எல்லைகளற்று பரந்திருக்கும் விரிவெளியில்
அகதிமேகங்கள் அலைகின்றன.
அலைச்சல் தாளாமல் அவை
அழுதுபொழிகின்றன.
இருப்பைத் தப்ப வைப்பதற்காய்ப்
புள்ளொன்று சிறகடிக்கின்றது.
அதனை விரைவை மீறித்
தொடர்கிறது பெரும்புள்.
பகல் இப்படியென்றால்...
இரவு வானை நோக்குகின்றேன்.
தொலைவில்
ஒளியாண்டுத் தொலைவுகளில்
மலர்ந்து உதிர்ந்து விட்ட
நாகரிகங்களின் பெருமூச்சுகளை
தனிமைகளில் பயணிக்கும் ஒளிச்சுடர்களில்
உணர்கின்றேன்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
எப்பொழுதும் இருப்பில்
அர்த்தம் கண்டு மகிழ்பவன் நான்.
இன்பம் கண்டு உவகையில் ஊறுபவன் நான்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
'இன்று உனக்கு என்ன நடந்தது?'
அதுதான் தெரியவில்லையடி கண்ணம்மா
என்றேன்.
வழக்கமான நான் அல்லன்
இன்றுள்ள நான் என்பது மட்டும் புரிகிறது;
மீண்டும் என் இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும்
என்பதும் புரிகின்றது.
திரும்புவேன் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை
உண்டு.
கணந்தோறும் பிறந்து உவகையில் மூழ்கும்
என்னால் எப்படி திரும்பாமல் இருக்க முடியும்?
நிச்சயம் திரும்புவேன்.
எல்லைப் பிரிவுகளற்று இன்புற்றிருக்கும்
மேகங்களைக் கண்டு பொறாமை கொள்வேன்.
ஆனந்தக் கண்ணீரைப் பொழியும்
விண்ணைக் கண்டு நானும்
ஆனந்தக் கண்ணீர் பொழிவேன்.
ஒளியாண்டுகளில் நட்புக்கரம் நீட்டிக்
காத்திருக்கும் நண்பர்களை எண்ணி
நம்பிக்கையுடன் காத்திருப்பேன்.
No comments:
Post a Comment