- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கவிருந்த எனது உரையின் முழு வடிவமிது. அன்று நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக , விரிவாக உரையாட முடியவில்லை. -
1. 'டயற்போறா' பற்றிய சிந்தனைகள்...
இன்று புலம்பெயர் மக்களைக் குறிக்கப் பாவிக்கப்படும் டய்ஸ்போறா என்னும் ஆங்கிலச் சொல் ஆரம்பத்தில் புகலிடம் நாடி பல்வேறு திக்குகளாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களைக் குறிக்கப்பயன்பட்டது. ஆரம்பத்தில் யூதேயா யூதர்களின் தாயகமாக விளங்கியது. அது தற்போதுள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம். கி.மு.586இல் பாபிலோனிய மன்னர் யூதேயா மீது படையெடுத்தார். எருசலேமிலிருந்த முதலாவது தேவாலயத்தை அழித்தார். யூதர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார். யூதர்கள் தம்மிருப்புக்காகப் பல்வேறு திக்குகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். இதனைக்குறிக்கவே கிரேக்க மொழியில் இச்சிதறலை diaspeirō என்றழைத்தனர். இதன் அர்த்தம் சிதறல். இதிலிருந்து உருவான சொல்லே டயஸ்போறா (Diaspora).
இவ்விதமாகத் தங்கள் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தம் தாயகத்துக்கு வந்து குடியேறினார்கள். இரண்டாவது தேவாலயத்தைக் கட்டினார்கள். மீண்டும் கி.மு 63 - கி.பி 135 காலப்பகுதியில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பில் யூதர்களுக்கும், ரோமானியர்களுமிடையில் மோதல்கள் ஏற்பட்டன. ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சிகள் செய்தனர். அக்கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் யூதர்கள் அவர்களின் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். எருசலேமிலிருந்த அவர்கள்து இரண்டாவது தேவாலயம் அடித்து நொருக்கப்பட்டது.
பின்னர் மத்திய காலம் வரையில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லரின் நாசிப்படைகள் அவர்கள் மேல் புரிந்த இனப்படுகொலையை உலகு அறியும். இக்காலகட்டத்தில் யூதர்களின் தாயகம், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்பைத்தொடர்ந்து முஸ்லிம்களின் முக்கிய பிரதேசமாக மாறியது. பாலஸ்தீனியர்கள் என்றழைக்கப்படும் இஸ்லாமியர்களின் தாயகமாக அப்போதிருந்துதான் மாறியதெனலாம். ஒருகாலத்தில் யூதர்களின் பிரதேசமாக விளங்கிய அப்பகுதி, ரோமர்களின் வருகையை அடுத்து கிறிஸ்தவ மதத்தின் தாக்கத்துக்கும் உள்ளாகியது. பின்னர் இஸ்லாமியப்படையெடுப்பின் பின்னர் இஸ்லாமின் தாக்கத்துக்கும் உள்ளானது. அதே சமயம் அப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக்கொண்ட பூர்வகுடியினர் பலரும் மேற்படி படையெடுப்புகளால் யூதர்களாக, கிறிஸ்தவர்களாக, இஸ்லாமியர்களாகவும் மாறினார்கள் அல்லது புதுப்புதுக்கலாச்சாரத் தாக்கங்களுக்கும் ஆளானார்கள் எனலாம்.
அதன் பின்னர். பல நூற்றாண்டுகளாகப் பாலஸ்தீனிய மக்கள் வாழ்ந்த பகுதியில் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் மேற்கு நாடுகளின் திட்டத்தால் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அங்கிருந்து பாலஸ்தீனியர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். பாலஸ்தீனியர்கள் புகலிடம் நாடி திக்குகளாகச் சிதறடிக்கப்பட்டனர். இந்தச் சரித்திரப் பின்னணிதான் இன்று பாலஸ்தீனிய மக்கள் மீது இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு முக்கிய காரணம். அதனைத்தொடர்ந்து மேற்குக்கரை ஜோர்டானின் கட்டுப்பாட்டிலும், ஹாசாப்பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கத்தொடங்கின. இந்நிலையில் 1967இல் வெடித்த யுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் இப்பகுதிகளை ஆக்ரமித்து வைத்துள்ளது. அதன் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பாலஸ்தீனியர்கள் தொடுக்கும் கிளர்ச்சிகளே இன்றுவ\ரை தொடர்கிறது.
பழைய சரித்திரம் எதுவாக இருப்பினும் இன்றுள்ள பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டுமே யூதர்கள், முஸ்லிம்களுக்கு முக்கியமான பூமி. வரலாற்று முக்கியத்துவம் மிக்க பூமி. ஈரினத்தவர்களும் இணக்கப்பாட்டுடன் இரு நாடுகளாகப் பிரிந்து, சமாதானத்துடன் வாழ்வதே அனைவருக்கும் பயன்தரத்தக்கது.
டயஸ்போறா என்னும் சொற்பதம் ஆரம்பத்தில் இருப்புக்காகத்தம் மண்ணில் நிகழ்ந்த அடக்குமுறைகளிலிருந்து தப்புவதற்காக நானா திக்குகளையும் நோக்கிச் சிதறடிக்கப்பட்ட மக்களைக் குறிக்கப்பயன்பட்டாலும், அதாவது புகலிடம் நாடிச் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்த மக்களைக் குறிக்கப்பயன்பட்டாலும் இன்று அவ்வாறு புகலிடம் நாடிய மக்களை மட்டும் குறிக்கும் ஒரு சொற்பதம் அல்ல. இன்று அது பல்வேறு காரணங்களுக்காகத் தம் சொந்த மண்ணை விட்டுப் பிறநாடுகளுக்குச் சென்று காலூன்றும் மக்களைக் குறிக்கப்பாவிக்கப்படுகின்றது. அதாவது புலம்பெயரும் மக்களைக்குறிக்கப் பாவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்கும் ஒரு சூழலில் , இன்றும் புகலிடம் , புலம்பெயர்தல் ஆகியவற்றையிட்டுக்குழப்பம் அடைகின்றார்கள் சிலர். ஆச்சரியமளிக்கின்றது. புகலிடம், புலம்பெயர்தல், புலம் பற்றி மேலும் சிறிது நோக்குவதும் பயன் மிக்கதே.
2. புலம், புகலிடம், புலம்பெயர்தல் பற்றி....
பொதுவாகப் பலர் நிலம் என்றால் சொந்த மண் என்றும், புலம் என்றால் புகுந்த மண் என்றும் கருதுகின்றார்கள். அது தவறு. புலம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. காந்தப்புலம், மின் புலம் என்னும்போது காந்தவிசை அல்லது மின்விசை செயற்படும் பகுதியைக் குறிக்க அது பயன்படுகின்றது. திக்குகளைக்குறிக்கவும் பயன்படுகின்றது. சங்க இலக்கியத்தில் நிலம் என்பதைக் குறிக்கவே புலம் என்னும் சொல் பாவிக்கப்படுகின்றது.
தம் சொந்த மண்ணை விட்டுத் புகாருக்கு இடம் பெயர்ந்த யவன வணிகர்களைக் குறிக்கச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ 'கலம் தரும் தெருவில் புலம் பெயர் மாக்கள்' என்று வர்ணித்திருப்பார். குறுந்தொகையில் செம்புலப் பெயனீரார்
யாயும் ஞாயும்
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை - 40) என்று விபரிப்பார்.
'செம்புலப் பெயனீர் போல' என்பதன் அர்த்தம் செம்மண் நிலத்தில் பெய்த மழைபோல் என்று வரும். இந்த அர்த்தத்தில் புலம் என்பது நிலம் என்பதைக் குறிக்கும்.
பட்டினப்பாலை
'புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம்' என்று காவிரிபூம்பட்டினத்தைக்குறிக்கும்.
இங்கெல்லாம் புலம் என்பது நிலத்தைக்குறிக்கவே பயன்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்கள், புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்தவர்கள்.. புலம்பெயர்ந்தவர்கள் என்னும்போது தாம் வாழ்ந்த புலத்தை விட்டுப் பெயர்ந்தவர்கள் என்று கூறலாம். அதே சமயம் இருப்பு கேள்விக்குறியானதொரு நிலையில் வாழுவதற்கு ஒரு நிலம் நாடிப் பெயர்ந்தவர்கள் என்னும் அர்த்தத்திலும் புலம் நாடிப் பெயர்ந்த தமிழர்கள் என்னும் அர்த்தத்திலும் புலம்பெயர் தமிழர்கள் என்னும் பதத்தினைப் பாவிக்கலாம். இங்கு புலம் என்பது இருந்த நிலத்தைக் குறிக்கவில்லை. புகலிடம் நாடிப் புகுந்த நிலத்தைக் குறிக்கிறது. எனவே புலம் பெயர் தமிழர்கள் என்பதன் அர்த்தமாக வாழ்ந்த புலம் விட்டு அதாவது நிலம் விட்டுப் பெயர்ந்தவர்கள் என்பதையும் கொள்ளலாம். வாழுவதற்கு நிலம் (புலம்) நாடிப் பெயர்ந்தவர்கள் என்பதனையும் கொள்ளலாம்.
3. புலம்பெயர்தலும் , டயஸ்போறாவும் பற்றி..
'புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்' என்னும் என் கட்டுரையில் டயஸ்போறா பற்றிக் குறிப்பிடுகையில் 'இன்று அது பல்வேறு காரணங்களுக்காகத் தம் சொந்த மண்ணை விட்டுப் பிறநாடுகளுக்குச் சென்று காலூன்றும் மக்களைக் குறிக்கப்பாவிக்கப்படுகின்றது. அதாவது புலம்பெயரும் மக்களைக்குறிக்கப் பாவிக்கப்படுகின்றது.' என்று கூறினேன். இது என் கருத்து மட்டுமல்ல. இத்துறையில் குறிப்பாக உலகமயமாக்கல், குடியேற்றம், கலாச்சாரம் போன்ற துறைகளில் தம் ஆய்வுகளைத் தொடர்ந்த, அவை சம்பந்தமாக ஆய்வு நூல்களை எழுதிய அறிஞர்களின், சிந்தனையாளர்களின் சிந்தனைகளின் விளைவுகளும் ஆகும். புலம்பெயர் இலக்கிய, புகலிட இலக்கியச் சிறுகதைகளின் பக்கம் கவனத்தைத் திருப்புவதற்கு முன்னர் இச்சிந்தனைகள் பற்றியும், சிந்தனையாளர்கள் பற்றியும் கவனத்தைத் திருப்புவது மிகவும் பயனுடையதாகவிருக்கும் என்று கருதுவதால் அவர்கள் பற்றியும், அவர்களின் சிந்தனைகள் அல்லது கோட்பாடுகள் பற்றியும் சிறிது பார்ப்போம்.
இத்துறையில் கவனம் செலுத்திய அறிஞர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரையும் இங்கு குறிப்பிடுவது சாத்தியமற்றது. இவர்களில் என் கவனத்தை ஈர்த்த மூவரைப்பற்றியும் அவர்கள் சிந்தனைகள் பற்றியும் சிறிது பார்ப்போம்.
3.1 ரொபின் கொகென் Robin Cohen
ரொபின் கொகென் Robin Cohen உலகமயமாக்கல், குடியேற்றம், புகலிடம் நாடிய புலம்பெயர்தல் போன்றவற்றில் கவனத்தைத் திருப்பிய சமூக அறிஞர். Social scientist. இவர் ஜோகன்ஸ்பெர்க், தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர். தென்னாபிரிக்கா, நைஜீரியா, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய இராசியத்திலுள்ள பல்கலைக்கழங்களில் , ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட, பணி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடியேற்றம், Global diasporas: an introduction, சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் - ஓர் அறிமுகம் என்னும் இவரது நூல் இத்துறையில் முக்கியமானது.
இவர் டயஸ்போறா பற்றிக் குறிப்பிடுகையில் புலம்பெயர்ந்தவர்கள் பற்றியே குறிப்பிடுகின்றார். இவ்விதம் சமூக, அரசியல், பொருளாதாரம் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்களை இவர் பின்வருமாறு வகைப்படுத்துவார்:
1. பாதிக்கப்பட்டவர்களின் புலம் பெயர்ந்தவர்கள்.
2. தொழில்வாய்ப்புக்காகப் புலம் பெயர்ந்தவர்கள்
3. வர்த்தகத்துக்காகப் புலம் பெயர்ந்தவர்கள்
4. கலாச்சாரப் பேணலுக்காகப் புலம்-பெயந்தவர்கள்
இங்கு இவர் கூறும் முதலாம் பிரிவினரே புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர்கள். ஆக, புலம்பெயர்ந்தவர்களில் புகலிடம் நாடி புலம்பெயர்ந்தவர்களும் அடங்குவர். புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர்கள் படைக்கும் இலக்கியம் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு பகுதியே என்பதை இதன் மூலம் உய்த்துணரலாம். இது தர்க்கபூர்வமான சிந்தனை. என் சிந்தனையும் இத்தகையதே.
