Monday, May 4, 2026
நடிகர் விஜய்யின் ஆச்சரியப்படத்தக்க வெற்றியின் தன்மை பற்றிய ஓர் அலசல்!
நடந்து முடிந்த தமிழகச் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் கருத்துக்கணிப்புகள், மற்றும் என்னைப்போன்றவர்களின் ஊகங்களைப் பொய்யாக்கி முதலிடத்தில் 108 தொகுதிகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். தனது பட நாயகன்களைப்போல் சவால் விட்டு, பஞ்ச் வசனங்கள் பேசி, தனியாக நின்று அரசியலில் பழம் பெரும் பெருச்சாளிகளை எல்லாம் ஓரங்கட்டி முன்னுக்கு வந்திருக்கின்றார். அதற்காக அவருக்கு என் வாழ்த்துகள்.
தமிழக மக்கள் புத்திசாலிகள். எச்சரிக்கையுடன் கூடியதொரு வெற்றியைத்தான் விஜய்யிற்குக் கொடுத்திருக்கின்றார்கள். அவருக்கு அறுதிப்பெரும்பான்மையற்ற வெற்றியைத்தான் கொடுத்திருக்கின்றார்கள். எவ்விதம் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து விஜய் முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவார். ஆட்சியில் அமர்வார். பார்ப்போம் என்று எச்சரிக்கையுடன் கூடிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றார்கள்.இச்சூழலில் ஏனைய ஏனைய கட்சிகளுடன் இணைந்து நடிகர் விஜய்யிற்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவதே சரி. அவ்விதம் அமையாமல் மீண்டும் தேர்தல் வருவதை எவரும் விரும்ப மாட்டார்கள். அப்படி நடந்தால் அது மிகப்பெரிய அனுதாப அலையாக மாறி , பெரும்பான்மையுடன் விஜய்யை ஆட்சியில் அமர்த்தி வைக்கும். மாறாக அவருக்குச் சிறுபான்மை அரசொன்றை அமைக்கும் சந்தர்ப்பத்தினை வழங்கினால் அது அவரை அரசியலில் எவ்விதம் இயங்குகின்றார் என்பதை எடை போட வைக்கும். அவர் அரசியலில் சறுக்கினால் தற்போது ஆதரவளித்தவர்களில் அவரது தீவிர இரசிகர்களைத்தவிர ஏனையோர் எதிராகத் திரும்புவார்கள். அப்போது இப்போதிருக்கும் ஆர்வம், விஜய் அலை இருக்காது. விஜய் மிகவும் கடுமையாக ஏனையவர்களுடன் போராடும் நிலை ஏற்படும்.
மேலும் நடிகர் விஜய் தற்போது பெற்றிருக்கும் வெற்றி பிரம்மாண்டமானதுதானா? சிலர் எம்ஜிஆர் பெற்றதை விட அதிக வீதத்தை விஜய் பெற்றிருக்கின்றார் என்று மார் தட்டக்கூடும். ஆனால் ஒரு கோணத்தில் நின்று , யானை பார்த்த குருடர்களைப் போல் விஜய்யின் இவ்வெற்றியை அணுகக்கூடாது.
1977 தேர்தலில் எம்ஜிஆர் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டார். தேர்தலில் வாக்களித்தவர்கள் 61.58% எம்ஜிஆர் பெற்றது 33.52% அதாவது வாக்களித்தவர்களில் 54.43% பேர் எம்ஜிஆருக்கு வாக்களித்தனர். அத்தேர்தலில் கலைஞருக்குக் கிடைத்தது 24.89% அவர் வாக்களித்தவர்களில் 40.41%
2026 தேர்தலில் இதுவரை விஜய் பெற்ற வாக்குகள் 34.9%
தேர்தலில் வாக்களித்தவர்கள் 85.1%
அதில் விஜய் பெற்றது 41.01%
திமுக + அதிமுக பெற்றது = 24.19 + 21.12 = 45.31 அது 53.24%
இங்கு தேர்தலில் வாக்களித்தவர்களுடன் ஒப்பிடுகையில் விஜய் பெற்றது 41.01%. 1977இல் எம்ஜிஆர் பெற்றது 54.43%
தமிழகத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, அறுதிப்பெரும்பான்மை பெற்ற ஒரேயொரு தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2016 தேர்தலில் வாக்களித்தவர்கள் 74.24% ஜெயலலிதா பெற்றது 40.88% வென்ற தொகுதிகள் 136. கலைஞரின் திமுக வென்ற தொகுதிகள் 98. தோற்றாலும் அவர் பெற்ற வாக்குகள் 39.85% குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர் தோற்றார். ஜெயலலிதா வென்றார். இருந்தாலும் ஜெயலலிதா தனித்து வென்றார். வாக்களித்தவர்களில் அவர் பெற்ற வாக்கு வீதம் 55.06%. எம்ஜிஆர் பெற்ற 54.43% ஐ விடச் சிறிது அதிகம். இம்முறை விஜய் தனித்து வென்றாலும் அறுதிப்பெரும்பான்மையினைப் பெறவில்லை. வாக்களித்தவர்களில் 41.01% வாக்குகள்தாம் பெற்றிருக்கின்றார். எதிர்க்கட்சிகள் 53.24% வாக்குகள் பெற்றிருக்கின்றார்கள்.
மேலும் நடந்து முடிந்த தேர்தலில் சென்னையில் திமுகவை ஓரங்கட்டிய வாக்காளர்கள், துணை முதல்வரும், அடுத்த திமுகவின் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைச் சட்டசபைக்கு அனுப்பியிருக்கின்றார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
நடந்து முடிந்த தேர்தல் திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டி விட்டதாக வட இந்தியர் சிலர் புளகாங்கிதமடைகின்றனர். அவர்கள் மறந்து விட்டது திராவிடக் கட்சிகளுக்கு 53.24 % மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதையும் , 34.9% பெற்ற விஜய் திராவிடக் கழகத்தின் தலைவரான தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்களை முன் வைத்து வாக்குகள் பெற்றவர் என்பதையும். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தமிழகத்தில் உடைப்பதென்பது பகற் கனவு. நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த பின்னடைவைக் கவனியுங்கள். நாம் தமிழர் சீமான் இனியாவது தமிழக மக்களின் முக்கியமான பிரச்னைகளை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழகத்தில் வீசப்போகும் தேர்தல் சூறாவளிகளில் காணாமல் போய் விடும் அபாயமே உண்டு.
* டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி
Subscribe to:
Post Comments (Atom)
யாழ்ப்பாணம் போவோமா?
[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...

No comments:
Post a Comment