அன்று தமிழகத்தில் திமுகவினர் ஆட்சியைப் பிடித்தபோது அவர்கள் இளவயதினர். அன்று இள வயதுத் திமுகவினர் கோட்பாட்டு ரீதியில் பகுத்தறிவு, சமநீதி , சுயமரியாதை என்று எழுத்துகள், மேடைப்பேச்சுகள், திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று புயலாகப் புறப்பட்டபோது அவர்கள் பின்னால் தமிழகத்தின் இளைஞர்கள் திரண்டனர். தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்தனர் தமிழக மக்கள்.
அதன் பின் இன்றுவரை அதே திமுகவினர் முதுமையின் தாலாட்டில் இருக்கும் அமைச்சர்கள் பலரை உள்ளடக்கி இருக்கும் நிலையில் தமிழக இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்று தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரியதொரு வெற்றியைக் கொடுக்கவில்லை. அவர்களுக்குத் தவெக பற்றி உறுதியான, நம்பிக்கையான எண்ணம் இருப்பதாகத்தெரியவில்லை. அதனால்தான் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தபோது அரைகுறை வெற்றியினைக் கொடுத்தார்களோ என்று தோன்றுகின்றது.
திமுகவின் கோட்டையான சென்னையிலேயே பழையவர்களையெல்லாம் தோல்வியைத் தழுவ வைத்த மக்கள், இளையவரான உதயநிதி ஸ்டாலினை வெற்றி பெற வைத்துள்ளனர். புதியதாக எவ்விதக் கோட்பாடுகளுமற்று, பெரியார், அண்ணா , அம்பேதகார் ஆகியோரின் பெயர்களை முன்னிறுத்தி அரை குறையாக ஆட்சியைக் கைப்பற்றிய தவெக ஒன்றை நன்குணர்ந்திருக்கின்றது. தமிழகத்தில் தொடர்ந்தும் மூன்று பிரதான கட்சிகள் இருப்பது அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதில் சிரமத்தைத்தரும். அதனால் பிம்ப அரசியலின் பிரதிநிதியாக முதல்வராகியிருக்கும் தவெக தலைவர் விஜய், அதிமுகவை முழுமையாகத் தனது கட்சிக்குள் சங்கமிக்க வைத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்தும் திமுக , தவெகவுக்கிடையிலான இருமுனைப் போட்டியாகத்தமிழக அரசியல் தொடரும். இது தவெகவின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும். அதிமுகவினைச் செங்கோட்டையன் போன்றோர் மூலம் தன் கட்சிக்குள் தவெக இழுக்கும் முயற்சியில் எவ்வளவு தூரம் வெற்றி அடையுமென்பதைக் காலம் புலப்படுத்தும்.
அதே சமயம் இன்னுமொரு முக்கியமான விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் புதிய தலைமுறையின் பிரதிநிதிகள். விஜய், உதயநிதிக்கிடையிலான அரசியல் மோதல்கள் தமிழகத் தேர்தல் களத்தைச் சுவாரசியம் மிக்கதாக மாற்றி விட்டுள்ளன.
சித்தாந்த அரசியலைப் பிரதிநிதிப்படுத்தும் உதயநிதி ஸ்டாலின், பிம்ப அரசியலைப் பிரதிநிதிப்படுத்தும் விஜய் இருவருக்குமிடையிலான மாறுபட்ட ஆளுமைகள் கவனிக்கத்தக்கது. உதயநிதி கலைஞரைப்போல் ஊடகவியலாளரை உடனுக்குடன் எதிர்கொள்வதில் வல்லவர். இந்த விடயத்தில் விஜய் அவருடன் மோதி வெற்றியடையவே முடியாது.
இத்தேர்தலின் முடிவுகள் ஒருவகையில் திமுகவுக்குப் பல சந்தர்ப்பங்களை, அதனைச் சீரமைக்க வழங்கியுள்ளன. இதுவரை விடாக்கொண்டன்களாகப் பதவியைப் பற்றிக்கொண்டிருந்த துரை முருகன் போன்றவர்களை ஒதுக்கி விட்டு, இளந்தலைமுறையினருக்குச் சந்தர்ப்பம் வழங்க திமுகவுக்கு இதை விட்டால் வேறொரு நல்லதொரு சந்தர்ப்பம் அமையப்போவதில்லை. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்களும் இதனையே புலப்படுத்துகின்றன.
இதுவரை காலமும் சமூக ஊடகங்களில் நாறடிக்கப்பட்டுக்கொண்டிருந்த திமுக இன்று சமூக ஊடகங்களில் ஆரோக்கியமாக அணுகப்படுகின்றது. எதிர்பாராத திமுகவின் தோல்வி, குறிப்பாக அதன் தலைவர் ஸ்டாலினின் தோல்வி , திமுக மீதான அநுதாபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே உணர்கின்றேன். அதற்கு புதிய தமிழக அரசின் கேலிக்குரிய ஆளுமைகளின் செயற்பாடுகள் துணையாகவிருக்கின்றன.
தனது சனாந்தனப் பேச்சு மூலம் உதயநிதி தமிழக அரசியலில் மட்டுமல்ல , வட இந்திய அரசியலிலும் கவனத்தைப் பெற்றுள்ளார். இது போர்க்குணம் மிக்க இளந்தலைவராக உதயநிதியைக் கட்டமைக்கும்.
இப்படியே விஜய் ஒரு மாதிரித் தாக்குப்பிடிப்பாரானால், இரு சினிமாக் கதாநாயகர்களுக்கிடையில் இடம் பெறும் போராகத் தமிழக அரசியல் மாற்றமடையும், தமிழக மக்கள் இரசிகர்களாகித்தமிழகச் சட்டசபையில் காட்டப்பட்டும் அரசியல் சினிமாவை இரசிப்பார்கள். விஜய் , உதயநிதி ஸ்டாலின் இருவருமே நடிகர்கள். விஜய்யின் உம்மனா மூஞ்சிக்கு எதிரான முகவாகு உதயநிதி ஸ்டாலினுக்கு., அது அவரது மிகப்பெரிய ஆரோக்கியமான ஆளுமைக்கூறு. இது தமிழகச் சட்டசபைத்திரையரங்கில் காட்சியளிக்கும் அரசியல் சினிமாவை இன்னும் சுவாரசியமாக்கும். அதே சமயம் இவ்வகையான இருமுனை மோதலால் அதிகம் பாதிக்கப்படப் போவது அதிமுக கட்சியே. அதிமுக தன் உள் முரண்பாடுகளை நீக்கி, ஒற்றுமைப்பட வேண்டிய சூழலை இப்புதிய சூழல் உருவாக்கி விட்டது.; இல்லாவிட்டால் எம்ஜிஆர்ம், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளால் உருவாக்கப்பட்ட அதிமுக என்னும் பேரியக்கம் சிதைந்து போவதைத் தடுக்க முடியாது.
[டிஜிட்டல் ஓவியம் - Grok AI)
No comments:
Post a Comment