Friday, November 28, 2025

யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva)!


யார் இவர்? இவர்தான்  டில்வின் சில்வா (Tilvin Silva).   ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி JVP) பொதுச்செயலாளர். ஜேவிபியின் முதலாவது புரட்சி தோல்வியில் முடிந்தது. ஜே.ஆர் .ஜெயவர்த்தனே 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும் ஜேவிபிக்கு மன்னிப்பளித்து  . ஜனநாயக அரசியலில் பங்குபற்ற வழி செய்தார். அப்போது ஜேவிபியில் இணைந்தவர்தான் டில்வின் சில்வா.  இவரது முழுப்பெயர் மெஸ்திரீ டில்வின் சில்வா.  தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஸ்தாபக உறுப்பினகளில் ஒருவரான  இவர் ஜே.வி.பி இன் கொள்கைகள் மற்றும் அரசியல் வியூகங்களை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர்.  குறிப்பாக  சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துபவர்.  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகவும்  கருதப்படுகின்றார். இவரைப்பற்றிய, இவரது குடும்பம், கல்வி, பார்த்த வேலைகள் போன்றவற்றை அறிய விக்கிபீடியாக் குறிப்பைப் பாருங்கள். கூகுளில் தேடுங்கள். மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.

பொதுவாக நான் இலங்கையின் பார்ம்பரிய அரசியல்வாதிகள் பற்றி அதிகக் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் எவ்வினத்தவர் என்றாலும் தம் வாழ்வைத் தாம் நம்பும் சித்தாந்தத்துக்காக அர்ப்பணித்து சமூக , அரசியற்பாளர்களாக இயங்கும் ஆளுமைகளை அவதானிப்பவன். இவர் அவர்களில் ஒருவர். ஜேவிபியின் இரண்டாவது தோல்வியுற்ற புரட்சியின்போது , அரச படைகளுக்கு எதிராகப் போராடிவர். ஜேவிபியின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருந்திருக்கின்றார். அநேகமாக அவரது பிறந்த மாவட்டமான களுத்துறை மாவட்டமாக இருக்கலாம். சரியாகத்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தரவும்.அப்போது படையினரால் கைது செய்யப்பட்டு எழு ஆண்டுகள் சிறையில் இருந்தவர் இவர். அதுவே இவர் உயிர்தப்பக் காரணமாக அமைந்தது என்பதும் கவனத்திலெடுக்கத்  தக்கது. ஏனென்றால் அப்போது ஜேவிபி பிரேமதாச அரசால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு, அதன் முக்கிய தலைவர்கள் பலர், ரோகண விஜேவீரா உட்பட, கொல்லப்பட்டனர். அப்போது இவர் சிறையில் இருந்ததனால் உயிர் தப்பினார். அல்லது  இவரும் கொல்லப்பட்டிருக்கும் சாத்தியங்களே அதிகம்.

இவர் இரண்டாவது ஜேவிபி புரட்சியை 'சோசலிசத்திற்கான ஒரு தேசபக்திப் போராட்டம்' எனக்கருதியதாக விக்கிபீடியா தெரிவிக்கின்றது.  தற்போதுள்ள அநுர அரசின் சூத்திரதாரியாகவும் இவரை அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருதுவர். பொதுமக்கள் பலரும் அவ்விதமே கருதுவர்.

1983 இல் பொரளையில் தமிழரொருவர் நிர்வாணமாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட புகைப்படம் கறுப்பு ஜூலையின் குறியீடாகக் கருதப்படும் புகைப்படம். அதில் நிர்வாணமாக்கப்பட்ட தமிழரைச் சுற்றி ஆடும் உயர்ந்த தோற்றமுள்ள ஒருவர் இவரே என்று இவரது அரசியல் எதிரிகள் குற்றஞ்சாட்டுவது வழக்கம். ஆனால் அது  உண்மையில்லை. 

அரசியலில் குள்ள நரியான ஜே.ஆர் கறுப்பு ஜூலைக்குக் காரணம் ஜேவிபி என அக்கட்சியைத்  தடை செய்தார். அதனால் அப்போது பொதுவெளியில் இயங்கிக்கொண்டிருந்த ஜேவிபியினர் தலைமறைவாகப் போராட்டத்தைத்  தொடர்ந்தனர்.  1987 இலங்கை - இந்திய ஒப்பந்தமும், இந்தியப் படையினரின் வருகையும், இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் விளைவுகளாகக் கருதிய ஜேவிபி, இந்தியாவின் தலையீடானது இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகக் கருதினர். அதனால் வெடித்ததே அவர்களது இரண்டாவது புரட்சி. 1987 -1989 காலகட்டத்தில் நடந்து முடிந்த தோல்வியுற்ற புரட்சியிலிருந்து தன் நோக்கஙக்ளை சிலவற்றை மாற்றி, தேசிய மக்கள் சக்தி கட்சியினை உருவாக்கி, இன்று நாட்டைத்   தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ஜேவிபி. இது ஒரு வரலாற்றுச் சாதனை.

பொதுவெளியில் அமைச்சர் போன்ற பதவிகளில் நாட்டமில்லாதவர். கட்சியின் பின்னால் மறைந்திருந்து தன் பங்களிப்பை ஆற்றி வருபவர். 

