Saturday, November 1, 2025

நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலச்சுரங்கமும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலச்சுரங்கமும் அது எழுப்பிய கேள்வியும்! 

நினைவின் வலிமை என்னை நீ உணர வைக்கும்.
நினைவின் வலிமை உன்னை நான் நினைக்க வைக்கும்.
நினைவின் வலிமையை உன்னைப்போல் 
நானும் நம்புவனடி கண்ணம்மா!
அதனால்தான் உதயத்தில் மறைந்து 
அந்தியில் முகம் காட்டும் மதியாகி
முறுவலித்தாய். இல்லையா கண்ணம்மா!
ஒளிக்கும் ஒரு வேகமுண்டு! 
ஒளி கடக்கும் தூரத்துக்குமொரு நேரமுண்டு.
ஆயின்,
மனவேகத்துக்கு ஓர் எல்லையுண்டா
கண்ணம்மா!
இருப்பின் எல்லையை நிர்ணயிப்பது
ஒளி! இலலையா கண்ணம்மா!
ஒளி எல்லை தாண்டிப் பயணித்தல் 
சாத்தியமுண்டாடி!
ஆனால்,
எண்ண வேகத்தைத் தடுக்கும் 
எல்லையென்று  ஒன்று உண்டா
என் கண்ணம்மா!
பிரபஞ்சங்கள் தாண்டிச் செல்வதை
அனுமதிப்பதில்லை ஒளி.
இல்லையா கண்ணம்மா?
ஆயின்,
எண்ணவேகத்தில் என்னால்
எத்தனை பிரபஞ்சங்களையும் தாண்டிப் 
பயணிப்பதைத் தடுப்பவர் எவருமுண்டா?
கண்ணம்மா! பதில் கூறடி 
என் செல்லம்மா?
சமாந்தரப் பிரபஞ்சங்களுக்குள் புகுந்து விளையாடும்
சாதனையை என்னால் சாதிக்க முடியுமடி
என்னால் என்றால் நம்புவதில் உனக்கு
ஏதும் தயக்கமுண்டாடி கண்ணம்மா?

கண்ணம்மா:
கண்ணா! ஒளியெல்லை தாண்டிச் செல்வது பற்றிக்
கூறினாய்.
ஒளி எல்லை தாண்டுமொரு வழி உண்டு தெரியுமா கண்ணா?

நான்:
ஒளியெல்லை தாண்டும் வழியுண்டா கண்ணம்மா?
களிப்பில் மூழ்குமென் நெஞ்சிற்கு உன் பதில்
காரணமாக இருக்கட்டுமடி கண்ணம்மா!
கூறு கண்ணம்மா!

கண்ணம்மா:
இரு வேறு காலவெளிகளை இணைக்கும்
காலவெளிச் சுரங்கப்பாதை பற்றி
நீ அறிந்ததில்லையா கண்ணா?
காலவெளிச் சுரங்கப் பாதையூடு 
பயணிப்பின் , 
ஒளியெல்லைக்கப்பால்
ஒளிந்து கிடக்கும் பிரபஞ்சங்களுக்குள்
ஓடி விட முடியாதா கண்ணா?

நான்:
ஐன்ஸ்டைனின் புழுத்துளைக்கு 
அற்புதமானதொரு பெயர் தந்தாயடி கண்ணம்மா!
புழுத்துளையென்றால் முகம் சுளிப்பர் சிலர்.
ஆயின் கண்ணம்மா உன்
'காலவெளிச் சுரங்கம்' கவித்துவமும், 
ஞானச்செறிவும் மிக்கதொரு பெயரல்லவா?

கண்ணம்மா:
காலவெளிச் சுரங்கத்தூடு 
காலவெளிக்கப்பல் செய்து பயணிப்போம்
வா! என் கண்ணா!

நான்:
கண்ணம்மா ஒரு கேள்வி?

கண்ணம்மா:
கண்ணா! கேள்வியென்ன கூறு!

நான்:
காலவெளிப் பிரபஞ்சத்துள் நம் இருப்பு.
இல்லையா கண்ணம்மா?

கண்ணம்மா:
சரியாகக் கூறினாய் கண்ணா!
சஞ்சலமேன் அதில் கண்ணா?

நான்:
காலவெளி இருப்பில் ,
காலவெளிப்பரிமாணங்களுக்குள்
இருக்கிறதெம் இருப்பு. இல்லையாடி!
காலவெளிச்சுரங்கத்திற்கு 
வெளியில் விரிந்திருக்கும் 
பிரபஞ்சம் 
காலவெளி அற்றதாகவிருந்து விடின்
காலவெளிச் சுரங்கத்தால் பயன் உண்டா
கண்ணம்மா? கூறடி கண்ணம்மா?

கண்ணம்மா:
அற்புதமானதொரு கேள்வி கேட்டாய் கண்ணா!
அன்புக் கண்ணா!
தர்க்கம் மிகு வினாத்தொடுத்தாய்.
காலவெளியற்ற , பரிமாணங்கள் வேறான
பிரபஞ்சங்கள் இருப்பதற்கான சாத்தியங்களைக்
கண்ணா உன் கேள்வி எழுப்பும்,
என்னிடம் பதிலற்ற கேள்வி தந்தாய் கண்ணா!
கண்ணா! உன்னுடனான உரையாடல்கள்
களிமிகுந்தவை இவ்வகைக்  கேள்விகளால்தாம்.
நன்றி கண்ணா! நன்றி!

நான்:
காலச்சுரங்கம் பற்றிப் புதுச்
கருத்து பகன்றாய்! சொல் தந்தாய்!
சிந்தனையை விரிய வைத்தாயடி!
உந்தன் ஞானமென்னை கட்டிப்போட்டு விட்டதடி
கண்ணம்மா!

[தொடரும்]


 girinav@gmail.com

No comments:

நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலச்சுரங்கமும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]   அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலச்சுரங்கமும...

பிரபலமான பதிவுகள்