Saturday, November 8, 2025

பெண்களுக்கான உரிமைக்குரல் நடிகை கெளரி கிஷனின் எதிர்ப்புக் குரல்!


 

[டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்பம் (chatGPT) உதவி; VNG]

நடிகை கெளரி கிஷன் மிகவும் கடுமையாக ஆர்.எஸ்.கார்த்தி என்னும் யு டியூப் ஊடகவியலாளரைச் சாடும் காணொளி இது. யு டியூப் ஊடகவியலாளர் கெளரி கிஷனுடன் நடித்த நடிகரிடம் கெளரி கிஷனின் எடை எவ்வளவு என்று கேட்டிருக்கின்றார்.அது தான் கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அது Body Shaming என்று குற்றஞ் சாட்டியிருக்கின்றார் அவர். அவரது ஆத்திரம் நியாயமானது. அனைவரும் அவருக்காதரவாகக் குரல் கொடுப்பது அவசியம்.

இவ்வளவு நடந்த பிறகு  யு டியூப்காரர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் தன் கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியிருக்கின்றார்.  இந்தக் கூற்று ஒன்றே போதும் அவர் இன்னும்  தன் குற்றத்தை உணரவில்லையென்பதற்கு. எல்லோரும் எதிர்ப்பதால் , பயந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார். இவர் தன் குற்றத்தை, தவறினை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்விதத் தவறுகளற்றுத் தனது வேலையைச் செய்வது அவசியம். அதற்கு அவர் இச்சம்பவத்திலிருந்து இத்துறையில் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இவரைப்போன்ற தவறான ஊடகவியலாளர்கள் மலிந்து விட்டதற்குக் காரணமென்ன?  இணையத்தொழில் நுட்பம், குறிப்பாகச் சமூக ஊடகத்துறையின் வருகை ஆக்கபூர்வமானது என்றாலும் , கூடவே தீய சக்திகளின் கைகளில் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கும் நிலையினையும் உருவாக்கியுள்ளது. நவீனத்  தொழில் நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்றுதான் இவரைப்போன்ற ஊடகவியலாளர்களின் வருகையும்.  

எவ்வித  ஊடகத்துறை அனுபவங்களுமற்று, அத்துறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவற்று,  சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்விதமான ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் வகையில் இணையத்  தொழில் நுட்ப விதிகள்  மாற்றப்பட வேண்டும், அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

நடிகை கெளரி கிஷனின் முதலாவது குற்றச்சாட்டு  ஏன் நடிகைகளிடம் அவர்கள் எடையைக் கேட்கின்றீர்கள்? ஏன் நடிகர்களிடம் கேட்பதில்லை.  சரியான கேள்வி. நியாயமான குற்றச்சாட்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறைகளில் முதலிடத்தில் இருப்பது திரைப்படத்துறைதான். பெண்களைப் போகப்பொருளாகக் கருதும், பாலியல் சுரண்டல் மலிந்த துறை.  இத்துறையில் அவ்வப்போது கெளரி கிஷன் போன்ற பெண்கள் தம் ஆளுமை, சுய கெளரவம் பாதிக்கப்படுகையில் துணிந்து குரல் எழுப்புகின்றார்கள். இக்குரல்கள் வரவேற்புக்குரியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை.

கெளரி கிஷனின் அடுத்த குற்றச்சாட்டு - எதற்காக ஆண் நடிகரிடம் இக்கேள்வியைக் கேட்க வேண்டும். இதுவும் மிகவும் சரியான குற்றச்சாட்டே. இவ்விதம் சக நடிகையின் எடை பற்றி அவருடன் நடித்த சக நடிகரிடம் கேட்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. அந்நடிகையை அவமானப்படுத்துவதும் போலத்தான். 

புதுமுக நடிகயாக இருந்தாலும், எவ்வித எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கெளரி கிஷன் குரல் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவரைப் பாராட்டுவோம். அவர் இவ்விதம் உரிமைக் குரலெழுப்பியிருப்பது அவருக்காக மட்டுமல்ல, இத்துறையிலுள்ள பெண்கள் அனைவருக்காகவும்தான்.

கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பிய சம்பவத்தை விபரிக்கும்  காணொளி இதுதான் - https://www.youtube.com/watch?v=cVF7ALfCbKs




No comments:

வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'

"சாவித்திரியின் பெரிய விருப்பம் " என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழ...

பிரபலமான பதிவுகள்