Wednesday, November 20, 2024

குரு அரவிந்தனின் கதைகள் பற்றி..

- எழுத்தாளர் குரு அரவித்நன் -

'அடுத்த வீட்டுப் பையன்' - உயிர்நிழல் சிறுகதை.  அடுத்த வீட்டுப் பையனின் அப்பா அவன்  மனைவியான இன்னுமோர் ஆண் பற்றியது. முடிவில்தான் உண்மை தெரிகிறது. இரு கலாச்சாரங்களின் மோதல். வீடு திரும்புவனிடம் மகன் கேட்கின்றான் அடுத்த வீட்டுப்பையனின் அம்மாவைப் பார்த்தீர்களா? அம்மாவா? எப்படிச் சொல்வேன் என்பதுடன் கதை முடிகிறது.

இக்க்கதை இரு வேறு கலாச்சாரங்களின்  பாதிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. ஒருபாலினத்தவர்களுக்கிடையிலான மணம் என்பது மேனாடுகள் பலவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேனாட்டுக் கலாச்சாரம் இது கண்டு திகைக்கும் காலம் கடந்து விட்டது. ஆனால் இழந்த மண்ணில் நிலை அவ்வாறில்லை. இதனைத்தான் இக்கதையின் முடிவு எடுத்துரைக்கின்றது. கதையின் நாயகனைப்பொறுத்தவரையில் அடுத்த வீட்டுப் பையனின் அம்மா ஓர் ஆண் என்பதே அதிர்ச்சியைத்தருமொன்று. அது அவனது தாய்நாட்டுக் கலாச்சாரத்தின் விளைவு. அவன் வாழ்வதோ மேனாட்டுக்  கலாச்சாரச் சூழல்.இதுபோன்ற திருமணத்தைச் சட்டரீதியாக அங்கீகரிக்கும் சூழல்.கதாசிரியர் குருஅரவிந்தன் இக்கதையில் இருவிதக் கலாச்சாரப்  பாதிப்புகளையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.இன்னுமொன்று.. தன் மகனுக்கு எவ்விதம் அடுத்த வீட்டுப் பையனின் தகப்பன் ஓர் அம்மா என்பதை எடுத்துரைத்தேன் என்று கதையின் நாயகன் தயங்குவதில் அர்த்தம் இல்லாமல் இருக்கக்கூடும். அவனது மகன் புகலிடச் சூழற் கலாச்சாரத்துக்குள் உள்வாங்கப்பட்டவனாக இருக்கக்கூடும். ஆனால் கதையின் நாயகனின் பார்வையில் இவ்விடயம் அதிர்ச்சிகரமானதொரு விடயம். இவ்விதமான அதிர்ச்சிகள் பலவற்றைக்கொண்டதுதான் புலம்பெயர் வாழ்க்கை.

ஊர் திரும்புதல் பற்றிய இன்னுமொரு கதையும் நினைவுக்கு வருகிறது. 'தாயகக் கனவுடன்' என்னும் குரு அரவிந்தனின் கதை. யுத்தம் முடிந்ததும் மீண்டும் குடும்பத்துடன் செல்லும் ஒருவரின் கதை. அத்தை வீடு இடிந்து கிடக்கின்றது. அங்கு அவரது பதின்ம வயதுகளில் நடந்த நிகழ்வுகள், அத்தைப்  பெண் மீதான உணர்வுகளை அந்த ஊர்பயணம் ஏற்படுத்தி விடுகிறது. அத்தை பெண் பெரியவளான நிலையில் தனித்து விடப்பட்டதையும் ,முன்புபோல் பழக அனுமதி அத்தையால் மறுக்கப்பட்ட நிலையும் , ஒரு முறை அங்கு விஜயம் செய்து பிரிகையில் எதிர்பாராமல் அத்தை பெண் அவருக்கு அளித்த முத்தமும், பின்னர் அத்தை பெண் நாட்டுச் சூழலில் பெண் போராளியாகி மடிந்ததும் நினைவுக்கு வருகின்றன. அவற்றை விபரிக்கும் கதை.

குரு அரவிந்தன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்னும் பாணியில் தன் எழுத்து நடையை வைத்திருப்பவர்.  இது போன்ற அவரது சில சிறுகதைகள் ஊரில் நிலவிய போர்ச்சூழலை மையமாக வைத்து உருவானவை. 'நங்கூரி' 83 கறுப்பு ஜூலையில் -பெண் ஒருத்தி  கணவன் முன்னால் காடையரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதையும் , கணவன் அதன் காரணமாக அவளை ஏற்பதில் காட்டும் தயக்கமும் எடுத்து\க் காட்டப்படுகின்றன.

இக்கதை வ.ந.கிரிதரனின் 'ஒரு முடிவும் ஒரு விடிவும்' கதையினை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. அந்நியப்படையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருத்தியை அவளது கணவன் புறக்கணித்து விட , ஊருக்கு வரும் அவளது பால்ய காலத்து நண்பனொருவன் ஏற்று மறுவாழ்வு கொடுப்பதாகச் செல்லும் கதை. இச்சிறுகதை தொண்ணூறுகளில் தாயகம் பத்திரிகையில் வெளியானது. புகலிடம் சென்றாலும் தாயக நினைவுகளைச் சுமந்து செல்வதைத் தவிர்க்க முடியாத நிலையினை எடுத்துக்காட்டும் கதைகள்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்