Thursday, November 28, 2024

மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!



கவிஞர் கந்தவனத்தின் மணி விழாவினையொட்டி மணிவிழாக்குழுவினால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு 'மணிக்கவிகள்' நூலுக்கான பதிப்புரையில் மணிக்குழுவின் செயலாளர் எழுத்தாளர் எஸ்.ஜெகதீசன் 'உருவகச்சிறப்பில் மாத்திரை போன்ற இவை உள்ளடக்கத்தில் காத்திரம் கொண்டவை' என்கின்றார். தொகுப்பை வாசித்துப் பாருங்கள் அது உண்மையென்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
 
இவ்விருவரி மணிக்கவிகள் கனடாவிலிருந்து பத்திரிகை/சஞ்சிகையாக வெளியான 'தாயக'த்தில் வெளியானவை. அதனை வெளியிட்டதுடன் அதன் ஆசிரியராகவிருந்தவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ். இக்கவிதைத்தொகுப்பு நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தொகுப்பினை வாசிக்க - https://noolaham.net/project/755/75434/75434.pdf
இக்கவிதைகளில் சிலவற்றில் பொசிந்து கிடக்கும் கிண்டல் சிரித்திரன் ஆசிரியர் சுந்தரை நினைவுக்குக் கொண்டு வந்தது. அவர் இத்தொகுப்பினைப் பார்த்திருந்தால் கட்டாயம் சிலவற்றையாவது கேலிச்சித்திரங்களாக்கியிருப்பார்.
 
தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த மணிக்கவிகள் சில;
 
1. உள்ளப் பக்குவ உயர்வினை நல்கா
வெள்ளைக் கல்வி வேண்டுவ தார்க்கு.
 
2. அரசியல் இன்று பொதுசன வாழ்விற்
கரிசனை யில்லாக் கலையா யிற்று.
 
3. உள்ளத் தூய்மையும் உயர்ந்த நோக்கும்
வள்ளல் தன்மையும் வாய்ந்தவர் தலைவர்.
 
4. அறவழி போற்றி ஆற்றும் கருமம்
மறைவது மில்லை மாளவது மில்லை.
 
5. பார்மகள் இழந்தாள் பகுத்தறி வற்ற
போர்களின் விளைவால் பூவும் பொட்டும்.
 
6. பழகப் பழகப் பால்புளி யாதாம்
அழகுள் ளத்தில் அன்பழி யாதாம்.
 
7. பதவியில் உயர்ந்தால் பாடுவர் வாழ்த்துப்
பதவியை இழந்தால் ஓடுவர் பார்த்து.
 
8. சந்திப் பிரச்சனை தகர்க்கும் பெரியார்
சொந்தப் பிரச்சனை துடைக்கத் தெரியார்.
 
9. கற்றவர் கருத்தைக் காதில் விழுத்து
மற்றவர் சொல்லை வாதில் கொளுத்து.
 
10. பயிற்சி செய்தால் பழக்கம் ஊன்றும்
முயற்சி செய்தால் முடிக்கத் தோன்றும்.
 
11.சொல்லும் திறனும் சொல்வதைச் செய்து
வெல்லுந் திறனும் தலைமைக்கு வேண்டும்.
 
12. அலுவல் முடிக்க அடிக்கடி வருவார்.
அலுவல் முடிந்தபின் அடிக்கவும் வருவார்.
 
13. நானே சொன்னேன் நானே செய்தேன்
நானே என்பார் நாளை நில்லார்.
 
14. நல்லவை மட்டும் மனதில் நடுவேன்.
அல்லவை யாவும் அன்றே விடுவேன்.
 
15. ஊறு காய்க்கு நாவூ றல்போல்
ஊறும் நட்புக் குள்ளம் ஊறும்.

No comments:

ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்?'

எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது ஆசிய ஜோதி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, திரைக்கதை , வசனம் எழுதி வெளியிட்ட திரைப்படங்கள் உன்னைப்போல்  ஒருவன் ...

பிரபலமான பதிவுகள்