Saturday, May 30, 2026

அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!


என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள்  ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும்.

ராணி வாராந்தரியில் இரு பக்கங்கள் சிறுவர் ஆக்கங்களுக்கு ஒதுக்குவார்கள். ஒரு பக்கத்தில் சிறுவர் தொடர்கதையொன்று வெளியாகும், அடுத்த பக்கத்தில் விடுகதைகள் , வேறு பல்சுவைத்துணுக்குகள் போன்றவை வெளியாகும்.

அண்மையில் இணையத்தில் பழைய ராணி இதழ்களின் சில பக்கங்களைக் கண்டேன். முகநூல் நண்பர் மோகன்குமார் பகிர்ந்திருந்தார். அதிலுள்ள ராணி இதழ்கள் நான் தீவிர வாசிப்பில் இறங்குவதற்கு முன் வெளியானவை. இருந்தாலும் அதே மாதிரியான வடிவமைப்பில்தான் நான் வாசிக்கத் தொடங்கியபோது ராணி வெளியாகிக்கொண்டிருந்தது. அதனால் மேற்படி ராணி இதழின் பக்கங்கள் பழைய நினைவுகளை எழுப்பி விட்டன.

இங்குள்ள பக்கத்தில் சிறுவர் தொடர்கதையாக 'மாயக்கிளி' என்னும் தொடர்கதை வெளியானது போல், என் வாசிப்புப் பருவத்தில் வெளியான சிறுவர் தொடர்கதை  'பேசும் சிலை'. நானும் , சகோதர, சகோதரிகளும் போட்டி போட்டு , விரும்பி வாசித்த சிறுவர் தொடர்கதை 'பேசும் சிலை'.

எப்பொழுதுமே நான் பத்திரிகை, சஞ்சிகைகளில் சிறுவர் பக்கங்கள் இடம் பெறுவதை ஆதரிப்பவன். எங்கள் காலத்தில் வெளியான வெகுசன இதழ்கள், பத்திரிகைகள் எல்லாவற்றிலும் நிச்சயம் சிறுவர் பக்கங்கள் இருக்கும். அவற்றினூடு வளர்ந்தவன் நான். குறிப்பாக ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலர், வெற்றிமணி சிறுவர் சஞ்சிகை, கண்மணி சிறுவர் சஞ்சிகை, சிரித்திரனின் சிறுவர் பக்கம் இவற்றினூடு எழுதி வளர்ந்தவன் நான்.

கல்கி சஞ்சிகையின் சிறுவர் விருந்து, கல்கி,விகடன் போன்ற சஞ்சிகைகளில் வெளியாகும் தீபாவளி மலர்களில் இடம் பெறும் சிறுவர் பக்கங்கள் , இவற்றுடன் ராணி வாராந்தரியின் சிறுவர் பக்கங்களையும் குறிப்பிடலாம்.  இவையெல்லாம் அப்பருவத்தில் எம் வாசிப்புக்குத் தீனியாக இருந்தவை. வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியவை. எழுதத் தூண்டியவை. 

இவை தவிர இந்திரஜால் காமிக்ஸ், பொன்மலர் , பால்கன் காமிக்ஸ் சஞ்சிகைகள்,  கண்ணன், அம்புலிமமா சஞ்சிகைகள், வெகுசன இதழ்களில் வெளியான சித்திரத் தொடர்கதைகள் இவையெல்லாம் அப்பருவத்தில் நாம் விரும்பி வாசித்தவை.


 

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...