Wednesday, November 20, 2024

அ.முத்துலிங்கத்தின் 'புதுப்பெண்சாதி'


எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொழில் காரணமாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்.,அவற்றின் பின்னணியில் கதைகள் எழுதியவர்,. இவ்விதம் அவர் திரிந்துகொண்டிருந்தபோதும் அவரால் பிறந்த மண்ணை மறக்கவே முடியவில்லை. ஊர் பற்றிய , அவரது நெஞ்சில் நிலைத்து விட்ட நினைவுகளையும் அவர் காவிச்சென்றார் என்பதைத்தான் அவரது பெரும்பாலான கதைகள் புலப்படுத்துகின்றன. புலம்பெயர் இலக்கியத்தில் இது ஒரு பொதுவான பண்பு. நினைவுகளைக் காவிச்செல்லும் ஒட்டகங்கள்தாம் புலம்பெயர் மனிதர்கள். அ.முத்துலிங்கமும் அதற்கு விதிவிலக்கானவர். ஊர் நினைவுகளை, ஊர் ஆளுமைகளை மையமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள் பல இதனைத்தான் புலப்படுத்துகின்றன. புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர் அல்லர் அவர். பணி நிமித்தம் புலம்பெயர்ந்தவர். ஆயினும் அவர் நிலத்தின் நிகழ்வுகள் அவரையும் பாதிக்கின்றன.அதன் விளைவுகள், பாதிப்புகள் அவர் கதைகள் பலவற்றில் தெரிகின்றன.

அவரது புதுப்பெண்சாதி - மறக்க முடியாத கதை. என்னைப்பொறுத்தவரையில் அ.முத்துலிங்கத்தின் மிகச்சிறந்த கதையாக இதையே குறிப்பிடுவேன். கதை இதுதான். பத்மலோசனி என்னும் படித்தவள். கணிதம் ,ஆங்கிலம் எல்லாவற்றிலும் விருதுகள் வாங்கியவள். அழகானவள். அழகிய கண்களுக்குச் சொந்தக்காரி. ஊரில் கடை வைத்திருக்கும் ராமநாதனுக்கு மனைவியாக வருகின்றாள், அன்றிலிருந்து அவள் ஊருக்கு ராமநாதனின் புதுப் பெண்சாதி என்பதைக்குறிக்கப் புதுப்பெண்சாதி என்றழைக்கப்படுகின்றாள். கணவனுக்குத்  துணையாகக் கடையில் வேலை செய்கிறாள். அவளது பெயர் யாருக்கும் தெரியாது. புதுப்பெண்சாதி அம்மா, புதுப்பெண்சாதி அக்கா, புதுப்பெண்சாதி என்றே அழைக்கப்படுகின்றாள்.பல வருடங்கள் கழித்து அவர்களுக்கு அற்புதம் என்னும் பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து ஒருவனைக் காதலித்து,  போராளியான அவன் போரில் மடிந்துவிடவே, துயரம் தாங்காமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து விடுகின்றாள். சோகம் அவளை இவ்விதம் தாக்குகின்றது.

இவ்விதம் வாழ்வு செல்கையில் இந்தியப்படையினரின் வருகை நிகழ்கின்றது. படையினர் அவளது கடைக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒருமுறை முட்டைப்படம் போட்ட ஷாம்புவைச் சாப்பிடலாமா என்று படையினன் கேட்டிருக்கின்றான். மொழி தெரியாததால் அதைத்தவறுதலாகப் புரிந்த பெண்சாதி யேஸ்.யேஸ் என்றிருக்கின்றாள். அதைக்கொண்டுபோய்க் குடித்த படையினன் பேதியாகிக்கிடந்திருக்கின்றான். இவள் மேல் சந்தேகப்பட்ட படையினர் வந்து விசாரணைக்காக அவளைக் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். போகும்போது அவள் ஊரவரிடம் 'ராசமக்கா,  என்ர ஆடு, என்ர கோழிகள்  பத்திரம்' என்று சொல்லிச் சென்றாள்., அதுவே அவளைக்  கடைசியாகப் பார்த்த  தருணம்.  அதன் பின் அவளை எல்லோரும் மறந்து போகின்றார்கள். போரில் வீடிழந்த தம்பதியினர் புதுப்பெண்சாதியின் கடையைச் சொந்தமாக்கி வாழத்தொடங்குகின்றனர்.

கதையை வாசிக்கும் எவருக்கும் புதுபெண்சாதிக்கு என்ன நடந்தது என்னும் கேள்வி மன உளைச்சலைத்   தந்துகொண்டேயிருக்கும், அதற்கு விடை ஒருபோதும்  கிடைக்கப்போவதில்லை. அதுவே ,அந்தத்துயரே புதுப்பெண்சாதியை மனத்தில் நிலைத்து நிற்கச் செய்து விடுகிறது. இக்கதையைப் படித்து முடித்ததும் எத்தனை கனவுகளுடன் அந்தப்புதுப்பெண்சாதி கணவனுடன் ஊருக்கு வந்தாள். வாழ்க்கையைத் தொடங்கினாள். ஏன் அவளை இவ்விதம் துயரம் தாக்கியது? அவளுக்கு என்ன நடந்தது? அவள் யாருக்கு என்ன தீங்கு செய்தாள்? 'முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் தெற்கிலுள்ள ஊரொன்றிலிருந்து மணமுடித்து கணவன் ஊர் வந்து வாழ்க்கையை ஆரம்பித்த  புதுப்பெண்சாதியை எல்லோரும் மறந்துவிட்டார்கள்' என்று கதையை முடிப்பார் கதாசிரியர் அ.முத்துலிங்கம். ஆனால் இக்கதையை வாசித்ததிலிருந்து இன்று வரைப் புதுப்பெண்சாதியை  என்னால் மறக்கவே முடியவில்லை.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்