3.2 ஹோமி கே பாபா Homi K. Bhabha
ஹோமி கே பாபா இத்துறையில் முக்கியமான அறிஞர்களில் இன்னுமொருவர். த லொகேஷன் ஆஃப் கல்ச்சர் (1994) முக்கியமான இவரது நூல்.
பிற்பட்ட காலனித்துவ ஆய்வாளர். டயாற்போறாவில் அடையாளம் - Identity, கலாச்சாரம் , இனக்குழுக்கிடையிலான பரஸ்பரச் செயற்பாடுகள் பற்றிய இவரது ஆய்வுகள் முக்கியமானவை. ( 1949 ஆம் ஆண்டில் மும்பையில் பிறந்த பாபா, முதலில் இந்தியாவில் மற்றும் பின்னர் இங்கிலாந்தில் தனது கல்வியை முடித்தார், அங்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். தற்போது, அவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மனிதியக் கலைத் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.)
இவர் இனக்குழுக்களின் அடையாளமானது பரிணாமம் அடையும் ஒன்றாக, மாறுதலடையுமொன்றாகக் காண்கின்றார்.
முக்கிய டயற்போராக் கோட்பாடுகள் அல்லது கருதுகோள்கள்:
1. கலவை (Hybridity): - இது பாபாவின் மிக முக்கியக் கருத்து. வெளிநாட்டு இனக்குழுக்களின் அடையாளங்கள் தாய்நாட்டின் மற்றும் தங்கி இருக்கும் நாட்டின் கலாச்சாரக் கூறுகளை இணைத்த ஒரு கலவையாகவே மாறுகின்றன. இதன் விளைவாகப் புதிய, இணைந்த கலாச்சார அடையாளங்கள் உருவாகின்றன. Cultural Identities இது "மூன்றாம் இடம்" (Third Space): எனப்படும் இடத்தை உருவாக்குகிறது, அங்கு புதிய கலவையான அடையாளங்கள் தோன்றுகின்றன, இதன் மூலம் கலாச்சாரங்களுக்கிடையே உள்ள தூய கலாச்சாரம் அதாவது கலாச்சாரத்தனித்துவம் கேள்விக்குள்ளாகின்றது. கலாச்சார அடையாளங்கள், தேசிய அடையாளங்கள், இன அடையாளங்கள் புகுந்த நாட்டிலுள்ள கலாச்சார, தேசிய, இன அடியாளங்களுடன் கலந்து , ஒன்றையொன்று அழிக்காமல், கலவையான கலாச்சார, இன, தேசியக்கூறுகளை உள்ளடக்கியதாக மாறுதலடைகின்றன.
அதே நேரம் புகுந்த நாட்டின் மொழி, கலாச்சாரம் போன்ற அடையாளங்களை அவற்றைப்போல் பின்வற்றுவதற்கு முயற்சி செய்கின்றன. உதாரணத்துக்குக் கனடா நாட்டை எடுத்துக்கொண்டால் அங்குள்ள ஆங்கிலேயர்கள் போல் பேசுவதற்கு, கலாச்சார அம்சங்களைப் பின்பற்றுவதற்கு முயற்சி செய்யும்போக்கை பாபா மிமிக்ரி செய்வது என்கின்றார். அப்படிச் செய்தாலும் உதாரணத்துக்கு ஆங்கிலத்தைக் கனேடிய ஆங்கிலேயர்கள் போல் பேசுவதற்கு முயற்சி செய்தாலும் அதில் 1005 வெற்றியடைவதில்லை. உச்சரிப்பு எப்போதும் பூரணத்துவமாக இருப்பதில்லை. தனித்துவம் மிக்கதாக அமைந்து விடும் சாத்தியமேயுள்ளது.
அதே சமயம் தாய் மண்ணின் மீதான உணர்வுகள், புகுந்த மண் மீதான உணர்வுகள் இரண்டக நிலையினைத்தோற்றுவிக்கின்றன, இப்[போக்கை அவர் இருபக்கப் போக்கு அல்லது இரண்டகப்போக்கு (Ambivalence): என்கின்றார் பாபா.
அடுத்தது தாய் மண்ணிலும் நிலவிய நிலைமையால் அங்கும் பூரண உரிமையை புகலிடம் நாடிப்புலம்பெயரும் ஒருவரால் உணர முடிவதில்லை. புகுந்த நாட்டிலும் அங்கு நிலவும் கலாச்சார, மொழி, நிறவேறபாடு, இன வேறுபாடு போன்றவற்றல் பூரண உரிமையை உணர முடிவதில்லை. இவ்விதமான போக்கை Unhomeliness என்பார் பாபா.
த லொகேஷன் ஆஃப் கல்ச்சர் (1994) எனும் தனது குறிப்பிடத்தகுந்த நூலில் பாபா இந்த கருத்துக்கள் டயாஸ்போரா அனுபவங்களை எவ்வாறு வடிவமைக்கின்றன, அடையாளங்களைப் பாதிக்கின்றன என்பதை ஆராய்கிறார். டயாஸ்போரா சூழலில் உள்ள அடையாளம் நிலையானதொன்றல்ல. எப்பொழுதும் அது மாறிவரும் ஒன்றாகவே உள்ளது, ஏனைய கலாச்சாரம், மொழி போன்ற தொடர்புகள் தரும் அனுபவங்களால் அது மாறிவரும் ஒன்றாக அவர் கருதுவார்.
3.3. எட்வேர்ட் சயிட் Edward Said
எட்வேர்ட் சஜீட்டின் ஒருவரின் நாடு கடத்தல் பற்றிய எண்ணங்கள் முக்கியமானவை, அந்த நாடு கடத்தல் கட்டாயப்படுத்தலாக இருக்கலாம். அல்லது சூழல்கள் காரணமாக ஒருவரின் தேர்வாக இருக்கலாம். இவ்விதமாக வேரோடு ஒருவர் சொந்த மண்ணை விட்டு நீங்குவதால் , தூக்கியெறியப்படுவதால் ஏற்படும் இழப்பு, இழந்தவை பற்றிய கழிவிரக்கம், உளவியற் பாதிப்பு, வேறுபட்ட கலாச்சாரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதறிக்கப்பட்ட அடையாள உணர்வுகள், எல்லை கடந்த தேசிய உணர்வுகள் ஏற்படுத்தும் உளவியற் பாதிப்புகள், வலி, புகும் மண் மீதான சொந்தமற்ற உணர்வு, அந்நியத்தன்மை மிக்க உணர்வுகள் போன்றவை பற்றியவற்றை ஆராயும் 'நாடு கடத்தல் மீதான பிரதிபலிப்புகள்' (Reflections on Exile) என்னும் அவரது கட்டுரையும் முக்கியமானது.
பாலஸ்தீன அமெரிக்கராகவிருந்ததால் அவரால் சுயமாகவே இழந்த மண் மீதான உணர்வுகளை அனுபவிக்க முடிந்தது. அவரது சொந்த அனுபவங்களே அவரது மன்ணை இழத்தல் பற்றிய கருத்துகளுக்கு முக்கிய ஆதாரங்களாகவிருந்தன.
நாடொன்றில் நிலவும் பல்வகை அடக்குமுறைகள் காரணமாகப் பல்வேறு திக்குகள் நோக்கிச் சிதறடிக்கப்பட்ட மக்களைப் இவ்விதம் அறிஞர்கள் பலரும் சிந்தித்துள்ளார்கள். இத்தருணத்தில் இதனை விளக்கும் நம்மூர்க் கவி வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.
வழி தவறியவன் - வ.ஐ.ச.ஜெயபாலன் -
“யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்க்பர்ட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில்..!”
இவற்றிலிருந்து புலம்பெயர் இலக்கியத்தின் அல்லது டயஸ்போறா இலக்கியத்தின் முக்கியமான பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. கலாச்சாரங்களின் கலவை. அதனால் ஏற்படும் புதிய கலாச்சாரம்
2. சொந்த மண்ணிலிருந்து திக்குத்திக்காகச் சிதறடிக்கப்படுதலும், அதனால் ஏற்படும் வலியு. நாட்டு நிலைமை காரணமாக உயிர்தப்ப எங்காவது சென்றால் போதுமென்றதன் விளைவே திக்குத்திக்காகச் சிதறுவதன் காரணம். இவ்விதம் சட்டவிரோதக் குடிகளாக, அகதிகளாகப் பிற நாடுகளில் கால்பதிக்கையில் எதிர்கொள்ளும் விளைவுகள் பற்பல. நினைத்தபடி பயணம் செய்ய முடியாது. சொந்த நாட்டுக்கும் இன்ப, துன்பங்களில் பங்கு பற்றச் செல்ல முடியாது. என்ன நடந்தாலும் தொலைவிலிருந்து ஏற்படும் துயர வலியினைத் தாங்கிக்கொள்வது ஒன்றே வழி.
3. வலி சுமந்து வாழ்தல். நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்திய வலியுடன் புதிய மண்ணில் இருப்புக்காகப் போராடல். நடந்தவற்றை மறப்பதென்பது முடியாதது. இருக்கும்வரையில் தொடர்ந்திருக்கும் வலி.
4. அடையாளச் சிக்கல் - நிறம், மொழி, கலாச்சாரம் போன்ற காரணங்களால் ஏற்படும் அடையாளச் சிக்கல், இவ்விதமான பல்கலாச்சாரங்களின் தாங்கங்களால் துண்டுகளாக்கப்படும் அடையாளங்கள். புதிய, பழைய சூழல்களுக்குள் வைத்து எவ்விதம் தன்னை அடையாளப்படுத்தல் என்பது மன உளைச்சலைத்தருமொன்று.
5. முதியவர் நிலை, பெண்கள் நிலை - கலாச்சார, பொருளியல் சூழல் - இருந்த மண்ணில் முதியவர்கள், பெண்கள் இருந்த நிலை வேறு. புதிய கலாச்சாரத்தில் உள்ள நிலை வேறு. பொதுவாக மேனாடுகளில் பெண்கள், முதியவர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் அவ்விதம் செயற்பட முடியாத வகையிலும் புதிய, பழைய கலாச்சாரத் தாக்கங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் உண்டு.
5. சட்டங்கள் - குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் வன்முறை சம்பந்தமான சட்டங்கள் முக்கியமானவை. குறிப்பாகக் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் கலாச்சாரரீதியாகத் தேவையற்ற விளைவுகளையும் ஏற்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. உதாரணமாகப் பிறந்த மண்ணில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குழந்தைகளைக் கையாடல் என்பது புதிய கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்படாதவையாக இருக்கக் கூடும். இதனைப் புரியாமல் செயற்படுவதால் குடும்பங்களில் தேவையற்ற மன உளைச்சல்கள், மனப்பிரிவுகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன.
6. கழிவிரக்கம் - இழந்ததைத் தொடர்ந்து எண்ணுவதும், ஏங்குவதும் , முக்கியமான அம்சங்கள். அதே நேரத்தில் நினைவில் இருக்கும் இழந்த மண்ணின் இருப்பு என்பது பல்வேறு வகைகளில் மாற்றமடைந்திருக்கக் கூடும், ஆனால் அவற்றைக் கணக்கிலெடுக்காது ஏங்குவதும், நினைப்பதும் கழிவிரக்க உணர்வுகளின் முக்கிய அம்சங்கள்.
7. புதிய சூழல் தரும் சுதந்திரம் குறிப்பாகக் கருத்துச் சுதந்திரம், சொந்தக்காலில் நிற்கும் சுதந்திரம், பெண் சுதந்திரம் சொந்த நாட்டில் நிகழும் மனித உரிமைகளைப்பற்றி, சமுதாயச் சீர்கேடுகளைப்பற்றி அங்கு சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலை இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் மேனாட்டுச்சூழலில் சுதந்திரமாகச் செயற்படுவதற்குத் தடைகள் அதிகமில்லை. பெண்கள் சுதந்திரமாகத் தம் உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது.. பாலியல் வேட்கை உட்பட. சங்கப்பாடல்களில் ஆண்கள் மட்டுமே பெண்களின் உறுப்புகளை வர்ணித்தார்கள். வெகுசனப் படைப்புகளிலும் கூட ஆண்களே பெண்களை வர்ணித்தார்கள். அந்நிலை புகலிடத்தில் மாறியதைக் காணா முடிகிறது. பெண்களின் உரிமைக்குரல். ஓங்கி ஒலிக்கிறது புலம்பெயர் சூழலில்.
8. வேர்களைத் தேடி அலையும் வருங்காலத்தலைமுறை.
9. சாதி போன்ற சமூகச் சீர்கேடுகள் தொடரும் போக்கையும் காண்கின்றோம்.
கனடாச் சிறுகதைகள் பற்றி..
கனடாச்
சிறுகதைகள் பற்றி கலாநிதி மைதிலி தயாநிதி ஆய்வுக்கட்டுரையொன்றினை
'கனடாவில் சிறுகதை இலக்கியம்- ஒரு பார்வை!' என்னும் தலைப்பில்
எழுதியிருக்கிறார். கலாநிதி சு.குணேஸ்வரன் புலம்பெயர் தமிழர்களின்
புனைவுகள் பற்றி, நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் பற்றி நிறையவே
எழுதியிருக்கின்றார். முனைவர் தாரணி அகில், முனைவர் ஞானசீலன் ஜெயசீலன்,
எழுத்தாளர்கள் யமுனா ராஜேந்திரன், ஜெயமோகன், வ.ந.கிரிதரன், கே.எஸ்.சுதாகர்,
அகில், குரு அரவிந்தன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, கலை, இலக்கிய
விமர்சகர் வெங்கட் சாமிநாதன், திறனாய்வாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியம் எனப் பலர்
இலங்கைத் தமிழரின் புலம்பெயர்/புகலிடப் புனைவுகளைப்பற்றி
எழுதியிருக்கின்றனர். இலங்கை, இந்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள்
ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்கள்.
கனடாவில் வெளியான, வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள்...
கனடாவில்
தமிழ் இலக்கியம் செழுமையடைய இங்கிருந்து வெளியான, வெளியாகும்
பத்திரிகைகள், சஞ்சிகைகள், மற்றும் இணைய இதழ்கள், யு டியூப் சானல்கள்
முக்கிய பங்கினை ஆற்றியிருக்கின்றன. ஆற்றி வருகின்றன. காலம், தேடல், ழகரம்,
தாயகம் (பத்திரிகை & சஞ்சிகை), கூர் (ஆண்டு மலர்), நான்காவது
பரிமாணம், உரையாடல், அறிதுயில், மறுமொழி, இலக்கியவெளி முக்கியமான சஞ்சிகைகள், . இதுபோல் வைகறை,
உதயன், தாய்வீடு, தமிழோசை, சுதந்திரன், ஈழநாடு, செந்தாமரை, மஞ்சரி போன்ற
பத்திரிகளும் சிறுகதை இலக்கியத்துக்குப் பங்காற்றியுள்ளன. இவை முழுமையான
பட்டியல்கள் அல்ல. இணைய இதழான பதிவுகள் இதழும் கனடாத் தமிழ்ச் சிறுகதை
இலக்கியத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
அ.முத்துலிங்கம்,
தேவகாந்தன், குறமகள், ஜோர்ஜ் இ,.குருஷேவ், சுமதி ரூபன், ஶ்ரீரஞ்சனி,
செழியன், வ.ந.கிரிதரன், அகில், குரு அரவிந்தன், பா.அ.ஜயகரன், அளவெட்டி
சிறுசுக்கந்தராசா, மைக்கல் (மொன்ரியால்), டானியல் ஜீவா, பவான், அ.கந்தசாமி,
மெலிஞ்சி முத்தன், கடல்புத்திரன், 'அசை'சிவதாசன், வீரகேசரி மூர்த்தி, கனடா
மூர்த்தி, மொனிக்கா, ஆனந்தபிரசாத், செழியன், நிரூபா, த.அகிலன், இளங்கோ
(டி.செ.தமிழன்), இரா.சம்பந்தன், அகணி சுரேஷ், நிலா குகதாசன், சிவநயனி
முகுந்தன், ரவீந்திரன், கமலா பெரியதம்பி, இவ்விதம் பலர் கனடாவில்
சிறுகதை வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளார்கள். இது முழுமையான பட்டியல்
அல்ல. கனடாவில் வெளியான சிறுகதைத்தொகுப்புகள் பற்றிய பட்டியல்
இக்கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது. குரு அரவிந்தனின் கட்டுரையின்
அடிப்படையில் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிய பட்டியலும் தரப்பட்டுள்ளது. இவை
முழுமையான பட்டியல்கள் அல்ல. பட்டியலில் இல்லாத தொகுப்புகள் பற்றிய
விபரங்கள் அனுப்பி வையுங்கள். அவை சேர்க்கப்படும்.
கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் சில உதாரணங்கள்
இங்கு
நான் உதாரணங்களுக்காகச் சில சிறுகதைகளைப்பற்றிக் குறிப்பிடுகின்றேன்.
மிகவும் விரிவாக, கனடாவில் வெளியான அனைத்துச் சிறுகதைகளையும் அதிகமாக
வாசிக்காத சூழலில் என் கவனத்தை ஈர்த்த முக்கிய கதைகள் சிலவற்றை இங்கு
குறிப்பிடுகின்றேன். இதனைக் கவனத்தில் வைத்திருங்கள். எதிர்காலத்தில் என்
வாசிப்பனுபவத்தைப் பொறுத்து இது மேலும் விரிவடையும்.
அ.முத்துலிங்கத்தின் 'புதுப்பெண்சாதி'
எழுத்தாளர்
அ.முத்துலிங்கம் தொழில் காரணமாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும்
சென்றவர்.,அவற்றின் பின்னணியில் கதைகள் எழுதியவர்,. இவ்விதம் அவர்
திரிந்துகொண்டிருந்தபோதும் அவரால் பிறந்த மண்ணை மறக்கவே முடியவில்லை. ஊர்
பற்றிய , அவரது நெஞ்சில் நிலைத்து விட்ட நினைவுகளையும் அவர் காவிச்சென்றார்
என்பதைத்தான் அவரது பெரும்பாலான கதைகள் புலப்படுத்துகின்றன. புலம்பெயர்
இலக்கியத்தில் இது ஒரு பொதுவான பண்பு. நினைவுகளைக் காவிச்செல்லும்
ஒட்டகங்கள்தாம் புலம்பெயர் மனிதர்கள். அ.முத்துலிங்கமும் அதற்கு
விதிவிலக்கானவர். ஊர் நினைவுகளை, ஊர் ஆளுமைகளை மையமாகக்கொண்டு அவர் எழுதிய
கதைகள் பல இதனைத்தான் புலப்படுத்துகின்றன. புகலிடம் நாடிப்
புலம்பெயர்ந்தவர் அல்லர் அவர். பணி நிமித்தம் புலம்பெயர்ந்தவர். ஆயினும்
அவர் நிலத்தின் நிகழ்வுகள் அவரையும் பாதிக்கின்றன.அதன் விளைவுகள்,
பாதிப்புகள் அவர் கதைகள் பலவற்றில் தெரிகின்றன.
அவரது
புதுப்பெண்சாதி - மறக்க முடியாத கதை. என்னைப்பொறுத்தவரையில்
அ.முத்துலிங்கத்தின் மிகச்சிறந்த கதையாக இதையே குறிப்பிடுவேன். கதை
இதுதான். பத்மலோசனி என்னும் படித்தவள். கணிதம் ,ஆங்கிலம் எல்லாவற்றிலும்
விருதுகள் வாங்கியவள். அழகானவள். அழகிய கண்களுக்குச் சொந்தக்காரி. ஊரில்
கடை வைத்திருக்கும் ராமநாதனுக்கு மனைவியாக வருகின்றாள், அன்றிலிருந்து அவள்
ஊருக்கு ராமநாதனின் புதுப் பெண்சாதி என்பதைக்குறிக்கப் புதுப்பெண்சாதி
என்றழைக்கப்படுகின்றாள். கணவனுக்குத் துணையாகக் கடையில் வேலை செய்கிறாள்.
அவளது பெயர் யாருக்கும் தெரியாது. புதுப்பெண்சாதி அம்மா, புதுப்பெண்சாதி
அக்கா, புதுப்பெண்சாதி என்றே அழைக்கப்படுகின்றாள்.
பல வருடங்கள்
கழித்து அவர்களுக்கு அற்புதம் என்னும் பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை
வளர்ந்து ஒருவனைக் காதலித்து, போராளியான அவன் போரில் மடிந்துவிடவே,
துயரம் தாங்காமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து விடுகின்றாள். சோகம்
அவளை இவ்விதம் தாக்குகின்றது.
இவ்விதம் வாழ்வு செல்கையில்
இந்தியப்படையினரின் வருகை நிகழ்கின்றது. படையினர் அவளது கடைக்கு வந்து
பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒருமுறை முட்டைப்படம் போட்ட ஷாம்புவைச்
சாப்பிடலாமா என்று படையினன் கேட்டிருக்கின்றான். மொழி தெரியாததால்
அதைத்தவறுதலாகப் புரிந்த பெண்சாதி யேஸ்.யேஸ் என்றிருக்கின்றாள்.
அதைக்கொண்டுபோய்க் குடித்த படையினன் பேதியாகிக்கிடந்திருக்கின்றான். இவள்
மேல் சந்தேகப்பட்ட படையினர் வந்து விசாரணைக்காக அவளைக் கைது செய்து
அழைத்துச் செல்கின்றனர். போகும்போது அவள் ஊரவரிடம் 'ராசமக்கா, என்ர ஆடு,
என்ர கோழிகள் பத்திரம்' என்று சொல்லிச் சென்றாள்., அதுவே அவளைக்
கடைசியாகப் பார்த்த தருணம். அதன் பின் அவளை எல்லோரும் மறந்து
போகின்றார்கள். போரில் வீடிழந்த தம்பதியினர் புதுப்பெண்சாதியின் கடையைச்
சொந்தமாக்கி வாழத்தொடங்குகின்றனர்.
கதையை வாசிக்கும் எவருக்கும்
புதுபெண்சாதிக்கு என்ன நடந்தது என்னும் கேள்வி மன உளைச்சலைத்
தந்துகொண்டேயிருக்கும், அதற்கு விடை ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. அதுவே
,அந்தத்துயரே புதுப்பெண்சாதியை மனத்தில் நிலைத்து நிற்கச் செய்து
விடுகிறது. இக்கதையைப் படித்து முடித்ததும் எத்தனை கனவுகளுடன்
அந்தப்புதுப்பெண்சாதி கணவனுடன் ஊருக்கு வந்தாள். வாழ்க்கையைத் தொடங்கினாள்.
ஏன் அவளை இவ்விதம் துயரம் தாக்கியது? அவளுக்கு என்ன நடந்தது? அவள்
யாருக்கு என்ன தீங்கு செய்தாள்? 'முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்
தெற்கிலுள்ள ஊரொன்றிலிருந்து மணமுடித்து கணவன் ஊர் வந்து வாழ்க்கையை
ஆரம்பித்த புதுப்பெண்சாதியை எல்லோரும் மறந்துவிட்டார்கள்' என்று கதையை
முடிப்பார் கதாசிரியர் அ.முத்துலிங்கம். ஆனால் இக்கதையை வாசித்ததிலிருந்து
இன்று வரைப் புதுப்பெண்சாதியை என்னால் மறக்கவே முடியவில்லை.
தேவகாந்தன் - ஊர் & சதுரக் கள்ளி
ஒரு
காலத்தில் ஊர் என்றால் அங்கு நிலவிய சமூகப் பிணைப்புகள் நினைவுக்கு வரும்,
ஊர் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் முடிந்தபின் செல்லும் ஒருவரின் ஊர்
பற்றிய மனச்சித்திரம் எவ்விதம் சீர்குலைகிறது என்பதை விபரிக்கும்
தேவகாந்தனின் சிறுகதையான ஊர் நல்லதொரு சிறுகதை. நீண்ட சிறுகதையல்ல. ஆனால்
கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. போர்ச்சூழல் புதியவர்களை ஊருக்குப்
புலம்பெயர வைத்திருக்கின்றது. அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக்கூட
கவனிக்காத ஊர் அவருக்கு ஊர்பற்றிய மனச்சித்திரத்தைச் சிதைக்கப் போதுமானது.
இங்கு இருவிதமான புலம்பெயர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று புகலிடம்
நாடிய வெளிநாட்டுப் புலம்பெயர்வு. இன்னுமொன்று உள்நாட்டுப் புலம்பெயர்வு.
ஒரு காலத்தில் ஊரில் சமூக வாழ்வு சிறப்பாக இருந்தது. ஒருவருக்கொன்றென்றால்
அது எல்லோருக்கும் தெரியும். ஓடிச்சென்று உதவுவார்கள். அதை ஊர் திரும்பும்
அவரால் காண முடியவில்லை. யுத்தம் அதனைச் சிதைத்து விட்டிருந்தது. இதனை
விபரிக்கும் கதைதான் 'ஊர்'.
சதுரக்கள்ளி சிறுகதையும் புலம்பெயர்
தமிழர் ஓருவரின் ஊர் திரும்பலையும், அச்சமயம் அடையாளங்கள் இழந்து இருக்கும்
அவரது வீட்டையும், அயலவரான பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட பிணக்கு பற்றியும்,
அதன் விளைவாக குடும்பங்கள் பிரிபட்டதையும், வசியம் செய்து விட்டாலுமென்ற
பயத்தால் அவரின் தந்தையார் வேலிக்கருகில் வளர்த்த சதுரக்கள்ளி பற்றியும்,
தந்தையின் இறப்பு பற்றியும், விபரிக்கும். வீட்டின் ஜன்னல், நிலை
பாகங்களையெல்லாம் திருடிச் சென்றுவிட்டார்கள். வீடு சென்றவர் அமைதி
திரும்பட்டும் வீட்டை என்ன செய்வது என்பது பற்றிச் சிந்திக்கலாம் என்று
திரும்புகின்றார்.
சதுரக்கள்ளி பின்னர் அவர் கனவுகளில் தொடர்வது
வழக்கமாகிவிட்டது. கதை புகலிடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. அவருக்கு
ஏற்படும் சதுரக்கள்ளிக் கனவு எல்லா நினைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையையும் அதைப்பார்த்துக்கொண்டிருந்த
உலகையும் கதை சாடுகின்றது. ஒரு காலத்தில் மான் மரைகளால் வன்னி மண்ணின்
காடுகள் நிறைந்திருக்கின்றன. இன்று சதுரக்கள்ளிகளால் நிறைந்திருக்கின்றது.
கொத்துக்கொத்தாக மக்கள் கொன்றழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
கதை
முள்ளிவாய்க்கால் யுத்தத்தைச் சாடுகின்றது. யுத்தச் சூழல் எவ்விதம் பிறந்த
மண்ணைச் சீரழித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அதே சமயம் யாழ்
தமிழருக்கிடையில் நிலவிய வேலிச்சண்டைகளையும் விமர்சிக்கவும் தவறவில்லை.
தேவகாந்தன்
பல்வேறு வகையான இலக்கிய யுக்திகளையும் கையாளத்தவறுவதில்லை என்பதற்கோர்
எடுத்துக்காட்டு அவரது 'பின்னல் பையன்' சிறுகதை. கதையை வாசித்து முடிக்கும்
எவருக்கும் பின்னல் பையன் என்னும் சித்திரம் மனத்தில் பதிந்து விடும்.
மாந்திரீக அல்லது மாய யதார்த்தவாதப் பாணியில் பின்னப்பட்ட கதையாக நான் இதனைக்
கருதுவேன். இருள், ஒளியை வைத்துப் பின்னப்பட்ட கதை. கதைப்பின்னல் வாசர்கள்
மத்தியில் பல்வகை ஊகங்களை ஏற்படுத்தும் தன்மை மிக்கது. ஆனால் அனைவர்
சிந்தையிலும் பின்னல் பையன் என்னும் சித்திரத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
ஒளிக்கதிர்களைக்கொண்டு பின்னும் சிறுவனை நினைவில் நிற்கும் வகையில்
படைத்திருப்பது தேவகாந்தனின் படைப்புத் திறனுக்கு நல்லதொரு சான்று.
க.நவம் - சீருடை
டயஸ்போறா
இலக்கியத்தின் பல்வேறு பண்புகளை நவத்தின் இச்சிறுகதையில் காணலாம். ஊரில்
பொறியியலாளரான செந்தில்நாதன் கனடாவில் பாதுகாவலாராக வேலை பார்க்கின்றார்.
அவர் வேலைக்குச் செல்கையில் கோர்ட் , சூட்டுடன் செல்வார். வேலைக்குச்
சென்றபின்தான் பாதுகாவனுக்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார். தான் பாதுகாவலான
வேலை செய்வதைக் குழந்தை கூட அறியாமல் மறைத்து வைப்பார். ஒரு நாள் வழியில்
சந்திக்கும் ஊரில் அவனுக்குக் கீழ் ஊழியராகப் பணியாற்றிய ஒருவரின் மகன்
லெக்ஷ்ஸ் காரில் வருகின்றான். அவருக்கு லிஃப்ட் கொடுக்கின்றான்.இங்கு அவன்
செல்வச் செழிப்பில் கிளீனிங் கொம்பனி நடத்துகின்றான். அவனிடம் ஊரிலை
கிடைக்காத படிக்கிற வசதி இங்கு கிடைத்திருக்கு என்று எகத்தாளமாகக்
கூறுவார். பதிலுக்கு அவனும் படிச்சவையெல்லாரும் என்னத்தைக் கிழிச்சவையள்
என்ற மாதிரி பதிலிறுப்பான். அத்துடன் இப்பவும் செக்கியூரிடி கார்ட் வேலையோ
செய்கிறீர்கள் என்று கேட்பான். இது அவரது தன்மானத்தை எழுப்பிவிடவே காரை
நிற்பாட்டும்படி கூறி இறங்கிவிடுவார். ]
இந்தக்கதையில் அவனது
மேலதிகாரியின் நிறவாதப்போக்கு, ஊரில் அவரது கீழதிகாரியான சிங்களவர்
ஒருவரின் நிறவாதப்போக்கு, படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காத
புகலிடத்து நிலை, உணவுண்ணும் கலாச்சார வேறுபாட்டால் வெள்ளையின மேலதிகாரி
வெளிப்படுத்தும் நிறவாதம் என்று புகலிட இலக்கியத்துக்குரிய பல அம்சங்களை
வெளிப்படுத்தும் கதையாக இக்கதையினைக் கருதலாம். அடையாளச் சிக்கலுக்கு
நல்லதோர் உதாரணம். அதே சமயம் படித்தவரான தான் செய்யும் வேலை
மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, தன் அடையாளத்தை மறைக்க அவர்
எடுத்துக்கொள்ளும் பிரயாசை இக்கதையின் முக்கிய அம்சம். புலம்பெயர் சூழலில்
ஒருவர் எதிர்கொள்ளும் அடையாளச்சிக்கலில் இதுவும் ஒருவகை அடையாளச் சிக்கல்.
அவரது
மேலதிகாரியான வெள்ளையினத்தவன் அவரது மணக்கும் உணவு வகையை, அவர் கைகளால்
அள்ளிச் சாப்பிடுவதையெல்லாம் பார்த்து முகஞ் சுளிக்கின்றான். துவேசம்
மிக்க வார்த்தைகளையெல்லாம் அள்ளி வீசுகின்றான். பாக்கி என்று
கறுவிக்கொள்கின்றான். இவையெல்லாம் கலாச்சாரரீதியாக, நிறரீதியாக அவரை
புலம்பெயர் சூழலிலிருந்து அந்நியப்படுத்துக்கின்றது. இந்த ஒரு கதையில்
புலம்பெயர் மனிதர் ஒருவர் அடையும் பல்வகை அனுபவங்களையும் படம்
பிடித்துக்காட்டுகின்றார் கதாசிரியர் நவம். அவ்வகையில் முக்கியத்தும்
மிக்கது.
சுமதி ரூபன் - அமானுஷ்ய சாட்சியங்கள்
அக்கா
ஸ்பொன்சர் பண்ணிக் கனடா வரும் ஓரிளம் பெண் அவளது அக்கா குடும்பத்துடன்
தங்கியிருக்கின்றாள். அவளுக்கு அக்கா புருஷன் கொடுக்கும் பாலியல் ரியிலான
தொல்லைகளைச் சகித்துக்கொண்டு , தாய் தந்தையரும் வரும் வரையில் அக்காவுடன்
வாழ்கின்றாள். அவளது மனநிலையினை விபரிக்கும் கதை. அத்தான் என்றால்
அப்பழுக்கற்றவர் என்று எண்ணும் அக்கா. மாப்பிள்ளை தங்கம் என்று எண்ணும்
பெற்றோர். இவர்களுக்கு மத்தியில் அவள் மிகவும் இலகுவாகக் கனடாச் சட்ட
உதவியை நாடியிருக்கலாம். அப்படி நாடியிருந்தால் அவளது அக்கா புருசன்
சிறைக்குள் சென்றிருப்பான். அவள் ஏன் அவ்விதம் செய்யவில்லை? இங்குள்ள
கலாச்சாரச் சூழலில் இது போன்ற விடயங்களை ஆதரிப்பார்கள். சட்டங்களும்
துணையாகவிருக்கும், ஆனாலும் அவள் அதைச் செய்யவில்லை. அக்கா
புருசனிட,மிருந்து தப்புவதற்காகத் தனியாகச் சென்று விடவும் முயற்சி
செய்கின்றாள். அதையும் அக்கா தடுத்து விடுகின்றாள். அவள் தனியாகக் சென்று
விட்டால் சமூகத்தில் தங்கள் மதிப்பு சிதைந்து போய்விடுமென்று அக்கா
கூறுகின்றாள். அக்காவிடம் அத்தான் பற்றிய உண்மையினைக் கூறியிருக்கலாம்.
ஆனால் அதை அவள் நம்புவாளா என்பது சந்தேகமே. அவ்வளவு தூரம் அவள் தன் கணவரை
உத்தமராக நம்புகின்றாள். அக்கா புகலிடக் கலாச்சாரத்தில்
ஊறியவளாகவிருந்திருந்தால் அவளிடம் உண்மையைத் தெரிவித்திருக்கலாம்.
நம்பியிருக்கக்கூடும். ஆனால் அவளோ பிறந்த மண்ணின் கலாச்சாரக் கூறுகளுக்குள்
மூழ்கிக் கிடப்பவள். அவற்றை மீற விரும்பாதவள். புகலிடத்தில் இரு
கலாச்சாரத் தாக்கங்களுக்குள்சிக்கி மன உலைச்சலுடன் எல்லாவற்றையும்
பொறுத்துக்கொண்டு வாழும் ஒரு பெண்ணின் கதையைக் கூறும் கதை சுமதி ரூபனின்
'அமானுஷ்ய சாட்சியங்கள்'
இக்கதையில் இன்னுமொரு முக்கிய விடயம். இதன்
நாயகி அத்தானின் பாலியல் வன்முறைகளை விபரிப்பதில் தயங்கி நிற்கவில்லை.
இவ்விதமான மொழியைக் கையாள்வதற்கு உதவியாகவிருப்பது புகலிடச் சூழல்.
பிறந்தமண்ணில் இதுப்போன்ற விபரித்தல்களைச் செய்யவும் முடியாது. அப்படிச்
செய்தால் குறிப்பாக அதையுமொரு பெண் செய்தால் போர்க்கொடி
தூக்கியிருப்பார்கள். இதுவும் புகலிட இலக்கியக்குரிய தனித்தன்மையாகக்
கருதலாம்.
ஜோர்ஜ் இ.குருஷேவ் - ஒரு துரோகியின் இறுதிக்கணம்
'தேட'லில்
வெளியானது. புகலிட இலக்கியத்தின் ஓரம்சம். புகலிடத்தில் வாழ்ந்தாலும்,
பிறந்த மண்ணின் தாக்கங்கள், வலி இவையெல்லாவற்றையும் கடந்து செல்ல
முடிவதில்லை. ஜோர்ஜ்.இ.குருஷேவின் இக்கதையில் போராட்டச்சூழலில்
விடுதலைக்காகப்போராடியவர்களால் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள்
விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன.
இவரது முக்கியமான ஆரம்பக்
காலத்துச் சிறுகதையொன்று அது கூறும் பொருளையிட்டு மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது. இன்று தமிழர்களின் ஆயுத ரீதியிலான யுத்தம் முடிந்து விட்டது.
ஆனால் யுத்தம் முடிந்து இன்று வரையில் அக்காலகட்டத்துத் தவறுகளை, மனித
உரிமை மீறல்களையிட்டு இன்னும் நாம் விரிவாக ஆராயவில்லை. சுய பரிசோதனை
செய்யவில்லை. மிகவும் எளிதாகக் கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்கின்றோம்.
ஆனால்
யுத்தம் பெரிதாக வெடித்த காலகட்டத்திலேயே இவர் அதில் இடம் பெற்றிருந்த
தவறுகளுக்கெதிராகப் பலமாகக் குரல்கொடுத்திருக்கின்றார். அவற்றைக் களைய
வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். போராட்டம் என்னும்
பெயரில் ஆளுக்காள் ,ஒருவரையொருவர் துரோகிகளாக்கி மண்டையில்
போட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கும் இவரது
சிறுகதையான 'ஒரு துரோகியின் இறுதிக் கணங்கள்’ கருத்தை மையமாக வைத்துப்
பின்னப்பட்டிருக்கும் கதையென்றாலும், அதன் பொருளையிட்டு முக்கியமானது.
துரோகியாக்கப்பட்டு
மண்டையிலை போடப்பட்ட ஒருவன் தன் கதையை விபரிக்கும் வகையில்
எழுதப்பட்டிருக்கும் கதை வாசிப்பவர் உள்ளங்களை உலுப்பும் தன்மை மிக்கது.
எளிய நடையில் பின்னப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே மின்னும் வசனங்கள்
வாசிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்புவை.
பா.அ.ஜயகரனின் 'வந்திறங்கிய கதை'
ஆரம்பத்தில்
கவிதை, நாடகத்தில் கவனம் செலுத்திய இவர் அண்மைக்காலமாகச் சிறுகதையிலும்
கவனம் செலுத்தத்தொடங்கியிருக்கின்றார். காலச்சுவடு பதிப்பக வெளியீடாக
மூன்று தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆலோ ஆலோ, பா.அ.ஜயகரன் கதைகள் , அவனைக்
கண்டீர்களா? தொகுப்பிலுள்ள கதை - வந்திறங்கிய கதை. தமிழ் அகதி ஒருவனின்
புகலிடம் செல்லும் அனுபவம், லொட்ஜில் தங்கியிருக்கும் மனைவி திசை மாறி,
மீண்டும் இணைதல், ஸ்பொன்சர் செய்கிறான். மகளின் மரபணுச் சோதனை. தற்செயலாக
அது பிழைத்தாலும் அவளே தன் மகள் என்றும் எண்ணுவதுடன் கதை முடிகின்றது.
புகலிடச் சூழல்களை, புகலிடக் கலாச்சாரம் ஏற்படுத்தும் பாதிப்புகளை, அவற்றை
எதிர்கொள்ளும் பக்குவத்தையெல்லாம் விபரிப்பன ஜயகரனின் கதைகள்.
வ.ந.கிரிதரன் - கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்
நிறம்,
கலாச்சாரம், பொருளாதாரச் சூழல் போன்றவற்றால் அந்நியமான ஒரு புகலிடத்து
அகதியின் பாதிப்புகளை வெளிப்படுத்துபவை. முனைவர் தாரணி அகில், எனப்பலர்
இவரது புனைகதைகளை புகலிட இலக்கியத்தின் பண்புகள் அடிப்படையில் திறனாய்வு
செய்து கட்டுரைகள் எழுதியிருக்கின்றார்கள். ஆய்வுக்கருத்தரங்கில் அவற்றைச்
சமர்ப்பித்திருக்கின்றார்கள்.
வ.ந.கிரிதரனின் கதைகளைப்பற்றிக்
கலாநிதி மைதிலி தயாநிதி தனது 'கனடாவில் சிறுகதை இலக்கியம்- ஒரு பார்வை!'
ஆய்வுக்கட்ரையில் 'கனடா சிறுகதை இலக்கியத்தின் பொருட்பரப்பு மிக விரிவானது.
புதிய அனுபவங்களை மையமாகக் கொண்து. மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி
எழுதப்பட்ட இச் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்திற்குப் ஒரு புதிய பரிமாணத்தை
சேர்க்கின்றன என்று கூற்று மிகையானதன்று. எடுத்துக்காட்டாக, வ.ந. கிரிதரன்
எழுதியுள்ள ”நீ எங்கிருந்து வருகிறாய்?”, ”யன்னல்”, ”சுண்டெலிகள்”,
”மனிதமூலம்”, ”ஆபிரிக்க அமெரிக்கக்கனடாக் குடிவரவாளன்”, ”ஆசிரியரும்,
மாணவனும்”, “ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை” எனும் ஏழு புகலிடச் சிறுகதைகளும்
கனடா மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்தல் எனும் அனுபவ ஊற்றிலிருந்து பிறந்தவை
ஆகும்....... இத்தகைய சமூக சூழலில் வெள்ளையரல்லாத ஒருவரிடம் கேட்கப்படும்
"Where are you from?" என்ற கேள்வி ஒரு அப்பாவித்தனமான கேள்வி அன்று.
கனடாவை வாழிடமாகக் கொண்ட வெள்ளையரல்லாதவர்களை மற்றம்மையாக (பிறத்தியாராக)
உருவாக்கும் முயற்சிகளுள் ஒன்று. இக்கருத்தினை அடிநாதமாகக் கொண்டு வ. ந.
கிரிதரன் ”நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற சிறுகதையைப் புனைந்துள்ளார்.
ஒரு வெள்ளையினத்தவருக்கும், இருபதாண்டு காலம் கனடாவில் வசிக்கும்
வெள்ளையரல்லாத ஒருவருக்குமான உரையாடல் காலநிலை பற்றிய குறிப்புடன்
தொடங்குகிறது."
கலாநிதி சு.,குணேஸ்வரன் வ.ந.கிரிதரனின்
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் தொகுப்பு பற்றிக் கூறுகையில் 'அடையாளம்
தொடர்பான கதைகள் நான் யார் என்பதையும் நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும்
வினாக்களாக எழுப்புகின்றன. அதேநேரம் நிறத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும்
வேறுபட்டு இருப்பவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனிதர்களை
நிறத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கிறார்கள்.
ஏளனப்படுத்துகிறார்கள். இவர்களும் மனிதர்கள்தான் என்பதை ஏற்க
மறுக்கிறார்கள். இவ்வாறு நூற்றாண்டுத் துயரமாகத் தொடர்கின்ற கதைகளை
கிரிதரன் கூறுகிறார். புலம்பெயர் தமிழ் எழுத்துக்களில் இவ்வாறான கதைகளை
ஆரம்பகாலங்களில் பார்த்திபன், கருணாகரமூர்த்தி ஆகியோரும் பதிவு
செய்திருக்கின்றனர்.' என்று கூறுவார்.
வ.ந.கிரிதரனின் ஆபிரிக்க,
அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' சிறுகதை எல்லை கடந்த அல்லது நாடு கடந்த
தேசியத்தினை வெளிப்படுத்தும் கதை. 'சொந்தக்காரன்' புகலிடம் நாடிக் கனடா
வந்த இலங்கைத்தமிழன் ஒருவனூடு, கனடாவின் பூர்விகக்குடியினர் பற்றிய
கேள்வியையும் எழுப்புகின்றது. கட்டடக்கா(கூ)ட்டுத் தொகுப்பிலுள்ள பல கதைகள்
புகலிடம் நாடிக் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த ஒருவனின் பல்வகை அனுபவப்
பதிவுகள்.
குமார் மூர்த்தியின் முகம் தேடும் மனிதன்
யாழ்ப்பாணத்திலிருந்து
முஸ்லிங்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குமார் மூர்த்தியின் ”ஹனிபாவும்
எருதுகளும்” என்ற கதையைக் குறிப்பிடலாம். கிழக்கு மாகாணத்தில்
தமிழ்-முஸ்லிம் நல்லுறவு சீர்குலைந்த காலத்தை மையமாகக் கொண்டு சக்கரவர்த்தி
எழுதிய ”என் அல்லாஹ்” என்ற கதையும் முக்கியமானது. பொதுவாக,
குமார்மூர்த்தியினதும், சக்கரவர்த்தினதும் கதைகள் அக்கால போர்அரசியல்
நிலைப் பின்னணியில் எழுதப்பட்டவை.
குமார் மூர்த்தியின் முகம் தேடும்
மனிதன் போராட்டத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை விமர்சிக்கும் கதை.
துரோகிகளாக்கப்பட்டு மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் மனிதர்களின் நிலை
இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மகனுக்கும் ஏற்பட்ட ஒரு தந்தையின் நிலையை
விபரிக்கும் கதை அக்காலப் போராட்ட அமைப்புகளின் மனித உரிமை மீறல்களை
விமர்சிக்கும் கதை என்பதால் முக்கியத்துவம் மிக்கது. ஜோர்ஜ். இ.குருஷேவின்
'ஒரு துரோகியின் இறுதிக்கணம்' போல் மிகவும் ஆக்ரோசமாகச்
சுட்டிக்காட்டவில்லையென்றாலும் முக்கியமான கதைகளில் ஒன்று.
ஶ்ரீரஞ்சனி - காலநதி
எழுத்தாளர்
ஶ்ரீரஞ்சனி புலம்பெயர், புகலிடத்தமிழ் இலக்கியத்தில் , குறிப்பாகக்
கனடாத்தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்களில், பெண்
எழுத்தாளர்களில் ஒருவர். சுமதி ரூபன், தமிழ்நதி, ஶ்ரீரஞ்சனி போன்றவர்கள்
நிலவும் பண்பாட்டுச் சூழலை மீறுவதில் , அவற்றைக் கேள்விக்குட்படுத்தவதில்
தயங்காதவர்கள். அதே ஶ்ரீரஞ்சனியின் எழுத்துகளில் புகலிடச் சூழலில்
தாயொருவர் எதிர்ப்படும் சவால்களை, தாய்மை உணர்வுகளைக் காணலாம். அண்மையில்
அவர் வெளியிட்டுள்ள சிறுகதைத்தொகுப்புகளில் ஒன்று 'ஒன்றே வேறே'.
இத்தொகுப்பின் கதைகளை முற்றாக இதுவரையில் வாசிக்கவில்லை. வாசித்தவற்றில்
உடனடியாகக் கவனத்தை ஈர்த்த கதைகளில் ஒன்று 'காலநதி'.
'காலநதி'யின்
சுழல்களுக்குள் சிக்கித் தடுமாறி, அலைந்து முதுமைப்பருவத்தில் தன் வளர்ந்த
மகளுடன் கனடாவில் வாழும் தாயொருத்தியின் உணர்வுகளைச் சிறப்பாக
வெளிப்படுத்தும் கதை மட்டுமல்ல, முடிவில் அவளுக்குச் சிறந்ததொரு
வழியினையும் காட்டி நிற்கிறது. பார்வதி என்பது அவளது பெயர். கதை முதியவளான
அவளது உடலுழைப்பை வேண்டும் , போலிப்பண்பாட்டுக் கோட்பாடுகளைக் காரணமாகக்
காட்டி அவளது நியாயமான உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் மகளின்
உணர்வுகளையும்வ் செயலையும் வெளிப்படுத்துகின்றது. சாடுகிறது.
கதை
இதுதான். பார்வதியின் இளமைப்பருவத்தில், குறிப்பாகப் பதின்ம வயதுப்
பருவத்தில் அவளது உள்ளத்தில் அவ்வயதுக்குரிய உணர்வுகளைத் தூண்டியவன்
சந்திரன். அக்காலகட்ட அனுபவங்கள் சுவையாக விபரிக்கப்பட்டுள்ளன. வாசகர்கள்
பலரையும் அவர்களது அப்பருவக் காலகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை
மிக்கவை. எட்டாம் வகுப்பு மாணவியாகவிருக்கும் பார்வதிக்குபின்
அமர்ந்திருப்பான் சந்திரன். பார்வது சுருட்டைத் தலைமயிரை இரட்டையாகப்
பின்னி, மல்லிகைப்பூச் சூடிப் பாடசாலை செல்வாள். சந்திரன் சுவையாக,
வேடிக்கையாகப் பேசும் ஆளுமை மிக்கவன். ஒரு தடவை அவளுக்குப் பின்
அமர்ந்திருக்கும் அவன் அவளை விபரித்துப் பாடுகின்றான்: "கூத்தாடும்
கொண்டையிலே தொங்குதடீ மல்லிகைப்பூ. கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதடீ உன்
அழகு' வகுப்பைக் கெக்கலி போட்டுச் சிரிக்க வைக்கிறது அவனது பாட்டு.
வாசிக்கும் எம்மையும்தாம்.
அப்பாடல் பார்வதிக்கு ஏற்படுத்திய
உணர்வுகளைக் கதாசிரியை பின்வருமாறு விபரிப்பார்: 'அவளுக்கு வந்தது கோபமா,
சங்கடமா, இல்லை வெட்கமா, அல்லது சந்தோஷாமா என்பது அவளுக்குப் புரிவைல்லை.'
உண்மையில் "கூத்தாடும் கொண்டை' அற்புதமானதொரு படிமம். எழுத்தாளர்
ஶ்ரீரஞ்சனியிடம் ஒரு கேள்வி.. இப்படியொரு பாடல் உண்மையிலேயே அக்காலத்தில்
மாணவர்கள் மத்தியில் பாடப்பட்டதா? அல்லது ஶ்ரீரஞ்சனியின் கற்பனையா?
இவ்விதம் கொண்டை பற்றியதொரு விபரிப்பை இலக்கியத்திலும் கூட வாசித்ததாக
நினைவிலில்லை.
ஒரு தடவை மகளின் ஆலோசனையின்பேரில் முதியோர்
சங்கத்துக்குச் செல்கின்றாள் பார்வதி. அங்கு அவள் மீண்டும் சந்திரனைக்
காண்கின்றாள். அவனோ மனைவியை இழந்திருக்கின்றான். அவளோ முரடனான, ஆதிக்கம்
செலுத்தும் பொலிஸ்காரக் கணவனைப் பலவருடங்களுக்கு முன் இழந்தவள். ஒரு தடவை
பார்வதிக்குத் தொலைபேசி அழைப்பை எடுக்கும் சந்திரன் பார்வதியின் மகளிடம்
அவளது அம்மாமீது சிறு வயதில் தான் கொண்டிருந்த உணர்வுகளைப் பற்றியும் கூறி
விடுகின்றான். இதன் பின் மகள் பார்வதி அங்கு செல்வதைத் தடுக்கின்றாள்.
மகளின் இச்செயல் பார்வதிக்கு மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. தன்
சுதந்திரத்தில் அவள் தலையிடுவதாக அவள் உணர்கின்றாள். முடிவில் அறையொன்றை
வாடகைக்கு எடுத்து, அதான் வேறிடத்தில் இருந்தாலும் எப்போதும் மகளுக்குத்
துணையாக இருப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறுகின்றாள்.
கலாச்சார
வேறுபாடுகளின் தாக்கங்களையும், பார்வதி எவ்விதம் புதிய கலாச்சாரத்தின்
ஆரோக்கியமான கூறுகளை ஏற்றுத் தனியாக, முதுமையில் புதுவாழ்வைத்
தொடங்குகின்றாள் என்பதையும் கூறும் கதை என்பதால் முக்கியத்துவம் மிக்கது.
குரு அரவிந்தன் -
அடுத்த வீட்டுப் பையன் - உயிர்நிழல் சிறுகதை. அடுத்த வீட்டுப் பையனின் அப்பா அவன் மனைவியான இன்னுமோர் ஆண் பற்றியது. முடிவில்தான் உண்மை தெரிகிறது. இரு கலாச்சாரங்களின் மோதல். வீடு திரும்புவனிடம் மகன் கேட்கின்றான் அடுத்த வீட்டுப்பையனின் அம்மாவைப் பார்த்தீர்களா? அம்மாவா? எப்படிச் சொல்வேன் என்பதுடன் கதை முடிகிறது.
இக்க்கதை இரு வேறு கலாச்சாரங்களின்
பாதிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. ஒருபாலினத்தவர்களுக்கிடையிலான
மணம் என்பது மேனாடுகள் பலவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேனாட்டுக்
கலாச்சாரம் இது கண்டு திகைக்கும் காலம் கடந்து விட்டது. ஆனால் இழந்த
மண்ணில் நிலை அவ்வாறில்லை. இதனைத்தான் இக்கதையின் முடிவு
எடுத்துரைக்கின்றது. கதையின் நாயகனைப்பொறுத்தவரையில் அடுத்த வீட்டுப்
பையனின் அம்மா ஓர் ஆண் என்பதே அதிர்ச்சியைத்தருமொன்று. அது அவனது
தாய்நாட்டுக் கலாச்சாரத்தின் விளைவு. அவன் வாழ்வதோ மேனாட்டுக் கலாச்சாரச்
சூழல்.இதுபோன்ற திருமணத்தைச் சட்டரீதியாக அங்கீகரிக்கும் சூழல்.கதாசிரியர்
குருஅரவிந்தன் இக்கதையில் இருவிதக் கலாச்சாரப் பாதிப்புகளையும் சிறப்பாக
எடுத்துரைக்கின்றார்.
இன்னுமொன்று.. தன் மகனுக்கு எவ்விதம் அடுத்த
வீட்டுப் பையனின் தகப்பன் ஓர் அம்மா என்பதை எடுத்துரைத்தேன் என்று கதையின்
நாயகன் தயங்குவதில் அர்த்தம் இல்லாமல் இருக்கக்கூடும். அவனது மகன் புகலிடச்
சூழற் கலாச்சாரத்துக்குள் உள்வாங்கப்பட்டவனாக இருக்கக்கூடும். ஆனால்
கதையின் நாயகனின் பார்வையில் இவ்விடயம் அதிர்ச்சிகரமானதொரு விடயம்.
இவ்விதமான அதிர்ச்சிகள் பலவற்றைக்கொண்டதுதான் புலம்பெயர் வாழ்க்கை.
ஊர்
திரும்புதல் பற்றிய இன்னுமொரு கதையும் நினைவுக்கு வருகிறது. 'தாயகக்
கனவுடன்' என்னும் குரு அரவிந்தனின் கதை. யுத்தம் முடிந்ததும் மீண்டும்
குடும்பத்துடன் செல்லும் ஒருவரின் கதை. அத்தை வீடு இடிந்து கிடக்கின்றது.
அங்கு அவரது பதின்ம வயதுகளில் நடந்த நிகழ்வுகள், அத்தைப் பெண் மீதான
உணர்வுகளை அந்த ஊர்பயணம் ஏற்படுத்தி விடுகிறது. அத்தை பெண் பெரியவளான
நிலையில் தனித்து விடப்பட்டதையும் ,முன்புபோல் பழக அனுமதி அத்தையால்
மறுக்கப்பட்ட நிலையும் , ஒரு முறை அங்கு விஜயம் செய்து பிரிகையில்
எதிர்பாராமல் அத்தை பெண் அவருக்கு அளித்த முத்தமும், பின்னர் அத்தை பெண்
நாட்டுச் சூழலில் பெண் போராளியாகி மடிந்ததும் நினைவுக்கு வருகின்றன. அவற்றை
விபரிக்கும் கதை.
குரு அரவிந்தன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்னும்
பாணியில் தன் எழுத்து நடையை வைத்திருப்பவர். இது போன்ற அவரது சில
சிறுகதைகள் ஊரில் நிலவிய போர்ச்சூழலை மையமாக வைத்து உருவானவை. நங்கூரி 83
கறுப்பு ஜூலையில் -பெண் ஒருத்தி கணவன் முன்னால் காடையரால் பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதையும் , கணவன் அதன் காரணமாக அவளை ஏற்பதில்
காட்டும் தயக்கமும் எடுத்து\க் காட்டப்படுகின்றன.
இக்கதை
வ.ந.கிரிதரனின் 'ஒரு முடிவும் ஒரு விடிவும்' கதையினை நினைவுக்குக் கொண்டு
வருகின்றது. அந்நியப்படையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட
பெண்ணொருத்தியை அவளது கணவன் புறக்கணித்து விட , ஊருக்கு வரும் அவளது பால்ய
காலத்து நண்பனொருவன் ஏற்று மறுவாழ்வு கொடுப்பதாகச் செல்லும் கதை.
இச்சிறுகதை தொண்ணூறுகளில் தாயகம் பத்திரிகையில் வெளியானது. புகலிடம்
சென்றாலும் தாயக நினைவுகளைச் சுமந்து செல்வதைத் தவிர்க்க முடியாத நிலையினை
எடுத்துக்காட்டும் கதைகள்.
அகிலின் கூடுகள் சிதைந்தபோது...
போர்ச்சூழல்
காரணமாகப் புகலிடம் நாடிய பலரின் வாழ்க்கையுடன் அப்போர் தந்த வலிகளும்
புலம்பெயர்ந்திருக்கும். போர்ச்சூழலில் தன் மனைவியை இழந்த ஒருவன் அவன்.
வீதியில் வாகனமொன்றால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் குருவியொன்றை,
அதன் வலியினை அவனால் பொறுக்க முடியவில்லை. அதன் நிலை அவனது மனைவியின் மறைவை
நினைவு படுத்துகிறது. புகலிட இலக்கியத்தின் , எழுத்துகளின் இன்னுமொரு
முக்கிய அம்சம் பிறந்த மண் ஏற்படுத்திய, காலத்தினால் ஆற்ற முடியாத வலி
சுமந்த உணர்வுகள். உளப்பாதிப்புகள்.
ஜேர்சி கொஸின்ஸ்ககி என்னும்
போலிஸ் அமெரிக்க எழுத்தாளர் நிறமூட்டப்பட்ட பறவைகள் Painted Birds
என்னுமொரு நாவலை எழுதியிருப்பார். ஜூதச் சிறுவனாக இரண்டாவது உலக மகாயுத்தக்
காலத்தில் ஐரோப்பாவெங்கும் தப்பிப்பிழைப்பதற்காக அவர் அலைந்து திரிந்தபோது
அடைந்து பயங்கர, துயர் மிகு அனுபவங்களை அவரால் ஒருபோதுமே மறக்க
முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அவ்வனுபவங்களை எழுத்தி
வடிக்கின்றார்.,. பிறந்த மண்ணின் அரசியல், போர்ச்சூழல்கள் ஏற்படுத்தும்
வலிகள் காரணமாகப் புகலிடம் நாடிச் செல்லும் ஒருவரை அவர் இறுதிவரை
அவ்வலிகள் விடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். புகலிட இலக்கியத்தில் ஒரு
வெளிப்பாடாக எப்பொழுதும் அவை இருந்துகொண்டேயிருக்கும்.
இன்னுமொரு
கதை - அம்மா எங்கே போகிறாய்? தன் குழந்தைகளுக்காகத் தன் வாழ்வையே தாரை
வார்த்த விசாலாட்சி என்னும் தாயொருத்தியை அவரது குழந்தைகள் இருவரும்
பொருளியற் காரணங்களுக்காக உடலுழைப்புக்காக சுயநலம் மிகுந்து
பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் மகனும் , மகளும் அதே பொருளியற்
காரணங்களால் பிரிந்து கிடக்கின்றார்கள் எனபதையும் , இவற்றின் விளைவாக
அத்தாய் முதியோர் இல்லத்துக்குச் செல்லும் நிலை ஏற்படுவதையும்
சுட்டிக்காட்டி , புலம்பெயர் சமூகத்தை விமர்சிக்கும் கதை.
பவான் - முகமில்லாத மனிதர்கள்
கதை
கச்சிதமாக உருவாக்கப்பட்ட கதைகளில் ஒன்று. புகலிடம் நாடிப் பிரான்சு வரும்
ஒருவனைப்பற்றி என்று எண்ணுகின்றேன். மேடம் ஒருத்தியின் கீழ் வேலை செய்யும்
அண்ணன், உடையார் பரம்பரையின் வாரிசு. மேடம் வீட்டில் நாய் மலம்
சுத்திகரிக்கின்றான். கழிவுகளை அகற்றுகின்றான். கோப்பைகள் கழுவுகின்றான்.
அவர்கள் உண்ட மிச்சத்தை உண்கின்றான். தம்பிக்கும் இன்னுமொரு மேடத்தின்
கீழ் வேலை வாங்கிக்கொடுக்க விரும்புகின்றான். தம்பியால் அண்ணனைப்போல்
அடிமையாக அந்த நாட்டில் கிடந்து உழைய முடியாது. புதுவாழ்வை நோக்கி,
புகைவண்டியில் , சீட்டுக்கடியில் படுத்தவாறே பயணிக்கின்றான். சீட்டில்
அமர்ந்திருந்த வெள்ளையினப் பயணீகளின் சப்பாத்துக்கள் அடிக்கடி தரும்
இம்சையையும் பொறுத்துக்கொண்டு.
டானியல் ஜீவா - சந்தியா அப்பு
'வானம்
வன்முறையை கைவிட்டு அகிம்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வெளியில்
அள்ளி எறிந்த அடர்ந்த இருள் மட்டும் அப்படியே இனம் தெரியாத மனிதர்களால்
வரையப்பட்ட தீர்ப்பால்; ஒரு மனிதன் சுட்டுக் கொல்லப்பட்ட உடல் போல்
கிடந்தது. எலிசபெத் சமையல் அறைக்குள் சென்று சூடாக இரண்டு கப்பில் பால்
தேநீர் போட்டுக் கொண்டு வந்து தனக்கு ஒன்றையும் மற்றதை சந்தியாவிடமும்
கொடுத்தார். கட்டிலுக்கு அருகில் இருந்த சிறிய மேசையை இழுத்து தேநீர்
கோப்பையை அதில் வைத்தார். கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த
சந்தியாவின் பக்கமாக அவரும் உட்கார்ந்து கொண்டார்.'
டானியல்
ஜீவாவின் மொழி இதயத்தை வருடிச் செல்லும் மொழி. இக்கதையில் கடற்றொழில்
பற்றிய விபரிப்புகள் வாசகர்களுக்குப் புதிய தகவல்களைத் தருவன.
உதாரணத்துக்கு 'சிறகு வலைத் தொழிலாளியாக அறியப்பட்டவர். இப்போது விடு வலைத்
தொழிலுக்கும், கூடு வைக்கிற தொழிலுக்கும் போய் வருகின்றார்.' என்ற
விபரிப்பைக் கூறலாம்.
சில உவமைகள் அக்காலகட்ட அரசியற் சூழலை வெளிப்படுத்தும் . உதாரணத்துக்கொன்று -
"வானம்
வன்முறையை கைவிட்டு அகிம்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வெளியில்
அள்ளி எறிந்த அடர்ந்த இருள் மட்டும் அப்படியே இனம் தெரியாத மனிதர்களால்
வரையப்பட்ட தீர்ப்பால்; ஒரு மனிதன் சுட்டுக் கொல்லப்பட்ட உடல் போல்
கிடந்தது."
இக்கதை புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின்
புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'கடலும் கிழவனு' நாவலில் வரும் சந்தியாக்
கிழவனையும், அவனுடன் நட்பிலிருக்கும் சிறுவனையும் நினைவூட்டும்..அதன் கரு
வேறு,. இதன் கரு வேறு. சந்தியாக் கிழவனும், சந்தியா அப்புவும் , சந்தியாக்
கிழவனுடன் நட்பிலிருக்கும் சிறுவனும், சந்தியா அப்புவிடன் நட்பிலிருக்கும்
கதைசொல்லியும் எனப் பாத்திரங்களுக்கிடையில் இருக்கும் . ஒற்றுமையே மேற்படி
நினைவூட்டலுக்குக் காரணம்.
சக்கரவர்த்தி
மனசு
பனியும் பனையும் தொகுப்பில் உள்ள கதை. வெள்ளையினப் பெண்ணக் காதலித்துக்
கல்யாணம் செய்து, மகனுமுள்ள நிலையில், குடியும், போதையுமாக இருக்கும் மனவி.
மணவாழ்க்கை வெறுத்து அவளையும் பிள்ளையையும் ஓடத் தீர்மானிக்கும் சீதாராமன்
தன் நண்பனிடம் அறிவுரை கேட்க டொரோண்டோ வருகிறான். மனைவி குடிப்பதும்,
..வாழ்க்கை பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் எங்கட பெட்டையள் சோசலாகப் பழக
மாட்டாளவை என்றுதான் அவன் அவ்வெள்ளையினைப் பெண்ணைத் திருமணம் செய்தான்.
ஓடிப்போக வந்தவன் மகனின் எதிர்காலம் கருதி மீண்டும் மனைவியிடம் செல்வதாகக்
கதை முடிகிறது. இது கலாச்சார முரண்பாடுகளால் ஏற்பட்ட மன உளைச்சலை
வெளிப்படுத்தும் கதைகளிலொன்று.
சக்கரவர்த்தியின் அல்லாஜ்
சிறுகதையும் முக்கியமான கதைகளில் ஒன்று. 'கிழக்கு மாகாணத் தமிழ்-முஸ்லிம்
மக்களுக்கிடையில் நிலவிய நல்லுறவின் சீர்குலைவைப் பற்றிய கதை ”என்
அல்லாஹ்”. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.
மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்'
கச்சிதமாக
எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று இச்சிறுகதை,. கூர் 2012. ஆண்டிதழில்
வெளியாகியுள்ளது. ஊர்சோன் ,பாலந்தை போர்த்துக்கல், ஸ்பெயின் பழங்கதைகளின்
பாத்திரங்கள். இந்தப்பெயர்கள் வந்ததன் காரணம் காலனிகளைப் பிடிப்பதற்காக
இலங்கை வந்த போர்த்துக்கேயர்தான். போர்த்துக்கல், ஸ்பெயின் பழைய
கதைகளின்படி ஊர்சோன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். அரச குடும்பத்தில்
நிகழ்ந்த அசம்பாவிதமொன்றால் அரசி காட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுப்
போடுகிறாள். இருவரும் ஆண் குழந்தைகள் . ஒருவன் ஊர்சோன். அடுத்தவன் பாலந்தை.
ஊர்சோனைக் கரடியொன்று தூக்கிச் சென்று விடுகின்றது. இந்த ஊர்சோன், பாலந்தை
கதை பல தலைமுறைகளைக் கடந்து, கலாச்சாரங்களைக் கடந்து கதை சொல்லியின்
காலத்தை வந்தடைகின்றது. தென்மோடிக் கூத்துகளில் பாவிக்கப்படுகின்றது.
கூத்துக்களில் பாவிக்கப்படும் பெயர்களை ஊரவர்கள் வைப்பது வழக்கம். அவ்வாறாக
கதை சொல்லியின் வாழ்வில் எதிர்ப்படும் ஊர்சோசுனுக்கும் அப்பெயர்
வைக்கப்படுகின்றது.
ஊர்சோனைக் கதைசொல்லி முதன் முதலாக அமெரிக்க அகதி
முகாமொன்றில் சந்திக்கின்றான். அதற்கு முன்னர் 'காலம்' என்ற கரடி
ஊர்சோனைப் போர்த்துக்கல் நாட்டுக்குத் தூக்கிப் போடுகிறது. இவ்விதம்தான்
காலத்தைக் கரடியாகக் கதைசொல்லி விபரிக்கின்றான். இங்கு கதைசொல்லி என்று
நான் கூறுவது இக்கதையினை விபரிக்கும் கதையின் நாயகனை. போர்த்துக்கல்
மக்களால் புதிய ஊர்சோனை அடையாளம் காண முடியவில்லை. அங்கீகரிக்க
முடியவில்லை. காரணம் அவன் 'பிறவுணி'யாக இருந்ததால். அதன் பின்னர் ஊர்சோன்
எல்லைகள் பல கடந்து அமெரிக்காவிலுள்ள விவிகாசா அகதி முகாமை
வந்தடைகின்றான். அங்குதான் கதைசொல்லியும், ஊர்சோனும் முதன் முறையாகச்
சந்திக்கின்றார்கள். முகாமின் மலசல கூடங்களைக் கழுவிச் சுத்தம் செய்யும்
பொறுப்பு இருவருடையது.
ஊர்சோனின் சகோதரன் பாலந்தை, அவன்
முள்ளிவாய்க்காலில் மரணித்து விடுகின்றான்., ஊர்சோன் அவ்வப்போது தென்மோடிக்
கூத்தின் சோகமான மெட்டுகளுக்குக் கதைசொல்லி எழுதிய வரிகளைப் பாடுவான்.
இதன்
பின்னர் இருவரும் கனடா எல்லைக்குக்கொண்டுவரப்பட்டு விசாரணைகளின் பின் கதை
சொல்லிக் கனடாவுக்கும் , ஊர்சோன் அமெரிக்காவுக்கும்
அனுப்பப்படுகின்றார்கள். கனடாவில் கதைசொல்லியின் அக்கா இருந்தது கதை சொல்லி
கனடா வர முக்கிய காரணம். ஊர்சோனின் மாமாவும், கதைசொல்லியின் அக்காவும்
கனடா எல்லைக்கு வந்திருந்தார்கள். அப்போது ஊர்சோனின் கையில் தன்
மணிக்கூட்டைக் கட்டிப்பிரிகின்றான் கதைசொல்லி.
காலம் செல்கின்றது,
அமெரிக்காவில் ஊர்சோனின் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது.
தலைமறைவாகின்றான். அவன் இருப்பிடம் யாருக்கும் தெரியவில்லை.
காவல்துறைக்கும் முறைப்பாடு செய்யப்படுகின்றது.
பனிக்காலமொன்றின்
சென் லோரன்ஸ் நதி வழியாக செவ்விந்தியர்கள் இருவர், தமிழர்கள் இருவருடன்
கனடாக்குப் புகலிடம் நாடி ஊர்சோன் வந்திருக்கின்றான். வழியில் நீர்மூழ்கி
அனைவரும் பனிக்காலமென்பதால் உறைந்துபோயிருக்கின்றார்கள். கோடையில் பனி
உருகியபோது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஊர்சோனின் கைகளில்
கட்டப்பட்டிருந்த கதைசொல்லியின் மணிக்கூட்டிலிருந்து அடையாளம்
காணப்படுகின்றான்.
"இன்னமும் உறைந்துபோகாத அந்த மணிக்கூடு ஒவ்வொரு
முற்பகல் நான்கு மணிக்கும் அலாரம் அடித்துக்கொண்டிருக்கிறது.
பாப்பப்பபாப்பபாப்பப்பபாப்ப' என்று கதை முடிகின்றது.
இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்குக் காரணங்கள்;
1,
ஊர்சோன் , பாலந்தை என்னும் பெயர் வந்ததை எடுத்தியம்புகின்றது.
புலம்பெயர்ந்து வந்த காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கல், ஸ்பெயின் கொண்டு
வந்த பெயர்கள் என்னும் வரலாற்றை எடுத்தியம்புகின்றது. தென்மோடிக் கூத்து
பற்றித் தெரிவிக்கின்றது.
2. முள்ளிவாய்க்கால் துயரத்தை எடுத்தியம்புகின்றது.
3.
ஊர்சோன், பாலந்தை என்னும் பெயர்கள் அரசகுமாரர்களின் பெயர்கள். இங்கு அதே
பெயர்கள் சகோதரர்கள் இருவருக்கும் வைக்கப்பட்டிருக்கின்றது. பழங்கதையின்
ஊசோனைக் கரடியொன்று காட்டுக்குத்தூக்கிச் சென்று விடுகின்றது. இக்கதையில்
காலக்கரடி நவகால ஊசோனைப் புகலிடம் நாடி , ஊசோன் பெயருக்குக் காரணமான
போர்த்துக்கல்லுக்குள் தூக்கிப் போடுகின்றது.
4. புகலிடம் நாடிச் செல்லும் புலம்பெயரும் அகதிகள் அடையும் துயரினை, சில சமயங்கள் சோக முடிவினைக் கதை விபரிக்கின்றது.
மூன்று
பக்கங்களில் கச்சிதமாக, தேவையற்ற சொற்களற்று கூறப்பட்டிருக்கும்
சிறுகதையைப் புலம்பெயர், புகலிடச் சிறுகதைகளில் முக்கியமானதொன்று என்று
துணிந்து கூறுவேன்.
கடல்புத்திரன்
இவரது
கதைகள் பெரும்பாலும் இவரது போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை.
ஆனால் பிரச்சாரங்களல்ல. அவற்றை ஆவணப்படுத்துபவை. வேலிகள் என்னும் தொகுப்பு
குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ளது. புகலிடத்தில் வாழ்ந்தாலும்
பிறந்த மண்ணின் அரசியற் பாதிப்புகளிலிருந்தும் இவரால் மீற முடியவில்லை
என்பதன் வெளிப்பாடு.பதிவுகள், திண்ணை, சிறுகதைகள்.காம் தளங்களில் இவரது
கதைகளை வாசிக்கலாம்.
அ.கந்தசாமி (கந்தசாமி மாஸ்டர்) விடிவு தூரத்தில்
புகலிடச்
சூழலில் பொருளாதாரச் சுமைகளால், கடன்களால் அழுந்தும் தம்பதியொன்றின் கதை.
சுதா, ஜீவா தம்பதி. கடன் சுமையைத் தீர்ப்பதற்காக மனைவி கணவனிடத்தில்
தாலியைக் கழட்டிக்கொடுக்கிறாள்.. இக்கதை 'பனியும் பனையும்' தொகுப்பிலுள்ள
கதை. நாவல் , கவிதை, விமர்சனம் என அதிகமாகச் செயற்பட்ட எழுத்தாளர்
அ.கந்தசாமி சிறுகதையில் மீண்டும் கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளார்.
'தாய்வீடு' பத்திரிகையில் இவரது சிறுகதைகள் பல வெளிவரத்தொடங்கியுள்ளன.
ஆனந்த பிரசாத் - அவர் நாண..
ஊரில்
உயர் நிலையில் இருந்த ஒருவர் முதியவர். படித்தவர். ஆசிரியராகவிருந்தவர்.
கனடாவில் நிறுவனமொன்றில் கீழ்நிலை ஊழியராக இருக்கின்றார். அவருக்கு
மேலதிகாரியாக சுப்பவைசர் பதவியில் இளைஞன். பந்தா காட்டுமொருவன்.
பெரிதாகக்கல்வித் தகமைகள் அற்றவன். எப்போதும் அவரது வயதை வைத்து ஊரிலைப்
பென்சன் எடுக்கவேண்டிய கிழடுகள் எல்லாம் கனடா வந்து கழுத்தறுக்கிறதுகள்
என்று மறைமுகமாகக் கிண்டல் அடிப்பவன். இறுதியில் இமிகிரேசன் ஃபோர்ம்ஸ்
நிரப்புவதற்காக, அவரது உதவி தேவை என்பதற்காக, வாலாட்டுகின்றான். இதுதான்
கதை. புலம்பெயர் சூழலில் மானுட சுயநலம் சார்ந்த உளவியலைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதைகளில் ஒன்று.
அளவெட்டி சிறுசுக்கந்தராசா
இவரது
கதைகள் இவரது தனித்துவமான மொழி காரணமாகத் தனித்துவமானவை. இவரது கதைகள்
அடங்கிய சிறுகதைத்தொகுதியான சிறீசுவின் கதைகள் மித்ர பதிப்பாக
வெளிவந்துள்ளது.
அகணி சுரேஷ் - அந்தப் பதினேழு நாட்கள். (கதைச்சாரல் தொகுப்பிலிருந்து)
எழுத்தாளர்
அகணியின் அந்தப் பதினேழு நாட்கள் 83 கறுப்பு ஜூலையினை ஆவணப்படுத்துவதுடன்,
நாடு பற்றியெரிந்து கொண்டிருந்த சூழலில் சிங்கள ஓட்டோ டிரைவர் தமிழரான
கதைசொல்லியைக் காப்பாற்றியதையும் பதிவு செய்கிறது. அண்மைக்காலமாக இவரது
மொழிபெயர்ப்புக் கதைகள் பதிவுகள் இணைய இதழில் வெளியாவதும்
குறிப்பிடத்தக்கது. இக்கதை அவரது 'கதைச்சாரல்' சிறுகதைத்தொகுப்பிலுள்ளது.
இளவாலை ஜெகதீசன்
பொதிகை
என்னும் சஞ்சிகைகையைக் கனடாவில் நடத்தியவர்.அதன் ஆசிரியராகவிருந்தவர்.
ஈழநாடு பத்திரிகையில் பல்வேறு ஆளுமைகளைப்பற்றிய இவரது சுவையான கட்டுரைகள்
மூலம் அறிமுகமானவர். அண்மைக்காலமாகச் சிறுகதைகளின் பக்கமும் கவனத்தைத்
திருப்பியிருக்கின்றார். இன்னும் அதிகமாக எழுதுவார் என நம்பலாம்.
நிரூபாவின்
'காவோலை' -
கூர் ஆண்டிதழில் வெளியான இக்கதை முதியவர் ஒருவரின் புகலிட
நிலையினை எடுத்துரைப்பதுடன் , இதற்குக் காரணமானவர்களையும் கடுமையாகச்
சாடுகிறது. எவ்விதம் முதியவர் ஒருவரின் சொத்துகளை அபகரித்துக்கொண்ட அவரது
புத்திரர்கள் ஐரோப்பிய நாடுகளில் அவரை அலைய விடுவதையும், அதனால் அவர்
அடையும் துயர்மிகு அனுபவங்களையும் விபரிக்கிறது. புகலிடம் நாடிப்
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எவ்விதம் பொருள் காரணமாகச் சீரழிந்து
கிடக்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் கதை. இவரது கதைகள் ஆக்ரோசமாகப்
புலம்பெயர் சமூகச்சீர்கேடுகளைச் சாடுகின்றன. இந்த ஆக்ரோசமே இவரை ஏனைய பெண்
எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும் முக்கிய அம்சம்.
தமிழ்நதியின் 'மாயக்குதிரை'
கலைவாணி ராஜகுமாரன் என்னும் கவிஞராக அறிமுகமாகித் தமிழ்நதியாக வளர்ந்த தமிழ்நதியின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. கவித்துவமான மொழியில் விரியும் இவரது புனைகதைகள் வாசிப்பதற்கு உவப்பானவை. இவருக்கென்று தமிழகத்தில் ஒரு வாசகர் கூட்டமே உண்டு.
இவரது மாயக்குதிரை கூறும் பொருளையிட்டு
முக்கியத்துவம் மிக்கது. சூதாடும் பழக்கம் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர்
ஃபியதோர் தச்த்யேவ்ஸ்கியையும் விட்டு வைக்கவில்லை. பொதுவாகக் கனடாவில் சீன
இனத்து மக்கள் மத்தியில் ஆண்கள் , பெண்கள் பலர் சூதாடுவதில் பெருவிருப்பு
மிக்கர்கள் என்பதை அறியலாம். சூதாட்டம் பொழுதுபோக்காக இருக்கும் மட்டும்
பெரிதாகப் பாதிப்பில்லை.ஆனால் அதுவே போதையைப் போல் ஒருவரை
அடிமைப்படுத்துகையில் ஏற்படும் பாதிப்புகள் பல. குடும்பங்களைப் பிரிய
வைக்கின்றது. குடும்பமொன்றின் பொருளாதாரத்தைச் சிதைக்கின்றது. பலரின் உயிரை
எடுத்திருக்கின்றது. தமிழ்நதியின் 'மாயக்குதிரை' புலம்பெயர் தமிழ்ச்
சமூகத்தில் நிலவும் சூதாட்டத்துக்கு அடிமையான போக்கைப் பெண் ஒருத்தியின்
சூதாட்டப் பழக்கத்தின் வாயிலாக எடுத்துரைக்கின்றது.
அறிவியல் கதைகள்
புலம்பெயர்
இலக்கியத்தில் அறிவியல் கதைகளும் ஓரிடத்தைப் பிடிக்கின்றன. குரு
அரவிந்தன், வ.ந.கிரிதரன், அகணி சுரேஷ் ஆகியோர் அறிவியல் பக்கமும் தம்
கவனத்தைத் திருப்பியிருக்கின்றார்கள். குரு அரவிந்தனின் 'காலம் செய்த கோலம்' வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை. செயற்கை அறிவு (AI) இயந்திர மனிதர்கள் இருவருக்கிடையில் உருவாகும் காதலை விபரிப்பது. முடிவில்தான் அவர்கள் இயந்திர மனிதர்கள் என்பதே தெரிய வரும் வகையில் கதை பின்னப்பட்டுள்ளது. வ.ந.கிரிதரனின் 'நான் அவனில்லை' சுஜாதா/ஆழி பப்ளிஷர்ஸ் இனைந்து நடத்திய உலகளாவிய அறிவியல் சிறுகதைப்போட்டியில் வட அமெரிக்காவுக்கான பரிசினைப் பெற்ற கதை.
மொழிபெயர்ப்புக் கதைகள்
மொழிபெயர்ப்புக்
கதைகளும் கனடாத் தமிழ் இலக்கியத்தின் சிறுகதைத்துறைக்கு வளம் சேர்த்தவை.
இதில் முதலிடத்தில் இருப்பவர் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம். இவரது
மொழிபெயர்ப்புக் கதைகள் அடங்கிய தொகுதிகள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர்கள்
அ.முத்துலிங்கம், மணி வேலுப்பிள்ளை, அகணி சுரேஷ் ஆகியோரும் மேனாட்டுச்
சிறுகதைகள் பலவற்றைத் தமிழாக்கம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைய தலைமுறையினரின் பங்களிப்பு
இளைய தலைமுறையினரைப் பொறுத்தவரையில் சிவகாமி விஜேந்திரா, தமயந்தி கிரிதரன் , மஹிந்தன் வேலுப்பிள்ளை ஆகியோரின் சிறுகதைகள் கூர் ஆண்டிதலில் வெளியாகியுள்ளன.
இவர்களில் சிவகாமி விஜேந்திராவின் சிறுகதைள் சஞ்சிகைகள் , பத்திரிகைகளில் அதிகமாக வெளியாகியுள்ளன. இவரது A New Word டொரோண்டோ ஸ்டார் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை. 'ஒரு புதிய உலகம் அல்லது புதியதோர் உலகம்' என்னும் தலைப்பில் கூர் ஆண்டிதழில் வெளியாகியுள்ளது.
தமயந்தி கிரிதரனின் 'Thanks'' என்னும் சிறுகதை ஸ்கார்பரோ
எழுத்தாளர் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை. கூர்
ஆண்டிதழில் நன்றி என்னும் தலைப்பில் சாந்தியின் மொழிபெயர்ப்பில்
வெளியாகியுள்ளது. A.Change என்னும் சிறுகதை ஒரு மாற்றம் என்னும் தலைப்பில் ,
லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் கூர் ஆண்டிதழில் வெளியாகியுள்ளது.
இவர் டொரோண்டொ பொதுசன நூலகம் பதின்ம வயதினருக்காக வெளியிடும் The Young
Voice' சஞ்சிகையின் இதழ்க்குழுவில் 2009 - 2014 காலகட்டத்தில் அங்கம்
வகித்திருக்கின்றார்.
மேலும் இளையவர்கள் பலர் நிச்சயம்
எழுதியிருப்பார்கள். அவர்கள் பற்றிய விபரங்களும், படைப்புகளும்
கிடைக்கும்பட்சத்தில் இக்கட்டுரை மேலும் செழுமைப்படுத்தப்படும்.
வெளியான சிறுகதைத் தொகுப்புகள் (முழுமையான பட்டியல் அல்ல)
அ.முத்துலிங்கம்
அ. முத்துலிங்கம் கதைகள்
அமெரிக்கக்காரி
குதிரைக்காரன்
திகடசக்கரம்
மகாராஜாவின் ரயில் வண்டி
வடக்குவீதி
வம்சவிருத்தி
மித்ர பதிப்பகம் - பனியும் பனையும்
கனடாத்தமிழ் எழுத்தாளர் இணையம் - சங்கப்பொழில் மலர்
கனடாத்தமிழ் எழுத்தாளர் இணையம் - அரும்பு
உதயன் கனடா - சிறுகதைத்தொகுப்பு
கணையாழி கனடாச் சிறப்பிதழ்
மகுடம், ஜீவநதி கனடாச் சிறப்பிதழ்
ஞானம் (175) ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய மலர் - தொகுப்பு.
கூர் ஆண்டு மலர்கள் 2008, 2010, 2011, 2012
தேவகாந்தன்
சகுனியின் சிரம்
ஆதித்தாய்
இன்னொரு பக்கம்
நெருப்பு
காலக்கனா
பின்னல் பையன்
லவ் இன் த ரைம் ஒஃப் கொரோனாவும் சில கதைகளும்
சுமதி ரூபன்
அமானுஷ்ய சாட்சியங்கள் - உறையும் பனிப்பெண் - தொகுப்பு கருப்புப் பிரதி வெளியீடு
க.நவம்
‘உள்ளும் புறமும்’ – கனடாவில் முதன் முதல் வெளியிடப்பட்ட தமிழ்ச் சிறுகதைத் தொகுதி, நான்காவது பரிமாணம் வெளியீடு, 1991
‘பரதேசம் போனவர்கள்’ – சிறுகதைத் தொகுதி, நான்காவது பரிமாணம் வெளியீடு, 2017
பா.அ.ஜயகரன்
பா.அ.ஜயகரன் கதைகள் 2019
ஆலோ ஆலோ 2022
எல்லாப் பக்கமும் வாசல் 2023
ஶ்ரீரஞ்சனி
உதிர்தலில்லை இனி, ஒன்றே வேறே , நான் நிழலானால்
குரு அரவிந்தன்
இதுதான் பாசம் என்பதா? (2002, 2005)
என் காதலி ஒரு கண்ணகி (2001)
நின்னையே நிழல் என்று! (2006)
சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும் (2023)
வ.ந.கிரிதரன்
கட்டடாக்கா(கூ)ட்டு முயல்கள் - ஜீவநதி பதிப்பகம்
அமெரிக்கா - ஸ்நேகா பதிப்பகம்
கடல்புத்திரன்
வேலிகள்
குறமகள்
குறமகள் கதைகள்
உள்ளக்கமலமடி
அகணி சுரேஷ்
கதைச்சாரல்
தமிழ்நதி
நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது
மாயக்குதிரை
தங்கமயில் வாகனம்
அளவெட்டி சிறிசுக்கந்தராசா
சிறீசுவின் சில சிறுகதைகள், மித்ர பதிப்பகம்
குமார் மூர்த்தி
முகம் தேடும் மனிதன், காலம் வெளியீடு
த.அகிலன் -
மரணத்தின் வாசனை
மொழிபெயர்ப்புக் கதைகள்
என்.கே.மகாலிங்கம்
இரவில் நான் உன் குதிரை (2003)
ஆடும் குதிரை (2011)
தியானம் (1982)
சிவநயனி முகுந்தன்
மாறுமோ நெஞ்சம்
ரவீந்திரன்
இடைக்கால உறவுகள்
கனடாவில்
சிறுகதை எழுதியவர்களின் பட்டியல் - குரு அரவிந்தனின்
'கனடாத்தமிழ்ச்சிறுகதைகள்!' கட்டுரையிலிருந்து.. இது முழுமையான பட்டியல்
அல்ல. பட்டியலில் இல்லாதவர்கள் அறியத்தந்தால் அவை சேர்த்துக்கொள்ளப்படும்.
குறமகள்,
அ. முத்துலிங்கம், குரு அரவிந்தன், வித்துவான் க. செபரத்தினம்,
பொ.கனகசபாபதி, கவிஞர் வி. கந்தவனம், வ.ந. கிரிதரன், அகில்,
பொன்குலேந்திரன், க.ரவீந்திரநாதன், டானியல்ஜீவா, கலைவாணி ராஜகுமாரன்,
சம்பந்தர், மனுவல் ஜேசுதாசன், வீரகேசரி மூர்த்தி, நவம், ஸ்ரீpரஞ்சனி
விஜேந்திரா, சிவநயனி முகுந்தன், மாலினி அரவிந்தன், கணபதிரவீந்திரன், சுரேஸ்
அகணி, கதிர் துரைசிங்கம், கமலா தம்பிராஜா, தேவகாந்தன், கடல்புத்திரன்,
முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், த. அகிலன், சித்திவிநாயகம், வ.மூர்த்தி,
வீணைமைந்தன், ஜெகதீசன், காலம் செல்வம், சா.வே. பஞ்சாட்சரம், நா.கணேசன், அசை
சிவதாசன், குமார் மூர்த்தி, பவான், மைக்கல், ஜோர்ஜ் குருஷேவ், இளங்கோ,
சுமதி ரூபன், த. மைதிலி, செழியன், மொனிக்கா, மெலிஞ்சிமுத்தன், விஜயா ராமன்,
சரஸ்வதி அரிகிருஷ்னன்
உசாத்துணைப்பட்டியல்
1. கனடாவில் சிறுகதை இலக்கியம்- ஒரு பார்வை! - மைதிலி தயாநிதி (பதிவுகள்.,காம்)
2. கனடாத்தமிழ்ச்சிறுகதைகள்! - குரு அரவிந்தன் (பதிவுகள்.காம்)
3. புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள் - வ.ந.கிரிதரன் (பதிவுகள்.காம்)
4. Edward Said - Reflections on Exile -
5. The Location of Culture by Homi K. Bhabha
6. Robin Cohen
6. சிலப்பதிகாரம்
7. குறுந்தொகை
8. வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்
9 கூர் ஆண்டிதழ் 2008, 2010, 2011
10. குதிரைக்காரன் (தொகுப்பு) - அ.முத்துலிங்கம்
11. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன்
12. அவனைக் கண்டீர்களா? - பா.அ.ஜயகரன்
13. பனியும், பனையும் (தொகுப்பு)
14. அடையாளம் குறித்த தேடல்: வ.ந. கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ - ஒரு பார்வை! - முனைவர் சு. குணேஸ்வரன் -
15. நான்காவது பரிமாணம் இதழ்கள்
16. சங்கப்பொழில் மலர்
17. கதைச்சாரல் - அகணி சுரேஷ்
18 . 'புலம்பெயர்தலும், புலம்பெயர் இலக்கியமும், தமிழரும்' - வ.ந.கிரிதரன் (கூர் 2011)
girinav@gmail.com
No comments:
Post a Comment