அநுரவின் அரசு இம்முறை இலங்கையில் நடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் தலையிடவில்லை. போரில் இறந்தவர்களை நினைவு கூர்வது மக்களின் உரிமை என்னும் கருத்துள்ள அரசாகவே இதுவரையில் அநுரவின் அரசு செயற்பட்டு வருகின்றது.  இதனைப் பலமாகப் பிடித்துக்கொண்ட தென்னிலங்கையின் இனவாத அரசியல்வாதிகள் அநுரவின் அரசு புலிகளின் அபிலாசைகளுக்கேற்பச் செயற்பட்டு வருகின்றது என அரசியல் களத்தில் இனவாத ஆட்டத்தைத் தொடங்கி விட்டனர். 

ஆனால் அதே சமயம் அண்மையில் ஐக்கிய இராச்சியத்துக்கு விஜயம் செய்த டில்வின் சில்வாவுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் புலிக்கொடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. அரசியல் ஆய்வாளர் யதீந்திரா இது அர்த்தமற்றது என்னும் கருத்துப்படப் பதிவொன்றை இட்டிருந்தார். பார்த்தேன். சமூக , அரசியற் செயற்பாட்டாளர் சின்னப்போடியும் இது பற்றிக் குறிப்பிடுகையில் "ஒரு வகையில், இந்த ஆர்ப்பாட்டம் தென்னிலங்கை மக்களிடத்தில் NPP-க்கு ஒரு அரசியல் பாதுகாப்பை (Political Shield) வழங்கக்கூடும். 'பாருங்கள், புலம்பெயர் தமிழர்கள் எங்களை எதிர்க்கிறார்கள், எனவே நாங்கள் அவர்கள் சொற்படி ஆடவில்லை, நாங்கள் தேசப்பற்றுடன்தான் இருக்கிறோம்' என்று சிங்கள மக்களிடம் நிரூபிக்க இந்தச் சம்பவத்தை NPP பயன்படுத்திக்கொள்ள முடியும்." என்று குறிப்பிடுகின்றார்.

என்னைப்பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியினர் தென்னிலங்கையில் இனவாதிகளால் இனவாதம் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு சமயமும் இது இனவாதம் என்று அவர்களுக்கு முகத்துக்கு முகம் பார்த்துக்கூற வேண்டும். ஏன் அது இனவாதம் என்பதை எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் நாடு முழுவதுக்கும் அக்கருத்து எடுத்துச் செல்லப்படும் . அவ்விதம் எடுத்துச் செல்லப்பட்டால் மக்கள் எப்பிரிவினர் என்றாலும் சரியானதை, நியாயமானதை ஏற்றுக்கொள்வர். அப்படிச் செய்யாமல் இனவாதத்துக்கு அடிபணிந்தால் , அது தொடர்ந்தும் நாட்டை இனவாத அரசியலுக்குள்ளேயே வைத்திருக்கும்.

இவ்விடயத்தில் மேற்கு நாடுகளைப் பாருங்கள். குறிப்பாக அமெரிக்காவைப் பாருங்கள். கறுப்பின மக்களுக்கு எதிராக இனவாதம் அறுபதுகளின் ஆரம்பம் வரை கொடி கட்டிப் பறந்தது. இன்று முற்றாக இனவாதம் ஒழிந்து போய் விடவில்லை. ஆனால் சட்டரீதியாக இனவாதம் ஒழிந்திருக்கின்றது என்று ஓரளவு கருதலாம். சட்டம் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரி அமுல்படுத்தப்படுகின்றது. இங்கும் இனவாதிகள் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் இனவாதிகள் அல்லர். நாட்டின் சட்டங்களை மதிப்பவர்கள். அதே மாதிரியான நிலைதான் இலங்கை போன்ற நாடுகளிலும். அங்கும் நாட்டின் சட்டம் தன் கடமையைப் பாரபட்சமில்லாது செய்யத் தொடங்கும்போது , இனவாதம் படிப்படியாகப் பொது வெளியிலிருந்து, அரசியலிலிருந்து குறைய ஆரம்பிக்கும். இனவாத அரசியலின் தாக்கம் குறையத்தொடங்கும். அவ்விதமான அரசியலுக்கு எதிராக அனைத்து இன மக்களும், அரசியல்வாதிகளும் செயற்படத் தொடங்குவர். மேற்கு நாடுகளில் இனவாதத்துக்கெதிராக அனைவரும் ஓரணியில் இருப்பார்கள். அவ்வப்போது நடைபெறும் இனவாதச் செயற்பாடுகளைச் சட்டம் கவனிக்கும். இலங்கையிலும் இந்நிலை ஓரளவுக்கு ஏற்படத்தொடங்கியிருக்கின்றது. உண்மையில் இந்நிலை தொடர வேண்டுமானால் ஈஸ்டர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் எவராகவிருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் இனவாதரீதியில் அரசியல்வாதிகள் செயற்பட அஞ்சுவர். 


மேலதிகத்தகவல்களுக்கு - விக்கிபீடியா - https://en.wikipedia.org/wiki/Tilvin_Silva

No comments:

யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva)!

யார் இவர்? இவர்தான்  டில்வின் சில்வா (Tilvin Silva).   ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி JVP) பொதுச்செயலாளர். ஜேவிபியின் முதலாவது புரட்சி தோல...

பிரபலமான பதிவுகள்