Sunday, February 1, 2026
"அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?" - ராஜு அங்கிள் நினைவுகள்!
ராஜு அங்கிளை (அம்மாவின் கடைசிச் சகோதரர்) நினைத்ததும் என் நினைவில் வரும் முக்கிய விடயங்களிலொன்று அவரது 'ரெகோர்ட் பிளேயர் ஸ்டாண்ட்' . மரத்தால் ஆன அழகான 'ரெகோர்ட் பிளேயர்' அமைப்பு அது. அவரை இசைப்பிரியர் என்றும் கூறலாம். மேனாட்டுப்பாடகர்களின் ஒலித்தட்டுகள் ( Records) தொடக்கம் சிங்கள 'பைலாப்' பாடல்களின் ஒலித்தட்டுகள் வரை பல பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), பீட்டில்ஸ் (Beatles) போன்றோரின் ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. அவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே கனடா வந்து விட்டதால் , அது வரை எட்டாக் கனியாகவிருந்த அந்த ரெகோர்ட் பிளேயர் எமக்கும் எட்டும் கனியானது. அதன் பின் அங்குள்ள ஒலித்தட்டுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்வதுண்டு. அவற்றிலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு சிங்களப்பாடல். அதனைப் பாடியவர் யார் என்பது தெரியாது. ஆனால் கேட்ட முதல் தடவையே என்னைக் கவர்ந்துவிட்ட பாடல் அது. அண்மையில்தான் அப்பாடலை யு டியூப்பில் தேடிக் கண்டு பிடித்தேன். அதனைப்பாடியவர் அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய சிங்களப்பாடகர் சி.டி.ஃபெர்ணாண்டொ என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். அந்தப்பாடல்: "அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?"பாடலுக்கான இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=QJdFaLzJxY8
என் பால்யப்பருவத்தில் என் வாசிப்புக்குத் துணை நின்றவர்களில் ராஜு அங்கிளும் ஒருவர். வவுனியாவில் நாம் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் , எழுபதுகளில், வெளிநாடு செல்வதற்கு முன் சிறிது காலத்துக்கு முன் , புளியங்குளத்தில் ஒரு பண்ணையைச் சிறிது காலம் நிர்வகித்து வந்தார். அப்போது வார இறுதி நாட்களில் 'அக்கா, அக்கா' என்று எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார். அவ்விதம் வரும் அவர் எம்மைத் திரைப்படங்களுக்குக் கூட்டிச் செல்வார். அவ்விதம் கூட்டிச் செல்லும் இவர் படம் முடிந்து திரும்பி வருகையில், யாழ் கண்டி வீதிவழியாக வந்து மன்னார் வீதி வழியாக நாங்கள் வசித்து வந்த குருமன்காடு பகுதிக்குச் செல்வோம். அப்பொழுது யாழ் கண்டி வீதியில் , ஆஸ்பஸ்த்திரிக்கு முன்பாகப் பல உயர்ந்த முதிரை மரங்கள் இருந்தன. அவற்றில் தங்கியிருக்கும் தாட்டான் குரங்கள் நாங்கள் அப்பகுதியைக் கடக்கும்போது பார்த்துச் சிறுநீர் கழிக்கத்தொடங்குவினம். நாங்கள் தப்புவதற்காக ஓடுவோம். மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று.
அவ்விதம் வரும் சமயங்களில் இவர் ஒரு முறை கொண்டு வந்த புத்தகம்தான் அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' நாவல். அழகாக பைண்டு செய்யப்பட்ட நாவல். நான் வாசிக்கத்தொடங்கிய பருவத்தின் முன் வெளியான நாவலென்பதால் அதுவரை வாசித்திருக்காத நாவல். அப்பொழுதுதான் பொன்னியின் செல்வனை வாசிக்கத்தொடங்கியிருந்தேன். எனவே வேங்கையின் மைந்தனையும் விரும்பி வாசித்தேன். எனக்கு எழுத்தாளர் அகிலன் அறிமுகமானது இவ்விதம்தான்.
அதன் பின்னர் விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்கையில் இவர் என் வாசிப்பார்வத்தை அறிந்து வேதாள மயாத்மாவின் கதைகளைக் கூறும் இந்திரஜால் காமிக்ஸ் புத்தகங்கள், பிரேமா பிரசுரமாக வெளியான மேதாவி, சந்திரமோகன்,ம் சிரஞ்சீவி போன்றோரின் மர்ம நாவல்களையும் தன் நண்பர்களிடமிருந்து வாங்கி வந்து தருவார். அக்காலகட்டத்தில் என் வாசிப்பார்வத்துக்குத் தீனி போட்ட நூல்கள் அவை. இவ்விதம் என் பால்ய பருவத்து வாசிப்பனுபவங்களில் பங்களித்த ஆளுமைகளில் ஒருவராக இவர் நினைவுகளில் நிலைத்து நிற்கிறார். இவர் சில வருடங்களின் முன்னர் கனடாவில் அமரராகி விட்டார்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
Subscribe to:
Post Comments (Atom)
யாழ்ப்பாணம் போவோமா?
[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment