| அமில்கார் கப்ரால் ( Amilcar Cabral) |
நேற்று 'நந்தலாலா' ஜோதிகுமார் அலைபேசியில் அழைத்து அண்மையில் எழுதிய எம்போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அமைப்புகள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப்போனமை முக்கிய காரணங்களிலொன்று. அது பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்றார். இது பற்றி எம்மவர் யாரும் இதுவரையில் போதிய கவனம் செலுத்தவில்லையென்றார். அது மிகவும் முக்கியமான கூற்று. நம் மத்தியில் யாராவது இவ்விடயம் பற்றி, அதாவது போராட்டத்தில் மக்களின் அந்நியப்படுத்தல் பற்றி, அல்லது மக்களிடமிருந்து அமைப்புகளின் அந்நியப்படுத்தல் பற்றி அதிகமாக எழுதியதாக அல்லது கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
மக்களுக்காகவே எமது போராட்டம் என்று சூளுரைத்து ஆயுதம் தூக்கிய அமைப்புகள் அனைத்துமே , பின்னர் அவற்றின் செயற்பாடுகள் காரணமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயின. மக்களைப் போராட்டத்த்திலிருந்து அந்நியப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டன. ஏன்?அதிகாரம் மையப்படுத்தப்படுவது முக்கிய காரணங்களிலொன்று. ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அமைப்புகள், காலப்போக்கில் வளர்ச்சியடையும் போது , அவற்றின் அதிகாரம் அமைப்பின் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்து கிடக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரின் கைகளிலேயே தங்கும் நிலை ஏற்படுகின்றது. இதன் விளைவாக மக்களின் அபிலாசைகள் கட்சியின் நலன்களுக்காகப் புறக்கணிக்கப்படுகின்றன. மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்பட வேண்டிய போராளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளாக மாறி விடுகின்றனர். இது அமைப்புகளின் ஆரம்ப நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் நிலை. இவ்வாறு அமைப்புகளின் அதிகார வேட்கை காரணமாக மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகும் நிலை உருவாகின்றது.
இன்னுமொரு முக்கிய காரணம் - அமைப்புகள் தம் பாதுகாப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் ஒருவரையொருவர் சந்தேகிக்கும் நிலையினை ஏற்படுத்தி விடுகின்றது. எதிரிகளின் ,அரச உளவுத்துறையின் உளவாளிகம் தம் அமைப்புகளுக்குள் ஊடுருவி இருப்பார்களோ என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் அக, புற முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இப்போக்கும் மக்களை அமைப்புகளிடமிருந்தும், அமைப்புகளை மக்களிடமிருந்தும் அந்நியப்பட வைத்து விடுகின்றன.
எதிர்ப்புக் குரல்கள் எவருடையதென்றாலும் , அவற்றை அமைப்புகள் தம் அமைப்புகளின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானவையாகக் கருதி நசுக்கும் போக்கு.
தொடர்ச்சியான போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் போராளிகளுக்கு வன்முறை என்பது அவர்கள்தம் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகின்றது. இவ்விதமான சூழலில் தொடர்ச்சியாக வாழும் அவர்களது உளவியலும் மாறிதலுக்குள்ளாகின்றது. இந்நிலையில் அவர்களுக்கு மக்களின் உணர்வுகளுடனான பிணைப்பு குறைந்துவிடுகின்றது. இதுவுமொரு காரணம்.
மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட அமைப்புகள், அமைப்புகளின் வளர்ச்சியில் அதிகாரம் செலுத்தும் அமைப்புகளாக உருவாகின்றன. இந்நிலையில் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணத்தை மறந்து , அதிகாரப்போட்டியில் அவை தம்மை ஈடுபடுகின்றன.
