுக்ஸன் யுத்தம் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே இப்படி விமானம் செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார் என்பதே 'தெளிந்த' உண்மையாகும்.
 
2. டிலுக்‌ஸன் கனடாவில் கொடுத்த ஒரு நேர்காணலில், 'நான் எனது விமானம் செய்யும் திட்டத்தை, இராணுவம் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடிய மேமாதத்தில் காட்சிப்படுத்தவே கேட்டேன். அதன் பிறகுதான் என்னை கைதுசெய்தார்கள், சித்திரவதை செய்தார்கள்' [2]. <<இந்த நேர்காணல் காணொளியை முழுதாகப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து 9.00 ஆவது நிமிடத்தில் இருந்தாவது பார்க்கவும்.
 
இந்த நூலில் வாசகரை மிக ஏமாற்றிய பகுதியாக இதைச் சொல்லலாம். நான் நூலை வாசிக்கும்போதோ, அது பற்றிய என் முதல் வாசிப்பை எழுதியபோதோ இந்த முக்கிய விடயத்தைக் கவனிக்கவில்லை.
 
அது என்னவெனில்.. டிலுக்‌ஸன் விமானம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டது போர் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே ஆகும். ஆனால் இந்த நூல் முழுவதுமே யுத்தம் நடைபெறும்போது சமாந்திரமாக கதைசொல்லி விமானப் பொறியியல் படிப்பதாகவும், விமானம் செய்வதாகவும், அதன் நிமித்தம் கைது செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. 
 
உதாரணத்துக்கு ஒருவர் 2009 யுத்தம் முடிந்தபின் கனடாவில் இருந்து இலங்கை போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை ஏதோ ஒரு காரணத்தால் இலங்கையில் கைதுசெய்கின்றார்கள். அவர் அந்த நிகழ்வை யுத்தம் நடைபெறுகின்றபோது என்னைக் கைதுசெய்தார்கள் என்று யுத்தத்தின் பின்னணியில் ஒரு கதையை ஆட்டோபிக்‌ஷனில் எழுதிவிட்டு இது எனக்கு நடந்த சம்பவம் என்று claim செய்தால் எவ்வளவு மோசமாக இருக்கும்.
 
அந்த மிகப்பெரும் தவறை, டிலுக்ஸன் 2010 இற்கு விமானம் தயாரிக்கப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டதை, யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது (நூலில் 2007 இல் எனச் சொல்லி), இப்படியெல்லாம் நடைபெறுவதாக எழுதுவது எத்தகைய அறம் என நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம்.
3. இது ஒரு ஆட்டோபிக்‌ஷன், புனைவும் கலந்திருக்கலாந்தானே. ஏன் இந்தக் கால வழுவை கேள்விக்குட்படுத்துகின்றாய் என ஒருவர் கேட்கலாம். அது நாவலாக இருப்பின் நாம் எளிதில் கடந்துபோகலாம்.
 
ஆனால் நாவல் முன்னட்டையில் விளம்பரப்படுத்துவது மட்டுமில்லை, டிலுக்‌ஸன் தனது ஒவ்வொரு நேர்காணல்/ மேடைப்பேச்சுகளிலும் இது தனது சொந்தக்கதை என்று claim செய்தபடியே இருக்கின்றார். அப்படி அவர் தனது சொந்தக்கதை என்று உரிமைகோருவதாலே நாம் இந்த காலவழுவை முன்வைத்து குறுக்கிட வேண்டியவராகின்றோம்.
 
4. மேலும் இது தொடர்பாக தேடியபோது, டிலுக்‌ஷனின் LinkedIn Profile கையில் அகப்பட்டது. Facebook Profileஇல் பொய் கூறலாம். ஆனால் LinkedIn Profile யில் கற்பனையைக் கலக்கமுடியாது. அது பிறகு உங்கள் வேலைக்கும், தனிமனித வாழ்க்கைக்கும் மேற்குலகில் 'ஆப்பு' வைத்துவிடும். அதில் டிலுக்‌ஷன் இலங்கையில் "Skyline aviation Sri lanka இல், Jan 2011- Jan 2014 இல் Associate's Degree - AirFrame Mechanics & Aircraft Maitenance Technology/Tehcnician செய்திருக்கின்றார் எனச் சொல்லியிருகின்றார் [3]. 
 
அப்படியெனில் தன்னை இராணுவம் பிடித்துவிட்டு சித்திரவதை செய்தது, அதன் பிறகு இலங்கையில் எதையும் தொடர்ந்து படிக்கவில்லை, தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்று கோருவது எப்படி முறையாகும். எனில் இந்த டிகிரி அசலானதா அல்லது போலியானதா? அசலாகவே இருக்கவே சாத்தியம். அப்படியெனில் 2011-2014 வரை டிலுக்ஸன் இலங்கையில்தானே இருந்திருக்க வேண்டும்?
 
திருப்பவும் ஞாபகமூட்டுவது ஒன்றேயொன்றுதான் இதை நாவல் என்று எழுதிவிட்டு போயிருந்தால் பரவாயில்லை. சரி ஆட்டோபிக்‌ஷன் என்றும் தலைப்பிட்டுவிட்டு ஒரு 'கொரில்லா' எழுதியது போல எழுதிவிட்டு அவரும் தப்பிப் போயிருந்திருக்கலாம். ஆனால் 'படுபட்சி'யை தொடர்ச்சியாக தனது சொந்தக்கதை என்று claim டிலுக்ஸன் செய்யும்போது மட்டுமே இப்படி ஆழ அலசி இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது.
 
5. டிலுக்‌ஷன் தனது கதையைத் திரைப்படமாக்க வேண்டுமென ஒரு (முன்னாள்) போராளியிடம் சொன்னபோது, அவர் இந்தக்கதையை வன்னியிலோ அல்லது வடமாகாணத்திலோ நடப்பது மாதிரி மாற்றி எழுதினால் அதிகப் பேர் தயாரிப்பாளராக வருவார்கள் என்றும், தான் அதை மறுத்து என் சொந்தக்கதையை என் சொந்த ஊரில் நடப்பதாக மட்டுமே எடுப்பேன் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பார். உண்மையில் அவர் இதை கன்டாப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னபோது, இதுதான் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய நிமிர்வு என நினைத்தேன். அவரின் அந்த உரைக்கு மனம் விரும்பி கையும் தட்டியிருந்தேன். 
 
ஆனால் இப்போது டிலுக்‌ஷனின் விமானத் தயாரிப்பும், கைது செய்யப்படுதலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து புலிகளும் அழிக்கபட்ட பின்னரே நிகழ்ந்தது என்று அறியும்போது, புலிகளின் காலத்தில் நடந்ததாய்க் நூலில் காலம் மாற்றித் திருகுதாளம் செய்யும்போது, அந்தப் போராளி கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது என்று கேட்கவே இப்போது தோன்றுகின்றது. 
 
அவரின் நூலில், நிஜத்தில் உயிரோடு இருக்கும் தகப்பன் தாய் தங்கை எல்லோரையும் இறந்தவர்களாகக் காட்டி, இன்னும் எத்தனையோ விடயங்களை மாற்றிக்காட்டும்போது, கிழக்கின் செங்கலடிக்குப் பதிலாக வடக்கின் ஆனந்தபுரத்தை காட்ட ஏன் தயக்கம் என்று ஒருவர் கேட்டால் டிலுக்‌ஸனிடம் என்ன பதில் இருக்கும்?
 
 [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
 

No comments:

புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.

பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?': நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா ...

பிரபலமான பதிவுகள்