Tuesday, July 2, 2019

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!



இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பதினொன்றாகி விட்டன. இந்நிலையில் போராட்டம், அமைப்புகள், தத்துவங்கள் பற்றிய ரகுமான் ஜான் அவர்களின் நூற் தொகுதியொன்று விரைவில் 'வடலி' பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ளது. இத்தொகுதியானது மூன்று நூல்களை உள்ளடக்கியதொன்றாகும்.

முன்னாட் போராளிகள் பலர் தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் அவர்கள் பார்வையில் அவரவர் இயக்கம் பற்றிய அல்லது அவர்களின் தப்பிப்பிழைத்தல் பற்றிய அனுபவங்களாகும்.

இவ்வகையில் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்', ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்', செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' போன்றவை முக்கியமானவை. ஆனால் இவையெல்லாம் முன்னாட் போராளிகளின் அனுபவங்களை அதிகமாகக் கூறுபவை. நடந்த தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம், அமைப்புகள், அவற்றின் தத்துவங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களல்ல. இந்நிலையில் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி வெளிவரவிருப்பது நல்லதொரு விடயம். ஏனெனில் இத்தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிகின்றேன்:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.
 ரகுமான் ஜானின் உரைகள், கட்டுரைகள் பலவற்றை முறையே கேட்டிருக்கின்றேன், வாசித்திருக்கின்றேன். அவை தர்க்கச்சிறப்பு மிக்கவையாக இருப்பதையும் அவதானித்திருக்கின்றேன். இந்நிலையில் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அமைப்புத்துறை, மூலோபாய தந்திரோபாயப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வுகள் தற்போதுள்ள சூழலில் தேவையானவை; முக்கியத்துவம் வாய்ந்தவை. 



ரகுமான் ஜானின் முடிவுகள் முடிந்த முடிவுகளாக இருக்க வேண்டியதில்லை. தர்க்கச்சிறப்பு மிக்கவையாக இருக்குமென்று எதிர்பார்க்கின்றேன். அவ்விதமிருப்பின் அவை தீவிர எதிர்த்தர்க்கங்களையும் வேண்டி நிற்பவை. எனவே வெளிவரவுள்ள இவரது நூற்தொகுதி இவ்வகையில் முதன்மையானது. வரவேற்கத்தக்கது. ஆரோக்கியமான எதிர்த்தர்க்கங்களை வேண்டி நிற்பது. எதிர்காலத்தில் இவ்விடயங்களில் மேலும் பல ஆய்வு நூல்கள் வெளிவருவதைத் தூண்டி நிற்பது.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று ஆய்வுக்கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட நூல்களாக இவை இருக்குமென்ற நம்பிக்கையை ஏற்கனவே வாசித்த இவரது கட்டுரைகள், கேட்ட உரைகள் தருகின்றன.

மேற்படி தொகுதியின் நூல்களை வாசிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன். தொகுதியின் அட்டைப்படங்கள் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.



'வடலி' பதிப்பகத்தினர் நூல்களை நேர்த்தியுடன் , சிறப்பாக வெளியிடுவதில் வல்லவர்கள் என்பதை இவ்வட்டைப்படங்கள் மீண்டுமொருமுறை நிரூபிக்கின்றன. தொகுதி சிறப்பாக வெளிவர நூலாசிரியருக்கும், பதிப்பகத்தினருக்கும் வாழ்த்துகள்.


No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்