இவை, இவை போன்ற பல காரணிகள் எம் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு அடிப்படைக்காரணங்களாக அமைந்தன. ஆனால் , ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டு , பதினாறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் , குறிப்பாக இன்றுள்ள இளந்தலைமுறையினர் மத்தியில், பெரிதாக ஏன் போராட்டம் தோற்றது? ,என்பது பற்றிய சரியான ஆய்வுகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. சமூகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் பேராசிரியர்களாக அறியப்பட்டவர்களில் எவரும் மேலோட்டமாகத் தேசியம் பற்றிக் கதைப்பதுடன் தம்மைச் சமூகத்தில் நிலை நிறுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றார்களே தவிர், ஜோதிகுமார் குறிப்பிட்டது போல் ஏன் போராட்டம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனது என்பது பற்றி வாயே திறப்பதில்லை. ஒரு காரணம் இது பற்றிய போதிய சிந்தனைத் தெளிவு இல்லாதிருக்கலாம். அல்லது உலகின் ஏனைய நாடுகளில் புரட்சிகரத் தலைவர்களின் மத்தியில், குறிப்பாகக் காலனியாதிக்கத்து எதிர்பாளர்கள் மத்தியிலிருந்து தோன்றிய அரசியல் கோட்பாடுகள் அல்லது சிந்தனைகள் பற்றி அறியாமல் அவர்கள் இருக்கலாம். ஆனால் இந்நிலை இவ்வாறே தொடர்ந்தும் செல்வது ஆரோக்கியமானதல்ல.
இந்நிலையில் போர்த்துகேயரின் காலனியாகவிருந்த மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினிய - பிசாவ் மற்றும் கேப் வெர்டே தீவுக்கூட்டங்களைப் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக இரு நாடுகளையும் இணைத்து , விடுதலைப்போராட்ட அமைப்பை உருவாக்கி, கொரில்லாப் போர்முறையில் போராடியவர் அமில்கார் கப்ரால் ( Amilcar Cabral). இவர் போர்ச்சுக்கலின் தலைநகரான லிஸ்பனின் விவசாயப்பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். நாடு விடுதலை பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகப்படுகொலை செய்யப்பட்டவர்.
இவர் காலனியத்துக்கெதிரான முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர். தேசியம், காலனியாதிக்கம், கலாச்சாரம், வர்க்க விடுதலை பற்றிய விடயங்களில் தன் சிந்தனையைத் திருப்பியவர். இவரது 'வர்க்கதற்கொலை' (Class Suicide):பற்றிய கோட்பாடு முக்கியமானது. அது குறிப்பிடும் விடயம் முக்கியமானது. பெரும்பாலான நாடுகளில் மக்களின் வர்க்க விடுதலைக்காகப் போராடுபவர்களை வழி நடத்துபவர்கள் குட்டி முதலாளித்துவ வர்க்கப் பின்னணியைக்கொண்ட நடுத்தர வர்க்கத்தினரே. இவர்கள் போராட்ட வெற்றிகளின் பின் தம் வர்க்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். அதனைத்தான் அவர் வர்க்கத்தற்கொலை என்கின்றார். அத்துடன் எவருக்காகப்போராடுகின்றார்களோ அவர்களின் வர்க்கத்தினராகத் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்விதம் செய்யாமல் தம் குட்டி முதலாளித்துவ வர்க்க ஆளுமைக்கு ஆட்பட்டுச் செயற்பட்டால், அது அவர்கள்தம் சொந்த நலன்களைப்பாதுகாப்பதாக அமைந்து விடும். அது புதிய சுரண்டும் வர்க்கமாக உருமாறி விடும்.
இவரைப்போன்ற காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தலைவர்கள் , சிந்தனையாளர்களின் சிந்தனைகளிலிருந்து மக்கள் எவ்விதம் விடுதலைப் போராட்டங்களில் அந்நியப்படுத்தப்படுகின்றார்கள் என்பதை உணர வேண்டும். அதுவே போராட்டங்களின் நோக்கத்தின் தோல்வியாகப் பெரும்பாலும் அமைந்து விடுவதையும் அறிய வேண்டும். இத்தகைய சிந்தனைகளின் அடிப்படையில் எம் மக்களின் போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய வேண்டும். சரியான எதிர்காலப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு இது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment