- எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி - |
எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி புலம்பெயர், புகலிடத்தமிழ் இலக்கியத்தில் , குறிப்பாகக் கனடாத்தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்களில், பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சுமதி ரூபன், தமிழ்நதி, ஶ்ரீரஞ்சனி போன்றவர்கள் நிலவும் பண்பாட்டுச் சூழலை மீறுவதில் , அவற்றைக் கேள்விக்குட்படுத்தவதில் தயங்காதவர்கள். அதே ஶ்ரீரஞ்சனியின் எழுத்துகளில் புகலிடச் சூழலில் தாயொருவர் எதிர்ப்படும் சவால்களை, தாய்மை உணர்வுகளைக் காணலாம். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள சிறுகதைத்தொகுப்புகளில் ஒன்று 'ஒன்றே வேறே'. இத்தொகுப்பின் கதைகளை முற்றாக இதுவரையில் வாசிக்கவில்லை. வாசித்தவற்றில் உடனடியாகக் கவனத்தை ஈர்த்த கதைகளில் ஒன்று 'காலநதி'.
'காலநதி'யின் சுழல்களுக்குள் சிக்கித் தடுமாறி, அலைந்து முதுமைப்பருவத்தில் தன் வளர்ந்த மகளுடன் கனடாவில் வாழும் தாயொருத்தியின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதை மட்டுமல்ல, முடிவில் அவளுக்குச் சிறந்ததொரு வழியினையும் காட்டி நிற்கிறது. பார்வதி என்பது அவளது பெயர். கதை முதியவளான அவளது உடலுழைப்பை வேண்டும் , போலிப்பண்பாட்டுக் கோட்பாடுகளைக் காரணமாகக் காட்டி அவளது நியாயமான உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் மகளின் உணர்வுகளையும்வ் செயலையும் வெளிப்படுத்துகின்றது. சாடுகிறது.கதை இதுதான். பார்வதியின் இளமைப்பருவத்தில், குறிப்பாகப் பதின்ம வயதுப் பருவத்தில் அவளது உள்ளத்தில் அவ்வயதுக்குரிய உணர்வுகளைத் தூண்டியவன் சந்திரன். அக்காலகட்ட அனுபவங்கள் சுவையாக விபரிக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் பலரையும் அவர்களது அப்பருவக் காலகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை மிக்கவை. எட்டாம் வகுப்பு மாணவியாகவிருக்கும் பார்வதிக்குபின் அமர்ந்திருப்பான் சந்திரன். பார்வது சுருட்டைத் தலைமயிரை இரட்டையாகப் பின்னி, மல்லிகைப்பூச் சூடிப் பாடசாலை செல்வாள். சந்திரன் சுவையாக, வேடிக்கையாகப் பேசும் ஆளுமை மிக்கவன். ஒரு தடவை அவளுக்குப் பின் அமர்ந்திருக்கும் அவன் அவளை விபரித்துப் பாடுகின்றான்: "கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடீ மல்லிகைப்பூ. கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதடீ உன் அழகு' வகுப்பைக் கெக்கலி போட்டுச் சிரிக்க வைக்கிறது அவனது பாட்டு. வாசிக்கும் எம்மையும்தாம்.
அப்பாடல் பார்வதிக்கு ஏற்படுத்திய உணர்வுகளைக் கதாசிரியை பின்வருமாறு விபரிப்பார்: 'அவளுக்கு வந்தது கோபமா, சங்கடமா, இல்லை வெட்கமா, அல்லது சந்தோஷாமா என்பது அவளுக்குப் புரிவைல்லை.' உண்மையில் "கூத்தாடும் கொண்டை' அற்புதமானதொரு படிமம். எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனியிடம் ஒரு கேள்வி.. இப்படியொரு பாடல் உண்மையிலேயே அக்காலத்தில் மாணவர்கள் மத்தியில் பாடப்பட்டதா? அல்லது ஶ்ரீரஞ்சனியின் கற்பனையா? இவ்விதம் கொண்டை பற்றியதொரு விபரிப்பை இலக்கியத்திலும் கூட வாசித்ததாக நினைவிலில்லை.
ஒரு தடவை மகளின் ஆலோசனையின்பேரில் முதியோர் சங்கத்துக்குச் செல்கின்றாள் பார்வதி. அங்கு அவள் மீண்டும் சந்திரனைக் காண்கின்றாள். அவனோ மனைவியை இழந்திருக்கின்றான். அவளோ முரடனான, ஆதிக்கம் செலுத்தும் பொலிஸ்காரக் கணவனைப் பலவருடங்களுக்கு முன் இழந்தவள். ஒரு தடவை பார்வதிக்குத் தொலைபேசி அழைப்பை எடுக்கும் சந்திரன் பார்வதியின் மகளிடம் அவளது அம்மாமீது சிறு வயதில் தான் கொண்டிருந்த உணர்வுகளைப் பற்றியும் கூறி விடுகின்றான். இதன் பின் மகள் பார்வதி அங்கு செல்வதைத் தடுக்கின்றாள். மகளின் இச்செயல் பார்வதிக்கு மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. தன் சுதந்திரத்தில் அவள் தலையிடுவதாக அவள் உணர்கின்றாள். முடிவில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து, அதான் வேறிடத்தில் இருந்தாலும் எப்போதும் மகளுக்குத் துணையாக இருப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறுகின்றாள்.
கலாச்சார வேறுபாடுகளின் தாக்கங்களையும், பார்வதி எவ்விதம் புதிய கலாச்சாரத்தின் ஆரோக்கியமான கூறுகளை ஏற்றுத் தனியாக, முதுமையில் புதுவாழ்வைத் தொடங்குகின்றாள் என்பதையும் கூறும் கதை என்பதால் முக்கியத்துவம் மிக்கது.
No comments:
Post a Comment