Tuesday, December 16, 2025

எழுத்தாளர் தேவனின் (யாழ்ப்பாணம்) நாடகத்துறைப் பங்களிப்பு!


தேவன் (யாழ்ப்பாணம்) - சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் சிறந்த நாடகாசிரியர் என்பது எம்மில் எத்தனை பேருக்குத்  தெரியும்?

அதைத்தெரிவிக்கும், ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை  ஈழநாடு வாரமலரில் , கணேஷ் எழுதிய 'தேவன் ஒரு தனி இயக்கம்' என்னும் இக்கட்டுரை. இதில் அவர் தேவனுடன் நடத்தும் உரையாடலில்  , தேவனே தன் நாடக அனுபவங்களை விபரிக்கின்றார். அவற்றிலிருந்து பெற்ற தேவனுடைய நாடகத்துறை அனுபவங்கள் பற்றிய முக்கிய தகவல்கள்  இவை:
1. 1946இல்  'சிலம்புச் செல்வி'  நாடகம் 'வீர பத்தினி' என்னும் பெயரில் மேடையேற்றப்பட்டது. இதில் தேவனும் நடித்திருக்கின்றார் கோவலனாக. மாதவியாக நடித்தவர் வீரமணி.  எந்த வீரமணி என்பது தெரியவில்லை. 

2. சமூக நாடகங்கள்: 'ஆவதும் பெண்ணாலே', 'படிக்காத கடிதம்' தேவனுக்குப் பிடித்தவை. 'ஆவதும் பெண்ணாலே'  'மை நேம் இஸ் மேரி' என்னும் ஆங்கில நாவலின் தழுவல்.  'பெண் பாவை'  இன்னுமொரு மொழிபெயர்ப்பு நாடகம். இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'தமிழாக்கம் என்றும் சொல்லாது, தழுவல் என்றும் சொல்லாது, தமிழ் வடிவம் என்று இதைக்கூறலாம்' என்கின்றார். இக்கதையை த் தெரிவு செய்தவர் முன்னாள் யாழ் அரசாங்க அதிபராகவிருந்து, போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாகவிருந்த வேணன் அபயசேகரா.
1956இல் இதைத்தழுவி 'பத்தினியா  பாவையா' என்னும் நாடகத்தையும் எழுதியிருக்கின்றார்.  இது  ஹென்றிக் இப்ஸனின் 'பொம்மை வீடு' நாடகத்தின் தாக்கத்தால் எழுந்த நாடகம். அதை அவரே 'டோல்ஸ் ஹவுஸ்' என்னும் ஆங்கில நாடகத்தின் தமிழ் வடிவம்' என்கின்றார். உண்மையில் அது  நோர்வீஜிய மொழியில் ஹென்றிக் இப்ஸனால் எழுதப்பட்டு, ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நாடகம்.  இது பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய, தினகரன் பத்திரிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரைத்தொடரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது. வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது."

இந்த நாடகம் போல் 'கட்டுப்பாடாகவும், ஒழுங்காகவும் தான் வேறு நாடகம் தயாரிக்கவில்லை என்றும் மேற்படி உரையாடலின்போது தேவன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் நாடக ஆசிரியனுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லௌயென்றும் கவலைப்பட்டிருக்கின்றார். 

கலைக்கழகப் பரிசு பெற்ற தேவனின் நாடகம் 'தென்னவன் பிரம்மராயன்'. பொருட்செலவு ஏற்படும் என்பதால் இதனை அவரால் மேடையேற்ற முடியவில்லையென்றும் குறிப்பிட்டிருக்கின்றார். 

தேவன் தனது வெற்றி பெற்ற நாடகங்களாகக் குறிப்பிடும் நாடகங்கள்:

சிலம்புச்செல்வி, நள தமயந்தி. பாடசாலை நிதிக்காக நடத்தப்பட்ட இவை ரூபா 20,000 சேர்த்ததாகக்  குறிப்பிட்டிருக்கின்றார். அக்காலத்தில் அது மிகப்பெரிய தொகை.

கட்டுரையை முழுமையாக ஈழநாடு பத்திரிகையில் வாசிக்கலாம். நூலகம் இணையத்தளத்தில்  பத்திரிகைப் பிரிவில், ஈழநாடு பத்திரிகையைத்  தெரிவு செய்து , 22.6.1969 பிரதியைப் பாருங்கள். 

https://noolaham.net/project/421/42028/42028.pdf

No comments:

முகநூலிலும் சம்பாதிக்கலாம்!

நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது.  முகநூல் உண்மையில் பொருள...

பிரபலமான பதிவுகள்