Wednesday, February 25, 2026

மறவன்புலவு க.சச்சிதானந்தனின் 'ஹிந்துத்துவா'!


'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய  நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட  மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.

அருண் சித்தார்த் தான் சார்ந்த சமூகத்திற்காகக் குரல் கொடுத்துவருபவர் என்னும் வகையில் முக்கியமானவர். இவரது கடந்த கால அரசியற் செயற்பாடுகள் முரண்பாடுகள் மிக்கவை.  சொந்த வாழ்க்கை அனுபவங்கள் காரணமாக இவர் வெளிப்படுத்தும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்புபவை. இவரது செயற்பாடுகளில் முக்கியமானதாக நான் கருதுவது இதுவரை காலமும் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்டு வரும் தான் சார்ந்த சமூகத்துக்காகக்குரல் கொடுத்து வருவது. அதனை ஏற்காமல் மூடி மறைத்து, கடந்து சென்றிட முடியாது. அது தீக்கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைப்பது போன்றது. தமிழ் மக்கள் தம் மத்தியில் ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் சமூகங்களுக்காகக் காலம் காலமாகக் குரல்கொடுத்து வந்திருக்கின்றார்கள். செயற்பட்டு வந்திருக்கின்றார்கள்.  இவ்வகையில்  யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) தவிர்க்கப்பட முடியாத அமைப்பு.  இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பாகக் கருதப்படும் அமைப்பு.  1924ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  1926ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸாக மாறியது. ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெறுவதன்பொருட்டு குரல் கொடுத்த அமைப்பு. இவ்வமைப்பின் விழாக்களில்  மகாதமா காந்தி, ராஜாஜி, எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.டபிள்யு பண்டாரநாயக்க, விபுலானந்தர் போன்ற பலர் கலந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர்கள் பலர் இவ்வமைப்பில் இணைந்து பயணித்திருக்கின்றார்கள். இதனது இரண்டாவது மாநாட்டில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபராக இருந்த பி. ஜி. எஸ். குலரத்தின தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.  ஹண்டி பேரின்பநாயகம், ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" க. நவரத்தினம், ஏ. இ. தம்பர், "ஒரேற்றர்" சுப்பிரமணியம், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா, ஆயர் எஸ். குலேந்திரன், பி. நாகலிங்கம் போன்றோர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் இயங்கியவர்களில் சிலர். இவ்வமைப்பு 1939 வரையில் உறுதியிடன் இயங்கியது.

இவ்வமைப்பு தன் முதலாவது மாநாட்டில் எடுத்த தீர்மானங்களில் ஒன்றில் - "நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது அதன் சமூக சம நீதிக்கான நோக்கினை வெளிப்படுத்தும் தீர்மானம்.

அன்றிலிருந்து இலங்கைத் தமிழர்கள் மத்தியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிமைக்குரல்கள் காலத்துக்குக் காலம் , இன்று அருண் சித்தார்த் வரையில் , ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.  அருண் சித்தார்த் தனது சமூக உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அதே சமயம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துச் சமூகப்பிரிவுகளையும் இணைத்து உள்வாங்கிச் செல்வதுவே ஆக்கபூர்வமானதாக அமையும். அவ்விதம் அவரது பாதை இருக்காவிட்டால் அது அவரது நோக்கத்துக்கு எதிர்மறையான விளைவுகளையே தரும் சாத்தியங்களே அதிகமுள்ளன. 

அவர் அண்மைக்காலமாகப் பல காணொளிகளை வெளியிட்டு வருகின்றார். அவற்றில் ஒலிக்கும் குரல்கள் கசப்பான உண்மையினை வெளிப்படுத்துகின்றன. அருண் சித்தார்த் என்னும் மனிதரின் செயற்பாடுகளை எதிர்க்கின்றோம் என்று குரல் கொடுக்கும் பலரின் குரல்கள் ஒடுக்கப்படும் சமூகங்களின் மீதான வன்மத்தையும் கக்குகின்றன என்பது கசப்பானதோர் உண்மை.

அவ்விதமானதொரு காணொளியில் அவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் டான் தொலைக்காட்சியில் அளித்திருந்த நேர்காணலொன்றின் சில பகுதிகளையும் வெளியிட்டிருந்தார். இந்நேர்காணல் பற்றி இப்பொழுதுதான் முதன் முறையாக நான் அறிகின்றேன். அதில் அவர் தெரிவித்திருக்கும்  கருத்துகள் அவரை சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும், ஒடுக்கப்படும் சமூகங்களுக்காகக் குரலுடன் செயற்பட்டு வரும் ஒருவராக அடையாளப்படுத்துகின்றன. அதில் அவர் அருண் சித்தார்த்தின் குரலை ஒடுக்கப்படும் சமூகத்தின் அனுபவங்களின் காரணமாக விளைந்த அறச் சீற்றமாகக் கருதுகின்றார் என்பதை அறிய முடிகின்றது.  அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு விடயம் என்னை ஈர்த்தது. அது அவர் அவரது ஊரில் கட்டிய பிள்ளையார் ஆலயத்தில் பூசை செய்வது ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே. இது முக்கியமான அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றது.

நாம் அறிந்த ஹிந்துத்துவா என்பது  மோடியின் ஹிந்தித்துவா. வருணாசிரம ஒழுங்கை ஆதரிக்கும் ஒரு சித்தாந்தம். ஆனால் இங்கு ஹிந்துத்துவாவைப் பின்பற்றுபவராக  அறிந்திருக்கும் மறவன்புலவு க.சச்ச்சிதானந்தன் அவர்களின் புரட்சிகரச் செயற்பாடு நிச்சயம் ஒரு முன் மாதிரி.

இளைஞர் காங்கிரஸ் அமைப்பு போன்று ,, தீர்க்கதரிசனத்துடன் , தமிழர் மத்தியிலிருக்கும் அரசியல் அமைப்புகள் செயற்பட வேண்டிய காலகட்டமிது. அது ஒன்றே அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கும்.

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...