Wednesday, November 20, 2024

தேவகாந்தன் - ஊர் & சதுரக் கள்ளி

- எழுத்தாளர் தேவகாந்தன் -

ஒரு காலத்தில் ஊர் என்றால் அங்கு நிலவிய சமூகப் பிணைப்புகள் நினைவுக்கு வரும், ஊர் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் முடிந்தபின் செல்லும் ஒருவரின்  ஊர் பற்றிய மனச்சித்திரம் எவ்விதம் சீர்குலைகிறது என்பதை விபரிக்கும் தேவகாந்தனின் சிறுகதையான ஊர் நல்லதொரு சிறுகதை. நீண்ட சிறுகதையல்ல. ஆனால் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. போர்ச்சூழல் புதியவர்களை ஊருக்குப் புலம்பெயர வைத்திருக்கின்றது. அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக்கூட கவனிக்காத ஊர் அவருக்கு ஊர்பற்றிய மனச்சித்திரத்தைச் சிதைக்கப் போதுமானது. இங்கு இருவிதமான புலம்பெயர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று புகலிடம் நாடிய வெளிநாட்டுப் புலம்பெயர்வு. இன்னுமொன்று உள்நாட்டுப் புலம்பெயர்வு. ஒரு காலத்தில் ஊரில் சமூக வாழ்வு சிறப்பாக இருந்தது. ஒருவருக்கொன்றென்றால் அது  எல்லோருக்கும் தெரியும். ஓடிச்சென்று உதவுவார்கள். அதை ஊர் திரும்பும் அவரால் காண முடியவில்லை. யுத்தம் அதனைச் சிதைத்து விட்டிருந்தது. இதனை விபரிக்கும் கதைதான் 'ஊர்'.

சதுரக்கள்ளி சிறுகதையும் புலம்பெயர் தமிழர் ஓருவரின் ஊர் திரும்பலையும், அச்சமயம் அடையாளங்கள் இழந்து இருக்கும் அவரது வீட்டையும், அயலவரான பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட  பிணக்கு பற்றியும், அதன் விளைவாக குடும்பங்கள் பிரிபட்டதையும், வசியம் செய்து  விட்டாலுமென்ற பயத்தால் அவரின் தந்தையார் வேலிக்கருகில் வளர்த்த சதுரக்கள்ளி பற்றியும், தந்தையின் இறப்பு பற்றியும், விபரிக்கும். வீட்டின் ஜன்னல், நிலை  பாகங்களையெல்லாம் திருடிச் சென்றுவிட்டார்கள். வீடு சென்றவர் அமைதி திரும்பட்டும் வீட்டை என்ன செய்வது என்பது பற்றிச் சிந்திக்கலாம் என்று திரும்புகின்றார்.சதுரக்கள்ளி பின்னர் அவர் கனவுகளில் தொடர்வது வழக்கமாகிவிட்டது. கதை புகலிடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. அவருக்கு ஏற்படும் சதுரக்கள்ளிக் கனவு எல்லா நினைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையையும் அதைப்பார்த்துக்கொண்டிருந்த உலகையும் கதை சாடுகின்றது. ஒரு காலத்தில் மான் மரைகளால் வன்னி மண்ணின் காடுகள் நிறைந்திருக்கின்றன. இன்று சதுரக்கள்ளிகளால் நிறைந்திருக்கின்றது. கொத்துக்கொத்தாக மக்கள் கொன்றழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

கதை முள்ளிவாய்க்கால் யுத்தத்தைச் சாடுகின்றது. யுத்தச் சூழல் எவ்விதம் பிறந்த மண்ணைச் சீரழித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அதே சமயம் யாழ் தமிழருக்கிடையில் நிலவிய வேலிச்சண்டைகளையும் விமர்சிக்கவும் தவறவில்லை.

தேவகாந்தன் பல்வேறு வகையான இலக்கிய யுக்திகளையும் கையாளத்தவறுவதில்லை என்பதற்கோர் எடுத்துக்காட்டு அவரது 'பின்னல் பையன்' சிறுகதை. கதையை வாசித்து முடிக்கும் எவருக்கும் பின்னல் பையன் என்னும் சித்திரம் மனத்தில் பதிந்து விடும். மாந்திரீக அல்லது மாய யதார்த்தவாதப் பாணியில் பின்னப்பட்ட கதையாக நான் இதனைக் கருதுவேன். இருள், ஒளியை வைத்துப் பின்னப்பட்ட கதை. கதைப்பின்னல் வாசர்கள் மத்தியில் பல்வகை ஊகங்களை ஏற்படுத்தும் தன்மை மிக்கது. ஆனால் அனைவர் சிந்தையிலும் பின்னல் பையன் என்னும் சித்திரத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை. ஒளிக்கதிர்களைக்கொண்டு பின்னும் சிறுவனை நினைவில் நிற்கும் வகையில் படைத்திருப்பது தேவகாந்தனின் படைப்புத்  திறனுக்கு நல்லதொரு சான்று.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்